மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

? சமீபத்தில் ஆன்மிக மாத இதழ் ஒன்றில், அனுமனின் மனைவி சுவர்ச்சலா என்றொரு தகவலைப் படித்தேன். இந்தத் தகவல் சரியா?

-வி.தண்டபாணி, ஈரோடு

ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் அவரை பிரம்மசாரி என்றழைப்பது பொதுவான வழக்கம். எனினும், ‘பிரம்மம்’ என்று போற்றக்கூடிய அந்தப் பரம்பொருளை நோக்கி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை, ‘பிரம்மசர்யம்’ என்று கூறலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான்கள் பலரும், தங்களுடைய முன்ஜன்ம வினைப் பயன்களின் காரணமாகத் திருமண பந்தத்தை அடைந்தாலும், அவர்களின் மனநிலை எப்போதும்  எல்லாம்வல்ல பரம்பொருளை மட்டுமே தியானித்திருந்ததை அறிகிறோம். நாம் வெளியுலகில் எப்படி இருக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் நம் மனதளவில் எப்படி இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பது.

நம் வரலாறு மிகத் தொன்மையானது. எனவே, சில நூல்களின் படி அனுமனுக்குச் சுவர்ச்சலா என்ற மனைவி இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்வதே சிறப்பானது. ஒவ்வொருவரும் கடவுளை தங்களின் விருப்பத்துக்கு ஏற்றபடியே வழிபடுகிறார்கள். விநாயகருக்கும் சித்தி, புத்தி என்று தேவியர் இருப்பதாகச் சில புராணங்கள் தெரிவிக்கின்றன.

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

நம் மதத்தில், ஒரு தெய்வத்துக்கு மனைவி என்று குறிக்கப்படுவதை, அந்தத் தெய்வத்தின் ஆற்றலுக்குக் கொடுக்கப்படும் பெயராகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் திவ்ய சரீரங்களுடன் நம்மைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்களுடையது, நம்மைப் போன்று பஞ்சபூதங்களின் சம்பந்தமுள்ள சரீரம் அல்ல.

மேலும், இதுபோன்ற புராண - இதிகாச நிகழ்வுகளின் கால அளவு நீண்டிருப்பதால், அவை ஏதோவொரு காலத்தில் நடைபெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கையில் மட்டும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. தத்துவரீதியாக புரிவதும் ஏற்பதும் முக்கியம். `நான் இந்தத் தெய்வத்தை இப்படித்தான் வழிபட்டு வருகிறேன்; வேறு நிலையில் வழிபட விருப்பமில்லை’ எனில், அப்படியே தொடரலாம் என்பது நம் மதம் நமக்கு அளித்திருக்கும் உரிமை-சுதந்திரம்.

கட்டுப்பாடுள்ள மனதையே ப்ரம்மசர்யம் என்று அறியலாம். அதற்காக... `திருமணம் ஆகியிருந்தால் கட்டுப்பாடு இல்லை அல்லது தேவையில்லை’ என்று பொருளல்ல. கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொதுவான ஒன்று.

? ஒருவர் ஒழுக்கத்துடனும் நல்ல பழக்கங் களுடனும் வாழும் போது, அவருக்குப் பூஜை வழிபாடுகள் அவசியம்தானா?

- எம்.கண்ணபிரான், சென்னை - 100


ஆம் அவசியம்தான். அன்றாடம் குளிப்பது, நல்ல ஆடைகளை உடுத்துவதும், சுவைமிக்க உணவை உட்கொள்வது ஆகிய செயல்களைத் தொடர்ந்து செய்துவருகிறோம். அதுபோல், நமது நல்லொழுக்கமும் பழக்கவழக்கங்களும் செழித்துச் சிறக்க, அனு தினமும் வழிபாடுகள் செய்வதும் மிக அவசியமாகும்.

நாம் செய்யும் பூஜையானது நமக்கு ஆன்ம பலத்தை அளிக்கிறது. கடவுளை வழிபடுவது நமக்காகத்தான். அவர் சர்வ சக்தி படைத்தவர். எனவே, அனுதினமும் நம் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, தெய்வத் திருவுருவங்களுக்கு மலர்கள் சமர்ப்பித்து நமக்குத் தெரிந்த அளவில் வழிபாடு செய்வது மிக முக்கியம்.

செல்போனுக்கு அனுதினமும் சார்ஜ் ஏற்றிப் பயன்படுத்துவது போல், அன்றாடம் பூஜைகள் செய்வது, நம் ஆற்றல்களை மேம்படுத்த உதவும். நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும். பூஜைகள் நடைபெறும் இடத்தில் நல்ல ஆற்றல்கள் மிகுந்து காணப்படும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் மற்ற ஆன்மிக அருளாளர்களும் ஆலயம் தொழுவதையோ சமயச் சின்னங்கள் தரித்துக்கொள்வதையோ குறைத்துக் கொள்ளவுமில்லை; தவிர்த்துக்கொள்ளவுமில்லை.  சிலர், `தற்காலத்தில் பூஜைகள் ஏதும் தேவையில்லை’ என்று கூறலாம். ஆனால், நாம் எந்த நேரத்திலும் சூழலிலும் நமது மரபிலிருந்து வழுவாமல் இருப்பது அவசியமாகும்.

சிலர், தங்களுக்குக் கடமையே முக்கியம் என்றும் பூஜைகள் தேவையில்லை என்றும் கூறலாம். நாம் எதையும் குறை கூறுவதாக இல்லை. ஆனால் நாம் நமது வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாக விளங்கும் பூஜைகளை முடிந்தவரை சிறப்பான வகையில் செய்து வருவோம். அந்த வழிபாடுகள் நமக்கு வல்லமையும் வரமும் அளித்து நம்மைக் காக்கும் என்பதில் ஐயமில்லை.

? முற்காலத்தில் ஆண்களுக்கென்று சில பொறுப்புகள், பெண்களுக்கென்று சில பொறுப்புகள் என சாஸ்திரங்கள் விதித்தபடி நடைமுறையில் இருந்திருக்கின்றன. தற்போது, எல்லாவற்றையும்  எல்லோரும் செய்யலாம் எனும் நிலை வந்துவிட்டது. நாம் எதை ஏற்பது?

-எஸ்.சிவசங்கரன், சென்னை

இயற்கைக்கு உட்பட்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே நற்பலனை அளிக்கும். செயற்கையான காரியங்கள் உயர்ந்த நீடித்த பலன்களை அளிக்காது. நம்முடைய சாஸ்திரங்கள் நம் நலனுக்காக அளிக்கப்பட்டவை. அவற்றை மாற்ற முயற்சி செய்தால் பாதிப்பு நமக்குத்தான். விமானத் தில் பயணம் எனில், சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். `நான் என் வீட்டில் இப்படித்தான் செய்வேன், இப்படித்தான் இருப்பேன். எனவே, விமானத்திலும் அப்படித்தான் செய்வேன்’ என்று அடம்பிடிக்க முடியாது.

கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?

எல்லோரும் ஒருவிஷயத்தை நம் மனதில் நன்றாகப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். நமது இந்தப் பிறப்பு, நம்முடைய பல பிறவிகளில் ஒன்றுதான். ஏற்கெனவே நாம் செய்த வினையால், இப்பிறப்பு நமக்கு அமைந்திருக்கிறது. இதில் நாம் செய்யும் வினைகளின் பயனை அடுத்துவரும் பிறப்பில் அனுபவிக்க நேரிடலாம். அவை எப்போது எப்படி அமையும் என்பதெல்லாம் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். ஆக, செய்யும் வினைகள் நல்லபடியாக இருக்கவேண்டும். நம் முன்னோர்கள், பண்டைய ரிஷிகள் வகுத்த வழிமுறைகளை நம்பிக்கையோடு அனுசரித்து சிறப்படைந்தார்கள். நாமும் அவர்களின் வழியில் இயற்கைக்கு உகந்தவர்களாய் வாழ்ந்தால், வாழ்க்கைப் பயணம் இனிமையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆத்மா என்பது அனைத்து ஜீவன்களிலும் ஒரே ரூபமாக இருந்தாலும், அது இருக்கும் உடல்நிலைக்கு ஏற்ப வேறுபட்ட அனுபவங் களையே அடைகிறது. ஆத்ம ரூபத்தில் நாம் அனைவரும் ஒன்றே. சரீரம் மாறுபடும்போது அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் இருந்தால்தான் நல்லது. எனினும் படிப்பு, வேலைவாய்ப்புகள் போன்றவற்றில் ஆண்மகனுக்கு நிகராக பெண்கள் திறமையை வளர்த்துக்கொள்வதில் தவறில்லை. எனினும் வழிபாடு விஷயங்களில் கட்டுப்பாடுகள் அவசியமே.

? ஜபம் செய்யவும் மந்திரங்கள் சொல்லவும் உரிய நேரம் எது. எப்படிச் சொல்லவேண்டும்?

- எஸ்.செந்தில்நாதன், வேலூர்

ஜபம் மற்றும் பூஜைகள் செய்ய உகந்த நேரம் - பிரம்மமுகூர்த்த காலம் என்று சொல்லப்படும் அதிகாலைப் பொழுதே. சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னர் நாம் எழுந்து காலைக் கடன்களை முடித்து, புனித நீராடி தூய்மையான ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். பிறகு அமைதியான இடத்தில் நல்ல ஆசனத்தில்... நமக்கு எப்படி அமர்ந்தால் சுகமாகவும், ஸ்திரமாகவும் இருக்கிறதோ அப்படி அமர்ந்துகொள்ளவேண்டும்.

பின்னர், முதலில் நம் குருவையும் விக்ன விநாயகரையும் வேண்டிக்கொள்ளவேண்டும். தொடர்ந்து, யோகப் பயிற்சிகளில் ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து, மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவேண்டும். பின்னர், தாங்கள் எந்தத் தெய்வத்தை வழிபட நினைக்கிறீர்களோ, அந்தத் தெய்வ உருவத்தை அதற்குரிய தியான சுலோகத்தின் மூலம் மனதில் நினைத்து, மந்திரத்தை மெதுவாக சொல்லவேண்டும். எத்தனை முறை சொல்லவேண்டும் என்று எண்ணிக்கை வைத்துள்ளீர்களோ, அத்தனை முறை மனம் ஒருமித்துச் சொல்வது பொதுவான முறை.

சில மந்திர ஜபத்தை, குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட திசையை நோக்கி நின்றுகொண்டு செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். அதன்படி செய்வதுதான் நன்மை தரும். மனதுக்குள் சொல்வது உயர்ந்ததாகவும், மெள்ள முணுமுணுப்பது அடுத்த நிலையாகவும், மற்றவர்கள் கேட்கும்படிச் சொல்வது மூன்றாம் நிலையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மூல மந்திரங்கள் என்பது வேறு; ஸ்தோத்திரங் கள் என்பது வேறு. மூலமந்திரங்களை அவரவர் குருவிடமிருந்து உபதேசம் பெற்று, அவரின் அறிவுரையின்படி செய்வதே சிறப்பு. முக்கியமாக மந்திரம் ஜபிக்கும்போது, அந்த மந்திரத்தை உபதேசித்த குருவையும், அந்த மந்திரத்தின் எழுத்து வடிவத்தையும், மந்திரத்துக்கு உரிய தெய்வத்தையும் இடைவிடாது சிந்தித்தல் மிக அவசியம். இதனால் நம் மனம் வேறு எண்ணத் துக்கு ஆட்படாமல், முழுமையாக கடவுளின்பால் இருக்கும்.

விடியற்காலை மட்டுமின்றி, மதியம் மற்றும் மாலை வேலை களிலும், குறிப்பாக சில புண்ணிய காலங்களிலும், க்ஷேத்திரங்களிலும் மந்திர ஜபம் செய்யலாம். மூலமந்திரங்களை உரிய எண்ணிக்கையுடன் செய்வதே முக்கியம்.

- பதில்கள் தொடரும்...

 `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002