மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

நாரதரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். சிலபல நாள்கள் ஆகிவிட்டன அவரைச் சந்தித்து. ஆகவே, தகவல்களைப் பெறுவதில் அதீத எதிர்பார்ப்பு நம்மிடம். சரி, போனில் அழைக்கலாம் என்று நாம் தயாராகவும், அதற்கு அவசியம் இல்லை என்பதுபோல் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக அவருக்குக் குளிர்ச்சி தரும் பானகம் தந்து உபசரித்து, இளைப்பாறச் செய்தோம். சற்றுப் பொறுத்து, ‘`சமீபத்தில் எனக்குச் சதுரகிரி மலையைப் பற்றி ஒரு தகவல் வாட்ஸப்பில் வந்தது...’’ என்று நாரதர் சொல்லும்போதே குறுக்கிட்ட நாம், ‘`நமக்கும் அந்தத் தகவல் வரவே செய்தது. அதுபற்றி ஏதேனும் விசாரித்தீரா?’’ என்று கேட்டோம்.

‘`விசாரிக்காமல் இருப்பேனா என்ன? அதற்கு முன் சதுரகிரியின் வரலாறு பற்றி ரத்தினச் சுருக்க மாகக் கூறிவிடுகிறேன். இந்த மலையின் மகிமை குறித்து ஏற்கெனவே நமது இதழில் தொடராக வந்திருக்கிறது. என்றாலும் வாசகர்களுக்கு நினைவூட்டலாகச் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்'' என்று முன்னோட்டம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

``சதுரகிரி மகாலிங்கம் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், கடல் மட்டத் திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக் கிறது. சித்தர்களின் வசிப்பிடமாகக் கருதப்படும் இந்த மலைப்பகுதியில் அபூர்வமான பல மூலிகைகளும் இருக்கின்றன. சிவபெருமானின் அருள்கடாட்சம் பெற்ற மலை இது. திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) சதுரமாகவும் சமமாகவும் அமைந்திருப்பதால், இந்த மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது.

சாப்டூர் ஜமீன் வசம் இருந்த சதுரகிரி மலைப் பகுதி, 1950-ம் வருடம் தமிழக வனத்துறைக் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்கிறார்கள். கோயில்கள் நிர்வாகம் இந்துசமய அறநிலையத்துறையின் வசம் இருக்கிறது. இவர்களின் செயல்பாடுகளே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சிரமங்களைத் தருகிறது என்கிறார்கள்'' என்ற நாரதரிடம், ‘`அப்படியென்ன சிரமங்கள் பக்தர்களுக்கு? விவரமாகச் சொல்லும்'' என்றோம்.

‘`முதல் பிரச்னை பக்தர்கள் வரக் கூடிய பாதையைப் பற்றியதுதான். மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்புப் பகுதியிலிருந்தும், வில்லிபுத்தூர் அருகிலுள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியிலிருந் தும் மலைப்பாதைகள் உள்ளன. முன்பெல்லாம் இந்தப் பாதைகளின் வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வந்தனர். ஆனால், தற்போது சதுரகிரி மலையடிவாரத்திலுள்ள தாணிப்பாறை பாதையை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்று வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாம். ஆனால், ஆண்டு முழுவதும் இந்தப் பாதையில் செல்ல முடியாது என்று சொல் கிறார்கள் பக்தர்கள்.

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

பாதைதான் இப்படியென்றால், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி, மலையிலிருக்கும் அன்னதான மடங்களையும் மூடச் சொல்லிவிட்டதாம் அறநிலையத் துறை. இதுதொடர்பான வழக்கு ஒன்றும் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளதாக நாளிதழ்களில்கூட செய்தி வந்துள்ளது.  இப்படி அன்னதானக் கூடங்களை மூடிவைத்துவிட்டதால் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பசியாற்றிக்கொள்ள மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள் என்கிறார்கள்.

அதிகாலையில் புறப்பட்டு 10 கி. மீ தூரத்துக்கு மலையேறும்  பக்தர்கள், தரிசனம் முடித்து மலையிறங்க இரவுக்கு மேல் ஆகிவிடும். ஒருநாள் முழுக்க அவர்கள் பட்டினி இருப்பது சாத்தியமற்றது. அதுவும் மலைப்பிரதேசத்தில் அது ஆபத்தானதும் கூட. நிலைமை இப்படியிருக்க, அங்கிருக்கும் சிறுசிறு கடைகளையும் மூடச் சொல்கிறதாம் கோயில் நிர்வாகம். சாதாரணமாக மலைப்பாதையில் பயணிப்பதே சிரமம் என்ற நிலையில் அர்ச்சனை, அபிஷேகப் பொருள்களையும் உணவுப் பொருள்களையும் வாங்கிச் சுமந்துகொண்டு மலை ஏறுவது, எல்லோருக்குமே சிரமமான விஷயமே என்கிறார்கள் பக்தர்கள். மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நல்லதுதான். அதேநேரம் பக்தர்களின் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு'' என்று ஆதங்கப்பட்டுக்கொண்ட நாரதர், மேலும் தொடர்ந்தார்.

``அன்னதானக்கூடங்கள் பிரச்னை தொடர் பாக, சதுரகிரியில் பல ஆண்டுகளாக அன்னதானம் செய்து வரும் ஒரு கமிட்டியிடம் பேசினோம்.

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

‘பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தெய்வ கைங்கர்யம் நின்றுபோனதில் வருத்தம்தான். ஆனாலும் இதுபற்றி அடுத்த மாதம் கூட்டம் போட்டு நல்ல முடிவு எடுப்பதாகக் கோயில் நிர்வாகம் சொல்லியுள்ளது. பார்க்கலாம்... நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை கோயில் நிர்வாகத்துக்கு எதிராக ஏதும் சொல்லி, பக்தர்களுக்குச் சிரமத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை’ என்கிறார்கள் அந்தக் கமிட்டியின் தரப்பில்.''

‘`வேறு ஏதேனும் பிரச்னைகள் உண்டா?''

 ‘`சமீபத்தில் சதுரிகிரி யாத்திரைக்குச் சென்று வந்த பக்தர் சொன்னதைச் சொல்கிறேன் கேளும்...

`அவசியத் தேவைகளான கழிப்பறை, குளியலறை, உணவு, தங்குமிடம் என்று எந்த வசதியும் மலைக்கு மேல் இல்லை. இரண்டு இடங்களில் கழிப்பறைகள் இருந்தாலும், அதில் நீரின்றி, பராமரிப்பின்றி பூட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் பெண் பக்தர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்' என்கிறார் அந்தப் பக்தர்.

கோயிலுக்கு வரும் வருமானத்தை எடுத்துக் கொள்வதில் குறியாக இருக்கும் இந்துசமய அறநிலையத்துறை, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் மட்டும் பாராமுகமாக இருப்பதாகப் பக்தர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, காலம் காலமாக இங்கு வசித்துவரும் பழங்குடி மக்களுக்கும் இப்போது நெருக்கடிகள் அதிகம் உருவாகிறதாம். `இங்கே போகக்கூடாது... அங்கே போகக்கூடாது...' என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் அவர்களுக்கு விதிக்கப்படுகின்றனவாம். மலையே அவர்களின் ஆதாரம் என்ற நிலையில், அதிகாரிகளின் இந்த நெருக்கடிகள் அவர்களை மலையைவிட்டே அந்நியப்படுத்திவிட்டது என்கிறார்கள். `அசுத்தப்படுத்துவது, புகை பிடிப்பது போன்று யாரோ சில பக்தர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த பக்தர்களையும் அவதிக்குள்ளாக்குவது நியாயம் இல்லை' என்கிறார்கள் சதுரகிரி பக்தர்கள்.''

நாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...

``வனச்சூழலைப் பாதுகாப்பதில் பக்தர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்று நாம் கூற, அதை ஆமோதித்தபடி தகவலைத் தொடர்ந்தார் நாரதர்.

``விலங்குகளின் நடமாட்டம் காரணமாக சாப்டூர், வருஷநாடு பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த வழியாகக் கும்பலாக வரும் பக்தர்கள் வரத்தான் செய்கிறார்கள்.

கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், நிலைமையை உள்ளபடி ஆராய்ந்து, சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு, பக்தர்களின் வசதி என எல்லா தரப்புக்குமாக நன்மைபயக்கும் விதம் யோசித்துச் செயல்பட வேண்டும். 

கெடுபிடிகளைத் தளர்த்தி பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய நாள்களில் மட்டுமாவது பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் பக்தர்கள்'' என்ற நாரதர், புறப்படத் தயாரானார்.

முன்னதாக, ‘`நானும் சதுரகிரிக்கு நேரில் சென்று வரவுள்ளேன். அத்துடன், பிரச்னைகள் குறித்து வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் விசாரித்து வந்து பதில் சொல்கிறேன்'' என்றவர், மறுபடியும் ஒருமுறை பானகத்தைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...