ஜோதிடம்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’

திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’

ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் - தொடர்ச்சி...

ட்டத்துராணி சிலையின் தொடையில் பின்னம் இருப்பதைக் கண்ட திருமலைநாயக்க மன்னர், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, சிற்பி சொன்ன பதில் மாமன்னரை ஆவேசம் கொள்ளவைத்ததுடன், பெரும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவர், விடிந்ததும் ``ஸ்ரீதீக்ஷிதர் அவர்களைப் பார்க்கவேண்டும். உடனே போய் அழைத்து வாருங்கள்!” என்று கட்டளையிட்டார்.

அதிகாரி ஒருவர் ஸ்ரீதீக்ஷிதரின் இல்லத்துக்குச் சென்று மன்னரின் கட்டளையை விவரித்தார்.

அம்பிகையின் திருவருளை முழுமையாகப் பெற்றிருந்த ஸ்ரீதீக்ஷிதருக்கு உண்மை புரிந்தது. மன்னர் விபரீத எண்ணத்தால் தன்மீது கோபம் கொண்டிருக்கிறார்; அதை நிறைவேற்றவே அழைப்பு அனுப்பியிருக்கிறார் என்பது விளங்கியது. அதன்பொருட்டு மனம் வருந்தினார்.

‘ஹூம்... அரசர்களின் பேதமை இதுதான் போலும். எனினும், இந்த நிலையில் அரசரைப் பார்ப்பது கூடாது’ என முடிவெடுத்த ஸ்ரீதீக்ஷிதர், அம்பாளிடம் தனது துயரத்தை வெளியிட்டுக் கற்பூர ஆரத்தி செய்தார்.

திருவருள் செல்வர்கள்! - 23 - ‘தாயே சகலமும் நீயே!’

அடுத்த விநாடி, அங்கிருந்தவர்கள் நடுங்கும்படி, எரியும் கற்பூரத்தைத் தன் இரு கரங்களிலும் ஏந்தி, அப்படியே தன் இரு கண்களிலும் அப்பிக் கொண்டார். அந்த நிலையிலேயே தன்னை அழைக்க வந்த அதிகாரியிடம், “அரசர் எனக்கு அளிக்க எண்ணியிருக்கும் தண்டனையை நானே விதித்துக்கொண்டதாகச் சொல்லிவிடு!'' என்று கூறி, விடைகொடுத்து அனுப்பினார் ஸ்ரீதீக்ஷிதர்.

தன் பார்வையைத் தானே பறிகொடுத்த அந்த நிலையில் ஸ்ரீதீக்ஷிதர், அம்பாளின் திவ்ய மங்கல வடிவத்தைத் திருவடி முதல் திருமுடிவரை, அப்படியே தியானம் செய்தபடி, அற்புதமான துதி நூல் ஒன்றைப் பாடினார். அந்த நூல்தான் ஆனந்த சாகர ஸ்தவம்.

ஸ்ரீதீக்ஷிதர் மெய்யுருகி அம்பாளைப் பாடப் பாட, அம்பிகையின் அந்தந்த அவயவங்கள், வரிசையாக அவருக்குப் பிரத்தியட்சமாயின! அதுமட்டுமா? நூலை நிறைவு செய்தபோது, ஸ்ரீதீக்ஷிதர் முழுமையாகக் கண்ணொளியைப் பெற்றார்; ஆம்! தீக்ஷிதரின் பார்வை மீண்டது.

நடந்ததையெல்லாம் அறிந்தார் மன்னர்.

“ஆஹா! உத்தம ஞானியான ஸ்ரீதீக்ஷிதரின் மனம் புண்படும்படியாக நடந்துகொண்டுவிட்டேனே” என்று வாய்விட்டுப் புலம்பியபடியே, ஸ்ரீதீக்ஷிதரைத் தேடி வந்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீதீக்ஷிதரின் திருவடிகளில் விழுந்து, தன் முட்டாள்தனமான குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டினார்.

மன்னருக்குச் சமாதானம் சொன்ன ஸ்ரீதீக்ஷிதர், அதன்பின் அரச சேவையில் ஈடுபட விரும்ப வில்லை. ஆகவே, மதுரையைவிட்டுப் புறப்பட்டார். தண்பொருணையாம் தாமிரபரணி ஓடும் ஞானபூமிக்குச் சென்று, அங்கே `பாலாமடை' எனும் கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்; சிலகாலம் சென்று துறவுபூண்டு, அங்கேயே ஸித்தியும் அடைந்தார். ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் ஸித்தியடைந்ததன் காரணமாக, பாலாமடை கிராமத்துக்கு ‘நீலகண்ட சமுத்ரம்’ எனும் பெயரும் வழங்குகிறது. 17-ம் நூற்றாண்டு வரலாறு இது.

ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் அவர்களின் பரம்பரையில், ஸ்ரீநாராயண தீக்ஷிதருக்கும் பூமாதேவி எனும் உத்தமிக்கும் இரண்டாவது குமாரராக அவதரித் தவர் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்.

முகுந்த விலாசம், ரகுவீர ஸ்தவம், நள சரித்திரம்,  கங்காவதரணம்,  சிவலீலார்ணவம், நீலகண்ட விஜயசம்பு, ஸபாரஞ்சன சதகம்,  கலி விடம்பனம்,  சிவோத்கர்ஷ மஞ்ஜரீ,  சிவதத்வரஹஸ்யம்,  சாந்தி விலாசம் எனப் பல நூல்கள் ஸ்ரீநீலகண்டதீக்ஷிதரால் எழுதப்பட்டுள்ளன.

ஸ்ரீஹாலாஸ்ய மாஹாத்ம்யத்தை அனுசரித்து, மாமதுரையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமீனாக்ஷி - ஸ்ரீசுந்தரேசுவருக்கு ஒவ்வோர் ஆண்டும் நடக்கவேண்டிய உற்சவம் முதலானவற்றை நிர்ணயம் செய்ததும் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதரே. இந்தத் தகவல்களை, மதுரையின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதிவைத்த டெய்லர் துரை - நெல்சன் துரை ஆகியோர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீநீலகண்டதீக்ஷிதரால் அருளப்பட்ட ஆனந்த சாகரஸ்தவம் எனும் நூலின் மகிமையையும் அதன் பலனால் ஸ்ரீநீலகண்டதீக்ஷிதர் மீனாட்சியம்மை யின் அருள்பெற்ற கதையையும் படித்தோம் அல்லவா? காஞ்சி ஸ்ரீமகாஸ்வாமிகளால் பெரிதும் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட அந்த ஞானநூலின் ஒவ்வொரு பாடலும் மிக உன்னதமான பலன் களைத் தரவல்லது. அவற்றில் இரண்டு பாடல்கள் இங்கே உங்களுக்காக...

த்வத் ப்ரேரணேந: மிஷத: ச்வத: அபி மாத:
ப்ராமாதிகே அபி ஸதி க்மணி மே ந தோஷ:
மாத்ரைவ தத்த மசனம் க்ரஸத: ஸுதஸ்ய
கோ நாம வக்ஷ்யதி சிசோரதி புக்தி தோஷம்

கருத்து: தாயே மீனாட்சி! உன் ஏவலால்தான், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் தவறுதலான கர்மா-செயல் இருந்தாலும், என்னிடம் தோஷம் இல்லை. தாய் ஊட்டும் அன்னத்தை உண்ணும் குழந்தை, அதிகமாக உண்டுவிட்டது என்ற குற்றத்துக்கு ஆளாகுமா? ஆகாது!

த்ராதவ்ய ஏஷ இதி சேத் கருணா மயி ஸ்யாத்
த்ராயஸ்வ கிம் ஸுக்ருத துஷ்க்ருத சிந்தயா மே
கர்தும் ஜகத்திரயிதும் ச விச்ருங்கலாயா:
கர்மாநுரோத இதி கம் ப்ரதி வஞ்சநேயம்


கருத்து: தாயே மீனாட்சி! என்னை ரட்சிக்க வேண்டுமென்று உனக்குக் கருணை ஏற்பட்டு விட்டால், என்னுடைய புண்ணிய பாவங்களை நீ ஏன் யோசிக்கவேண்டும்? இந்த உலகத்தையே படைக்கவும் அழிக்கவும் வல்லமை கொண்ட உனக்கு, எனது கர்மாவை மீறி என்னைக் காக்க சக்தி இல்லை என்பது, கபடமான வார்த்தையே

 என்ன வார்த்தைகள்... என்ன வார்த்தைகள்!

இந்த இரண்டு பாடல்களின் கருத்தை மட்டும், அப்படியே அன்னை மீனாட்சியைத் தியானித்து மனதாறச்சொன்னால் போதுமே! அதன் பிறகுமா, அன்னை நமக்கு அருள் செய்யாமல் போவாள்? சொல்வோம்! வெல்வோம்!

(நிறைவுற்றது)

- சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்

படம்: என்.ஜி.மணிகண்டன்