
புண்ணிய புருஷர்கள் - 2

அனைத்தையும் படைத்தது ஆண்டவன் என்றால், எதைத்தான் நாம் ஆண்டவனுக்கு என்று சமர்ப்பிக்க முடியும் சொல்லுங்கள்? ஆண்டவனே மலர்கிறான்; ஆண்டவனே மணக்கிறான் எனில், மலர்களைச் சமர்ப்பிக்கும் திருப்பணியை என்னவென்பது?

கடவுளின் அம்சமான மலர்களை கடவுளுக்கே சமர்ப்பிக்கும் அன்பர் ரஜினி ‘`கடவுளுக்கு மனதைத்தவிர வேறெதையும் சமர்ப்பிக்க முடியாது. கடவுள் வந்து தங்கும் நம் மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், அது ஒன்றே உயர்ந்த பூஜை'' என்கிறார்!

அன்றாடம் 500 தாமரை மலர்கள் அல்லது நாகலிங்க மலர்கள் அளிப்பது மட்டுமல்ல, மாதம்தோறும் வரும் நாயன்மார்களின் குருபூஜை நாள்களில், அந்தந்த நாயன்மார்களின் புனித வரலாற்றை ஒரு சிறிய கையடக்க புத்தகமாக வடிவமைத்து சுமார் 300 பிரதிகள் அச்சிட்டு சிவனடியார்களுக்கு வழங்கும் பணியையும் செய்து வருகிறார் அடியவர் ரஜினி.
ஒரே மாதத்தில் 5 அல்லது 6 நாயன்மார்களின் விசேஷம் வந்தாலும், எப்படிச் சிரமப்பட்டாலும் இந்தத் திருப்பணியைச் செய்துவிடுகிறார். ஆனால் இதற்காக எவரிடமும் எந்த உதவியையும் கேட்டதில்லையாம். இளம் சிவனடியார்களுக்கு நாயன்மார்களின் சரித்திரத்தை இவர் அறிமுகப் படுத்துவதன் மூலம் மிகப்பெரிய சிவத் தொண்டைச் செய்துவரும் இந்த அன்பரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சிவப்பணிக்காகவே அதிகாலை 4 மணிக்கு வேலையைத் தொடங்கும் இவர், ஒருநாளைக்கு தூங்குவது மிகச் சொற்பமான நேரமே. `பசி, தூக்கம், சொந்த விருப்பங்களை எல்லாம் மறக்கடித்து, என்னை ஆட்கொண்ட ஈசனின் கருணையை என்னவென்று சொல்வேன்!' என்று அடிக்கடி சிலிர்த்துக்கொள்கிறார்.
காஞ்சி ஏகம்பம், கச்சபேசம், கந்தகோட்டம் என மூன்று ஆலயங்களிலும், இரண்டு அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை, அங்குள்ள தெய்வ மூர்த்திகளின் கவசங்களை இவரே சுத்தம் செய்து கொடுக்கிறார். காஞ்சி வட்டாரத்தில் எந்த ஆலயப் பணியானாலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்துகொடுக்கிறார். அந்த பணிகளின்பொருட்டு எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை ரஜினி. அவ்வளவு ஏன்... பணி முடித்தபிறகு கடவுளை தரிசிக்கக்கூட செல்வதில்லையாம். ``என் பணிக்குப் பிரதிபலனாக எதையுமே எதிர்பார்ப்பதில்லை. பணி செய்வது மட்டுமே என் வழிபாடு'' என்கிறார் நெகிழ்ச்சியோடு.

``12 ஆண்டுகளாக சிவனின் அடியாராக தொண்டாற்றி வருகிறேன். வடதேசம் வரையிலும் சென்று பல சிவாலயங்களை தரிசித்துவிட்டேன். நாயினும் கீழான இந்த அடியேனை தவிசில் ஏற்றி அழகு பார்க்கும் என் ஈசனை அலங்கரிப்பது என்றால் எனக்கு அப்படியோர் ஆனந்தம்!
எந்தக் கோயிலில் அந்த வாய்ப்பு கிடைத்தாலும் ஓடோடிச் சென்றுவிடுவேன். என் காலம் முழுக்க நாதனுக்கு அடிமைப்பணி செய்ய வேண்டும். இதைத்தவிர என் வேண்டுதல் வேறெதுவும் இல்லை. உலகமெலாம் சைவ நெறி ஓங்கித் தழைக்கவேண்டும். அந்த அரியப் பணியில் இந்த எளியோன் சிறுதுளி அளவுக்காவது உதவவேண்டும். என் கச்சி ஏகம்பன் அதைச் செய்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறேன்'' என்று சொல்லி புன்னகைக்கிறார்.
கேட்கவே மலைக்கவைக்கும் இந்த அரிய கைங்கர்யங்களை மிக எளிதாகச் செய்துவரும் இவரின் பணியை பக்தியை என்னவென்று சொல்வது?
இந்த மலர் கைங்கர்யத்தை எப்போது ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால்...
`‘ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், தாமல் கிராமத்தை அடுத்த அல்லிக் குட்டை காட்டுப்பகுதியில், நானும் என் நண்பர்களும் யதேச்சையாக... எதிரெதிராக வீற்றிருந்த இரட்டை லிங்கங்களைக் கண்டோம்.
ஏதோ பல்லவர் காலத்து அரசன் வைத்த அழகிய லிங்கங்கள் அவை. கண்டதுமே கண்ணீர்க் கசிய ஐயனைத் துதித்துவிட்டு, வீடு போய் சேர்ந்தோம். அன்று இரவு என்னால் உறங்கவே முடியவில்லை. ‘நீ மட்டும் நிம்மதியாக உறங்குகிறாய், நான் இங்குத் தனிமையில் வீற்றிருக்கிறேனே...’ என்ற ஈசனின் குரல், என்னுள் தொடர்ந்து ஒலிப்பதாக உணர்ந்தேன்.
அதன்பிறகும் தாமதிக்காமல் புறப் பட்டுச் சென்று, அங்குள்ள ஈசன் திருமேனிகளைச் சுத்தப்படுத்தத் தொடங்கினேன். ஆழ்ந்த இருட்டில் மொபைல் டார்ச்சி வெளிச்சத்தில் இந்தப் பணியை செய்தேன்.
நண்பர்களுக்கும் போன் செய்து வரச்சொன்னேன். அவர்களும் வந்து கொஞ்ச நேரம் என்னோடு பணி செய்துவிட்டு, ‘மீதமுள்ள பணியை விடிந்ததும் செய்யலாம் வா’ என்று அழைத்துப்போனார்கள். விடிந்ததும் மீண்டும் தொடங்கிய தூய்மைப்பணி, சில மாதங்களில் கிராமத்தார் உதவியோடு கோயிலாக உருவாகும்வரைத் தொடர்ந்தது. இன்று தாமல் பகுதியில் அந்த ஆலயம் வெகுசிறப்பாக விளங்கி வருகிறது'' என்கிறார் உள்ள மகிழ்வோடு.
மலர் சேகரிக்கும் பணியிலும் இவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகம். 500 பூக்களில் ஒன்று குறைந்தாலும் மனம் கொள்ளாமல் தவித்துப்போவாராம்.கீழே விழுந்த மலர்களையோ, பறிக்கும்போது பின்னமான மலர்களையோ ரஜினி சேகரிப்பதில்லை. ஈசனுக்குச் சமர்ப்பிக்கும் மலர் ஒவ்வொன்றும் எக்குறையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பாராம்.
``கோடையில் தாமரைகள் கிடைப்பது கடினம். அப்போது, நாகலிங்க மலர்கள் மட்டுமே ஈசனுக்குச் சமர்ப்பிக்கிறேன். அவற்றையும் கோடைகாலத்தில் பாதுகாப்பதும் கடினமானதுதான்.
மலர்கள் மலரும் முன்னர் பறித்துவிட்டால், பிறகு அவற்றை இதழ் பிரிக்க முடியாது. நாமே பிரித்தால், மலர்கள் ஒடிந்துவிடும் அபாயம் உண்டு. அவை பூஜைக்கு உதவாது. அதேநேரம், நல்ல வெயில் வந்தபிறகு மலர்களைப் பறிக்கலாம் என்றால், அந்த மலர்களும் குழைந்துபோய் பூஜைக்கு உதவாது போய்விடும். எனவே, தகுந்த நேரத்தில் காத்திருந்து இந்த மலர்களைச் சேகரிக்க வேண்டும். மலர்களைப் பறித்ததும் அப்படியே பைகளில் வைத்திருக்கவும் கூடாது.
பறித்த அரை மணி நேரத்துக்குள், ஒவ்வொரு மலராகப் பிரித்துத் தூய துணியில் வைத்து, காற்றில் உலர வைக்கவேண்டும். காற்றாடக் காய்ந்ததும் பிரிட்ஜில் வைத்து ரெண்டு மணிநேரம் வரை பாதுகாக்கலாம். அதற்குள் ஸ்வாமிக்குச் சாத்திவிட வேண்டும்'' என்று மலர் சேகரிக்கும் அனுபவத்தை மலர்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் ரஜினி.
அவரே தொடர்ந்து, ``பணிகளில் சிரமங்கள் ஏற்படும்தான். ஆனால், எதைப்பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என் உயிர் உள்ளவரை இந்தப் புனித காரியத்தைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
இதனால் எனக்குப் பெண் கொடுக்கக்கூட தயங்குகிறார்கள் என்று உறவினர்கள் என்னைக் கடிந்துகொள்கிறார்கள். ஆனால், எனக்கோ என் அப்பனை (சிவனை) துதிப்பதைத் தவிர வேறு எதுவுமே பெரிதில்லை'' என்கிறார் ரஜினி.
எப்போதும் எங்கும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாத கிராமத்து இளைஞர் இவர். `சிவாராதனைக்குப் புஷ்பதானம் செய்தவர்கள், அநேக கோடி காலம் ருத்திர சாரூப்பியத்தை அடைந்து, ருத்திர லோகத்தை அலங்கரிப்பார்கள்' என சனத்குமாரர் வியாசமகரிஷிக்கு எடுத்துக் கூறுகிறார். இது சிவாகமப் புராணத்தில் சனத்குமார சம்ஹிதையில் உள்ளது. மலர்களால் அர்ச்சித்து மகேசுவரனை வணங்குபவர்களுக்கு மங்கல வாழ்வு கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
ஆனால், இதுகுறித்தெல்லாம் எதுவும் அறியாமல், அன்பர் ரஜினி ஆற்றும் இந்தப் புஷ்ப கைங்கர்யம் எவ்வளவு மேன்மையானது?!
ஈசனின் மீது இத்தனை விருப்பம் வைத்திருக்கும் ரஜினிக்கு வேறு ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டோம். அதற்கு, எளிய மனிதரான அன்பர் ரஜினி சொன்ன பதில், ஆச்சர்யத்தை அளித்தது.
`‘ஆசைக்கு அளவே இல்லை. எல்லாமே சிவனென்ற நிலையை அடையவேண்டும். அதற்கு ஈசனே எனக்குக் குருவாக வரவேண்டும்.
`எது இறை' என்று சொல்வது தர்மமில்லை; அது இதுவென்று சொல்ல ஆண்டவன் வஸ்துவும் இல்லை. எல்லாமே சிவனென்று ஒடுங்க வேண்டும். அதற்கு அவரே அருளவேண்டும். அதைத்தவிர வேறொன்றுமறியேன் பராபரமே!'' என்கிறார்.
ஆஹா! சகலத்திலும் இறையைக் காணும் இந்தப் பக்குவத்தை அளித்தது, இவரது பணியா, பக்தியா?
`தொண்டர்தம் உள்ளத்துள் உறைபவன்தான் இறைவன்' என்பது உண்மைதான் என்பதை ஐயம் தெளிவுற உணர்ந்தோம்; சிலிர்த்தோம்!
- அடியார்கள் வருவார்கள்...
மு.ஹரிகாமராஜ் - படங்கள்: பெ.ராகேஷ்
புண்ணிய புருஷர்கள் வருவார்கள்...
‘உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்’ என்று உண்மையான அடியார்கள் எங்கிருக்கிறார்கள் என்று அருணகிரிநாதரே தவித்திருக்கிறார். அத்தகைய அன்பு அடியார்களைத் தேடும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

அடியார்களுக்கான அடையாளங்கள் பலவுண்டு. அதில் முக்கியமானது அடையாளமற்று எந்த எதிர்பார்ப்புமின்றி இருப்பதுவே. இறைச் சிந்தனையோடு வாழும் நல்ல அடியார்களைத் தேடிப் பிடித்து சமூகத்துக்குக் காட்டுவதன் வழியே அவர்களின் சுயநலமற்ற தூய பணியை அடையாளம் காட்டுகிறோம். இதுபோன்ற தொடர்கள் இன்றைக்கு அவசியமாகிறது. கடமையைச் செவ்வனே செய்யும் மனிதர்களின் வழியேதான் தெய்விகம் நிலைபெறுகின்றது.
`தர்மத்தின் வழியே நடந்து சகஉயிர்களை நேசிப்பவனை, அந்தத் தேவதைகளே வந்து வணங்கும்' என்று நமது புராணங்கள் கூறுகின்றன. சமூக மலர்ச்சிக்காகவும் ஆன்மிக விழிப்புக்காகவும் தம்முடைய வாழ்வையே மற்றவர்களுக்காகத் தத்தம் செய்யும் இதுபோன்ற புண்ணியாத்மாக்கள் போற்றப்படவேண்டியவர்கள். தென்னகம் எங்கும் பிரமாண்ட ஆலயங்களைப் புனரமைத்த கிருஷ்ணதேவராயர் தனது உருவத்தைப் பல தெய்வ சந்நிதிகள் முன்பாக தரையில் பதிக்க உத்தரவிட்டார், ஏன் தெரியுமா? ஆண்டவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பக்தர்களின் புனிதமான பாதத் துளிகள் தன் மீது பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். எளிய தொண்டர்களின் சரிதைத் தொடர்ச்சியாக வெளிவரவிருப்பது உண்மையில் சிறப்பானது. நிகழ்கால சாதனையாளர்களைக் கொண்டாடுவது என்பது, பலரை ஊக்குவிக்கும் புனிதச் செயலே.
இதுபோன்ற எழுத்துக்களைப் படிக்கும் இந்தத் தேசத்தின் இளைஞர்கள் பலரும் ஆன்மிகப் பணியாற்ற தொடர்ந்து வருவார்கள் என்பதே இந்தத் தொடரின் வெற்றியாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். வருங்காலத்தில் இன்னொரு ‘பெரிய புராணமாகக்’ கொண்டாடப்படவிருக்கும் இந்தப் புண்ணிய புருஷர்கள் தொடரை வருக வருகவென்று இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். சிவாயநம.
திருவடிக்குடில் ஸ்வாமிகள்
ஜோதிமலை
இறைப்பணித் திருக்கூட்டம்.
கும்பகோணம்.

பிறை சூடிய திருத்தலம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள காமக்கூரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சாபத்தால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் இங்கு வந்து நீராடி, சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். இதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு சந்திரசேகர சுவாமி என்று பெயர். ஈசன், இங்குதான் தன் தலையில் சந்திரனை சூடினார் என்பர்.
-எஸ். விஜயா சீனிவாசன், திருச்சி-13