Published:Updated:

செல்லியம்மன் பெயரில் வழிபடப்படும் கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

செல்லியம்மன் பெயரில் வழிபடப்படும் கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!
செல்லியம்மன் பெயரில் வழிபடப்படும் கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே காட்டுமயிலூர் கிராமத்தில் செல்லியம்மன் என்னும் பெயரில் வழிபாட்டில் இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலையைக் கண்டறிந்துள்ளனர்.  

ஆதித் தமிழ்க்குடியின் தெய்வமாக அறியப்படுபவள் கொற்றவை. `கொற்றவை', தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் `பழையோள்', ` கானமர் செல்வி 'என்று குறிப்பிடப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு குறித்த செய்திகள் காணப்படுகின்றன. பாலை நில மக்களின் தெய்வம் கொற்றவை. `பாய்கலைப் பாவை' என்றும் கொற்றவை அழைக்கப்பட்டிருக்கிறாள். மன்னர்கள் போருக்குச் செல்வதற்கு முன் வழிபட்ட தெய்வம் கொற்றவை. கொற்றவை வழிபாடு பிற்காலத்தில் துர்கை, காளி வழிபாடுகளோடு இணைக்கப்பட்டது. 

இப்போது சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட ஆய்வில் செல்லியம்மன் எனும் பெயரில் கிராம தேவதையாகக் கொற்றவை வழிபடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது. 

``காட்டுமயிலூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவறையில் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த  (9-ம் நூற்றாண்டை) கொற்றவை தற்போதும் செல்லியம்மன் எனும் பெயரில் வழிபடப்பட்டு வருகிறாள். இச்சிற்பம், ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 132 செ.மீ, அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சவடி, சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறாள். மார்புக் கச்சை பட்டையுடன் காணப்படுகிறது. சூலம் ஏந்தி எட்டு கரங்களுடன் காணப்படுகிறாள். வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்ட வாள், மணி போன்றவையும், வலது முன் கரம் அபய முத்திரையிலும் அருள்புரிகிறாள். இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கொற்றவைக்குக் கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் இருக்கிறான். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்குப் படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக் கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான். இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார். கொற்றவையின் வாகனமான சிங்கமும், மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி ஒன்றும் உள்ளது. எருமைத் தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார். இந்தப் பகுதியில் மேற்கொண்டு ஆய்வு செய்தால் இதுபோன்று வேறு பெயரில் வழிபடப்படும் பழங்கால சிலைகளைக் கண்டறியலாம்” என்று தெரிவித்தார்.