Published:Updated:

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்
பிரீமியம் ஸ்டோரி
குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

பூசை. ச.அருணவசந்தன்

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

பூசை. ச.அருணவசந்தன்

Published:Updated:
குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்
பிரீமியம் ஸ்டோரி
குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

ர்வலோகங்களின் நன்மைக்காகச் சிவபெருமான் அநேக அசுரர்களை வென்றடக்கி அருள்புரிந்துள்ளார். அதற்காக அவர் புரிந்த வீரச்செயல்கள், ‘அட்ட வீரட்டம்’ என்று போற்றி வகைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் ஆறில் சிவபெருமான் நேரடியாகவே யமன், அந்தகன், சலந்தரன், திரிபுராதிகள், கஜாசுரன், மன்மதன் ஆகியோரை அழித்தும்  உயிர்ப்பித்தும் அருள்புரிந்தார்.

மற்ற வீரச்செயல்களில் ஈசன் நேரடியாகச் செல்லாமல், தன் அருள்பார்வையில் உண்டான உக்கிர குமாரர்களான வீரபத்திரன், பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்தார் என்கின்றன புராணங்கள்.

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

வீரபத்திரரும், பத்ரகாளியும்

ட்ட வீரட்டங்களில் குறிப்பிடத் தக்கது தட்சனைத் தண்டித்தது. தட்சனின் மகளாகத் தோன்றி,  தாட்சாயினி எனும் பெயரில் வளர்ந்துவந்த உமையவளின் வழிபாட்டை ஏற்று, அவளை மணம் முடித்தார் சிவனார்.

அதன் பொருட்டு அவர் மேல் கோபம் கொண்டிருந்த தட்சன், ஒருமுறை மாபெரும் யாகத்தை நடத்தினான். அதற்கு சிவனாரை விடுத்து மற்ற அனை வருக்கும் அழைப்புவிடுத்தான். சிவ பெருமானுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்க மறுத்து பெரும் தவறிழைத்தான்.

தட்சனின் ஆணவத்தை அழிக்க எண்ணிய சிவப்பரம்பொருள், தன் அம்ச மாக வீரபத்திரைத் தோற்றுவித்தார்.  பின்னர் சிவக்கட்டளையை ஏற்று தட்சனையும் அவனது யாகத்தையும் அழித்தார் வீரபத்திரர் என்கின்றன புராணங்கள். ஈசனிடமிருந்து தோன்றிய வீரபத்திரர், குலதெய்வமாக வழிபடப்படுகிறார்.  பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி வீரபத்திரருக்குத் தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரரும், பத்ரகாளி யும் தட்ச யாகத்தை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி, புராணங்களிலும் இலக்கியங்களிலும் பெரிதும் போற்றப் படுகிறது. மகா ஸ்கந்தம், சிவமகா புராணம், பாகவதம், காசிகண்டம்  போன்ற நூல்களில் `தட்ச சம்ஹாரம்' பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கந்த புராணம், தட்ச யாகப் பரணி, திருக்குற்றால புராணம், காஞ்சி புராணம், பறியலூர் புராணம் ஆகிய நூல்களில் வீரபத்திரரின் பெருமைகள் காணப்படுகின்றன. அங்காள பரமேஸ்வரி பெருமைகளைக் கூறும் கதைப்பாடல்களிலும் வீரபத்திரர் பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

வேதங்களில்...

தைத்திரீய யசுர் வேதத்தில்,  ஈசனைப்  புறக்கணித்து தேவர்கள் அவிர்ப்பாகத்தை  பன்னிரு சூரியர்களில் ஒருவனான பூஷனுக்குக் கொடுத்தார்கள் என்றும், அப்போது ருத்திரன் எனும் வீரபத்திரர் அவனுடைய பற்களை உடைத்தார் என்றும் உள்ளது.

சரபோபநிஷத்தில் ‘எந்த வீரர் தட்ச யாகத்தில் தேவர்களை ஒடுக்கினாரோ, அந்த ருத்திரருக்கு நமஸ்காரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சதபதப் பிராமணத்தில், `தட்ச யாகத்தில் தேவர்கள் பகனுக்கு அவிர்பாகத்தைக் கொடுத்தார்கள். அப்போது ருத்திரர் அவர்களுடைய கண்களைத் தகித்தார்' என்று உள்ளது. மகாபாரதமும், தட்ச யாகத்தில் ருத்திரர் தேவர்களைப் பலவாறு தண்டித்த தகவல்களைக் கூறுகிறது.

பத்திரம் என்றால் காப்பவன் என்று பொருள். வீரத்தைப் பாதுகாப்பவர் என்பதாலும் நம்மைப் பாதுகாத்து அருள்பவர் என்பதாலும் சிவகுமாரர் `வீரபத்திரர்' எனப்பட்டார். வீரபத்திரருக்கு வீரேஸ்வரன் என்ற பெயரும் உண்டு. வீரத்தால் மேம்பட்டவர் என்றும், வீரத்தை ஐஸ்வர்யமாகக் கொண்டவர் என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.  

விருப்பமானவை...

ழந்தமிழர்கள், போர்புரிவதை ஒரு கலையாக நேர்த்தியுடன் செய்துவந்தவர்கள். போர்நெறி களை ஒழுங்குடன் பின்பற்றியவர்கள். ஒவ்வொரு போர் நடவடிக்கைக்கும் ஒவ்வொரு பூமாலையை அணிந்து அடையாளப்படுத்தியவர்கள்.

அந்த வகையில், எவர் வரினும் அஞ்சாது அதிரடியாகப் போர் புரியும்போது அணியும் மாலை தும்பை மாலை. அதிஉக்கிரரான மகா வீரபத்திரரும், எவர் வரினும் தர்மம் காக்க அதிரப்பொருது வெற்றி காண்பேன் என்று போர்க்களத்தில் நிற்பவர். ஆகவே, அவருக்குத் தும்பை மாலை விருப்பமானது. வீரபத்திரர் மற்றும் பத்திரகாளிக்குத்  தும்பைப்பூ மாலை அணிவித்து வழிபட்டால், தர்மத்துக்கு எதிரான எதிரிகளை அழித்து நம்மைக் காப்பார்கள் என்பது நம்பிக்கை. துன்பத்தை நீக்கி இன்பத்தை அருள்பவர் வீரபத்திரர்.

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

தட்ச யாகத்தின்போது வீரபத்திரர் தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து போர் புரியச் சென்றார். எனவே வீரபத்திரருக்குக்  கரையில்லாத வெண்மை நிற ஆடையை அணிவிப்பது சிறப்பானது. கோபத்தால் கனன்றுகொண்டிருக்கும் வீரபத்திரரை சாந்தப் படுத்த, அவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்துவதும் நன்மையை அளிக்கும். வெண்ணெய் மீது பச்சை இலைகள், வண்ண சரிகைகள் கொண்டு அலங்கரிப்பதும் சிறப்பானது. இதனால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும் என்கிறார்கள்.

வைதிகத்தேரில் வீரபத்திரர்

சிவபெருமானைப்போலவே சிவகுமாரரான வீரபத்திரரின் வாகனமும் இடப வாகனமே. வேட்டையாடுவதும் போர் புரிவதும் வீரபத்திரரின் விருப்பமானச் செயல்கள் என்பதால், குதிரையும் வாகனமாக உள்ளது. அனுமந்தபுரம் ஆலயத்தில், வேட்டைவிழாவின் போது வீரபத்திரர் குதிரை வாகனத்திலேயே பவனி வருகிறார். தேர், பூதம் போன்ற வாகனங் களும் இவருக்கு உண்டு. வீரபத்திரரின் தேர் 'வைதிகத் தேர்’ எனப்படுகிறது.

வீரபத்ர விரதங்கள்...

செவ்வாய்க்கிழமையில் வீரபத்திர விரதம் இருக்கலாம். செஞ்சந்தனத்தால் அவருக்கு அபிஷேகம் செய்து, சிவந்த பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், நம்மை வருத்திக்கொண்டிருக்கும் சத்ரு பயம் நீங்கும்.

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் வீரபத்திர விரதம் மகாஅஷ்டமி விரதம் எனப்படும். இதுபோன்ற விரத நாள் களிலும் அனுதினமும் வீரபத்திரரை வழிபடும் போதும் தும்பை, நந்தியாவர்த்தம் போன்ற வெண்மை நிற மலர்களால் அர்ச்சித்து வெண் பட்டால் அலங்கரித்து, மகாநிவேதனம் செய்து வழிபட்டால், வீரபத்திரர் நம் குலத்தை என்றென்றும் பாதுகாப்பார் என்பது நம்பிக்கை.

குலம் காக்கும் தெய்வம்! - வீரபத்திரர் - சிறப்புத் தகவல்கள்

வீரபத்திரர் ஆலயங்கள்...

பாரதமெங்கும் வீரபத்திரருக்கான ஆலயங்கள் பலவுண்டு. தமிழகத்தின் திருப்பறியலூர், அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று; தற்போது, பரசலூர் என்று வழங்கப்படு கிறது. மயிலாடு துறை - திருக்கடவூர் சாலையில் இவ்வூர் அமைந் துள்ளது. இந்த ஆலயத்தில் கருவறை மூர்த்தி வீரட்டேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

கோயிலின் மகா மண்டப வடக்கில் வீரபத்திரர் சந்நிதி அமைந்துள்ளது. மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஏந்தியபடி பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் இங்குள்ள வீரபத்திரரை வணங்கினால், சகல பயமும் நீங்கி இன்ப வாழ்வைப் பெறுவார்கள்.

வீரபத்ர தலங்களில் குறிப்பிடத்தக்கது அனுமந்தபுரம். சென்னை-திருச்சி சாலையில், செங்கல்பட்டு - சிங்கபெருமாள்கோவில் அருகில் தென்கிழக்கில் 7 கி.மீ.தொலைவில் உள்ளது அனுமந்தபுரம். அரன் மைந்தனான வீரபத்திரர் அருளும் ஊர் என்பதால் அரன்மைந்த புரம் என்பது பெயர். இது மருவி அனுமந்தபுரமானது. இங்கு, வீரபத்திரர் காலையில் குழந்தைப் பொலிவுடனும், உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்தோடும், மாலையில் வயோதிகத் தோற்றத்தோடும் காட்சியளிப்பது சிறப்பானது.

மேல்மருவத்தூருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ள முருகன் தலம் பெரும்பேர் கண்டிகை, இவ்வூரின் மையத்தில் வீரபத்திரர்  ஆலயம் ஒன்று உண்டு. கருவறையில் வீரபத்திரரும், அவருக்கு வடமேற்கு முனையில் தனிச்சந்நிதியில் பத்ரகாளியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள சக்ரக்கிணறு தீர்த்தம் விசேஷமானது.

இந்தத் தலங்கள் மட்டுமின்றி... மயிலாப்பூர், திருவண்ணாமலை, திருக்கடவூர், செம்பிய மங்கலம், தாராசுரம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலும் வீரபத்திரர் ஆலயங்கள் அமைந் துள்ளன. தர்மத்தின்வழி நடக்கும் அன்பர்களின் குலம் காக்கும் தெய்வம் வீரபத்திரர். எனவே அச்சம் எழும்போதெல்லாம் அவர் தாள் வணங்கி, அவரருளையும் வரத்தையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்!


ஓவியங்கள்: பத்மவாசன்

வீரபத்திரரே சரபர்!

ரசிம்ம மூர்த்தியின் கடும் சினத்தை அடக்கயருள, வீரபத்திரரே சரபேஸ்வர வடிவம் கொண்டார் என்று சரப புராணம் தெரிவிக்கிறது. எட்டுக் கால்களும், இரண்டு சிறகுகளும், சிங்க முகமும் வளைந்த மூக்கும் கொண்ட சரபப் பட்சியானார் வீரபத்திரர். எனவே சரபரை வழிபட்டாலும் அது வீரபத்திரரை வழிபட்ட பலனைத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.

தேவாரத்தில்...

தேவாரத்தில் சிவபெருமான் நேரில் சென்று தட்சயாகத்தை அழித்ததாகவே உள்ளது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் வீரபத்ரர் எனும் பைரவக் கடவுளை அனுப்பி தட்சசம்ஹாரம் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. திருப்பறியலூர் தலத்தில் சிவபெருமானே அகோர வீரபத்ர மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism