கருவறையில் இருக்கும் இறைவனை நாம் அர்த்தமண்டபத்தில் இருந்து தரிசனம் செய்வதுவே சிறந்தது. அப்போதுதான் இறைவனின் தரிசனத்தையும் முழுமையாகப் பெறமுடியும். ஆனால், ஒரு கோயிலில் கருவறைக்கு அருகே நின்றாலும் தரிசனம் கொடுக்காத இறைவனின் பிரமாண்ட திருமேனி கோயிலுக்கு வெளியே இருக்கும் சுற்றுச் சுவரின் சிறு துவாரம் வழியே காணும்போது முழு தரிசனமும் கிடைக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? தமிழர் கட்டடக் கலையின் அற்புதக் கலைப்படைப்பாக உயர்ந்து நிற்கிறது விழுப்புரம் அருகேயுள்ள பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ‘பேரணியில்’ இருந்து 10 கிலோ மீட்டர் உட்புறமாக அமைந்துள்ளது ‘பிரம்மதேசம்’ எனும் கிராமம். இங்குதான் 1000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த சிவன் ஆலயங்கள் இரண்டு அமைந்துள்ளன.
ஒன்று இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பாதாலீஸ்வரர் திருக்கோயில். மற்றொன்று ஊரின் வடமேற்கு திசையில் ஏரிக்கரையின் ஓரமாக உள்ளது பிரமாண்டமான ‘பிரம்மபுரீஸ்வரர்’ ஆலயம்.
பாடலீஸ்வரர் ஆலயம்
சோழ மன்னனான ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலய கல்வெட்டுகளில் ‘பாதாலீஸ்வரர் ஆலயம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில், மகாமண்டபம் காலப்போக்கில இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது.
ராஜராஜன், ‘பிடாரிபட்டு’ என்னும் கிராமத்தில் உள்ள ‘சப்தமாதர்கள்’ (ஏழுகன்னியர்) ஆலயத்துக்கு தானம் கொடுத்ததற்கான கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன. ஆலயத்தின் கருவறை வாயிலில் உள்ள 6 அடி உயரம் கொண்ட இரண்டு சிலைகள் பச்சை வண்ண கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. கருவறையின் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்து ஆலயத்தின் தொன்மையை விளக்குகின்றன.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. எனவே, இங்கு வழிபாடுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் விரிந்து உயர்ந்த மதில்களோடு காணப்படும் இந்த ஆலயம் பாதாலீஸ்வரர் ஆலயத்தோடு ஒப்பிடுகையில் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆலயத்தினுள் நுழையும்போது தரைப்பரப்பில் இருந்து 6 அடி பள்ளத்தில் இறங்கித்தான் நாம் உள்ளே செல்ல வேண்டும். பெரிய மதில் சுவரினைக் கடந்து உள்ளே சென்றவுடன் சற்று இடதுபுறமாக வளைந்து சென்றால் மகாமண்டபத்தின் மிகப்பெரிய நுழைவு வாயில் காணப்படும்.
ஆலயத்தின் கருவறையைச் சுற்றியிருக்கும் மண்டபம் 100-க்கும் மேற்பட்ட தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தூண்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் இன்றி உருளை வடிவ கற்களால் இந்தத் தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இடதுபுறத்தில் உள்ள ஒரு பெரிய அறை அந்தக் காலத்தில் மாணவர்களுக்கு வேதக்கல்வி பயிற்றுவித்த இடமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வலப்புறம் காணப்படும் ஒரு முக மண்டபத்தில் சிலைகள் ஏதும் தற்போது இல்லை. ஆலயத்தின் அம்மன் சந்நிதியாக இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரியநாயகி
முக மண்டபத்தின் தெற்கு திசையின் அன்னை பிரஹன்நாயகி (பெரியநாயகி) நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் திருக்காட்சியருளுகிறாள்.
மேல் வலது கரத்தில் அல்லி மலர், மேல் இடது கரத்தில் தாமரை, கீழ் வலது கரத்தில் அபயஹஸ்தம், கீழ் இடது கரத்தில் வரத முத்திரை என அன்னை எழிலுறக் காட்சிகொடுக்கிறாள். அன்னை இந்தத் திருக்கோலத்தில் தரிசனம் தருவது இந்தத் தலத்தில் மட்டுமே.
சதுர வடிவ கருவறையில் பிரமாண்ட திருமேனியோடு கிழக்கு நோக்கி பாணலிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். கருவறை சுற்றுச்சுவரில் வடக்கில் சண்டிகேஸ்வரும், பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு குறித்து ஆலயத்தின் சுப்பிரமணிய குருக்கள் பேசியபோது, ``கருவறையிலிருக்கும் பிரமாண்ட வடிவிலான பிரம்மபுரீஸ்வரரை கருவறை மண்டபத்தில் இருந்து பார்த்தாலும் சிறு பகுதியேனும் மறைவுரும். ஆனால், இந்த ஆலயத்தில் கருவறை எதிர்ப்புற மதில்சுவரின் உள்ள சதுர வடிவ சிறு துளை வழியே பார்த்தால் பிரம்மபுரீஸ்வரர் முழு வடிவத்தோடு காட்சியளிப்பார். அவ்வாறு இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது " என்று கூறி வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்ட முனைவர் ரமேஷிடம் பேசினோம்.
``இந்த ஆலயத்தில் இதுவரை 42-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறிந்துள்ளோம். இந்தக் கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையான கல்வெட்டு, குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இங்கு ஆய்வு மேற்கொண்டபோது கிடைத்த துர்கை சிலை பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாக அறியப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த ஆலயத்தின் தொன்மை 1000 ஆண்டுகளைவிடவும் அதிகமாக இருக்கலாம். விக்கிரமசோழன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், தம்புராயர்கள், விஜயநகர மன்னன் மற்றும் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் உள்ளன.
சோழர்கால கல்வெட்டுகளில், சோழர்கள் காலத்தில் செய்யப்பட்ட தானங்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இங்கு மடம் ஒன்று செயல்பட்டு துறவிகளுக்கு உணவு அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. பாண்டியர் கால கல்வெட்டுகளில் மக்களுக்கும், வணிகர்களுக்கும் விதிக்கப்பட்ட கொசக்காணம், கல்யாணக்காணம், செக்குவரி, அழுகல்சரக்குவரி, அங்காடிபாட்டம், தட்டாரபாட்டம், குயவர் செலுத்துவரி போன்ற வரிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
விஜயநகர மன்னன் ஆட்சியின்போது பெரும் மழை ஒன்று பொழிந்து இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது கோயிலின் பலபகுதிகள் சிதிலமடைந்தது மீண்டும் அவை புனரமைக்கப்பட்ட விதத்தையும் கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
நிறைவேறும் வேண்டுதல்கள்
பிரம்மபுரீஸ்வரரை வழிபடுவதன் மூலம் காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்ட பலனைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. எந்த ஒரு போட்டிக்குச் செல்லும் நபரும் பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்ல காரியசித்தி ஏற்பட்டு வெற்றியோடு திரும்பலாம். திருமணத்தடை உள்ளவர்கள், மகப்பேறு வேண்டுவோர் ஆகியோர் பிரதோஷ நாள்களில் இங்கு வந்து இறைவனை வழிபடக் குறைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரமாண்டமான இந்த ஆலயத்துக்கு ஒரு முறை வந்து மனமுருகி வேண்டிக்கொள்ள மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் விலகி அமைதியும் நல்ல எண்ணங்களும் பெருகும் என்று சொல்கின்றனர் பக்தர்கள்.