Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 2

கண்டுகொண்டேன் கந்தனை - 2
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 2

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 2

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை - 2
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 2
கண்டுகொண்டேன் கந்தனை - 2

`பாத பங்கய முற்றிட உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே’ (செய்ப்பதி - வயலூர்) என்று அருணகிரிநாதருக்கு அருள் வழங்கிய கந்தவேள், நமது முயற்சிக்கும் துணையிருப்பான் என்ற உறுதியோடு வயலூர் முருகனை வழிபட்டுத் திரும்பினேன்.

சென்னைக்குத் திரும்பிய பின், வயலூர் தல வரலாற்றுப் புத்தகத்தைத் திருப்பியபோது, எனக்கு ஓர் ஆச்சரியமான செய்தி கிடைத்தது. அதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.

1934-ம் ஆண்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தினர் வயலூரை தரிசிக்க வந்தார்கள்.  முருகன் சந்நிதியில் திருப்புகழ்ப் பாடி இன்புற்றார்கள். அன்று முருகப் பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி அலங்காரம் செய்திருந்தார்கள்.

சந்நிதியில், சின்னஞ்சிறுவனான ஜம்புநாதன் எனும் குருக்கள் பையன் ராகமாலிகையில் முருகனுக்கு இனிமையாக அர்ச்சனை செய்தானாம். `வெள்ளிக்கவசம் சார்த்த கட்டணம் எட்டணா’ என்று கோயிலில் போர்டில் எழுதி வைத்திருந்தார்களாம். ஆகவே, குருக்களின் கற்பூரத் தட்டில் எட்டணாவைக் காணிக்கையாக அளித்தார் வாரியார் சுவாமிகள்.

வயலூர் திருக்கோயிலின் அறங்காவலராக (டிரஸ்டியாக) அப்போது இருந்தவர் திரு. தோட்டா இராதாகிருஷ்ண செட்டியார். அவர் திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவர் கனவில் காவியுடை, ருத்ராக்ஷ மாலை அணிந்த நிலையில் தோன்றினார் முருகப்பெருமான்.

“என் பக்தனிடமிருந்து நீ எட்டு அணா வாங்கிக்கொண்டனையே! அதனால் வயலூர் கோபுரம் கட்டமுடியுமா?’’ என்று உரத்தக்குரலில் அதட்டிக் கேட்டாராம் முருகன். டிரஸ்டி பதறிக்கொண்டு கண்விழித்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடிந்ததும் மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு வயலூர் வந்தார். கோயிலில் இருந்தவர்களிடம் ``நேற்று யார் யார் தரிசனத்துக்கு வந்தார்கள்’’ என்று விசாரித்தார்.

சிறுவன் ஜம்புநாதனிடமும் விவரம் கேட்கப்பட்டது. தட்டில் எட்டணா போட்டவர் குறித்த விவரம், கோயில் விசிட்டர் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினான் அவன். அதில், கிருபானந்த வாரியாரின் முகவரி இருந்தது.
 
உடனே, மணியார்டர் பாரம் ஒன்றில் `முருகன் உத்தரவுப்படி இதை அனுப்பியிருக்கிறேன். தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்’ என்று குறிப்பு எழுதி, கையெழுத்திட்டு எட்டணாவை  வாரியாருக்கு அனுப்பி வைத்தாராம் செட்டியார்.

மணியார்டரைப் பெற்றுக்கொண்ட வாரியார் ஸ்வாமிகளுக்கு அப்போது எதுவும் புரியவில்லை. மீண்டும் அவர் திருச்சிக்குச் சென்ற போது, விஷயத்தை அறிந்துகொண்டார். இதன் பிறகு பல மாதங்கள் கழித்து, பல அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க வயலூர் ராஜகோபுரத் திருப்பணியைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்து, 1936-ம் வருடம் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தினார் வாரியார் சுவாமிகள்.

வாரியாரிடம் எட்டணா பெற்றுக்கொண்ட அதே ஜம்புநாதக் குருக்களை, ஏறக்குறைய 43 ஆண்டுகள் கழித்து 1977-ல் வயலூர் முருகன் சந்நிதியில் நான் சந்தித்து ஆசிபெற்றதை எண்ணும்போது, அந்த அருமையான அருள் அனுபவம் என்னைச் சிலிர்க்கவைத்தது!

இனி, பயணத்துக்கு வருகிறேன். அடுத்து நான் பகிரப்போவது, விராலிமலை குறித்து!

விராலிமலைக்கு வா என அழைத்தல்...

யலூர் பொய்யாக்கணபதி இட்ட கட்டளைப்படி `வயலூரா... வயலூரா!’ என்று அந்தத் தலத்தின் திருப்பெயரை, பிறகு தாம் தரிசித்த தலப் பாடல்களில் வைத்துப் பாடி இன்புறுகிறார் அருணகிரியார்.

இன்று நமக்குக் கிடைத்துள்ள தலப்பாடல்களில், 45 தலங்களில் அருணகிரியார் வயலூரைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளதை அறியலாம். இது, அவர் வயலூரில் பெற்ற அருள் அனுபவத்தை நன்றியுடன் போற்றும் முறையில் உள்ளது என்றே சொல்வேன்.

வயலூரில் சிலகாலம் தங்கியிருந்து தினமும் முருகப்பெருமானை வழிபட்டு திருப்புகழால் பாடி இன்புற்று வந்தார் அருணகிரியார். ஒரு நாள் அவரது கனவில் வந்து ஆட்கொண்டார் கந்தவேள்.

“நான் மீண்டும் பிறப்பில் விழாதபடி தேவரீர் எனக்கு உபதேசம் செய்தீர். உமக்கு அடிமை பூணும் வகையில், எனது கனவில் வந்து ஆட்கொண்டருளிய சுவாமியே! மயில்மேல் வீற்றிருக்கும் உம்முடைய அற்புதமான தரிசனத்தைக் கண்டேன். கருணைக் கடல் போல் மிக்க ஒளி வீசும் உமது ஒற்றைத் திருமுகம் (ஏக முகம்), வீரம் பொருந்திய உமது திருவடி, கடம்பமலர், வேல் ஏந்திய அழகு... அப்பப்பா... இதனை என்றும் மறவேன்” என்று இந்தப் பேரருளை நெருவைப்பதி (நெரூர்), திருப்பழநி ஆகிய தலங்களைத் தரிசித்த போதும் நினைவுகூர்கிறார் அருணகிரியார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 2

`கல்லினின்றும் நார் உரித்தது போல என் நெஞ்சக்கன் கல்லை கனியாக்கி எனக்கு அமிர்தப் பதவியளித்தவன் வயலூர் பெருமான்’ என்று வியந்து போற்றுகிறார்.

மீண்டும் ஒரு நாள் கனவில் வந்து காட்சியளித்து, அருணகிரியாரை விராலி மலைக்கு வாவென்று அழைக்கிறார் கந்தவேள்.

“அன்பனே! மகரந்தப் பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழ மரம் ஆகியவை கற்பக விருட்சங்கள் எனும்படியாக நிறைந்துள்ள அழகிய விராலி மலையில் யாம் வீற்றிருக்கிறோம். நீ அத்தலத்தை நினைப்பில் வைத்து வருவாயாக” என அன்புடன் அழைக்கிறார் முருகன்.

இந்தக் காட்சி கிடைத்தவுடன் அருணகிரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேது?!

“பெருமானே! உன் தாமரைத் திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை அழைத்து, என்னுடைய மனதில் உள்ள குற்றங்களை ஒழித்து, ஞான அமுதப் பிரசாதத்தைத் தந்த உமது அன்பை, இனி எந்நாளும் மறக்கமாட்டேன்” எனப்பாடிப் பரவுகிறார் அருணகிரியார்.

`விராலி மாமலையில் நிற்ப! நீ கருதியுற்று
வா என அழைத்து என் மனதாசை
மாசினை அறுத்து ஞான(அ) முதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே’

இதுதான் அந்தப் பாடல். அதுமட்டுமா?

``விராலிமலைக்கு வா என்று அழைத்தீரே! அது எந்தத் திசையில் இருக்கிறதென்று வழிவகைகளைச் சொல்ல வில்லையே’’ என்று வயலூர் வள்ளளைத் துதித்துவிட்டு, அந்த நள்ளிரவிலேயே புறப்பட்டார்.

எங்கும் இருள் சூழ்ந்திருக்க காட்டுப் பகுதியில் வழிதெரியாமல், திசை தெரியாமல் திகைத்து நின்றார் அருணகிரியார். அப்போது அவர் முன்பு ஒரு வேடன் தோன்றினான்.

“நீங்கள் யார்... எங்கே செல்கிறீர்கள்’’ என்று கேட்டான்.

“ஐயா! நான் திருவண்ணாமலையைச் சேர்ந்தவன். விராலிமலையை நோக்கிச் செல்கிறேன். அது எங்கே உள்ளது?’’

“ஐயா! நான் விராலிமலையைச் சேர்ந்தவன்தான். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்’’ என்று வேடன் அவரை அழைத்துச் சென்றான். விடியற்காலையில் இருவரும் விராலிமலையை அடைந்தனர்.

அருணகிரியார் மிகவும் மகிழ்ந்தார். “ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இவ்வூரில் எங்கே இருக்கிறீர்” என்று வேடனிடம் கேட்டார்.

அதற்கு, “நான் மலைமேல்தான் வசிக்கிறேன். அங்கே வாருங்கள்” என்றான்வேடன்.

அருணகிரிநாதர் அங்குள்ள தடாகத்தில் நீராடித் திருநீறு அணிந்து, வேடன் முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்து மலைமீது ஏறிச் சென்றார். வழியில் பாதி தூரத்திலேயே ‘சந்தானக்கோடு’ என்ற மண்டபத்தை அடைந்தனர். அப்போது, சூரிய ஒளியில் வேடனை உற்றுநோக்கிய அருணகிரியார், மெய்சிலிர்த்துப்போனார்!

ஆம்... வேடன் வேலனாகக் காட்சியளித்தான்!

கொடிய கானகத்தில் வழிகாட்ட வேடனாக வந்து, வேதங்களும் காணாத பாதங்கள் நோவ நடந்து, தனக்கு வழிகாட்டிய விராலிமலை ஆறுமுகப் பெருமான், வேடர் மங்கை - வேழ மங்கை சூழ ஆராயும் நீதி வேலுடன் மயில்மேல் காட்சியளித்ததைக் கண்டு பேரானந்தம் கொண்டார் அருணகிரியார்.

‘‘இந்தத் திருக்காட்சியை மிகக் கீழ்ப்பட்டவனான நானும் நாள்தோறும் தியானம் செய்யும்படியான பெரும்பேறினை வேண்டுகிறேன்’’ என்று விராலிமலைக் கந்தனின் வற்றாத கருணைத்திறத்தை உருகிப் பாடினார்.

‘சீரான சோல கால...’ என்று தொடங்கும் இந்த விராலிமலைத் திருப்புகழ், திருமுருகனின் திருக்காட்சி வர்ணனையைப் போற்றுகிறது. இத்திருப்புகழைப் பாராயணம் செய்தால், கந்தன் அருள்காட்சி கிடைக்கும் என்பது திருப்புகழ் அடியார்களின் அனுபவமாகும்.

இவ்வகையில் கந்தனின் கருணையை - காட்சியைப் பெற்ற அடியார் ஒருவரது அனுபவம் நம் சிந்தையைச் சிலிர்க்கவைத்தது!

- அனுபவிப்போம்...

- திருப்புகழ் அமுதன்

கனவு !

கண்டுகொண்டேன் கந்தனை - 2

ஜென் குரு ஒருவர் இறக்கும் தருவாயில் இருந்தார்,. சீடர்கள் சூழ்த்திருந்தார்கள். யாரும் அழவில்லை. ஜென்  தத்துவப்படி அழுவது  கூடாது.

மரணம், நிரந்தரத்தின் வாசல்!.  காலத்திலிருந்து கடந்த காலம்  ஆகிவிடுவது  மரணம். வாழும்  வரைதான்  முக்காலம். மரணம்,  கால  எல்லைகளைக்  கடந்தது.ஒருவன் மரணத்தின்  மூலம்  காலம்  ஆகிவிடுகிறான்.

ஜென் வழி  வாழ்பவர்களுக்கு  மரணம் மகிழ்வு தான். மரண  வேளையில் மரண கீதம்  இசைப்பது ஜென் வழக்கம். ஒரு சிறிய ஹைக்கூ கவிதை போல அமையும் அந்தக் கவிதை அல்லது பாட்டு, குருவிடம் சீடர்கள்’ சரம் ‘(இறுதி)  கவிதை ஒன்று சொல்லுமாறு  வற்புறுத்தினார்கள்.

குரு  சொன்னார் : “ கனவு !“

ஒரு சொல்தான். இதுவே  மகத்தான கவிதையாக இன்னும் ஜென் தத்துவ உலகில்  கொண்டாடப்படுகிறது.  வாழ்கை யின் சாரத்தைச்  சொல்கிறது, இந்த  ஒரு சொல் கவிதை.

தொகுப்பு : ஆர்.சி.சம்பத்

ஓவியங்கள் : பிள்ளை