Published:Updated:

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!
ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

கோயில்கள் என்பது வழிபாட்டு மையம் மட்டுமல்ல; அது அமைந்திருக்கும் ஊரின் வாழ்வுக்கும் செழிப்புக்குமான ஆதாரபீடமும் கூட. அறம் சார்ந்த பெரும்பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் திகழ்ந்தன கோயில்கள்.

அதுமட்டுமா? நம் மரபின் வேரைத் தேடினால், அதன் ஆதி நம் ஆலயங்களாகவே திகழ்வதைக் காணலாம். முன்னோர்களின் வாழ்வியல், வீரம், தியாகம் ஆகிய அனைத்துக்கும் சாட்சியாகத் திகழ்கின்றன, ஆலயங்களும் அங்கிருக்கும் கல்வெட்டுகளும். இப்படி சிவாலயம், விண்ணகரம் மட்டுமின்றி, திசை எட்டிலும் எல்லை தெய்வங் களின் கோயில்களுடன் திகழும் ஊர்கள் எனில், அக்காலத்தில் அந்த ஊர் பெரும் நகரமாக இருந்திருக்கக்கூடும் என்று கணிப்பார்கள் ஆய்வாளர்கள். அவ்வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், அற்புத ஆலயங்களோடு புகழ்பெற்று விளங்கிய ஓர் ஊரையே இந்த இதழில் பார்க்கப்போகிறோம்.

ஜவ்வாது மலைத்தொடருக்கு வடகிழக்கில் மலையடிவாரத்தில் உள்ளது சோழவரம் என்ற அழகிய கிராமம். இது, வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவ, சோழ, விஜயநகர ஆட்சிக்காலங்களில் இவ்வூர் பெரும் புகழுடன் திகழ்ந்தது என்கின்றன வரலாற்றுச் சான்றுகள்.

பல்லவன் கம்பவர்மனின் கல்வெட்டுகள் இந்த ஊரை `காட்டுத்தும்பூர்' எனக் குறிப்பிடு கிறது. இவ்வூர் தும்பை வனமாகத் திகழ்ந்ததை முதலாம் பராந்தகச் சோழன் கால கல்வெட்டும் கூறுகிறது. முதலாம் ராஜராஜ சோழனின் 28-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவ்வுரை `உய்யக் கொண்டான் சோழபுரம்' என்று குறிப்பிடுகிறது. இன்று சோழவரம் என்று ஊர்ப் பெயர் மாறிப் போனதுடன், அதன் பாரம்பர்ய புகழும் மங்கிப் போய் உள்ளது என்பதே உண்மை. கோட்டைக் கொத்தளங்களுடன் சிறப்புற்று விளங்கிய சோழவரத்தில் முன்பு திசைக்கு ஒன்றாக 8 பிடாரி கோயில்களும், குணமாலை பெருமாள் கோயிலும், பள்ளிப்படை கோயிலும், சிவாலயம் ஒன்றும் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இப்போது சிவாலயமும் பெருமாள் கோயிலும் மட்டுமே உள்ளன.

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊரின் ஆரம்பத்திலேயே பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக வரதராஜ பெருமாள் அருளும் இந்தக் கோயில், முன்பு குணமாலை பெருமாள் கோயில் என்றும் கனகவல்லி சமேத விஷ்ணு கிரகம் என்றும் வழங்கப்பட்டு வந்ததாம். கோயிலில் நுழைந்ததும் பிராகாரத்தில் இந்திரன், குபேரன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலர்களும்  அருள்கிறார்கள்.

கருவறையில் நின்ற நிலையில் மேற்கு நோக்கி பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக அழகுத் திருக்கோலம் காட்டுகிறார் பெருமாள். கருவறைக்கு வெளியே அனுமனும், கருடனும் அஞ்சலி ஹஸ்தத்துடன் அருள்கிறார்கள். கருவறைக்கு வெளியே வலது புறத்தில் பூதேவி, ஸ்ரீதேவி, கனகவல்லித் தாயார் சமேதராகப் பள்ளிகொண்ட பெருமாள் காட்சி தருகிறார்; அற்புத தரிசனம்! கனகவல்லி என்ற பெண்ணே இந்தக் கோயிலைக் காட்டினாள் என்கிறது வரலாறு.

அங்கிருந்து சிவாலயம் செல்லும் வழியில்  அமைந்துள்ள பள்ளிப்படை கோயில் முற்றிலும் சிதிலமுற்றுவிட்டது. தற்போது வெட்டவெளியில் ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. பங்கள நாட்டு குறுநில மன்னன் ராசாதித்யன், தன் தந்தை பிருதிவி கங்கரின் நினைவாகக் கட்டிய பள்ளிப்படை கோயில் இது. ஆகாயமே கூரையெனத் திகழும் சிவனாரைத் தரிசித்த கணத்தில் கண்கள் பனித்தன; `இந்நிலையா உமக்கு எந்தையே' என்று அழுது தீர்த்தது உள்ளம். கனத்த மனதோடு அங்கிருந்து நகன்று சிவாலயம் நோக்கிப் புறப்பட்டோம்.

திசைக்கு ஒன்றாக எட்டு பிடாரி கோயில்கள் இருந்தன என்று சொன்னோம் அல்லவா? அவை அழிந்துபட, தற்போது சிவாலயத்தின் பின்புறமாகச் செல்லும் பாதையில், ஒரே இடத்தில் பாலை மற்றும் வேம்பு மரத்தின் அடியில் 15 பிடாரியம்மன்கள் அமர்ந்து அருள்பாலிக் கிறார்கள். மெய்சிலிர்க்கவைக்கும் தரிசனம்.  விக்கிரமாதித்தன் வந்து வழிபட்ட தேவியர்கள் இவர்கள் என்கிறார்கள் ஊர் மக்கள். இவர்களை வழிபட்டால், அரசபோகம் கிட்டும் என்பது நம்பிக்கை. குறுநில மன்னன் பிருதிவி கங்கருடைய மகள் நங்கை மானி என்பவள் கட்டிய கோயில் இது எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

1800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நந்தி கம்பீஸ்வரம் என்று சிறப்புப்பெற்ற சிவாலயம்  ஊருக்கு வடமேற்கில் ஜவ்வாது மலை அடிவாரத் தில் இயற்கை எழில்சூழ அமைந்துள் ளது. ராஜராஜன் காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாம். தற்போது, இந்த ஆலயம் சோழீஸ்வரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது; ஈசன் சோழீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.

அழகிய பிள்ளையாரை வணங்கிவிட்டு ஆலயத்துக்குள் நுழைந்தோம். இல்லையில்லை... சிற்பக் கூட்டத்துக்குள் நுழைந்தோம் என்றுதான் கூறவேண்டும். ஆம்! நான்கு திசைகளிலும் நான்கு சிவலிங்கங்கள், சப்த மாதாக்கள், திருமால், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், திக் பாலர்கள், மூத்தாள் என ஏகப்பட்ட விக்கிரகங்கள் ஆலயம் எங்கும் குவிந்துள்ளன.பஞ்சபூத லிங்கங்களும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் விஜய விநாயகர் ஆலயத்தின் தனிச் சிறப்பு. ஞானம் மற்றும் செல்வத்தின் அடையாளம் தாமரை. ஆகவே, தாமரையில் வீற்றிருக்கும் இந்தக் கணபதியை வழிபட்டால் ஞானமும் செல்வமும் ஸித்திக்கும் என்கிறார்கள். இங்கிருக்கும் விக்கிரகங்கள் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பலராலும் வடிக்கப்பட்டத் திருமேனிகள். இவை மட்டுமின்றி இன்னும்பல திருமேனிகள், இங்கிருந்து சென்னை அரசு அருங் காட்சியகம், திருச்சி, வேலூர் மற்றும் கடலூர் அரசு அருங்காட்சியகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்கிறார்கள் ஊர் மக்கள். 

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நந்தி கம்பவர்மன் எழுப்பிய சிவாலயம் என்பதால் நந்தி கம்பீஸ்வரத்து ஆலயம் எனப் பட்டது, இக்கோயில். இந்த மன்னரின் கல்வெட்டு ‘மனத்துப் பிடாரக்கோயில் மகாதேவர்’ என இங்குள்ள ஈசனைக் குறிப்பிடுகிறது.

கருவறையில் பிரமாண்ட லிங்கத் திருமேனியாக ஈசன் வீற்றிருக்கிறார். நாகபடம் சாத்திய வண்ணம் காட்சி தரும் இந்த மகாதேவன், வெற்றிகளை அருளும் வீர நாயகன் என்கின்றன கல்வெட்டுகள். தும்பை மலர் சாத்தி, நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்; விலகிப்போன வெற்றிகள் அத்தனையும் வீடு தேடி வரும் என்கிறார்கள்.  அதனாலேயே பல்லவர், சேர, சோழ, பாண்டியர், கங்கர்கள்,  ராஷ்டிரக் கூடர்கள், விஜயநகர மன்னர்கள் என அனைவரும் இவரை வணங்கிப் போற்றியிருக்கிறார்கள். திருமணத் தடைகளை விலக்கி நல்ல வரன் அளிக்கும் வள்ளலும்கூட இந்த ஈசன். சத்தியம்தானே சிவம். அதனால்தானே அது சுந்தரம்!

ஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்!

காரிய வெற்றியை அருளும் ஈசன் இன்று தனியே அமைதியாக ஏகாந்த நிலையில் வீற்றிருக்கிறார். பல ராஜ்ஜியங்களை ரட்சித்தருளிய ராஜாதிராஜன், இன்று சிதிலமான ஆலயத்தில் அமர்ந்திருக்கிறார். இது கவலைக்குரிய விஷயம் அல்லவா? இந்த ஆலயத் திருப்பணிக்கு உதவுவது நம் ஒவ்வொருவரின் கடமை.

பழைமையும் பெருமையும் கொண்ட இந்த சோழீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைக்கவேண்டும் என்று எண்ணத்துடன் அன்புள்ளம் கொண்ட அடியார்கள் சிலர் ஒன்றிணைந்து, தற்போது புனரமைப்புப் பணியைத் தொடங்கியுள்ளார்கள்.    அவர்களின் திருப்பணி சிறக்க, திருக்கோயில் விரைவில் புதுப்பொலிவு பெற்று குடமுழுக்குக் காண, நாமும் தோள்கொடுப்போம். நம்மால் இயன்ற பொருளுதவியை அளிப்போம்.

அச்சமற்ற அறிவே சிவம். வெற்றியைத் தரும் வீரமே சிவம். அதுமட்டுமா? அனைத்திலும் அன்பு தேடும் ஆனந்த நிலையே சிவம். அன்பே இன்பம் தரும்; அன்பாலேயே தீமைகள் அழியும். அதனால்தான் அன்பே சிவம் என்கிறோம். அன்பு எதையும் கொடுக்கும். நீங்களும் அன்பான சிவனுக்கு அள்ளிக்கொடுத்துப் பாருங்கள். உங்கள் ஆயுளும் வெற்றியும் இரட்டிப்பாகப் பெருகும்!

- மு. ஹரி காமராஜ், படங்கள்: பெ.ராகேஷ்

ஸ்வாமி: அருள்மிகு சோழீஸ்வரர்
பிரார்த்தனைச் சிறப்பு: சகல காரியங்களிலும் வெற்றியை அருளும் தலமிது.
எப்படிச் செல்வது?: வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து தெற்கே
சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.
வங்கிக் கணக்கு விவரம்:
NANDHI KAMBEESWARAR KOVIL TRUST
Account Number : 6025101724
Bank Name : INDIAN BANK
Branch : Virupakshipuram
IFSC Code : IDIB000V046
மேலும் விவரங்களுக்கு: 95438 08057