ஜோதிடம்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 26

ரங்க ராஜ்ஜியம் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 26

ரங்க ராஜ்ஜியம் - 26

‘இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
எண்ணில் பல்குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றிநின் றகலாய்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம்
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
அரங்க மாநகரமர் ந்தானே!’

- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

நீலன் எனும் அந்தக் குறுநில மன்னன், குமுத வல்லி எனும் அந்தப் பெண்ணிடம் ``உனக்காக நான் திருமால் பக்தனாகிறேன்...” என்றபோதும், “எனக்காக ஆகவேண்டாம் - உங்களுக்காக ஆகிடுங்கள். அதுவே எல்லோருக்கும் நல்லது” என்றே பதிலளித்தாள் அவள்.

ரங்க ராஜ்ஜியம் - 26

“அதற்கு நான் ஏதாவது செய்யவேண்டுமா?” என்று மன்னவன் கேட்க, குமுதவல்லி பதில் சொன்னாள்:

“தாங்கள் ஒரு நல்ல ஸ்ரீவைஷ்ணவன் ஆக வேண்டும்”

“அதற்கு என்ன செய்யவேண்டும்?”

“ஆசார்யனிடம் பஞ்ச சமஸ்காரம் எனப்படும் ஐந்துவித செயல்பாடுகளை உபதேசம் பெற்றுக்கொண்டு, அவற்றை உயிருள்ள வரையிலும் பின்பற்ற வேண்டும்.”

“அவை என்ன... ஐந்துவித செயல்பாடுகள்?”

“ஸ்ரீபாஷ்யம் எனப்படும்... எம்பெருமானின் ஆதி முதல் அந்தம் வரை அறிதல், பின் வேதம் கூறுவதைக் கற்றல் - பின் கூறல்!”

“அடுத்து...?”

“சங்கு - சக்கரத்தைச் சின்னங்களாய்ப் புஜங் களில் தரிப்பது...”

“அடுத்து...?”

“பன்னிரு திருமண் காப்பு தரித்தல், மந்திர உபதேசம் பெறுதல், தினமும் திருவாராதனம் புரிதல்.”

“இவ்வளவுதானே. சரி, எங்கிருக்கிறார் அந்த ஆசார்யர்? அவரை இப்போதே அரண்மனைக்கு வரவழைத்து, நீ சொன்னதைச் செய்ய உத்தரவிடுகிறேன்.”

நீலன் இப்படிச் சொன்னதைக் கேட்டுச் சிரித்து விட்டாள் குமுதவல்லி.

“ஏன் சிரிக்கிறாய்?”

“சிரிக்காமல் என்ன செய்வது? ஆசார்யன் எனப்படுபவர் நடமாடும் இறைவடிவம். அவருக்கு நாம் கட்டளையிட முடியாது; இடவும் கூடாது. ஆனால், அவரோ நம்மை பாழுங்கிணற்றிலும் குதிக்கச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அதை மகிழ்வோடு செய்பவனே நல்ல சீடன்.”

குமுதவல்லி சொன்னதைக் கேட்டு, நீலன் ஒரு விநாடி கலங்கிவிட்டான். `கட்டளையிட்டே பழக்கப்பட்டவன், ஓர் ஆண்டியின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதா' என்று கேள்வி எழும்பத்தான் செய்தது. ஆனாலும் குமுதவல்லியின் பேரழகும், அவளின் அயராத பேச்சும், அவள்பாலான காதலும் நீலனைக் கட்டிப்போட்டன!

ரங்க ராஜ்ஜியம் - 26

“அப்படியானால் ஆசார்யனை நான்தான் தேடிச்செல்ல வேண்டுமா” என்று கேட்டான்.

“ஆம்! ஆனால், உங்களால் தேடிச் செல்ல முடியாது. வாளோடும் வேலோடும் போராடும் கரங்கள் உங்கள் கரங்கள். அவை, தொழும் கரங்களாக மாறாது. பிறரை அடக்கியாள்வது உங்களுக்குச் சுலபம். ஆனால் உங்களால் புலன்களை அடக்கியாள முடியவே முடியாது. நிமிர்ந்த மார்பு உங்களுடையது - அதனால் பணிந்து கும்பிட முடியவே முடியாது...” 

குமுதவல்லி `முடியாது...' `முடியாது...' என்று சொல்லச் சொல்ல, நீலன் மனதிலோ `முடியும்...'  `முடியும்...' என்றே எதிரொலித்தன அந்த வார்த்தைகள்!

குமுதவல்லியின் எதிரில் தோலை உரித்துவிட்டு வழன்ற உடம்போடு நிற்கும் ஒரு பாம்பு போல், தனது வீரம், அதிகாரம், மமதை ஆகிய சகலத்தையும் உதிர்த்தவனாக... அதேநேரம்,`நீ விரும்பும் ஒரு ஸ்ரீவைஷ்ணவனாய் என்னாலும் ஆகமுடியும்; ஆகிக் காட்டுகிறேன்...’ என்று சொல்லாமல் சொன்னவன், குமுதவல்லியின் மீது ஓர் ஆழமான பார்வையை வீசியபடி, விடை பெற்றுக்கொண்டான்.

நீலன் அகலவும் மெள்ள நெருங்கி வந்தார் குமுதவல்லியின் வைத்தியத் தந்தை. அவர் உடம்பில் ஒருவகை நடுக்கம்; முகத்திலோ இனம் தெரியாத பீதி. பார்வையில் ஆச்சரியத்தின் குழுமம்.

“என்னப்பா... அப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அதிகம் பேசிவிட்டாய் குமுதா...”

“அப்படியா?”

“அதுகூடவா தெரியவில்லை. எப்படியம்மா இப்படிப் பேச உன்னால் முடிந்தது?”

“நான் எங்கே அப்பா பேசினேன். என்னுள் இருந்து அவனல்லவா பேசினான்.''

“எம்பெருமானையே அறிந்திராத இந்த மன்னனுக்கு, எம்பிரான்தான் உன்னுள் இருந்து பேசினான் என்றெல்லாம் புரியுமா அம்மா?”

“புரியாவிட்டால், அது என் பிழையில்லையே?”

“இப்படிச் சொன்னால் எப்படியம்மா?”

“வேறு எப்படிச் சொல்ல...?”

“எனக்குப் பயமாக இருக்கிறது. இந்த மன்னன் பெயரைக் கேட்டால் சோழச் சக்ரவர்த்திக்கே அச்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...”

“அதனால்...”

“என்ன அதனால்...? அரண்மனைக்குச் சென்று ஆற அமர யோசித்து, பின் அடாத ஒரு முடிவெடுத்து வந்து, உன்னையும் என்னையும் வீட்டுச்சிறைக்கு ஆட்படுத்திவிட்டால்..?''

“அதுதான் மாலவன் விருப்பம் என்றால் அப்படியே நடக்கட்டுமே...”

“மாலவன் விருப்பமா..? நான் மன்னவனின் விருப்பத்தைச் சொன்னேனம்மா...”

“இனி, மாலவன் விருப்பமே மன்னவன் விருப்பமாக இருக்கும்.”

“எந்த நம்பிக்கையில் இப்படிக் கூறுகிறாய்?”

ரங்க ராஜ்ஜியம் - 26

“அப்படியானால், நீங்கள் நம்பவில்லையா... மாலவன் நமக்குக் கைகொடுப்பான் என்று?''

“குமுதா! நடப்பது கலி காலம். நாம் நலிந்த பிறப்பினர்...”

“அப்பா! தயவுசெய்து இனி இப்படியெல்லாம் பேசாதீர்கள். ஒரு வைணவனாய் இருந்துகொண்டு அச்சப்படுவது கீழ்மை. அதைவிட கீழ்மை... நம் இறைவன்பால் நம்பிக்கை இழப்பது.”

- குமுதவல்லி தந்தையை இறுக்கக் கட்டிப் போட்டாள். அவர் பயந்தது போல் நடக்கவில்லை. மாறாக நீலன் தன்னை ஸ்ரீவைஷ்ணவனாக்கும் முனைப்புக்கு முற்றாக மாறிவிட்டிருந்தான். தன்னை அந்தத் தகுதிக்கு ஆளாக்கும் ஆசார்ய புருஷர் எங்கிருக்கிறார் என்று தேடினான்.

`திருநறையூர் நம்பி' எனும் ஆசார்ய புருஷர் உப்பிலியப்பன் திருக்கோவிலில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அடுத்த நொடியே புறப்பட்டு விட்டான். ஆனால், நீலன் அந்த ஆலயத்தை அடைந்தபோது, அந்த ஆச்சார்ய புருஷர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டிருந்தார்.

நீலன் முகத்தில் ஏமாற்றம். மன்னன் வரப் போவதாய் சொல்லியும் புறப்பட்டுவிட்டாரோ என்றொரு கேள்வி. பிறகே தெரிந்தது... தகவல் தெரியும் முன்பே அவர் புறப்பட்டுவிட்டார் என்று. இப்போது அவர் இருப்பது திருநறையூரில் என்பதையும் அறிந்தான்.

நீலனோடு வந்த அமைச்சர் உள்ளிட்ட பெருமக்கள் பதற்றமுடன் நீலனைப் பார்த்தனர். இதுபோன்ற ஏமாற்றங்களுக்கு நீலன் ஆட்பட்டதே இல்லை. எவரையும் அவன் தேடியதைல்லை - எவருக்காகவும் அவன் காத்திருந்ததில்லை. அவற்றுக்கெல்லாம் அவசியமே இல்லாத வீர வாழ்வு வாழ்வதாகக் கருதிக்கொண்டிருந்தவனுக்குள், அம்மட்டில் காலம் குமுதவல்லியின் வடிவில் வந்து பரீட்சை வைத்துவிட்டது.

‘உங்களால் முடியாது... உங்கள் பட்டமும் பதவியும் அதற்கு அனுமதிக்காது... அது சாத்தியமே இல்லை’ என்று ஆணி அடித்த மாதிரி குமுதவல்லி பேசிய பேச்சு, அவன் ஆண்மைக்குள் ஒரு தீப்பொறியை ஊதிவிட்டது. பற்றி எரியத் தொடங்கிவிட்டது மனது.

“மன்னா நாம் திரும்பிவிடுவோமா” என்று கேட்ட அமைச்சரைத் தீர்க்கமாய்ப் பார்த்தான். அதற்குள் உப்பிலியப்பன் கோயிலின் பட்டர் பூர்ண கும்பத்தோடு அவன் இருப்பிடத்துக்கே வந்துவிட்டார்.  அவர் பின்னே வேத முழக்கமிடும் வேதியர்க் கூட்டம். அவர்கள், மன்னனை வரவேற்றுச் சிறப்பிக்கும் வேத மந்திரங்களைக் கூறத் தொடங்கினர்.

அவர்களது செயல் நீலனை ஆச்சரியத்தோடு சிந்திக்கவைத்தது. அவன் கண் எதிரில் பூர்ண கும்பம். காதுகளில் வேத மந்திர முழக்கம்.  அவனுக்கு இது முதல் அனுபவம்!

வேட்டைக்குப் போயிருக்கிறான், விருந்துக்கு போயிருக்கிறான், கணிகையர் கோட்டத்துக்கும் போயிருக்கிறான், நகர்வலம் என்று நாலாபுறமும் சுற்றி வந்திருக்கிறான். ஆட்சியாளர்களை சந்தித்து அகமகிழ்ந்து பேசியிருக்கிறான். போர்க்களங்கள் பல கண்டு வாளால் பலரது சிரசைப் பனங்காயைச் சீவுவது போல் சீவியிருக்கிறான். இப்படி, அவன் வாழ்வில் எவ்வளவோ அனுபவங்கள். ஆனால் ஒரு கோயில் வாசலில் நிற்பதும், பூர்ணகும்பம் பார்ப்பதும், வேத மந்திரம் கேட்பதும் இப்போது தான். அந்த மந்திர ஒலி தன் மகத்தான சக்தியைக் காட்ட ஆரம்பித்தது.

“அடேய் நீலா! உலகம் என்பது பெரியதடா. உனது திருவாலி நாடு அதில் ஒரு கைப்பிடி மண் மட்டும்தான். நீ கண்டதும் கேட்டதும்கூட அதே கைப்பிடி அளவுதான். நீ மிகச்சிறியவன். மிகமிகப் பெரியவன் உள்ளே இருக்கிறான். போய்ப் பார் தெரியும்...” என்று யாரோ அவன் அருகில் நின்று கொண்டு சொன்னது போலவும் இருந்தது.

மன்னன் நீலன், மெள்ள தன்னை மறக்க ஆரம்பித்தான். பூர்ண கும்பத்தின் பின்னே கடலை நோக்கிச் செல்லும் நதிபோல நடக்க ஆரம்பித்தான்.

வேத மந்திர முழக்கம் தொடர்ந்தது.

- தொடரும்.

-இந்திரா சௌந்தர்ராஜன்

படம்: என்.ஜி.மணிகண்டன்