Published:Updated:

"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை

"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை

"காற்றோட்டமான சூழல், அடிப்படை வசதி, அதோட ஊக்குவிக்கத் தோழர்கள் இங்க இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல கடவுள் அருளும் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்குது. எல்லோரும் சேர்ந்து விவாதிப்போம். தெரியாததைச் சொல்லிக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவியா இருப்போம்."

"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை

"காற்றோட்டமான சூழல், அடிப்படை வசதி, அதோட ஊக்குவிக்கத் தோழர்கள் இங்க இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல கடவுள் அருளும் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்குது. எல்லோரும் சேர்ந்து விவாதிப்போம். தெரியாததைச் சொல்லிக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவியா இருப்போம்."

Published:Updated:
"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை

``தேர்வுத் தேதி அறிவிச்சாக்க போதும் 150 பேருக்கு மேல வருவாங்க. அப்போ வந்து பாருங்களேன், எப்படிக் களைகட்டுதுன்னு. தனியார் பயிற்சி மையங்களெல்லாம் தோத்து போயிரும். இங்க இருக்கற ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு அரசு ஊழியரை உருவாக்கியிருக்கு!’’  என்று பெருமையோடு வஞ்சிமுத்து குறிப்பிடுவது ஒரு பயிற்சி மையத்தை அல்ல. பழநியில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோயில் மண்டபத்தில் ஒவ்வொரு தூணையும் ஒட்டி புத்தகப் பை, நோட் புக், பேனா, வாட்டர் பாட்டில் ‌மற்றும் கவனச்சிதறல் எதுவும் இன்றிக் கையில் புத்தகத்துடன் இளைஞர்கள். இந்தக் காட்சியைக் கண்டு அங்கு வரும் பக்தர்கள் ஆச்சர்யப்படுகின்றனர். 

பழநி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பழநிமலை முருகன்தான். அம்மையப்பனுடன் கோபித்துக்கொண்டு வந்த முருகனைச் சமாதானப்படுத்த வந்த பார்வதிதேவி இங்குதான் ‘பெரியநாயகி’ என்னும் பெயரில் கோயில்கொண்டு அருள்புரிகிறாள். பழநி நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது பெரியநாயகி அம்மன் கோயில். இதற்கு `ஊர்க் கோயில்’, `யானைக் கோயில்’ என்ற பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் இறைவன் கயிலாசநாதர். இறைவி பெரியநாயகி. முருகப்பெருமான் ஆகியோருக்கு சந்நிதிகளும் உண்டு. பழநிமலை முருகன் சூரசம்ஹாரம் செய்ய பெரியநாயகி அம்மன்தான் வேல் எடுத்துக் கொடுத்துப் போருக்கு அனுப்பிவைப்பார். பழநிமலை முருகனை தரிசிப்பவர்கள் நிச்சயம் பெரியநாயகித் தாயாரையும் தரிசித்தல் வேண்டும் என்று சொல்வதுண்டு. அன்னை பெரியநாயகியைத் தரிசித்து வந்தாலே உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைத்துவிடும்.

அப்படிப்பட்ட பெரியநாயகி அம்மன் ஆலய மண்டபத்தில்தான் மாணவர்களும் அரசுத் தேர்வுக்குத் தயார் ஆகிறவர்களும் அமர்ந்து படித்து வருகிறார்கள். ஏன் இவ்வளவு பேர் இங்கு படிக்க வருகிறார்கள், அப்படி என்ன விசேஷம்? அங்கு படித்துக்கொண்டிருந்த மகாலட்சுமி என்பவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கோயில் என்றாலே பாசிட்டிவ் எனர்ஜிதான். நேர்மறை எண்ணங்கள் படிப்பதற்கு ரொம்ப முக்கியம். அதோட வீட்டில் இருந்தால் ஏகப்பட்ட தொந்தரவுகள். வீட்டுக்கு வரும் உறவுக்காரங்க தெரிஞ்சவங்கனு யாராவது எதையாவது கேட்டுகிட்டும் பேசிக்கிட்டும் இருப்பாங்க. இன்னும் வேலைக்குப் போகலையா, கல்யாணம் பண்ணலையானு கேட்டு மனச் சங்கடத்த உண்டாக்கிடுவாங்க. இங்க வந்துட்டா கவனமெல்லாம் படிக்கிறதில்தான் இருக்கும். நான் எம்.சி.ஏ படிச்சிருக்கேன், இப்போ டி.என்.பி.எஸ்.சி குரூப் 2  தேர்வு எழுதி, அதுல முதல் சுற்றுல தேர்வாகியிருக்கேன். இப்போ அடுத்த சுற்றுத் தேர்வுக்குப் படிக்கிறேன். சில சமயம் தேர்வு குறித்து பயம் வரும்.

கஷ்டமா இருக்கும். சோம்பேறித்தனமும் வரும். அப்போதெல்லாம் இந்தக் கோயில்ல இருக்குற முருகன் முன்னாடிபோய் நின்னு புலம்புவேன். கொஞ்ச நேரத்துல மனசு சரியாகிடும். மறுபடியும் படிக்க ஆரம்பிச்சுருவேன்.

எப்படியோ பெரியநாயகி அம்மன் அருளால இந்த முறை வேலைக்குப் போயிருவேன்னு நம்பிக்கை இருக்கு” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கினார் மகாலட்சுமி. 

சற்றுத் தொலைவில் மற்றொரு தூண் அருகே எட்டுப் பேர் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்று, அறிமுகம் செய்துகொண்டு அவர்களுடன் பேசத் தொடங்கினோம். அந்தக் குழுவில் இருந்த வஞ்சிமுத்து என்பவர் பேச, மற்றவர்கள் படிக்கத் தொடங்கினர்.

“நான் இப்போ அரசுப் பணியில்தான் இருக்கேன். மூணு வருஷமா இங்க வந்துதான் படிச்சி பாஸ் பண்ணுனேன். வேலைக்குப் போய் ஒரு வருஷம் ஆச்சு. இப்போ குரூப்-1 தேர்வு எழுத ஆசை. அதுக்காகத் தயாராகிகிட்டிருக்கேன். நாங்க படிக்க ஆரம்பிச்ச காலத்துல நிறைய பிரச்னைகள் வரும். கோயில்ல உட்கார்ந்து படிக்க அனுமதிக்க மாட்டாங்க. எங்களைத் தப்பா நெனச்சுப்பாங்க. கழிவறையைப் பயன்படுத்த விடாமப் பூட்டி வச்சிடுவாங்க. சிலநாள் குடிக்கத் தண்ணிகூட இருக்காது. இப்படிப் பல பிரச்னைகள். ஆனா, இப்போவெல்லாம் அப்படி இல்லை. ஆதார் கார்டு ஜெராக்ஸ் மட்டும் வாங்கி வச்சிருக்காங்க. இங்க படிக்கிறதுல 90 சதவிகிதம் பேர் அரசு வேலைக்குப் போயிடுறாங்க. கால வேறுபாடுதான் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதைப்பார்த்த பின்னாடி கோயில் நிர்வாகத்துக்கு எங்க மேல நம்பிக்கை வந்திருக்குனுகூட சொல்லலாம். பழநி சுற்றுவட்டாரத்தில் அரசுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் இல்லை. கிராமப்புறமா இருக்குறதால நாங்களே படிச்சிக்க வேண்டியிருக்கு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆயக்குடில ஒரு பயிற்சி வகுப்பு நடக்கும். அது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். அன்னைக்கு மட்டும் இங்கிருக்கற எல்லாரும் அங்க போயிடுவோம். 

30 கிலோமீட்டர் தூரத்துல இருந்துகூட தினமும் இங்கு வந்து படிக்கிறவங்க இருக்காங்க. அதுக்குக் காரணம் நிறைய இருக்கு. காற்றோட்டமான சூழல், அடிப்படை வசதி, அதோட ஊக்குவிக்கத் தோழர்கள் இங்க இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல கடவுள் அருளும் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்குது. எல்லோரும் சேர்ந்து விவாதிப்போம். தெரியாததைச் சொல்லிக்கொடுத்து  ஒருவருக்கு ஒருவர் உதவியா இருப்போம். இப்ப இங்க இருக்கிற 8 பேருல 5 பேர் குரூப்-2 தேர்வு எழுதி முதல் சுற்றுல தேர்வாகி இருக்காங்க. அடுத்த சுற்று தேர்வுக்குத் தயாராகுறாங்க. 

கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் எங்ககிட்ட, `இந்தக் கோயில்ல உட்கார்ந்து படிச்ச எல்லாருமே பாஸ் பண்ணிடுறீங்களாமே... அப்படியா!'ன்னு கேட்பாங்க.

எங்களைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் இல்ல. சூழல் நல்லா இருக்கு. கடவுள் நம்பிக்கையோட படிக்கும் எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்குது. மத்தவங்க படிக்கிறதைப் பார்க்கும்போது போட்டி மனப்பான்மையும் விடாமுயற்சியும் பிறக்குது. வெற்றிக்கு இதுதான முக்கியம்!

ஒரு நாளைக்கு சுமார் 50 பேர் இங்கு வந்து படிக்கிறாங்க. தேர்வுத் தேதி அறிவிச்சாக்க போதும் 150 பேருக்கு மேல வருவாங்க .அப்போ வந்து பாருங்களேன், எப்படிக் களைகட்டுதுன்னு. தனியார் பயிற்சி மையங்களெல்லாம் தோத்து போயிரும். இங்க இருக்கற ஒவ்வொரு தூணும் ஒவ்வோர் அரசு ஊழியரை உருவாக்கியிருக்குது. எல்லாத்துக்கும் பெரியநாயகி அம்மனோட அருள்தான் காரணம்” என்றார் வஞ்சிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism