மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

‘`ஆத்மநாத சுவாமி என்றதும் உங்கள் மனதில் தோன்றும் தலம் எது?’’ என்று கேட்டபடியே நம் முன் வந்து அமர்ந்தார் நாரதர். வெயிலில் வியர்த்து விறுவிறுத்து வந்த நாரதருக்குக் குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்தபடியே பதில் சொன்னோம்.

‘`மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்ட திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் தானே?’’

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

‘`உண்மைதான். ஆனால், திருப்பெருந்துறை மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம் என்றால், அவர் சொல்லச் சொல்ல இறைவன் திருவாசகம் எழுதிய தலம் தில்லை திருப்பெருந்துறை.

உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் தலம், தற்போது `மாணிக்கவாசகர் பர்ணசாலை' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோயிலில், இறைவன் ஆத்மநாதர் என்ற திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறார்.

வருடந்தோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத் தன்று மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெறும். மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தன்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் மாத குருபூஜையும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், முற்காலத்தில் தில்லைவனமாக இருந்த இந்தப் பகுதியில்தான் வியாக்ரபாதர் தன் மகன் உபமன்யு வுடன் தங்கியிருந்தார். மகனுக்குப் பசியெடுக்கவே, அவர் இறைவனை வேண்டி திருப்பாற்கடலை வரவழைத்த சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு'' என்ற விவரித்த நாரதர், தொடர்ந்து மற்றுமொரு கேள்வியைக் கேட்டார்.

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

‘`திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதன் மகத்துவத்தை உணர்த்திய மகான் யாரென்று தெரியுமா?’’

‘`குருநமச்சிவாயர்தானே?’’ என்று கேட்டோம்.

‘`சரியாகச் சொன்னீர். அவரேதான் அவரது ஜீவசமாதியும் இந்தத் தலத்தில்தான் அமைந்திருக் கிறது'' என்ற நாரதரிடம், ``ஏதேது... வழக்கத்துக்கு மாறாக திருக்கோயில் சிறப்புக் கட்டுரை ஏதும் எழுதப் போகிறீரா... அற்புதமான தகவல் தொகுப் பாக இருக்கிறதே...'' என்ற நம்மிடம், சற்று கண்டிப்புத் தொனியுடன் ``பொறுமையாகக் கேளும்... விஷயம் இருக்கிறது'' என்று கட்டளையிட்டார்.

பவ்யமாக ஏற்றுக்கொண்டு அமைதி காத்தோம். நாரதர் பேசத் தொடங்கினார்.

‘`கோயிலுக்கு வெளியில் வீடுகள் இருக்கலாம். ஆனால், கோயிலுக்குள்ளேயே வீடுகள் இருக் கலாமோ’’ என்று கேட்டவர், நம் பதிலுக்குக் காத்திருக்காமல் தொடந்து  கூறினார்: ‘`இந்த ஆலயத்துக்குச் சொந்தமான... கோயிலைச் சுற்றியுள்ள மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள இடங்களை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றிலும் பெரிய பெரிய மாடிவீடுகளைக் கட்டி, கோயில் இருக்குமிடமே தெரியாதபடி செய்துவிட்டனர்!’’

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

‘`இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் பேசினீரா?’’

‘`கோயில் நிர்வாகி பசவராஜ் என்பவரிடம் பேசினேன். ‘பிரசித்திபெற்ற இந்தக் கோயிலுக் கான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்று கடந்த 2017-ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, கோயிலைச் சுற்றிலுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த்துறை, சிதம்பரம் நகராட்சி, காவல்துறையினர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை' என்கிறார் அவர்.

இதுபற்றி நமக்குத் தகவல் தெரிவித்த கும்ப கோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்  திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசினோம்.  `கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புத் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம், ‘கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அது மட்டும் போதாது. வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமிப் பவர்களை மக்கள்தொகை கணக்கிலிருந்தே நீக்கவேண்டும். சிதம்பரம் ஆத்மநாதர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். ஏதோ ஒரு சக்தி நடவடிக்கை எடுக்காதபடி அதிகாரிகளைத் தடுத்து வருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட முடியும்’’ என்று வேதனையும் ஆதங்கமுமாகத் தெரிவித்தார்’’ என்றார்.

நாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...

‘`அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தீரா?’’

‘`சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸிடம் கேட்டபோது, கோப்புகளைப் பார்த்துத்தான் சொல்ல முடியும் என்றார். ஆனால், இதுவரை எதுவும் சொல்லவில்லை’’ என்றவர், ``சிறுவாபுரி முருகன் கோயில் குறித்து பகிரப்படும்  தகவல் ஒன்றை வாட்ஸப்பில் அனுப்பியுள்ளேன். படித்துப் பாரும். அடுத்தமுறை விரிவான தகவல்களோடு வருகிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

சிறுவாபுரியிலிருந்து...

சொந்த வீடு அமைய பக்தர்கள் பலரும் சென்று வழிபடும் கோயில் சிறுவாபுரி முருகன் கோயில்.செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். தொடர்ந்து ஆறு வாரங்கள் சிறுவாபுரி முருகனை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இப்படி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. காலணிகளை வைக்கக்கூட வசதியில்லை, கழிவறை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை என்று எல்லாமே இல்லை, இல்லையென்று சொல்லும்படிதான் இருக்கிறது.

காவல்துறையினர் இருந்தும், வாகனங்கள்  நெருக்கடியைச் சமாளித்து முறைப்படுத்துவதில்லை. கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கு வெளியிலும் பக்தர்கள் நடந்துசெல்லக்கூட முடியாதபடி கடைகளின் ஆக்கிரமிப்புகள். குப்பைகளைக் கோயில் குளத்தில் கொட்டி பாழ்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, கட்டண தரிசன டிக்கெட் விற்பனையிலும் முறைகேடுகள் நடக்கின்றன. நூறு ரூபாய் டிக்கெட் ஐந்நூறு ரூபாய்க்கு விற்கப்படுவதாக பக்தர்கள் தரப்பில் வேதனைக் குரல் ஒலிக்கிறது. கோயில் நிர்வாகத் தரப்பில் கேட்டால், அவர்கள் எதற்கும் பதில் சொல்லத் தயாராக இல்லை என்று புலம்புகிறார்கள் பக்தர்கள் தரப்பில்!