Published:Updated:

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19
பிரீமியம் ஸ்டோரி
தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

Published:Updated:
தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19
பிரீமியம் ஸ்டோரி
தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

திருவாரூர்- சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று  (வி+டங்கம்= உளியினால் செதுக்கப்படாதது).  இவ்வூரை, பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு உரிய தலம் என்றும் ஆன்றோர்கள் சிலர் கூறுவர்.

•  சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து, `அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டார்' என்று அப்பர் பெருமான் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதையே, ‘கோயில் ஐந்து வேலியாம். தீர்த்தக் குளம் ஐந்து வேலியாம். செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலியாம்’ என்பார்கள். திருவாரூர் கோவை என்ற நூலில் ‘குளம் வாவி மதில் ஐவேலியாம். திருவாரூர் தியாகர்’ என்ற குறிப்பு இருக்கிறது.

• சிவனாரின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டவை திருவாரூர் நகரமும் ஆலயமும் என்கின்றன புராணங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•   திருக்கோயிலின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர். சுமார் 25 ஏக்கர் - கமலாலயத் தெப்பக்குளம். செங்கற் தளியாக இருந்த திருவாரூர் ஆலயம், பிறகு சோழப்பேரரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது.

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

• முதலாம் ஆதித்த சோழனால் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) திருப்பணி கண்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜயநகர, மராட்டிய மன்னர் களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது வருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குருசந்திர யோகம் சேர்ந்த கடக லக்னத்தில், புண்ணியபுரமாம் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவனார். அப்போது, திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும் தியாகராஜ வடிவமாகவும் தோன்றினார்.

• இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பட்டார். பின்னர் இந்தத் தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

• மூலவரான வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார். தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்பர். ஸ்ரீசக்ரம் மார்பை அலங்கரிக்க அற்புதமாய்த் திகழும் இந்த இறைவனின் திருமேனி காணக் கிடைக்காதது என்பர்.

• நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகின்றன. பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடைபெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால் இதற்கு அஜபா (ஜபிக்கப்படாதது) என்று பெயர். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாக ராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம்.

• எல்லாக் கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பர். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர். தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபைக்கு ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர்.

• மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமா னுக்குப் பொதுவான தச அங்கங்களை அருளியுள் ளார். ஆனால், இந்தத் தியாகராஜருக்குத் தனியான தச அங்கம் உண்டு. அவை: 1. பெயர்- ஆரூரன், 2. நாடு- அகளங்க நாடு, 3. ஊர்- ஆரூர், 4. ஆறு- ஆனந்தம், 5. மலை- அருள்மலை, 6. படை- வீர கட்கம், 7. பறை- பஞ்சமுக முரசு, 8. மாலை- செங்கழுநீர், 9. கொடி- தியாகக்கொடி, 10. குதிரை- வேதம்.

• 16 வகையான அங்கப்பொருள்களும் சொல்லப் படுவது உண்டு. அவை: மணித் தண்டு, தியாகக் கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டயம், அஜபா நடனம், ஐராவணம், அரதன சிருங்கம், பஞ்சமுக வாத்தியம், பாரி நாகஸ்வரம், சுத்த மத்தளம், குதிரை-வேதம், சோழ நாடு, ஆரூர், காவிரி, பதினெண் வகைப் பண்.

•   தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவகிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாகக் கூறுவர். பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும்.

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

• தியாகேசப் பெருமானுக்கு சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து இழைத்துக் கிடைக்கும் செந்நிறத் திரவியத்தை இடுகின்றனர்.

• உற்சவத்தில் வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது!

 

• தியாகராஜர் சந்நிதியில் ‘திருச்சாலகம்’ எனும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. தியாகராஜருக்கு மாலை நேர பூஜையின்போது 18 இசைக் கருவிகள் இசைக்கப் பெற்றனவாம். அவை: சுத்த மத்தளம், கர்ணா, சங்கு, எக்காளம், நகரா, நமுகி (நட்டுமுட்டு), கிடுகிட்டி (கொடுகொட்டி), புல்லாங்குழல், தாரை, பாரிநாயனம், பஞ்சமுக வாத்தியம், தவண்டை, பேரிகை, பிரம்மதாளம், வாங்கா, திருச்சின்னம், தப்பட்டை, முக வீணை.

• பஞ்சமுக வாத்தியம் இந்தத் தலத்தின் சிறப்பு. உலகில் இது ஓரிரு ஆலயங்களில் மட்டுமே உள்ளது. இதை ‘ஐமுக முழவம்’ என்றும் சொல்வர்.

• ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என்றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். இவருக்கு ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு. மற்றும் சில பெயர்கள்: அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டைமான், கனகமணித் தியாகர், தியாகவிநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெருமான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன்.

• இங்கு மாலை வேளையில் தேவேந்திரன் வந்து பூஜிப்பதாகவும் சாயரட்சை பூஜையில் தேவர்களும் ரிஷிகளும் கலந்துகொள்வதாகவும் ஐதீகம்.  தேவேந்திரன் வைத்த பரீட்சையின்போது, தியாகேசரின் அசல் விக்கிரகத்தை செங்கழுநீர்ப்பூ மூலம் சரியாகக் கணித்தான் முசுகுந்தன். எனவே, தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு. தியாகராஜருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை படைக்கப்படுகின்றன.

•   யோக நெறியில் நிற்கும் சாதகர்கள், பாகற்காய் பொரியலும், தூதுவளைக் கீரை மசியலும் உண்பது வழக்கம். ஆகையால், தியாகேசப் பெருமானுக்கு தூதுவளையும் பாகற்காயையும் உச்சிகால வேளையில் நிவேதிக்கும் வழக்கம் இருந்தது. முன்னாளில் பெருந்திருவிழாவில் ஒரு நாள் ‘பாகற்காய் மண்டபப் பிரவேசம்’ என்ற வைபவம் நடந்ததாம்.

• மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி, அருள்மிகு கமலாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். க- கலைமகள், ம- மலைமகள், ல- அலைமகள். அம்பிகைக்குத் தனிக் கொடிமரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள்.

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

• அம்பிகைக் கோயிலின் மேற்கு மூலையில் 51 அட்சரங்கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன.

• தியாகராஜரின் அருகில் வீற்றிருக்கும் தேவிக் குப் பெயர் ‘கொண்டி’. இறைவனின் அருளை பக்தன் அடையும்படி செய்து இன்புறவைப்பவள் என்பதால் இப்பெயர். `கொண்டி' என்பதற்கு ‘இணைப்பது’ என்று பொருள்.

• இந்தத் திருத்தலத்தின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங் கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப்பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி உண்டு. அம்பிகை, தன் இடக் கரங்களுள் ஒன்றால், முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி அருள்கிறாள். இது அபூர்வ தரிசனம்.

•   இக்கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதி உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

•   கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம், ‘செங்கழுநீர் ஓடை’ ஆகிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. கமலாலயக் குளத்தில் ஒருமுறை நீராடி னால் மகாமகக் குளத்தில் 12 முறை நீராடிய புண்ணியம் கிடைக்குமாம். இதில், 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இதன் நடுவில் யோகாம்பிகை சமேத நாகநாதர் கோயில் கொண்டுள்ளார்.

• இந்தக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார்.  விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக்கொண்டார். அந்தப் பொன் தரமானவையா என்று மாற்றுரைத் துப் பார்த்ததால், விநாயகருக்கு இந்தப் பெயர்.

• துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத் தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருநாமம் வந்தது. இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது. இங்கு கமலாம்பிகையை துர்வாசர் மந்திர விதிப்படி பூஜித்திருக்கிறார்.

•   தீர்த்தக்கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. பல்குண மாதம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் - கமலநாயகி திருமணம் நடந்தது.

• தேவாரப் பதிகங்கள்-350, திருவாசகப் பாடல்கள்-7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். மேலும், அருணகிரிநாதரின் 11 பாடல்களாலும், ராமலிங்க அடிகளின் திருவருட்பாவிலும் தனி இடம் பெற்றுள்ளது. திருவாரூர் மும்மணிக்கோவை - 63 நாயன் மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமானால் இயற்றப்பட்டது. 11-ஆம் திருமுறையில் உள்ளது.

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

• இங்கு ரிஷபதேவர் நின்ற திருக்கோலத்தில் செப்புத் திருமேனியாக (நின்ற இடபம்) காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மூர்த்தியர் வக்கிரம் இன்றி ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள ஸ்ரீதியாகராஜஸ்வாமியை நோக்கி அமைந் துள்ளனர். நளனும் சனியும் வழிபட்ட தலம் இது.

• சண்டேஸ்வரர் சந்நிதிகள் இரண்டு உள்ளன. ஆதிசண்டேசுரர் வெள்ளாடையுடன் உற்சவராகவும் ஏனையவர் எமசண்டேசராகவும் திகழ்கின்றனர். பிறக்க முக்தி தரும் தலமான திருவாரூரில் எமனுக்கு வேலை இல்லாததால், அவர் இங்கு எம சண்டேசுவரராக அருள்புரிவதாக நம்பிக்கை. பதினெண் சித்தர்களில் ஒருவரான கமல முனி, இங்கு யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார்.

•   இக்கோயிலில் சந்நிதிகொண்டிருக்கும் ஸ்ரீஆனந்தீஸ்வரரை பௌர்ணமி மற்றும் விசாகம் குறிப்பாக வைகாசி விசாகத்திலும் அபிஷேக- ஆராதனை செய்து தாமரை மலரால் வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.

 

• ஸ்ரீஆனந்தீஸ்வரம் நுழைவாயிலில் வலப் புறம் ஸ்ரீஜேஷ்டாதேவி அமைந்துள்ளாள். வனதுர்கை, வாராகி, அஸ்வாரூடாவும் புடைசூழ அமர்ந்துள்ளனர். இவளை வியாழக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளும் உடல் உபாதைகளும் குணமாகும்.

• பிராகாரத்தில் தனிக் கோயிலாக ‘ஆரூர் அறநெறி’ அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற கோயில் இது. திருவாரூரில் தேர் நிலைக்கு அருகே கீழ வீதியில், ஆரூர்ப் பரவையுண் மண்தளி (தூவாய்நாதர்) எனும் கோயில் உள்ளது. சுந்தரரால் பாடப் பெற்ற தலம் இது.

• வடக்குக் கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி ஒரு சிவன் சந்நிதி உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர். விறன் மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போகவிடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க ஈசன் சுந்தரருக்கு இங்கு காட்சியளித்தார்.

• இரண்டாம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நிவேதித்தால் நோய்களிலிருந்து விடுபடலாம். இதே பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேசுவரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது.

 

• சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து, அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் சலியாது எழுந்தருளியதால் அசலேசர் ஆனார். அசலேசுவரரோடு, பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு.

• இந்தச் சந்நிதிக்கு நேர் எதிரில் தல விருட்சத் தின் அருகில் ஆடகேசுவரம் அமைந் துள்ளது. இறைவனுக்கு தனி உருவம் இல்லை. ஆனால் நந்தி, பலி பீடம், கொடி மரம், துவார பாலகர்கள் உள்ளனர். மூலாதாரத் தலம் திருவாரூர் என்பதற்கான சான்று ஆடகேசுவரம்.

• ஆலயத்தினுள் தெற்கு நோக்கி காட்சி தருகிறது ஸ்ரீருண விமோசனர் சந்நிதி. அமாவாசை அன்று இவருக்கு அபிஷேக- ஆராதனை நடைபெறும். கடன் மற்றும் தோல் வியாதி இருப்பவர்கள் இவரை வேண்டி பலனடைந்ததும் உப்பு வாங்கிக் கொட்டுகிறார்கள்.

• இங்கு பணியாளர்களுக்கு மன்னர் காலத் திலிருந்து சிறப்புப் பட்டப் பெயர்கள் உண்டு. அவை : தியாகராஜருக்குப் பூஜை செய்பவர் - நயினார். ஆபரணங்களைப் பாதுகாப்பவர்- பொற்பண்டாரி. தீபம் ஏற்றுபவர்- பரமராயர். சுவாமியை சுமப்பவர்- விழப்பரமராயர். பாரிநாயனம் வாசிப்பவர்- நாயினார் அடியார். அபிஷேகத் தண்ணீர் கொண்டு வருபவர்- திருமஞ்சனர். நைவேத்தியம் செய்பவர்- பரிசாரகர்.

•   திருவாரூர் ஈசனை வழிபட்டவர்கள்: திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், விசுவாமித்திரர், அகத்தியர், மகாபலி, துர்வாசர், மேனகை, முசுகுந்தன், தசரதன், ராமன், லவ-குசர். புரூரவஸு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சிவகணங்கள், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தண்டி அடிகள், சோமாசி மாறர், செம்பியன் மாதேவி, குமரகுருபரர்.

•   அற்புதமான இந்தத் தலத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடை பெற்று வருகிறது. உலகமே வியந்து போற்றும் ஆரூரின் ஆழித்தேரோட்டம், பங்குனி - 18 திங்கள் கிழமை (1.4.19) அன்று நடைபெறுகிறது. அன்பர்கள் அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஆரூரானின் அருள் பெற்றுச் சிறக்கலாமே!

(16.5.07 இதழிலிருந்து...)

ஆழித் தேரழகு!

பாராளும் பரந்தாமனுக்கும்  ஓர் ஏக்கம். தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று வருந்தினார். திருமகளோடு பூவுலகுக்கு வந்து, மேன்மைமிக்க திருவாரூர் தலத்தில் ஈசனை வழிபட்டார்.

திருமாலின் பக்திக்கு மனமிரங்கிய ஈசன் அவருக் குக் காட்சி தந்து, காலம் கனியும்போது பிள்ளை வரம் உண்டாகும் என்று அருளினார். அத்துடன், தனது அம்சமான விடங்க மூர்த்தத்தையும் திருமாலுக்கு அளித்தார்.

அப்போது, திருமகள் ஜட உருவான பிள்ளையே வேண்டுமென்று வரம் கேட்க, அதன்படி அவர்களுக்கு  பிள்ளையாய் அவதரித்தவரே மன்மதன் என்று புராணக்கதை உண்டு. திருமால் பெற்றுக்கொண்ட விடங்க மூர்த்தமே இந்திரனிடம் வந்து, பின்னர் அவரிடமிருந்து முசுகுந்த சக்ரவர்த்திக்கு ஏழு மூர்த்தங்களாக கிடைத்தது.

தேரோடும் திருவாரூர்! - ஆழித் தேரோட்டம் 1.4.19

வேறெவருக்கும் காணக் கிடைக்காத இந்த மூர்த்தங்களை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு சாதாரணமாகக் கொண்டு வரமுடியுமா என்ன?

முசுகுந்தன் யோசித்தான்... ஈரேழ் லோகங்களிலும் இல்லாத வகையில் அற்புதமான ஒரு திருத்தேரில் இந்த மூர்த்தங்களை கொண்டு செல்ல விரும்பினான். அதற்காக மயனை வேண்டி தேர் தயாரிக்கும்படி கூறினான். விண்ணுலக ஈசனைத் தாங்கும் திருத்தேர் ‘அழித்தேராக’ உருவாகத் தொடங்கியது. ரத ஸ்தாபன சாஸ்திரம் எனும் ஒரு கலையே உருவாகும் வகையில், அரிய நுட்பங்களோடு சகல தேவர்களாலும் உருவாக்கப்பட்டது, அந்தத் தேர்.

16 வகை ரத அம்சங்கள் கொண்ட ஒரே தேராக ஆழித்தேர் உருவானது. சகல தேவர்களும் ரதத்தின் தட்டுகளில் ஆங்காங்கே அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

திரிபுரம் எரிக்க ஈசன் கிளம்பும்போது உருவான தேவகண திருத்தேரைப் போலவே உருவான ஆழித்தேரில் 7 விடங்கர்களையும் அமர்த்தி முசுகுந் தன் வடம் பிடித்தான். ஈசனை மகிழ்விக்க 70 வாத்தியங்கள், பூசிக்க ஈராயிரம் வகை தேவ மலர்கள், அர்ச்சனை செய்விக்க தேவரிஷிகள் என பலரையும்  அழைத்துக்கொண்டு மண்ணுலகுக்கு வந்தான்.

அந்தத் திருத்தேர் மண்ணில் முதலில் இறங்கிய இடம் தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள திருநல்லூர். இங்குள்ள பஞ்சவர்ணேசுவரர் கோயிலில் தான் ஏழு விடங்க பெருமானுக்கும் முதல் பூஜை நடைபெற்றது. பின்னரே ஆழித்தேர் மெள்ள அசைந்து திருவாரூர் சென்றது என்கிறது திருவாரூர் தலப் புராணம்.

தேவலோகத்திலிருந்து ஆழித்தேரில் வந்த 70 வகை வாத்தியங்களில் 16 மட்டுமே இன்று உபயோகத்தில் உள்ளன. ஆழித்தேர் ஓடும் திருநாளில், ஈசனுக்கு விருப்பமான கொடுகொட்டி வாத்தியத்தின் மூலம் ‘தியாகா..தியாகா’ என்று முழங்குவதை அன்பர்கள் கேட்டு ரசிக்கலாம். அதேபோல், ஈசனின் பூசைக்காக முசுகுந்தன் கொண்டுவந்த ஈராயிரம் வகை மலர்களை பாதுகாக்க பெரும் நந்தவனம் உருவாக்கப்பட்டது. நீர்ப்பூக்களை வளரச்செய்யவே செங்கழுநீர் ஓடை என்ற தீர்த்தம் முசுகுந்தரால் உருவாக்கப்பட்டதாம்.

இத்தகைய பெருமைகளையும் ஆரூரின் மகிமை களையும் உலகுக்கு உரக்கச் சொல்லும்விதம் வருடம் தோறும் அசைந்து ஆடி ஓடிக்கொண்டு இருக்கிறது, ஆழித்தேர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism