அது என் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டு. குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் எப்போதுமே குறைவாகத்தான் மதிப்பெண் வாங்குவேன். மேலும் சோதனையாக அந்த வருடம் இறுதித் தேர்வு எழுதும்போது கடுமையான காய்ச்சல் வந்து என்னை முழுமையாக எழுதவிடாமல் செய்துவிட்டது.
தேர்வு முடிந்ததும் எப்படிக் கூட்டிப் பார்த் தாலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண், வருவதாகத் தோன்றவில்லை. தேர்வில் தோற்றால் என் கனவெல்லாம் முடிந்துபோகுமே என்ற கவலை வாட்டியது. அப்போது, என் அம்மா சொன்னது ஞாபகத்தில் வந்தது. ‘எப்போதெல்லாம் உன்னைக் கவலை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் முருகனை எண்ணி வழிபடு; அவன் உன் கவலை களைத் தீர்ப்பான்’ என்று அடிக்கடி சொல்வார்.

நானும் ‘முருகா! என்னை இந்தப் பரிட்சையில் வெற்றிபெற வைத்துவிடு. பழநிமலைக்கு வந்து உன்னை தரிசிக்கிறேன்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.
ஆச்சர்யம் பாருங்கள்... தேர்வு முடிவுகள் நான் வெற்றி பெற்றதாக அறிவித்தது. குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் 48 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். ஆமாம்... எங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத ஒரு கேள்வி இடம்பெற்றிருந்ததால், அந்தக் கேள்விக்குப் பதில் எழுத முனைந்த எல்லோருக்கும், 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாம். இறையருளால் நானும் அந்தக் கேள்விக்கு, ஏதோ தெரிந்தவகையில் பதில் எழுதியிருந்ததால் வெற்றி பெற்றேன். இது முருகன் அருள் இல்லாமல் வேறென்ன?!
அதுமட்டுமா? பழநியில் அந்த ஞானபண்டிதன் என்னை ஆட்கொண்ட நிகழ்ச்சி அற்புதமானது.
தேர்வில் வெற்றிபெற்றதும், வேண்டிக்கொண்ட படி பழநிக்குச் சென்றேன். பாக்கெட்டில் 350 ரூபாய் இருந்தது. இன்னும் பணம் தேவையென்றால் ஏ.டி.எம் - ல் எடுத்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.
தரிசனம் நிறைவாக முடிந்ததும் பார்த்தால், பர்ஸில் செலவு செய்ததுபோக 40 ரூபாய் மட்டுமே மீதியிருந்தது. அப்போதுதான் கவனித்தேன்...
ஏ.டி.எம் கார்டு பர்ஸில் இல்லை. நண்பரிடம் ஒருமுறை கொடுத்தது வாங்கவே இல்லை என்பது நினைவுக்கு வந்தது. தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது. ஊர் திரும்பக்கூட போதுமான பணமில்லை. ‘முருகா இதென்ன புதுசோதனை' என்று மனதுக்குள் கதறினேன்.
மிகச்சரியாக அந்த நேரம் ஒரு பக்தர், என் எதிரே வந்தார். என்னை அழைத்து வற்புறுத்தி 200 ரூபாயைக் கொடுத்தார். ஆனால், நான் வாங்க மனமின்றி மறுத்தேன்.
`‘தம்பி, எங்கள் ஜோதிடர் என்னை பழநிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்தார். பழநியில் பணத்தைத் தொலைத்த ஓர் இளைஞருக்கு உதவிசெய்ய நேரிடும்; அதன் பலனால், உடல்நலம் இல்லாத என் தம்பி குணம் அடைவார் என்று சொல்லியிருந்தார். இங்கே அப்படியானவரை எப்படித் தேடுவது என்று திகைத்திருந்த வேளையில்தான். உன்னைக் கவனித்தேன். இந்தச் சந்திப்பு முருகனின் அருளால் நடந்ததுதான். மறுக்காமல் பணத்தை வாங்கிக்கொள்'' என்றார். அந்த முருகனே நேரில் வந்து உதவுவதாகவே தோன்றியது எனக்கு. நெகிழ்ச்சியோடு பணத்தைப் பெற்றுக்கொண்டேன்.
என் மனதெல்லாம் நிறைந்திருந்தான் முருகன். நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...
அஞ்சுமுகம் தோன்றில்
ஆறுமுகம் தோன்றும்!
- ஆர். அருள்மணி, சென்னை-56

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
-ஓவியம்: பத்மவாசன்