Published:Updated:

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

Published:Updated:
நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

ட்டுப்பாட்டுக்கும் காவலுக்கும் உரிய கிரகமான அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் இது. இதில் முதல் இரண்டு பாதங்கள் சௌமிய கிரகமான புதனின் கன்னி ராசியிலும் மூன்று, நான்காம் பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் துலா ராசியிலும் வருகின்றன.

நட்சத்திர மாலை, ‘கண்டதோர் தானம் செய்யும்... ஈன்ற தாய், தந்தை பேணும்...திடமதாய்ப் பேச வல்லன் சித்திரை நாளினானே...’ என்கிறது. அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியசாலியாகவும், தான தர்மம் செய்பவராகவும், பெற்றவர்களைப் பேணுபவராகவும், சொல்வதை அழுத்தந்திருத்தமாகச் சொல்பவராகவும், பொறுமையற்றவராகவும் இருப்பீர்கள் என்று அர்த்தம்.

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

ஜாதக அலங்காரம், ‘பலமான சரீரவான், மார்பு அகலன், நடை கடியன், பரிந்து சொல்வான்...’ என்கிறது. அதாவது வலுவான உடல் நிலை உடையவராகவும், விரிந்த மார்பையுடையவராகவும், அதிவேக நடை கொண்டவராகவும், பரிந்து பேசுபவராகவும், செலவு செய்யாதவராகவும் இருப்பீர்கள் என்று பொருள். யவன ஜாதகம், `நீங்கள் சுகந்த வஸ்துவைப் பூசிக்கொள்பவராகவும், வசீகர வஸ்திரங்களை அணிபவராகவும், தேஜஸ் உடையவராகவும் இருப்பீர்கள்’ என்கிறது. `ராஜாக்களுக்குப் பிரியமானவராகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் இருப்பீர்கள்’ என்கிறது பிருகத் ஜாதகம்.

உங்களுக்குக் கோபம் மூக்கின் நுனியிலேயே இருக்கும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு அதை வலியுறுத்தவும் செய்வீர்கள். விஸ்வகர்மாவின் பிறந்த நட்சத்திரம் என்பதால், உங்களிடத்தில் ஆக்கும் சக்தி அதிகமாக இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்திருக்கிறார்கள். நீங்கள் உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். வம்பு சண்டைக்குப் போகமாட்டீர்கள். அதேநேரத்தில், வலிய வரும் சண்டையை விடாமல் பதிலடி தருவீர்கள்.

நீங்கள், மயிர் நீங்கின் உயிர் நீக்கும் கவரிமானைப் போன்றவர்கள். காலத்தால் கட்டுப்படுத்த முடியாத கற்பனையாற்றலும், புதிய சகாப்தத்தை உருவாக்கும் செயல்திறனும், படைகளை வழிநடத்திச் சென்று பகைவர்களை வெற்றி காணும் குணமும் உங்களிடம் என்றும் உண்டு. உலகமே ஒன்றுதிரண்டு எதிர்த்தாலும் நீங்கள் நினைத்ததைத்தான் முடிப்பீர்கள்.

‘சித்திரையப்பன் தெருவிலே’ என்று சிலர் கூறுவார்கள். அதில் உண்மை ஏதும் இல்லை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலருடைய தந்தை நல்ல நிலையில் இருப்பதை நம் அனுபவத்தில் காணலாம். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்து, லக்னத்துக்கும் ராசிக்கும் 9-ம் வீட்டுக்குரிய கிரகம் பலவீனம் அடைந்து சூரியன் பாப கிரகங்களுடன் சேர்ந்திருக்க, 9-ம் வீட்டுக்குரிய கிரகத்தின் தசையோ, சூரிய தசையோ நடைபெற்றால் மட்டுமே தந்தைக்கு பாதிப்பு உண்டாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நட்சத்திர குணாதிசயங்கள்: ராஜ யோகம் அருளும் சித்திரை

வானியல் அறிவும் கடவுளைப் பற்றிய ஆழ்ந்த ஞானமும் உங்களுக்கு உண்டு. நீல விழி, நீண்ட கால்களும் கரங்களும் பெற்றிருப்பீர்கள். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். சின்னஞ்சிறு விபத்துகள், பொருள் அழிவு, கெட்ட நண்பர்களின் சகவாசம் ஆகியவை இளமைக் காலத்தில் வந்து நீங்கும். 24 வயதிலிருந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக 40 வயதுக்குள் ஓர் அந்தஸ்துக்கு வந்துவிடுவீர்கள். 45 வயதிலிருந்து ராஜயோகம் உண்டாகும்.

நீங்கள் சார்ந்திருக்கக்கூடிய துறையில் சாதிக்கக்கூடிய வல்லமையும், முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய ஒரு சக்தியும், மக்களால் போற்றிப் புகழக்கூடிய ஓர் அந்தஸ்தும், நாடாளும் யோகமும் உங்களுக்குக் கிட்டும். உங்களில் பலர், மனைவியை அதிகம் நேசிப்பவராகவும் மனைவி சொல் கேட்பவராகவும் இருப்பீர்கள்.

பரம்பரை கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். ஞான சக்தி பெற்றவர்கள் என்று நந்தி வாக்கியம் என்ற நூல் உங்களைப் பற்றிக் கூறுகிறது. பாதி வாழ்க்கையை சுகபோகியாகவும் மீதி வாழக்கையை துறவறத்திலும் கழிப்பீர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கல்வி மிதம்தான். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இருக்காது. திருமணம் சற்று காலதாமதமாகவே நடக்கும். அளவான குடும்பம் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிக பாசம் வைத்திருப்பீர்கள்.

அலங்காரமான ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உங்களில் பலருக்குத் தானம் செய்யும் குணம் குறைவாக இருக்கும். எல்லோரிடமும் கனிவாகப் பேசிக் காரியம் சாதிப்பதில் நீங்கள் சாமர்த்தியசாலிகள். எதையாவது நினைத்து கவலைப்படுபவர்கள் ஆதலால், ஆழ்ந்த உறக்கம் இருக்காது. மற்றவரை அடக்கியாளும் திறனுடையவர்கள் நீங்கள். அங்காரகன் நன்கு அமைந்திருந்தால் அயல்நாட்டில் சம்பாதிப்பீர்கள். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.

முதல் பாதம்

(செவ்வாய் + புதன் + சூரியன்)


முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சூரியன். இதில் பிறந்தவர்கள் சாதுர்யமாகப் பேசி எடுத்த காரியத்தை சாதிப்பவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இயற்கை படைப்புகளையும் அதிசயங்களையும் கண்டு ரசிப்பார்கள். இசை, நாட்டியம், கவிதை போன்ற கலைகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். யாராக இருந்தாலும் மனதில் பட்டதை முகத்துக்கு நேரே பளிச்சென்று பேசுவார்கள். மற்றவர்களுடைய குற்றம், குறைகளை சுட்டிக்காட்டித் திருத்துவார்கள்.

கற்ற கல்விக்கு சம்பந்தமே இல்லாத உத்தியோகத்தில் முன்னேறுவார்கள். சிலருக்கு அயல்நாட்டில் உயர் கல்வி, உத்தியோகம் அமையும். ஆடை, ஆபரணங்களில் பிரியமுள்ளவர்கள். தாய் சொல்லைத் தட்டமாட்டார்கள்.

வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் யோசிப்பார்கள். விட்டுக்கொடுக்கும் குணம் இவர்களுக்கு உண்டு. 39 வயது முதல் எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 46 வயதிலிருந்து வசதி, வாய்ப்புகள் கூடும். உறவினர்களால் சிறுசிறு ஏமாற்றங்களைச் சந்தித்தாலும் நண்பர்களால் ஆதாயமடைவார்கள். நரம்புத் தளர்ச்சி, ஹார்மோன் பிரச்னை வந்து நீங்கும். நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

பரிகாரம்: நாகப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் சிக்கல் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்

(செவ்வாய் + புதன் + புதன்)


இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள், அனைவரும் விரும்பும்படி நடந்துகொள்வார்கள். உடல்நலத்தைப் பேணிக் காப்பார்கள். ஆராய்ச்சி செய்யும் நுண்ணறிவு அதிகம் உண்டு. எப்போதும் இவர்கள் இருக்கும் சூழ்நிலையைக் கலகலப்பாக வைத்துக்கொள்வார்கள். அதிகம் பேசினாலும் அதில் ஒரு அர்த்தத்துடன், நியாயமாக பேசுவார்கள். கடவுள் நம்பிக்கை இவர்களுக்கு அதிகம்.

எந்த வேலையையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து முடிப்பார்கள். சக்திக்கு மீறியது எதையும் இவர்கள் ஒதுக்கிவிடுவார்கள். நண்பர்கள் அதிகம் இருந்தாலும் அவர்களிடம் பட்டும் படாமலும் இருப்பார்கள். சிலர், இவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பார்கள். கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களிடம் நிறைய திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டுவதில் ஒரு தயக்கம் இருக்கும்.

ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே `அவர் இப்படிப்பட்டவர்’ என்று கணிக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. சிறுவயதில் கிடைத்த பரிசுப் பொருள்களைக் கடைசி வரை பாதுகாத்து வைத்திருப்பார்கள். 27 வயதில்தான் தன்னைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று தெரிய வரும். 42 வயதிலிருந்து வீடு, வாகன வசதி யாவும் உண்டாகும். தீர்க்காயுளுடன் வாழ்வார்கள்.

பரிகாரம்: திருக்கண்ணபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீநீலமேகப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்

(செவ்வாய் + புதன் + சுக்கிரன்)

மூன்றாம் பாதத்துக்கு அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள், எல்லோராலும் போற்றிப் புகழப்படுபவர்களாகவும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

நவீன சிந்தனை இவர்களுக்கு இருப்பதால், அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிகம் ஈடுபாடுடையவர்களாகத் திகழ்வார்கள்.சமுதாய அக்கறையுள்ள பொதுவுடைமை சிந்தனை இருக்கும். விவசாயத்தை நேசிப்பார்கள். பண்ணை நடத்துதல், மூலிகைகள் வளர்த்தல், மரம் வளர்த்தல் போன்றவற்றில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். என்றாலும் அவ்வப்போது நகர வாழ்க்கையையும் விரும்புவார்கள்.

பழைமையில் புதுமையை புகுத்தக்கூடியவர்கள். சினிமா, மருத்துவம், காவல் துறை ஆகியவற்றில் மிளிர்பவர்களாகவும் சிவில் கான்ட்ராக்டர்களாகவும் இவர்களில் பலர் இருப்பார்கள். தன்மானம் மிக்கவர்களாகவும் ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பின்விளைவுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். மிகவும் தைரியசாலிகள்.

பலர், ஞானிகளாகவும், நன்னடத்தை உள்ளவர்களாகவும், நல்லறிவு உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். வாழ்க்கைத்துணைவருக்கு முழுச் சுதந்திரம் தருவார்கள். அவரின் ஆலோசனையைத் தட்டமாட்டார்கள். பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைப்பார்கள். 24 வயதில் வாழ்வில் திருப்புமுனை உண்டாகும். 39 வயதிலிருந்து செல்வ வளங்கள் பெருகும். 45 வயதிலிருந்து பதவி, புகழ் குவியும். நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை வணங்கி வருவதால், வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

நான்காம் பாதம்

(செவ்வாய் + புதன் + செவ்வாய்)


நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள் மனஉறுதி படைத்தவர்கள். எதிரிகளும் தன்னைக் கண்டு வணங்கும் அளவுக்கு வீரம், விவேகம் ஆகியவை செறிந்தவர்களாக இருப்பார்கள். முன்னோர்களை வணங்குபவர்களாகவும் நாட்டுப்பற்று, மொழிப் பற்று நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். பழைய நூல்களை விரும்பிப் படிப்பார்கள்.

வேத, மந்திர, சாஸ்திரம் அறிந்தவர்களை நேசிப்பதுடன் அவர்களுக்கு வாரி வழங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். கல்வியில் ஆர்வம் இருந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் சிலருக்கு உயர்கல்வியைத் தொடர முடியாமல் போகும். சகோதர, சகோதரிகளை வழிநடத்திச் செல்லும் வல்லமை உண்டு. ராணுவம், உளவுப் பிரிவு, காவல், தீயணைப்பு,  மனநல மருத்துவம், அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

மருந்துக் கம்பெனி, கெமிக்கல், தோல் தொழிற்சாலை ஆகியவை வைத்து நடத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பக் கஷ்டநஷ்டங்களைப் புரிந்து நடந்துகொள்வார்கள். தானும் ஒழுக்கமாக இருப்பதுடன் பிள்ளைகளையும் ஒழுக்கசீலர்களாக வளர்ப்பார்கள். 37 வயதிலிருந்து எதிலும் வெற்றி பெறுவார்கள். தீர்க்காயுள் உண்டு.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீநடராஜப் பெருமானை அர்த்த ஜாம பூஜையின்போது வணங்கி வழிபடுவதால், வாழ்க்கை செழிக்கும்.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்

சித்திரை நட்சத்திரத்தில்...

பெயர் சூட்டுதல், பூ முடித்தல், அன்னதானம் செய்தல், கல்வி, ஜோதிடம், மருத்துவம், சங்கீதம், புதிய ஆடை, ஆபரணங்கள் உடுத்துதல், புத்தகம் வெளியிடுதல், தானியத்தைக் களஞ்சியத்தில் சேகரித்தல், மூலிகை மருந்து செய்தல், குளம், கிணறு வெட்டுதல், ஆயுதப் பிரயோகம், தெய்வப் பிரதிஷ்டை, புதுமனை புகுதல், உபநயனம், விவாகம், வாகனம் வாங்குதல், நாட்டிய அரங்கேற்றம், குழந்தைக்குச் சிகை நீக்கிக் காது குத்துதல் போன்ற செயல்களைச் செய்தால் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்

த்வஷ்டா நக்ஷத்ர மப்ப்யேதி சித்ராம்
ஸுபஹும் ஸஸம்யுவதிஹும் ரோசமானாம்
நிவேசயன்னம்ருதான் மர்த்யாஹும்ச்ச
ரூபாணி பிஹும்சன் புவனானி விச்வா
தந்நஸ்த்வஷ்டா தது சித்ரா விசஷ்டாம்
தந் நக்ஷத்ரம் பூரிதா அஸ்து மஹ்யம்
தந்ந: ப்ரஜாம் வீரவதீஹும் ஸநோது
கோபிர் நோ அச்வைஸ் ஸமநக்து யஜ்ஞம்

சித்திரை நட்சத்திரம்

நட்சத்திர தேவதை    : சுக்கிரனின் குமாரனும் அசுரர்களின் புரோகிதனுமான த்வஷ்டா. மற்றொருவர் விஸ்வகர்மா.

வடிவம்                         : முத்து போன்ற வடிவமுடைய ஒரே நட்சத்திரம்.

எழுத்துகள்                  : பே, போ, ரா, ரீ.

ஆளும் உறுப்புகள்   : 1, 2-ம் பாதங்கள் - தொந்தி, அடிவயிறு;   3, 4-ம் பாதங்கள் - சிறுநீரகம், பிறப்புறுப்பு,        அடிவயிறு.

பார்வை                       : சமநோக்கு.

பாகை                          :  173.20 - 186.40

நிறம்                            : வெண்மை.

இருப்பிடம்              : பட்டினம்.

கணம்                       : ராட்சச கணம்.

குணம்                     : மென்மை.

பறவை                   : மரங்கொத்தி.

மிருகம்                  : ஆண் புலி.

மரம்                        : பாலில்லாத வில்வ மரம்.

மலர்                       : செம்பருத்தி.

நாடி                        : மத்திம நாடி.

ஆகுதி                     : சித்ரான்னம்.

பஞ்ச பூதம்            : நெருப்பு.

நைவேத்தியம்    : கொழுக்கட்டை.

தெய்வம்                :  ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நமோ பகவதே, மஹா ஸுதர்சனாய தீப்த்ரே
ஜ்வாலா பரீதாய, ஸர்வ திக்க்ஷோபண கராய
ஹும் பட் ப்ரஹ்மணே பரஞ் ஜ்யோதிஷே நம ||

அதிர்ஷ்ட எண்கள்       : 1, 6, 9.

அதிர்ஷ்ட நிறங்கள்    : வெளிர் சிவப்பு, வெள்ளை.

அதிர்ஷ்ட திசை           : தெற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : செவ்வாய், வெள்ளி.

அதிர்ஷ்ட ரத்தினம்    : அமெரிக்கன் வைரம்.

அதிர்ஷ்ட உலோகம்  : பஞ்சலோகம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: ஸ்ரீசுதர்சனன், மதுரகவி ஆழ்வார், நாடாதூரம்மாள், ராமதாசர், கௌதம மகரிஷி, ராமலிங்க அடிகள், வாரியார் சுவாமிகள், மேரிகியூரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism