மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 26

சிவமகுடம் - பாகம் 2 - 26
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 26

சிவமகுடம் - பாகம் 2 - 26

உயிர்க் கமலம்!

ந்த அதிகாலைப் பொழுது அவ்வளவு சீக்கிரத்தில் விடிவதாகத் தெரியவில்லை. இருள் முற்றிலும் விலகாமல், விடாப்பிடியாக வெளிச்சத்தைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது போல், மேகங்கள் திரண்டு திகழ்ந்தன அடிவானில்! ஆனாலும் அடக்கியாளும் மனதை அத்துமீறும் ஆசைகளைப் போன்று, ஆங்காங்கே ஆதவனின் செங்கிரணங்கள் வெளிப்பட்டு, அந்தப் பெருநகரத்துக்கு விடியலை உணர்த்த முற்பட்டுக்கொண்டிந்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 26

இயற்கை சிருஷ்டித்திருக்கும் இப்படியான விநோதச் சூழலை ரசிக்கக் கொடுத்துவைக்காதவர்களாக... `தூங்காநகரம்’ எனச் சிறப்பு பெற்ற மாமதுரையின் மக்கள், அன்று வழக்கத்துக்கு மாறாக விடியற் பொழுதை நெடிது நேரம் தூக்கத்தில் கழித்துக்கொண்டிருந்தார்கள்!

ஒருவர் மட்டும் தனது மாளிகையின் மேல்மாடத்தில் நின்றபடி, விண்ணின் விநோதத்தைக் கண்டுகொண்டிருந்தார். மேலிருந்து மண்ணில் இறங்கும் கிரணங்களுக்குப் போட்டியாக, கீழிருந்து மேலே பாய்ந்து வானப்போர்வையைத் துளைத்தெடுக்கும் துல்லியத்துடன் அலைபாய்ந்துகொண்டிருந்தன, அந்தத் தீர்க்கதரிசியின் ஒளிமிகுந்த விழிகள்.

வேறொருவராக இருந்திருந்தால், சுகமாக முகத்தைத் தழுவிச் செல்லும் ஈரக்காற்றுக்கும், மிக இதமான அந்தச் சூழலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல்... நகர மக்களைப் போலவே தாமும் தூக்கத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்திருப்பார். ஆனால், உப்பரிகையில் நின்றிருந்த அந்த மனிதர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். தாம் கண்ணயர்ந்தால், சத்ருக்கள் விழித்துக்கொள்வார்கள் என்பதை நன்கு அறிந்தவர். அதன்பொருட்டு, சமீபகாலமாக இரவில் வழக்கமாய்த் துயிலும் நேரத்தையும் குறைத்துகொண்டுவிட்டவர். லட்சியத்தில் ஒருபோதும் பின்வாங்காத பெரும் சீலர்!

ஆம், பாண்டியதேசத்தின் பேரமைச்சராம் குலச்சிறையாரே, அங்கு அப்படியொரு பெரும் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார். அவரின் கூர்விழிகள் அடிவானில் மேல்திசையில் எதையோ துழாவித் தேடிக்கொண்டிருந்தன. வெகுநேரம் அங்குமிங்குமாக  அலைபாய்ந்து கொண்டிருந்த அவரின் விழிமீன்கள் சட்டென்று ஓரிடத்தில் நிலைத்து வெறித்தன. அவை பார்வையை வீசிய திசையில், மெல்லிய ஒளிக்கீற்றுடன் தென்பட்டது, அதுவரையிலும் அந்த மனிதர் தேடிக்கொண்டிருந்த பொக்கிஷம். ஆம்! அடிவானில் ஒரு வைரம் போன்று ஜொலித்து திகழ்ந்தது சுவாதித் தாரகை. அந்த விண்மீனைக் கண்டதும் தோன்றிய பரவசத்தால் குலச்சிறையாரின் விழிமீன்களும் ஒளிர்ந்தன!

விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் குலச்சிறையார் பெரும் சிரத்தையுடன் வானியல் ஆராய்ச்சியில் இறங்கி விட்டதற்குக் காரணம் இருக்கவே செய்தது. பாண்டிமாதேவியாரின் ஆணைக்கிணங்க மாபெரும் காரியத்தைக் கையிலெடுக்கப் போகிறார் குலச்சிறையார். அந்த நல்ல விஷயம்  நல்லதொரு  தினத்தில் தொடங்கப்படவேண்டும் என்பது அவரது எண்ணம். அன்றைய நாள்... முழுநிலவுக்கு  முந்திய  இரண்டாம் நாள். சொக்கநாதருக்கு மிக உவப்பான தினம். அத்துடன் சுவாதியும் இணைந்துவிட்டால், ஐயமே வேண்டாம் வெற்றி நிச்சயம். சிப்பிக்குள் விழும் நீர்த்துளியையும் முத்தாக மாற்றும் வல்லமை உண்டு சுவாதித்தாரகை நாளுக்கு!

சிவமகுடம் - பாகம் 2 - 26

மட்டுமின்றி, அவரின் வானியல் கணக்கு வேறொரு விஷயத்தையும் மிக நன்றாக உணர்த்தியது. அன்றிலிருந்து ஆறேழு நாள்களில்  தோன்றும் தாரகை, போருக்கு மிக உகந்தது என்பார்கள். ஆக, எதிரிகளின் முதல் நகர்வும் அன்றுதான் இருக்கும் என்பதையும் அவரால் யூகிக்க முடிந்தது.

`ஆக, முன்னெடுக்கவேண்டியதை இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று தீர்க்கமான முடிவுடன் அங்கிருந்து நகர முற்பட்ட குலச்சிறை பெருமான், சட்டென்று நின்றார்.  மாமதுரையின் இதயமாக... தான், உயிரினும் மேலாகப் போற்றும் மீனாட்சியம்மையின் திருக்கோயிலை தரிசித்தவர், இருகரம் கூப்பி வணங்கினார்.

எல்லோருக்கும் அன்னையாம் மீனாட்சியை, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் சொக்கநாதரை மனதாரத் தொழுது வேண்டிக்கொண்டார்.

‘‘அம்மையே! உன் தேசத்துக்கு வெற்றியைக் கொடு. ஐயனே! சகலத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையைக் கொடு...’’ - மேனி குறுக, உள்ளம் குழைய கசிந்துருகி வணங்கி நின்றவரின் விழியோரத்தில் நீர்த்துளிகள். சில நொடிகள்தான்... சட்டென்று விரல்களால் விழிநீரைத் துடைத்துக் கொண்டவரின் திருமுகத்தின் மீண்டும் வீரக் களை! அவரையு மறியாமல் அவரின் இதழ்கள் முணுமுணுத்தன...

‘‘கமலமே நீ எங்கள் உயிர்!’’

இதே விடியலில், பாண்டிய நாட்டின் எல்லையையொட்டிய அந்த வனத்தில் மிகத் தீவிர ஆலோசனையிலிருந்தது ஒரு கூட்டம்!

‘‘எப்போது பறிக்கப்போகிறோம் பாண்டியர்களின் உயிர்க் கமலத்தை?’’

கூட்டத்தில் தலைவனாகத் தெரிந்தவன் உரையாடலைத் தொடங்கி வைத்தான். இளைத்த உடம்பினன்தான் என்றாலும், அவன் கண்கள் காட்டிய தீட்சண்யமும், முகத்தில் திகழும் பொலிவும், தேகத்தில் நிறைந்து கிடக்கும் வீரத் தழும்புகளும், ஆளுமை நிறைந்த பேச்சும்...   போர்க்காரியங்களில் - அரசியல் வியூகங்களில் அவன் சளைத்தவன்  அல்ல என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டின.

‘‘தலைவர் உத்தரவிட்டதும் நம் சேனைகள் நகர ஆரம்பித்துவிடும்.  நம் வீர சேனை புறப்பட்டு மூன்றே நாள்களில் கமலம் நம் கைவசம் என்பதில் மாற்றுக் கருத்தே வேண்டாம் தலைவருக்கு’’

‘‘இன்றிலிருந்து ஆறு அல்லது ஏழு தினங்கள் காத்திருப்போம். அதன் பிறகு படைகளை நகர்த்துவோம். நம் வியூகம் என்ன என்பது நம் வீரர்களுக்கே தெரியாது அல்லவா?’’

‘‘ஆம்! நாங்கள் நகரச் சொல்லும் இடத்துக்கு நகர்வார்கள். ஆணையிடும் காரியங்களை பிசகின்றி செய்துமுடிப்பார்கள்...’’

‘‘நல்லது... ரகசியம் காப்பது மிக நல்லது. வனப்புறத்தில் நுழைந்து எல்லையில் பிரவேசிப்போம் எனக் காத்திருக்கிறான் பாண்டியன். நாம்  உள்ளே நுழைந்ததும் நம்மை வளைப்பதற்கு ஏதுவாக பெரும் சேனையை வனங்களில் மறைத்து நிறுத்தியிருக்கிறான் மாறவர்மன்.

சிவமகுடம் - பாகம் 2 - 26

ஆனால்... பாவம் நம்மில் ஒருபாதி மதுரையில் பிரவேசித்து விட்டிருப்பதை அவன் அறியவில்லை. எல்லையையொட்டி நகரப் போகும் சேனைகள் அவன் கவனத்தைத் திசை திருப்ப என்பதை அவனால் யூகித்திருக்க முடியாதுதான். அதுமட்டுமல்ல... காலமும் நமக்கு அனுகூலமாகவே அவனைச் செயல்படுத்துகிறது தளபதி!

தற்போது, பல்லவ எல்லையை நோக்கி பாண்டிய பெருஞ்சேனையின் ஒருபாதியை வடக்கே நகர்த்தியிருக்கிறான் கூன்பாண்டியன். அது நமக்கு வசதியாகிவிடக் கூடாது என்பதற்காக, மறுபாதி சைன்னியத்தைப் பிரித்து நம் எல்லையிலும் வனத்திலுமாக நிறுத்தியிருக்கிறான். அவ்வப்போது தலைநகரத்தில் போர்த்துடிப்பை ஏற்படுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறு நடக்கின்றனவாம்! சமர்த்தன்தான்! ஆனாலும் எனது போக்கை அவனால் கணிக்க முடியாது. நிச்சயம் இந்த முறை பாடம் கற்பான்...’’

என்று ஒரேமூச்சில் அந்தத் தலைவன் பேசி முடிக்கவும், அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டி, சத்தமின்றி சிறு புன்னகையை வீசி ஆமோதித்தார்கள் அவனின் அணுக்கர்கள்.

அதனால் திருப்தியடைந்தவனாய் மீண்டும் வாய்திறந்தான்...

‘‘கமலத்தைச் சூழ்ந்திருக்கும் வண்டுகள் எத்தனை?’’

அணுக்கர்கள் பதில் சொன்னார்கள்:

‘‘ஐந்தாயிரத்துக்கும் மேல்..!’’

மேகங்கள் அகன்று நீங்க மெள்ள வெளிச்சம் சூழ ஆரம்பித்தது மாமதுரையை. நாளங்காடிகள் துடித்தெழ ஆரம்பித்த நேரம் அது. பொங்கிதேவியின் மாளிகையின் மைய மண்டபத்தில், பாண்டிமா தேவியாரின் அடுத்த ஆணைக்காகக் காத்திருந்த இளங்குமரனுக்கு, தேவியாரின் நீண்ட அமைதி, உள்ளுக்குள் பரிதவிப்பை ஏற்படுத்தியது.  ஆகவே நிசப்தத்தை உடைக்க ஆயத்தமானான்.

‘‘அம்மையே! அதென்ன... `பூங்கமலத்துக்கு ஆபத்து’ என்ற வாக்கியத்துக்கு என்ன பொருள்... கமலம் என்று எதைக் குறிப்பிட்டுள்ளார்கள்?’’

இளங்குமரனின் கேள்வியால் சிந்தை களைந்த தேவியார், அவனை நோக்கி திரும்பினார். அப்போதுதான் கவனித்தான் இளங்குமரன்... கோபத்தில் செக்கச்சிவந்திருந்த தேவியாரின் திருமுகத்தை! பெரும் சீற்றம் அவருக்குள் முட்டிமோதுவதைத் தெளிவாக உணரமுடிந்தது.

அவன் கேள்விக்குப் பதில் சொன்னார் பாண்டிமாதேவியார்.

‘‘சிவராஜதானியை!’’

பெரும் முழக்கமாய் வெளிப்பட்ட பதிலைக் கேட்டு அதிர்ந்தான் இளங்குமரன்!

- மகுடம் சூடுவோம்...

ஆலவாய் ஆதிரையான்,
ஓவியங்கள்: ஸ்யாம்