மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

து ஒரு புற்று. ரயில் பாதையை ஒட்டி, எருக்கஞ்செடிகளும், வேலிக்கருவை முற்களும் அடர்ந்த இடத்திலிருந்தது. பல நூறு கால்கள் அதைக் கடந்து சென்றிருக்கின்றன. சுந்தரி அக்காவுக்கு மட்டும் அந்த வெளி, ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்தப் புற்று.

புற்று என்பது பாம்புக்கு உரித்தானதல்ல. அது கரையான் எனப்படும் ஒருவகை எறும்புகளின் இருப்பிடம். மண்ணை தங்கள் ஊனால் குழைத்துக் குழைத்து கரையான்கள் எழுப்புகிற வீடு அது. எப்போதும் மேலே மண் வைத்துப்பூசி பாதுகாப்பாகவே தங்கள் குடிலை அமைத்துக் கொள்கின்றன கரையான்கள். திறந்துகிடக்கிற புற்றுகளில் உள்ளே நுழைந்து பதுங்கிக்கொள்கின்றன பாம்புகள். குளிரும் வெப்பமுமற்ற அந்தப் புற்றின் தட்பவெப்பம் பாம்புகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

கிராமங்களில் புற்று வழிபாடு இயல்பானதுதான். வீட்டுக்குப் பின்புறமுள்ள புற்றுக்குக் கோழி நேர்ந்துவிடுவது என் அம்மாவின் வழக்கம். நாகாத்தம்மன் அங்கே குடியிருப்பதாக அவர் தீர்க்கமாக நம்பினார். அவ்வப்போது எங்களைக் கடந்துபோகிற பாம்புகள், நாகாத்தம்மனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டே எங்களைச் சீண்டாமல் செல்கின்றன என்பது அம்மாவின் நம்பிக்கை. வீட்டில் வழக்கத்துக்கு மாறாக எது சமைத்தாலும் ஒரு தட்டில் கொண்டுபோய் புற்றுக்கடியில் வைத்துவிட்டு வருவதும் நெடுங் காலம் தொடர்ந்தது.

அடர்ந்துகிடக்கிற கிராமங்களில் விஷப்பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலவித் திரியும். அவற்றுக்கு ஒரு கட்டுக்காவல் போடுவதுதான் நாகாத்தம்மன் வழிபாடு. வீட்டைச் சுற்றி ஒரு காவலரண் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்களை அச்சம் இல்லாமல் கிராமங்களில் ஜீவிக்கவைக்கிறது.

சுந்தரி அக்காவும் அப்படித்தான் அந்தப் புற்றைக் கண்டடைந்தார். அதை இறைவடிவாக வணங்கத் தொடங்கினார். படிப்படியாக அவர் வழியில் அங்கு ஒரு வழிபாட்டுத் தலம் முளைத்தது. சிலருக்கு அருள் வந்தது. ‘இது தஞ்சையின் எல்லையம்மனாக இருக்கும் கோடியம்மனின் இருப்பிடம்’ என்றார்கள். புற்று, புற்றுமாரியம்மனாக பெயர் பெற்றது. தஞ்சாவூர் கோடியம்மன் கோயிலிலிருந்து மண்ணெடுத்து வந்து புற்றிருந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு கோயிலை எழுப்பினார்கள். இன்று பேராவூரணியில் ஒரு பெருங்கோயிலாக அது வளர்ந்து நிற்கிறது.

வீட்டுக்குள்ளேயே, சமையலறையில் ஒரு தெய்வமும், ஈசான மூலையில் ஒரு தெய்வமும், வடக்கு வேலியில் ஒரு தெய்வமும் குடியிருப்பதாகக் கருதி வழிபடுபவர்கள் கிராமத்து மக்கள். பத்து மனிதர்கள் ஒன்றிணைந்து பிரார்த்தனையில் இணைந்தால் அந்த இடம் தெய்விகமாகிவிடுகிறது. அத்தனை மனங்களும் ஒருங்கிணைந்து ஒரு தெய்விக சக்தியை பிரசவிக்கின்றன. புதிதாக அந்த இடத்துக்கு வருவோர், ஒரு தெய்விக அதிர்வை அனுபவிக்கிறார்கள். நம்பிக்கையை, மகிழ்ச்சியை, நிம்மதியை, உயிர்ப்பை பிரவாகமெடுக்கச் செய்கிறது அந்த இடம். `எந்தத் துயர் வந்தாலும் எனை மீட்கும் ஒரு சக்தி என்னருகில் எனக்கு நெருக்கமாக இருக்கிறது' என்ற நம்பிக்கை, வாழும் திராணியை மேம்படுத்துகிறது.

சிவந்தியாண்டிக் கோனாரின் கதை இன்னொருவிதமானது. சிவந்தியாண்டிக் கோனார் மாதிரி நம் தமிழ்க் கிராமங்களில் ஊருக்கு ஒருவர், தெய்வமாக வீற்றிருக்கிறார். கிராமங்களின் எல்லை தெய்வங்களாகவும் காவல் தெய்வங்களாகவும் வீற்றிருக்கும் எல்லோரும், கோனாரைப் போல அந்தந்த மண்ணோடு தொடர்புடைய மூத்தோன்கள். அந்தக் கிராமத்தின் வேரை, அந்தத் தெய்வத்தின் வேரை அகழ்ந்தால், அது அங்குமிங்குமாக ஊடாடி இறுதியில் அந்த மண்ணிலேயே புதைந்துகிடக்கும்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

சிவந்தியாண்டிக் கோனார்  திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர். நிறைய மாடுகள் வைத்து பால் கறந்து விற்பது இவருடைய தொழில். தொழில்பக்தி மிக்கவர். தினமும் அதிகாலை எழுந்து பெருமாளை வணங்கிவிட்டு மாடுகளைப் பத்திக்கொண்டு கிளம்பினாரென்றால், காடு, கரைகளில் விட்டு மேய்த்துத் திரும்ப மாலையாகி விடும். போகும்போது, ஒரு தூக்குவாளி நிறைய சாதமும் தொட்டுக்கொள்ளத் துவையலும் கட்டிக் கொடுப்பார் கோனாரின் மனைவியார்.

ஒரு நாள் சிவந்தியாண்டி, காவிரிக்கரை வழியாக மாடுகளை ஒட்டிச்சென்றபோது, ஒரு மனிதர் வழிமறித்தார். ஆள், ஆஜானுபாகுவாக இருந்தார். முறுக்கு மீசையும் திடமான உருவும் கோனாரை மிரளச் செய்தது.

“யார் நீங்கள்... ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்” என்று கேட்டார்.

“நீ இந்தப் பாதையில் தினமும் மாடுகளை ஓட்டிச் செல்வதை கவனிக்கிறேன். இன்றிலிருந்து, இதோ இந்தக் காராம்பசுவிடம் கறக்கும் முழுப்பாலையும் எனக்குத் தர வேண்டும்...” என்றார் அந்த மனிதர்.

கோனாருக்கு கோபம் வந்துவிட்டது. “முதலில் நீங்கள் யார்..? உங்களுக்கு ஏன் நான் தினமும் பால் தரவேண்டும்..? என் மாடுகள்... என் உழைப்பு... எந்த உரிமையில் நீங்கள் பால் கேட்கிறீர்கள்” என்றார்  கோனார்.

“நீ உன் மாடுகளை காடு கரைகளில் விட்டு விட்டு, உன் மனைவி தரும் உணவைத் தின்றுவிட்டு மரத்தடியில் உறங்கிக்கிடக்கிறாய்.  அவ்வப்போது மாடுகளைப் பிடிக்க வரும் நரிகளையும் இன்னபிற விலங்குகளையும் அடித்து விரட்டி உன் மாட்டைக் காப்பது யாரென்று நினைத்தாய்... நான்தான். அதற்கான கூலியாகத்தான் கேட்கிறேன்...” என்றார் அந்த மனிதர்.

“யாரை ஏமாற்றுகிறாய்... இதுவரை இந்தப் பகுதியில் உன்னைப் பார்த்ததேயில்லை. நீ என் மாடுகளுக்குக் காவல் இருந்தாயா..” என்று ஏளனமாகக் கேட்டார் கோனார்.

அந்த மனிதரின் கண்கள் சிவந்தன. கோபத்தில் கரங்கள் துடித்தன. மல்லுக்குத் தயரானார். கோனாரும் கைகளை முறுக்கிக்கொண்டு முன்வந்தார். அந்த மனிதரின் கரம் நொடியில் கோனார் மேல் இறங்கியது. அடுத்த நொடி கண்கள் இருட்ட கீழே விழுந்தார் கோனார்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...

வழக்கமாக மாலை, மாடுகளோடு வீடு திரும்பிவிடுவார் கோனார். ஆனால், நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. மாடுகள் பட்டிக்கு வந்து சேர்ந்துவிட்டன. கோனார் வந்தபாடில்லை. மனைவி தவித்துப்போனார். உறவினர்கள் ஆளுக்கொன்றாகச் சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேரை உடன் அழைத்துக்கொண்டு, கோனார் மாடு மேய்க்கச் செல்லும் தடத்தில் நடந்தார் மனைவி. சரியாக, ஐயனார் கோயிலுக்கு அருகில் மூர்ச்சையாகிக் கிடந்தார் கோனார்.

“உன் கணவனை வழிமறித்தது நான்தான். இனி அவன் எனக்கருகிலேயே இருப்பான். உன் மரபினரே இனி எனக்கு பூஜைகள் செய்யவேண்டும்” என ஐயனார் கோயிலுக்குள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. 

அன்று தொடங்கி சிவந்தியாண்டிக் கோனாரின் சந்ததியினரே கோயிலில் பூஜைகள் செய்கிறார்கள். திருச்சி, முக்கொம்புக்கு அருகேயுள்ள மேலூர் கிராமத்தில், ஐயனார் கோயிலில் ஐயனாருக்கு அருகிலேயே சிவந்தியாண்டி கோனாரும் தெய்வமாக வீற்றிருக்கிறார். முறைப்படியான பூஜைகள் கோனாருக்கும் வழங்கப்படுகின்றன.

இன்றும் அவரது சந்ததிகள் பெருமிதத்தோடு கோனாருக்குப் பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். பிற மக்களும் கருப்பனுக்கு, ஐயனாருக்குக் கைகூப்புவதைப் போலவே கோனாரிடமும் கைகூப்பி தங்கள் வேண்டுதல்களை வைக் கிறார்கள். எல்லோருக்குமானவராக ஐயனாருக்கு அருகில் நின்றுகொண்டு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் சிவந்தியாண்டிக் கோனார்.

இதுதான் நம் வழிபாடு. மண்ணுக்கும் மக்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒரே வேர். ஒன்றோடு ஒன்று பிணைந்ததுதான் தமிழர் வாழ்வு. இன்னும் அறம் சாகாமல், தர்மம் அழியாமல், ஒருவர் மேல் ஒருவர் அன்பாகவும், நட்பாகவும், உறவாகவும், உண்மையாகவும் இருந்து அவரவர் வாழ்க்கையை நிறைவாக வாழ கிராமத்து தெய்வங்களே ஆதாரமாக இருக்கின்றனர். தங்கள் தெய்வங்களின் கரம் பற்றித்தான் இன்னமும் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கிராமத்து மக்கள்!

(நிறைவுற்றது)

-வெ.நீலகண்டன்

படங்கள்:  என்.ஜி.மணிகண்டன், ம.அரவிந்த்