Published:Updated:

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!
பிரீமியம் ஸ்டோரி
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

Published:Updated:
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!
பிரீமியம் ஸ்டோரி
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

முதலாழ்வார்கள் எனப்படும் மூவரில் ஒருவர் பேயாழ்வார். அனைவரும் அச்சப்படும் வகையில் பெய்யும் மழையைப் பேய்மழை என்பதுபோல, எவரொருவரும் பெருமாளுக்கு எதிராக அபவாதம் செய்ய அஞ்சும்படி, வீரமாக பெரும் பக்தி செய்ததனால் பேயாழ்வார் என்று பேறு பெற்றார். நாராயணனின் இடைவாளான நந்தகமே பேயாழ்வாராக அவதரித்தது என்கின்றன புராணங்கள்.

பேயாழ்வாரின் திருக்கதை

முன்பொரு காலத்தில் நாராயணனின் வாளான நந்தகம்,  புருஷரூபம் கொண்டது. `மஹான்’ என்று பெருமாளால் பெயர் சூட்டப்பட்ட அந்தப் புருஷர், பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார். ஒருநாள், அவர் தனக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வேண்டுமென்று மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டார். பெருமாளுக்குக் கைங்கர்யமும் திருவாராதனமும் செய்வதற்கு மேலான மெய்ஞ்ஞானம் இல்லை. இதை உலகுக்கும் புருஷ ரூபம் கொண்ட அந்த வாளுக்கும் உணர்த்தத் திருவுளம் கொண்டார் தாயார். ஆகவே அந்தப் புருஷரிடத்தில், “நீர் சென்று பூலோகத்தில் மயூரபுரியில் அவதரித்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து வாரும். தக்க தருணத்தில் நான் அங்கு தோன்றி உமக்கு மெய்ப்பொருளை உபதேசிப்பேன்” என்று வாக்குக் கொடுத்தார்.

அதன்படியே, மயூரபுரியில் இருக்கும் கைரவணி தீர்த்தத்தில் அல்லிமலர்களுக்கு இடையே, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தார் பேயாழ்வார்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தான் சொன்னபடியே தாயாரும், அந்தத் தீர்த்தத்தில் ஓர் ஆம்பல் மலரில் அவதரித்தார். மயூரபுரியில் அவதரித்ததால் தாயாருக்கு மயூரவல்லி என்ற திருநாமம் ஏற்பட்டது. அவரை பிருகு முனிவர் கண்டு வளர்த்தார். ஞானத்திலும் தேஜஸிலும் வளர்ந்து வந்த தாயாரை அணுகி பேயாழ்வார் உபதேசம் கேட்டார். சகல ஞானங்களையும் அவருக்கு உபதேசித்த தாயார், பெருமாள் கைங்கர்யமே மெய்ஞ்ஞானம் என்றும், வைகாநச முறையில் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து முக்தி பெறுமாறும் உபதேசித்தார்.

அதன்படி, பேயாழ்வாரும்... துளசிக்காடாக இருந்த திருவல்லிக்கேணிக்கும், மயூரபுரி என அழைக்கப்பட்ட மயிலாப்பூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த கைரவணி ஓடையில் தினமும் பயணித்துத் திருவாராதனம் செய்துவந்தார். இரு தலங்களும் அவருக்கு வேறுவேறல்ல. ஆழ்வார்கள், ‘தேனமர் சோலை மாட மாமயிலை திருவல்லிக்கேணி’ என்றும் ‘நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்’ என்றும், இரண்டு தலங்களையும் இணைத்தே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கருடபுராணம் சொல்லும் திருக்கதை!

சிறப்புகள் வாய்ந்த மயூரபுரியில், பெருமாள் வந்து கோயில்கொண்ட திருக்கதையை கருடபுராணம் விவரிக்கிறது. கேசி என்னும் அரக்கனை அழிக்கப் பிருகு மகரிஷியின் யாகத்தில் தோன்றியவர் இந்தப் பெருமாள்.

பெருமாள் தோன்றும்போது சுருள்சுருளான கேசத்தோடு எழிலோடு தோன்றியதால் கேசவன் என்று பெயர்பெற்றார். அரக்கனை அழித்தபின்பு, மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மயூரவல்லித் தாயாரைக் கரம்பிடித்து அந்தத் தலத்திலேயே கோயில்கொண்டார்.

இந்தத் திவ்யத் தலத்தின் மற்றொரு விசேஷம் இங்கிருக்கும் ருண, ரோக நிவாரணம் தரும் சந்திரபுஷ்கரணி தீர்த்தம். குருவின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட தீவினைகள் நீங்கவேண்டி, சந்திரன் இந்தத் தலத்தில்  பெருமாளை நோக்கித் தவம் செய்தார். பெருமாளும் மனமிரங்கி, “கங்கை முதலான தீர்த்தங்களில் நீராட சந்திரனின் பாபம் தொலையும்” என்று சொல்லி, சந்திரனின் துயர் தீர்க்கத் திருவுளம் கொண்டு, அங்கிருந்த குளத்திலேயே கங்கை முதலான புண்ணிய நதிகளையும் எழுந்தருளக் கட்டளையிட்டார். நதிகளும் அங்கு எழுந்தருள, சந்திரன் அதில் நீராடித் தன் பாபம் தீர்த்தான்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

அதன்பின் பெருமாள் அந்த நதிகளிடம், அந்தத் தீர்த்தத்தில் நித்திய வாசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.  அந்தத் தீர்த்தம் சர்வதீர்த்தம் என்றும் சந்திரக் குளம் என்றும் பெயர் பெற்றது. சந்திரக்குளமே நாளடைவில் மாறி சித்திரக் குளம் என்றானது.

அனுதினமும் அற்புத கோலம்!

சென்னையின் மையமான மயிலாப்பூரில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தின் வாசலாகக் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை கோபுரம் அமைந்துள்ளது. கோபுர தரிசனத்தில் மெய்சிலிர்த்து ஆலயத்துள் நுழைந்தால், கருடாழ்வாரும்  துவஜ ஸ்தம்பம் தரிசனம் கிடைக்கிறது. பெரிய திருவடியை வணங்கி முகப்பு மண்டபத்துக்குள் நுழைந்தால், மண்டபத்தின் வலதுபுறம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணன், சீதை, அனுமத் சமேதராகக் காட்சியருள்கிறார். அடுத்ததாகப் பேயாழ்வாரின் சந்நிதி. இங்கு பேயாழ்வார் கூப்பிய கரங்களோடு காட்சி கொடுக்கிறார். பேயாழ்வாரை நமஸ்கரித்து மூலவரான ஆதிகேசப் பெருமாள் உறையும் கருவறைக்குள் நுழைந்தால் அந்த இடத்தின் சாந்நித்தியம் சிலிர்ப்பூட்டுகிறது.

ஸ்ரீகேசவப் பெருமாளின் திருமுகம் அனுதினமும் புதியதோர் உணர்ச்சி பாவத்தோடு தோன்றும் என்கின்றனர் பக்தர்கள். நாம் தரிசித்த போது பெருமாள் சீதளமான ஒரு புன்னகையைத் தன் முகத்தில் தவழ விட்டிருந்தார்; உலகின் சகல அழகுகளையும் பழிக்கும் அற்புத தரிசனம். நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, ஒரு கரத்தால் அருள்பாலித்து மறுகரத்தைத் தன் தொடைமீது நிறுத்திக் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார் கேசவன். கண்ணாரக் கண்டு அவரைச் சேவித்துப் பின் கருவறையிலிருந்து வெளியே வந்தால், தாயாரின் சந்நிதி.

`சரணடைந்தால் சகலமும் அருள்வேன்’

மயூரவல்லித் தாயாரின் சந்நிதியும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அன்னை மேலிரு கரங்களில் மலர்கள் தாங்கியும் கீழிரு கரங்களில் வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டியும், ‘தன் திருவடிகளில் சரணடைந்தால் சகலமும் அருள்வேன்’ என்பதுபோல இடக்கரத்தால் தன் திருவடியைக் காட்டியும் அமர்ந்திருக்கிறாள். இந்தத் தலம் தாயார் பேயாழ்வாருக்கு உபதேசித்த தலம் என்பதால், இங்கு அன்னையை வணங்குபவர்களுக்கு ஞானம் ஸித்திக்கும். இங்கு தாயார் சந்நிதியின் கதவுகளிலும், துவாரபாலகர்களைச் சுற்றியிருக்கும் கதவுகளிலும் சிறு சிறு மணிகள் தொங்குகின்றன. இங்கு வரும் பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த மணிகளைக் கட்டுகிறார்கள்.

 வெள்ளிக்கிழமை வில்வார்ச்சனை!

மேலும், இங்கு அன்னைக்கு வில்வார்ச்சனை மிகவும் விசேஷம். பிரதி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் அன்னைக்கு, ஸ்ரீசூக்தம் முழங்க வில்வார்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து 12 வாரங்கள் வில்வார்ச்சனை செய்யும் பக்தர்களின் எண்ணம் ஈடேறுகிறது. அங்கு வந்திருந்த பக்தர் ஒருவரிடம் பேசினோம்.

“என் பெண்ணுக்குத் திருமணம் தடைபட்டுக் கிட்டே இருந்தது. என் நண்பர் ஒருத்தர் மூலமா இந்தத் தலம் பற்றிக் கேள்விப்பட்டு இங்க வந்தோம். மணி கட்டி வேண்டிகிட்டு, இரண்டு வாரம் வில்வார்ச்சனையிலும் கலந்துகொண்டோம். மூணாவது வாரமே நல்ல வரன் அமைஞ்சது. அதன்பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், வெள்ளிக்கிழமைகளில் வந்து வில்வார்ச்சனையில் கலந்துகொள்கிறேன்” என்றார் நெகிழ்வோடு.

இவரைப் போல பல பக்தர்கள் தங்களின் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே யிருந்தார்கள். தாயாரின் சந்நிதியில் அவளின் மகிமையைக் கேட்டு மெய்சிலிர்த்தபடியே அருகே தனிச் சந்நிதியில் இருக்கும் சக்கரத்தாழ்வாரைச் சேவித்தோம். பின் பிராகாரத்தில் வலம் வந்தால் வடமேற்கு திசையில் ஆண்டாள் நாச்சியார் சந்நிதி. செந்தமிழை ஆண்ட அந்தத் தாயைச் சேவித்து ஆசிபெற்று, நேரே சென்றால் வீர ஆஞ்சநேயர் சந்நிதி. சிறிய திருவடியினைப் பணிந்து அங்கேயே அமர்ந்து, கோயிலில் நிலவியிருந்த தெய்வ சாந்நித்தியத்தை அனுபவித்துச் சிலிர்த்தோம்.

தாயாருக்கு நெய்தீபம் ஏற்றினால்...

தொடர்ந்து, கோயிலின் பிற விசேஷங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார் டிரஸ்டியின் சேர்மன் ஸ்ரீதரன்...

“இந்த ஆலயம் மிகவும் தொன்மையானது. பேயாழ்வார் அவதாரத் தலம். பேயாழ்வார் பெருமாளின் வாளின் அம்சம் என்பதால் இங்குப் பேயாழ்வாரை வேண்டிக்கொண்டால் சத்ருபயம் நீங்கும். பேயாழ்வார் தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த சைவ வைணவ சச்சரவுகளை நீக்க முயன்றவர். அவருடைய பாசுரங்களில் அவை தெளிவாகத் தெரியும்.

இங்கு தாயார் கேட்ட வரம் அருளும் வரப்பிரசாதியாக இருக்கிறார். நெய்தீபம் ஏற்றி தாயாரின் சந்நிதியை 12 முறை வலம் வந்தால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது கண்கூடு. மேலும், ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு, கடன் தொல்லைகள் நீங்கி செல்வவளம் சேரும். அதற்கு வாரம்தோறும் வந்து சங்கல்பித்துக் கொள்ளும் பக்தர்களே சாட்சி” என்று கூறினார்.

மயூரவல்லித் தாயார், தரிசன மாத்திரத்திலேயே மனசாந்தியைத் தரவல்லவர் என்பதை சற்று முன்னர்தான் அனுபவித்ததால், அன்பர்  ஸ்ரீதர் கூறிய சகலமும் மெய்வாக்கு என்பதை உணரமுடிந்தது.

-சைலபதி
படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கவனத்துக்கு

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

மூலவர்    அருள்மிகு கேசவப்பெருமாள்

தாயார்    மயூரவல்லித் தாயார்

தீர்த்தம்    சர்வ தீர்த்தம் எனப்படும் சித்திரக்குளம்

வழிபாட்டுச் சிறப்பு பிரதி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் அன்னைக்கு, ஸ்ரீசூக்தம் முழங்க வில்வார்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து 12 வாரங்கள் வில்வார்ச்சனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அமைவிடம் சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவு; தாம்பரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ளது மயிலாப்பூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism