Published:Updated:

கதைகளின் குதிரையும் கள்ளழகரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதைகளின் குதிரையும் கள்ளழகரும்!
கதைகளின் குதிரையும் கள்ளழகரும்!

லிபி ஆரண்யா

பிரீமியம் ஸ்டோரி

பால்யத்தில் நாங்கள் குடியிருந்த தெருவில் ஓர் உதிய மரம் இருந்தது... ஒவ்வொரு கோடை விடுமுறைக் காலத்திலும் அந்த மரத்திலிருந்து குக்கூ ஓசையைக் கேட்டிருக்கிறோம். அந்தக் குரல் வரும் திசையில் கண்களை அகல விரித்துக் கருங்குயிலைக் கண்டு பரவசம் கொண்டிருக்கிறோம். ஒருமுறை ``இந்தக் குயில் ஏன் கூவுகிறது தெரியுமாடா?” என்று கேட்டு என் அம்மாச்சிதான் அந்தக் கதையை எனக்குச் சொன்னாள்.

‘‘மருதைக்குக் குருதையில வந்து ஆத்துல எறங்குற அழகரப் பாக்க அக்காக் குருவியும் தங்கச்சிக் குருவியும் பக்கத்து ஊருல இருந்து ஆசை ஆசையா வந்துச்சுக. வந்த எடத்துல எள்ளு விழ எடமில்லாதபடிக்கு நல்ல கூட்டம். அழகரு அழகப்பாத்து சொக்கிப் போயி நின்ன அக்காக் குயிலு தங்கச்சிக் குயிலத் தவற வுட்டுருச்சு. எங்க தேடியும் தங்கச்சியக் காணல. அந்தத் துக்கத்துல தான் இந்த அக்காக் குயிலு தன்னந்தனியா இப்படிக் கூவிக்கிட்டுத் திரியுது” என்று கதையை முடித்தாள். வளர்ந்த பின்புதான் இது குயில் மேட்டர் இல்லை. `நிலா அது வானத்து மேலே’ குயிலி மேட்டர் என்று பிடிபட்டது.

கள்ளழகர் வந்து வைகை ஆற்றில் இறங்கி மதுரையை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டு அழகர் மலைக்குத் திரும்பிய பல நாள்களுக்குப் பின்னும் ஒரு பறவையின் குரலில் பிரசன்னமாகும் அழகர், மதுரை மக்களின் நாயகன்.    

கதைகளின் குதிரையும் கள்ளழகரும்!

மதுரையிலிருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை அழகர்மலை. பரிபாடலிலும் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ள இம்மலைக்குச் சோலைமலை, திருமாலிருஞ்சோலை போன்ற வேறு சிறப்புப் பெயர்களும் உள்ளன. மலை அடிவாரத்தில் அழகர் கோயிலும் மலை உச்சியில் ராக்காயி அம்மன் கோயிலும் நடுவில் முருகன் கோயிலும் உள்ளன. காவல் தெய்வமாக அடிவாரத்தில் பதினெட்டாம்படிக் கருப்பு நிற்கிறான். இதில் அழகு என்றால் முருகன்தானே. முருகன் பெயரில் தமிழகத்தில் இருந்த ஆறு பிளாட்களில் ஒன்றான பழமுதிர்ச்சோலையைத்தான் நாயக்கர் ஆட்சியில் பெருமாள் பெயருக்கு மாற்றிப் பதிந்துள் ளனர் என்ற பிராது ஒன்று சுற்றிச் சுற்றி வருகிறது. இது போலவே கருப்புக்கும் ராக்காயிக்கும் ஏராளமான கதைகள் உள்ளன. ஒருவகையில் அழகர் மலை கதைகளின் மலைதான். கள்ளழகர் ஏறி வருவதும் கதைகளின் குதிரையில்தான்.

மதுரைக்குக் கிளம்புதல், எதிர்சேவை, வைகையில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம், சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம், பூப்பல்லக்கில் புறப்பாடு, அழகர் மலை திரும்புதல் என ஒரு வாரகாலம் துல்லியமான திட்டத்தோடு ஆண்டுதோறும் வந்து போகிறார் கள்ளழகர். தனது நெற்றியில் அழகரின் சீர்பாதம் வரைந்து விரதமிருந்து துருத்தி அடிப்பவர் களையும் திரி சுமப்பவர்களையும் சந்தித்து அவர்களிடம் ஒருமுறை பேசிப் பாருங்கள். அழகர் அவர்களது உயிரில் கலந்து நிற்கும் ரசவாதம் பிடிபடும்.

கள்ளழகர் ஏன் மதுரைக்கு வருகிறார் என்ற கேள்விக்குக் கதைகள் வரிசையில் காத்திருக்கின்றன. பரவலாக அறியப்படுகிற கதை இதுதான். தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக வந்த அழகர் தான் வருவதற்குள் திருமணம் நிகழ்ந்த செய்தியை அறிகிறார். பிற்பாடு ஆற்றைக் கடக்காமல் மனம் நொந்து மலை திரும்புகிறார்.

எங்கள் சிறு வயதில் சித்திரைத் திருவிழாவிற்கு மதுரையின் நாலாதிசைகளி லிருந்தும் கூட்டு வண்டி பூட்டி வருவார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் வந்து மதுரையின் தெருக்களில் நிறைவார்கள். சமையல் செய்து வெளிகளில் உண்பார்கள். அவர்களுக்கும் நகரில் குடியிருப்போருக்கும் பரஸ்பரம் அன்பு இருந்தது. இன்று கூட்டு வண்டி குட்டி யானையாக, அரைபாடி லாரியாக மாறி விட்டன. அவை தனது பூர்வ நினைவுடன் நகருக்குள் நுழைகின்றன... நிற்க இடமில்லை.  ‘கேட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தாதீர்’ என்ற எச்சரிக்கைப் பலகைக்கு அவர்கள் இப்போது பழகிவருகிறார்கள்.

கதைகளின் குதிரையும் கள்ளழகரும்!

அதையெல்லாம் விடுங்கள். மலையி லிருந்து கிளம்பி வந்து மதுரையின் தெருக்க ளிலேயே 40 கிலோமீட்டர் பயணப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் தங்கிப் பல லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துத் திரும்பும் கள்ளழகர் மதுரையைக் கொண்டாட்டத்தின் தித்திப்பில் மூழ்கடிக்கிறார்.

மதுரை மாவட்டம் சாதிப் பூசல்களுக்குப் பஞ்சமற்ற பகுதிதான். ஆனாலும் இத்தனை லட்சம் பேர் கூடும் சித்திரைத் திருவிழாவில் இதுவரை பெரிய சாதிமோதல்கள் இருந்ததாகப் பதிவுகள் இல்லை. உண்மையில் இந்தக் கொண்டாட்டம் ஓர் இணக்கத்தின் இழையாகி வேறு வேறு பூக்களை ஒன்றாகத் தொடுத்து நல்லிணக்கக் கதம்பமாகக் கள்ளழகருக்குச் சூட்டுகிறது. ஒருவகையில் நாயக்க மன்னன் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தைத் தேனூரிலிருந்து மதுரைக்கு மாற்றியதன் நோக்கத்தை இது பூர்த்தி செய்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஆட்சி நிர்வாக அனுகூலம்தான் அந்த நோக்கம். கிட்டத்தட்ட எல்லாச் சாதியினரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இந்தப் பரிமேலழகன் இருக்கிறான் .

மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகருக்கு அணுக்கமானவர்களாக இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இந்தச் சட்டகத்திற்கு வெளியே தேர்தல் சித்திரத்தைத் தீட்ட எந்தக் கட்சிக்கும் துணிவில்லை.   அந்த வகையில் கள்ளழகர்தான் மதுரையின் நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினர். சித்திரைத் திருவிழாதான் தேர்தல் பரப்புரை. அரசியல் அதிகாரம் பண்பாட்டின் குதிரையேறி வரும் குறியீட்டுச் சித்திரம் இது. அதனால்தான் அழகருக்காகத் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிக்கை எழுகிறது. அது மறுக்கப்பட்டாலும் மாலை 8 மணிவரை வாக்குப் பதிவை நீட்டித்து அழகர் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்பதற்கென, வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஒரேயொரு கேள்வி இருக்கிறது. ஆறு என்றால் நீர் இருக்கணும்தானே?             

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு