Published:Updated:

திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா!

திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா!
திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா!

சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்த திருத்தலம் திருமழபாடி திருத்தலம்.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி ஆலயம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. 


இந்தத் தலத்தில்தான் நந்திதேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக்கயிலையின் தலைவாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். 'நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்' என்று சொல்லும் நந்திக் கல்யாணம் நடைபெற்ற தலமும் இதுவே. இந்தத் தலத்தில் சந்திரனுக்கு ஏற்பட்ட சரும நோயைத் தீர்த்த காரணத்தினால் சுவாமி வைத்தியநாத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்றதாகத் தலவரலாறு.

அம்பிகையின் திருப்பெயர் சுந்தராம்பிகை. மேலும் புருஷாமிருகர், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றனர். சுவாமிக்கு வெள்ளை நிற வேஷ்டியும், சம்பங்கி மாலையும் அம்பிகைக்கு மாம்பழ நிறத்தில் பட்டுப் புடைவையும், சிவப்பு ரோஜா மாலையும் சாத்தி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இந்தக் கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
விழாவின் முக்கிய வைபவமான தேர்த் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

தேரில் வைத்தியநாத சுவாமி தேவியுடன் தேரில் எழுந்தருளினார். கூடி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, திருத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.  விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.