
கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?

? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டைக் கழுவி சுத்தம் செய்யக்கூடாது என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றனவே. இது சரிதானா?
- எம்.ரங்கமணி, சென்னை - 33
நாம் வசிக்கும் இடத்தை அனைத்து நாள் களிலும் அலம்பி சுத்தம் செய்யலாம். தவறேதும் இல்லை. ‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கின்றன ஞானநூல்கள். சுத்தமாக இருப்பதால் சிவம் என்று போற்றப்படுகிறார் பரம்பொருள்.
ஓர் இடம் தூய்மையாக இருக்குமானால், அங்கு கடவுளின் சாந்நித்தியம் நிறைந்திருக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்காலத்தில் நாம் காணும் சுத்தமின்மை என்பது நம் கலாசாரத்தைச் சார்ந்தது அல்ல. மகாலட்சுமியைப் போற்றும் முதல் நாமமே, ‘ஓம் ப்ரக்ருத்யை நம:’ என்பதுதான். மகாலட்சுமி இயற்கையாக விளங்குகிறாள் என்பதுதான் இந்த நாமத்தின் பொருள். ஆகவே, நாம் வசிக்கும் இடத்தை மட்டுமல்லாமல், இயற்கையையும் சுத்தமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்துகின்றன புனித நூல்கள். பூமியில் எச்சில் துப்புவது, நம் விரல்களை எச்சில்படுத்திக் கொள்வது போன்றவை தீய பலன்களை அளிக்கும் என்பதால், அவற்றைத் தடைசெய்த பழக்கங் களாக நம் முன்னோர் கருதினார்கள்.
எனவே, அனைத்து நாள்களிலும் நம்மையும் நாம் வசிக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்திருக்கவேண்டியது அவசியம். காலையும் மாலையும் விளக்கேற்றுவதற்கு முன்பே, நாம் வசிக்கும் இடத்தைத் தூய்மைப்படுத்தியபிறகு, தீபம் ஏற்றி வழிபடுவதே நம் மரபு. அதன் மூலம் கடவுளின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

? மூன்றாம் பிறையைப் பார்க்கவேண்டும் என்றும், நான்காம் பிறையைப் பார்க்கக்கூடாது என்றும் சொல்வது ஏன்?
- வி.சசிரேகா, திருச்சி - 1
நம் மனதிலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இதனைத் துல்லியமாகக் கணக்கிட்ட நம் ரிஷிகளும் முனிவர்களும், நாம் கடைப்பிடித்து நல்ல மன நிலையுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ சாஸ்திரங்களின் மூலம் வழிகாட்டியுள்ளனர்.
அவற்றுள் சிலவற்றுக்கு வேண்டுமானால் நம்மால் காரணம் சொல்ல முடியும்; பல விஷயங் களுக்கான தாத்பரியத்தை - பலாபலன்களை அனுபவத்தின் மூலமே அறியமுடியும். நாம் சொல்லும் - அனுமானம் செய்யும் காரணங்கள் சரியானவையா என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.
சில காரியங்களுக்கு, அனுஷ்டானம் செய்யும் போதே ஏற்படக்கூடிய பலன்களைக் கூறியுள்ளன சாஸ்திரங்கள். ஆனால், பல காரியங்களில் `கடைப் பிடிக்க வேண்டும்' என்பதையே பிரதானமாகக் கூறியுள்ளது. அந்தக் காரியங்களின் மகிமையை அனுபவித்தே அறிய முடியும். அவ்வகையில், மூன்றாம் பிறைச் சந்திரனை தரிசிப்பதால், நம் மனதிலுள்ள குழப்பங்கள் விலகி, தெளிவான மனதைப் பெறுவதை நாம் அனுபவத்தினால் உணரலாம். நான்காம் பிறை தரிசனம் அனுகூலம் அல்ல என்பது, நம் பெரியோர்கள் அனுபவத்தில் கண்டு சொன்ன உண்மை.
நாம் செய்யும் இதுபோன்ற சகல காரியங் களுக்கும் அவை தொடர்பான புராணக்கதைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். அவை, நம் மனநிலையை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு உதவும் வகையில் திகழ்வதையும் அறியலாம்.
ஸநாதன தர்மத்தில் மனத் தளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. ‘தளர்வறியா மனம் தரும்’ என்கிறார் அபிராமிப்பட்டர். நாம் அன்றாடம் செய்யும் பூஜைகளினாலும் இயற்கையைக் குறிப்பிட்ட நாள்களில் வழிபடுவதன் மூலமும், நம் மனநிலை ஒருமைப்படுவதுடன், செய்யும் காரியங்கள் வெற்றியடைந்து மகிழ்ச்சியைத் தருவதையும் நாம் அனுபவத்தில் உணரலாம்.

? வீட்டில் எவரேனும் ஒருவர் உறங்கிக் கொண் டிருக்கும்போது விளக்கேற்றக் கூடாது எனச் சொல்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். எனில், பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது சாத்தியமா?
- ஹேமாராணி, சேலம்
பிரம்மமுகூர்த்த காலத்தில் எழுந்துவிட வேண்டும் என்பதே ஞான நூல்கள் காட்டும் வழி. அந்தக் காலத்தில் அனைவருமே விடியற் காலைப் பொழுதில் எழுந்து தங்களுடைய பூஜைகளைச் செய்துவிடுவது வழக்கம். ஆனால், தற்காலத்தில் இதுபோன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினமாகவே உள்ளது.
இப்போதெல்லாம் பலருக்கும் இரவுப் பணிகளில் ஈடுபடவேண்டிய நிலை. அதன் காரணமாக விடியற்காலையில் எழுந்துகொள்வது சிரமம் என்கிறார்கள். எனவே, அனைவரும் சீக்கிரம் எழுந்துகொள்ளவேண்டும், பிறகுதான் நாம் விளக்கேற்றவேண்டும் என்று நாம் காத்திருப்பது சரி வராது. எனவே, வீட்டிலுள்ள பெண்களில் முதலில் எழுந்துகொள்பவர், ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மங்கல விளக்கை பிரார்த்தனையுடன் ஏற்றி வழிபடலாம். பெண்களால் ஏற்றமுடியாத சூழலில், ஆண்கள் ஸ்நானம் செய்துவிட்டு விளக்கேற்றலாம். முக்கியமாக, நாம் ஏற்றும் விளக்கானது வீடு முழுவதும் தெய்விக ஆற்றலை நிறைக்கும் என்ற பூரண நம்பிக்கையுடன் ஏற்றவேண்டும். விளக்கேற்றும்போது நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் வீட்டில் இருப்பவர்களின் மனங்களிலும் நல்ல சக்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

?சிதம்பர ரகசியம் என்று சொல்கிறோமோ... அந்த ரகசியத்தின் தத்துவம் என்னவென்று விளக்குங்களேன்.
- சரவணன், மயிலாடுதுறை
சித் + அம்பரம் = சிதம்பரம். இந்த உலகம் சிவனும் சக்தியும் இணைந்ததே. உலகில் நாம் பார்க்கும் தம்பதியரைப் போல் அல்லாமல், சிவ சக்தியர் ஞானமும் அதை நடைமுறைப்படுத்தும் காரியமாகவும் விளங்குகிறார்கள். சைவ சித்தாந்தத்தின் ப்ரகரண கிரந்தமாக விளங்கக்கூடிய `தத்வ ப்ரகாசிகா' எனும் நூல், ‘சித்கன:’ என்று சிறப்பாக அப்பெரும் பரம்பொருளை, ரகசியத்தை உணர்த்தி உள்ளது.
இந்த உலகில் நாம் எந்தக் காரியத்தைச் செய்ய நினைத்தாலும், அதைப் பற்றிய அறிவும், அதைச் செயல்படுத்தக்கூடிய சாமர்த்தியமும் மிக அவசியம். அதேபோல், இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து, காப்பதற்கு மிகப் பெரிய சக்தி - பரம்பொருள் தேவைப்படுகிறது. காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. சில இடங்களில் `இன்னதுதான் காரணம்' என்று நேரடியாக நமக்குத் தெரிகிறது. சில இடங்களில் நம் அனுமானமே நம்மை வழிநடத்துகிறது. கடவுளை நாம் அனுமானத்தினால்தான் அறிய முடியும். இந்தப் பிரபஞ்சத்தின் காரணமே சிதம்பரம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’.
எப்படி ஒரு சிறிய விதையிலிருந்து பெரிய விருட்சம் தோன்றுகிறதோ அப்படி, சிவசக்தியரிடமிருந்தே இந்த உலகம் உண்டாகிறது. ‘ஆகாசாத் வாயு: வாயோர் அக்னி:’ என்று சுட்டிக்காட்டும் வேதங்கள், அனைத்துக்கும் மூல காரணம் ஆகாசம்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளன.
ஆகாயத்தில் ஒன்றுமே இல்லாமலிருப்பது போல்தான் தோன்றும். ஆனால், அதிலிருந்தே அனைத்தும் உண்டாகின்றன. எவரொருவர் இதை உணர்கிறாரோ அவரே ஞானி என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆலயங்களில், அந்த ஆகாசத்தின் குணமான சப்தங்களின் சேர்க்கையினால் ஏற்பட்ட மந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் பூஜைகளின் ஆற்றல், அனைத்து உலகங்களையும் பாதுகாக்கிறது. இந்தப் பூஜைகள் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல. எல்லாம்வல்ல சிவபெருமானால் நமக்கு அருளப் பட்டவை. ஞானமே ஆடை அதாவது அனைத்துக்கும் காரணம் என்பதே சிதம்பர ரகசியம்.
- பதில்கள் தொடரும்...
- காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முகசிவாசார்யர்
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:
கேள்வி-பதில், சக்தி விகடன்
757, அண்ணாசாலை, சென்னை-600 002