Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்
கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

து முருகனின் அருளன்றி வேறில்லை. `இதை, இப்போது, இப்படிச் செய்...’ என்று இயக்குவதும், இயங்கவைப்பதும் கந்தனின் கருணையே அல்லவா?! இந்தத் தொடரும் அவனருளால் விளைந்தது என்றே சொல்லவேண்டும்.

சக்தி விகடனில் புதிய தொடர் எழுதவேண்டும் என்றதும், எவ்வளவோ எண்ணங்கள் - திட்டங்கள் எழுந்தன மனதில். நிறைய பேசினோம், பகிர்ந்து கொண்டோம். அனைத்திலும் முதன்மையாக அனைவரையும் ஈர்த்தது ஒன்றே! அது, அருணகிரியாரின் அடிச்சுவட்டில், அவர் பாடிய திருப்புகழ்த் தலங்களில், `இந்த இடத்தில் உள்ளது’ என்று அடையாளம் சொல்ல இயலாதபடி மறைந்துபோன திருத்தலங்களைத் தேடிச்சென்ற நெடும்பயணத்தின் அனுபவத் தொகுப்பு.

அத்தகைய தலங்களை அடையாளம் காண்பதில் இருந்த சிரமங்கள், தேடல்கள், விசாரிப்புகள், நூல் ஆய்வுகள், களப் பணிகள், நண்பர்களின் வழிகாட்டல்கள், அத்தனைக் கும் மேலாக `யாமிருக்க பயமேன்?' என என்னை வழிநடத்தி வரும் முருகனின் அருள்... என, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீளும் அந்தப் பயணத்தில் நான் கண்டடைந்த தலங்கள் நூற்றுக்கும் மேல். பயணம் நெடுக நான் பெற்ற சிலிர்ப்பும் சிறப்பும் இந்தத் தொடர் மூலம் உங்களையும் வந்தடையும் என மனதார நம்புகிறேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் `நியூ இந்திர பவன்’ எனும் வாடகை விடுதி ஒன்று இருந்தது. 1973-ம் ஆண்டு; நான் அங்கே தங்கி, அலுவலகம் சென்று வந்த காலம் அது.

திருவல்லிக்கேணி என்றதுமே எல்லோருக்கும் பார்த்தசாரதி பெருமாள்தான் நினைவுக்கு வருவார். அந்த மாலவனுக்கு மட்டுமல்ல, அவரின் மருகனாகிய முருகப்பெருமானின் வழிபாடுகளுக்கும் சிறப்புப் பெற்ற இடம் திருவல்லிக்கேணி. இவ்வூரில், 1954-ஆம் ஆண்டிலேயே `முருகன் திருவருட் சங்கம்’ எனும் பெயரில் திருப்புகழ்ச்சபை ஒன்று அடியார்களால் தொடங்கப்பட்டு, மிக அற்புதமாக இயங்கி வந்தது.  ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலையில், சென்னையில் உள்ள முருகன் அடியார் ஒருவரின் இல்லத்தில் அல்லது ஏதாவது ஒரு திருக்கோயிலில் திருப்புகழ் பஜனை நடைபெறும்.

அதேபோல், முருகனுக்கு உகந்த விசேஷ நாள்களிலும் ஆங்காங்கே திருப்புகழ் இசை வழிபாடு நடத்துவார்கள். ஐப்பசியில் மகா கந்தசஷ்டி விழாவை திருவல்லிக்கேணியில் ஏழு நாள்கள் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

அந்த ஆண்டில் (1973-ல்) முருகன் திருவருட்சங்கம் நடத்தும் திருப்புகழ் இசை வழிபாட்டில் தொடர்ந்து கலந்துகொண்டு, திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி இன்புறும் பேறு எனக்குக் கிட்டியது.அது மட்டுமின்றி, ஆண்டுதோறும் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தல யாத்திரைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும் நற்பேறும் அடியேனுக்குக் கிடைத்தது. அதனால் அந்தத்தத் தலத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன்.

இந்த நிலையில்... 1975-ம் ஆண்டு முதல், கந்தசஷ்டி விழாவையொட்டி பள்ளி மாணவ - மாணவியருக்கான திருப்புகழ், தேவாரப் பாடல்களில் இசைப்போட்டிகளை நடத்து வதற்கான வாய்ப்பு கிடைத்தது. கூடவே, தணிகைமணியாரின் திருப்புகழ் உரை நூல் களைப் படிக்கும் பேறும் கிடைத்திட, முருகன் திருவருளால் திருப்புகழ்த் தலங்கள் குறித்த சிந்தனை எனக்குள் மெள்ள மெள்ளத் துளிர் விட்டு, வளரத் தொடங்கியது.

இந்த இடத்தில் உங்களோடு சில தகவல்களை அவசியம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.  

அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ்ப் பாடல்கள் கொண்ட சுவடிகளைத் தேடிச் சேகரித்து, முதன்முதலில் (1894-ல்) 603 பாடல் களுடன் முதல் பாகத்தை அச்சிட்டவர், வடக்குப்பட்டு த.சுப்ரமண்ய பிள்ளை எனும் திருவருள்செல்வர். அவரே 1909-ம் ஆண்டில், 545 பாடல்கள் கொண்ட இரண்டாம் பாகத்தையும் அச்சிட்டார். 1912-ல் ‘சிவஸ்தல மஞ்சரி’ எனும் தேவார தலயாத்திரை வழிகாட்டி நூலை முதன் முதலில் பதிப்பித்தவரும் பிள்ளையவர்களே.

இவரின் திருக்குமாரர் `தணிகைமணி’ வ.சு.செங்கல்வராய பிள்ளை. இவர் திருப்புகழ், திருவகுப்பு, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, கந்தரனுபூதி, வேல் மயில் சேவல் விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை ஆகிய அனைத்துக்கும் உரை எழுதி வெளியிட்ட மாமனிதர் ஆவார்.

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

‘அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்’ எனும் அற்புதமான ஆய்வு நூல், தணிகைமணி அவர்கள் எழுதி 1947-ல் (நான் பிறப்பதற்கு முன்பே) வெளிவந்தது. இதில், அருணகிரியாரின் திருப்புகழ்த் தல யாத்திரை குறித்து, அந்தப் பாடல்களில் உள்ள அகச்சான்றுகள் மற்றும் குறிப்புகளைக் கொண்டு தொகுத்து எழுதி யுள்ளார். இதுவே திருப்புகழ்த் தலங்களுக்கான முதல் ஆய்வு நூலாகும். மேலும் அவர், திருப்புகழ் உரை நூலில், ஒவ்வொரு தலத்துக்கான சிறு குறிப்பையும் எழுதியுள்ளார்.
 
வ.த.சு. பிள்ளையவர்களின் ‘சிவஸ்தல மஞ்சரி’ குறித்துச் சொன்னேன் அல்லவா... அந்த நூலில், ஒவ்வொரு தலத்துக்கும் அவர் நேரில் சென்று தரிசித்தது குறித்து எழுதியிருந்த அனுபவங்கள் என்னை பிரமிக்கவைத்தன. ஏனெனில், அவ்வளவு கடினமான முயற்சி அது. போக்குவரத்துச் சாதனங்கள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், பல தலங்களுக்கு மாட்டுவண்டியிலும், நடந்தும், வழியில் உள்ள ஆற்றைக் கடந்தும் மிக மிகச் சிரமப்பட்டே பயணித்திருக்கிறார் அவர்.

உதாரணமாக, திருவக்கரை எனும் தேவாரத் தலத்துக்கு அவர் யாத்திரை சென்ற வழியைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். மயிலம் - புதுச்சேரி வழியில் உள்ளது இந்தத் தலம்.

‘விழுப்புரம் ரயில் ஸ்டேஷனிலிருந்து வடக்கு ஐந்தரை மைல் சென்று புறவார் பனங்காட்டூர் எனும் ஸ்தலத்தை அடைந்து, அங்கிருந்து கிழக்கே எட்டு மைல் சென்று கூனிச்சம்பட்டு எனும் கிராமத்தை அடைந்து,  அங்கே வடக்கே திரும்பி ஒரு மைல் தூரம் சென்று, கொடுக்கூர் ஆற்றைக் கடந்து, அப்பால் அரை மைல் சென்றால், திருவக்கரையை அடையலாம். விழுப்புரத்திலிருந்து கூனிச்சம்பட்டு வரையில் (பதின்மூன்றரை மைல்) செம்மையாகப் பாதை இருக்கிறது. கூளிச்சம்பட்டிலிருந்து திருவக்கரை வரையில் (ஒன்றரை மைல்) சாதாரண வழி.’

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

படிக்கும்போதே மலைப்பாக உள்ளது அல்லவா! எனில், அவர் காலத்தில் யாத்திரை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?! ஆனால், இன்று திருவக்கரை கோயில் வாயில் வரையிலும் காரில் செல்லலாம்.

இப்படிப் பல்வேறு சிந்தனைகளும் பெரியோர் களின் நூல்களும் ஓர் உந்துதலை அளிக்க, `திருப்புகழ்த் தலங்களைப் பற்றிய தேடலைத் தொடங்கலாமே’ என்ற எண்ணம், முருகன் திருவருளால் ஒரு வித்தாக என் மனதில் விழுந்தது. மேலும், திருப்புகழ்த் திருத்தலங்களைப் பற்றிய விரிவான பயண நூல் அதுவரை வெளிவரவில்லை என்பதும் உந்துதலுக்கு ஒரு காரணம்.

எண்ணம் வேர்பிடித்து, மெள்ள மெள்ளச் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

1961-ம் ஆண்டு, மக்கள் கணக்கெடுப்புத் துறை சார்பில் வெளிவந்த தமிழக மாவட்டக் கோயில்கள் பற்றிய விரிவான தொகுதிகளை வாங்கிக்கொடுத்து, சங்கத்தார் உதவினார்கள்.இந்தியத் தபால் தந்தித்துறை அச்சிட்டிருந்த தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களுக் கான கிளைத் தபால்நிலையங்கள் பட்டியல் நூலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாவட்டவாரியான கிராமப்பெயர்கள் நூலும் திருப்புகழ்த் தல ஆய்வுக்குப் பெருந்துணையாக இருந்தன.

ஏனெனில், ஒரே பெயரில் பல தலங்கள் உண்டு. உதாரண மாக பெருங்குடி, அத்திப்பட்டு போன்ற பெயர்கள் கொண்ட இடங்கள் பல மாவட்டங்களிலும் உள்ளன. இவற்றில் எது அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல் பெற்ற தலம் என்பதைத் தீர்மானித்தாக வேண்டும். அதற்கு, அந்தந்த ஊர் களோடு (போஸ்ட்மாஸ்டர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் போன்றோருடன்) தொடர்புகொண்டு தகவல் சேகரிக்க இந்த நூல்கள் ஒருவாறு துணைபுரிந்தன.

ஊர்ப்பெயர்கள் குறித்துத் தணிகைமணி அவர்களும் தமது ஆய்வில் தாம் அறிந்தவரையிலான குறிப்புகளைக் கொடுத்துள்ளார். ஆனாலும், அந்தத் தலங்களைத் தீர்மானிப்பதில் பலவித சிரமங்கள் இருந்தன.

ஆய்வு  தொடர்பாக என் சகோதரர் (அமரர்) ‘சேக்கிழார்தாசன்’ டாக்டர் ஆர்.ராமசேஷன் அவர்களும் நானும் ‘கந்தவேள் தலங்களைப் பற்றிய செய்திச் சேகரிப்புப் படிவம்’ என்ற பெயரில், 33 வினாக்கள் அடங்கிய படிவம் ஒன்றைத் தயாரித்தோம். அதனைத் தல ஆய்வுக்கு முன்னோடியாக அமைத்துக்கொண்டோம். முருகன் திருவருட்சங்கத் தணிக்கையாளராக இருந்த கே.சுப்பிரமணியம், அந்தப் படிவத்தை 70 பிரதிகள் அச்சிட்டு அளித்து உதவினார். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பெயரர் க.சுப்ரமணிய ஐயரும் அவ்வப்போது இந்த ஆய்வுக்கு வழிகாட்டி உதவினார்கள். பெரும்பாலும் ‘சுப்ரமணியன்’ என்ற பெயர்கொண்ட அன்பர்களே நமக்குத் துணையிருந்தார்கள் என்பது மிக விசேஷம்.

1977-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருச்சிக்கு அருகிலுள்ள குமார வயலூர் சென்றிருந்தேன். அங்குள்ள கோயிலில் அருளும் பொய்யாக் கணபதியின் திருமுன் நின்று பிரார்த்தித்தேன். `கந்தனின் மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும் கோழிக்கொடியையும், திருவடியையும், பன்னிருதோளையும், வயலூரையும் வைத்துத் திருப்புகழை விருப்பமொடு பாடுவாயாக’ என்று அந்த விநாயகர், அருணகிரிநாதருக்கு வழிகாட்டினார் அல்லவா... அதேமுறையில், அருணகிரி நாதரின் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்துப் பயனுள்ள வகையில் அடியார் களுக்கு வழங்க வழிகாட்டியருளும்படி அவரை வேண்டினேன்.

வயலூர் முருகன் சந்நிதியில் பூஜை செய்துகொண்டிருந்த சிவாசார்யரிடம் என் விருப்பத்தையும் பிரார்த்தனையையும் தெரிவித்தேன். சந்நிதியில் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தார் அவர். நான் அவரிடம் செய்திச் சேகரிப்புப் படிவத்தின் முதல் பிரதியைக் கொடுத்தேன். அதை அவர் பூர்த்தி செய்து, `டி.எஸ்.ஜம்புநாத சிவாசார்யர்' என்று கையொப்பமிட்டு என்னிடம் தந்து, ஆசி வழங்கினார். அப்போது அவருக்கு 60 வயது இருக்கலாம்!

சென்னை திரும்பிய பின், வயலூர் தல வரலாற்றுப் புத்தகத்தைத் திருப்பியபோது, எனக்கு ஓர் ஆச்சரியமான செய்தி கிடைத்தது!

- அனுபவிப்போம்...

-திருப்புகழ் அமுதன்

உண்மை சுடும்

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

ஜென் குருமார்களின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள்  எப்படியாவது அவர்களைச் சந்தித்து, அவர்கள் வாயால்  தங்களுக்கென்று  தனியாக  ஏதாவது  சொல்லும்படி கேட்டு எழுதி வாங்கி  வைத்துக் கொள்வார்கள். பொக்கிஷம் போல் அதைப் பாதுகாத்து வருவர்.

அப்படியொருவர் ஜென் குருவிடம் வந்து, “ எனக்கொரு  வாசகம்  எழுதித் தாருங்கள்... வாழ்வின் உண்மையை வெளிப்படுத்துவது  போல” என்று  கேட்டார். அந்த ஞானியும் துண்டுச்சீட்டு ஒன்றில் ஒரு வாசகத்தை எழுதித் தந்தார்.

`அப்பன்  இறப்பான்; பிள்ளை  இறப்பான்; பேரனும் இறப்பான்’ என்று.

“என்ன இது? அபசகுனமாக எழுதியிருக் கிறீர்களே...’’ என்று வருத்தத்துடன் கேட்டார்.

குரு சொன்னார்: “இல்லை. வாழ்வின்  உண்மையும் இதுதான். இது அபசகுனமோ, சாபமோ அல்ல; வரம். அப்பன் - பிள்ளை - பேரன் இறப்பான். இதுவே முறை. நீ இறந்து உன் மகன் ஈமக்கடன்கள் செய்தால் அது இயல்பு. நீ இருக்க, அவன் மறைந்து நீ ஈமக்கடன் செய்ய நேரிட்டால், அதுதான்  துன்பம்; வாழ்வியலுக்கு மாறானது!’’

- ஆர்.சி.எஸ்.

அவரவர் அனுபவம்!

கண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்

ன்பர் ஒருவர் ஜென் குருவைத் தேடி வந்தார்.  “குருவே, எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லை. தாங்கள்தான் விளக்கமாகச் சொல்லி புரியவைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

“ஜென் தத்துவம் என்ன சொல் கிறது தெரியுமா’’ என்று ஆரம்பித்த குரு, ``சிறுநீர் கழித்துவிட்டு வந்து சொல்கிறேன்’’ என்று கூறிவிட்டு, உட்புறம் சென்றுவிட்டார்.

சற்றுநேரம் கழித்து வந்த குரு, “புரிந்ததா’’ என்பதுபோல்  தலையசைத்துக் கேட்டார். 

வந்தவர் புரியாமல் விழித்தார். குரு சொன்னார்: “அரசனோ, அறிஞனோ, அசடனோ... எவராக இருந்தாலும் சிறுநீர் கழிக்காமல் இருக்கமுடியுமா? அதுவும்  நானேதானே  செய்யவேண்டும். எனக்குப்  பதில் உன்னை அனுப்ப முடியுமா?’’

அன்பருக்கு இப்போது புரிந்தது. அவரவர் வாழ்வு  அவரவர் கையில். அதை  வேறு எவரிடமும் தள்ளிவிட முடியாது. ஞானம் என்பது  உபதேசங்களால்  வருவதில்லை. தனது  வாழ்க்கையைத்  தானே  வாழ்வதன்  மூலம்தான் அனுபவத் தைப் பெற முடியுமே தவிர, மற்றவர் அனுபவங்களை  நாம்  உய்த்துணர முடியாது !

-ஆர்.சி.எஸ்.


ஓவியங்கள்: பிள்ளை