Published:Updated:

அனுஷம் லட்சுமிகடாட்சம்!

அனுஷம் லட்சுமிகடாட்சம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷம் லட்சுமிகடாட்சம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

அனுஷம் லட்சுமிகடாட்சம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
அனுஷம் லட்சுமிகடாட்சம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷம் லட்சுமிகடாட்சம்!

னி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது.  ஸ்ரீமகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன. 

ஜாதக அலங்காரம், ‘எவரெவரும் புகழ் சதுரன், இனிய பத்தி உளனாம், நானிலமெலாந் துதிக்கும் நீதிமான், தூயன்...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் குணவானாக, தாம்பூலப் பிரியர்களாக, பக்தி உள்ளவர்களாக, அரசர்களால் பாராட்டப்படுபவர்களாக, பெண்களுக்கு இனியவர்களாக,  கூந்தல் அழகு, விசால மார்பு ஆகியவை உடையவர்களாக, பெற்றோரைக் காப்பாற்றுபவராக, அனைவராலும் பாராட்டப்படுபவராக இருப்பீர்கள் என்று அர்த்தம்.

‘ஸூரூபச் சிந்த பாபச்ச...’ என்கிறது யவன ஜாதகம். அதாவது, அரசு காரியத்தில் ஆர்வம் உள்ளவராகவும், நல்ல வடிவமுள்ளவராகவும், பாவங்களை அழிப்பவராகவும் விளங்குவீர்கள் என்பது அர்த்தம்.  பிருகத் ஜாதகமோ, ‘செல்வந்தராகவும், வெளிநாட்டில் வசிப்பவராகவும், இடை விடாது பயணம் செய்பவராகவும் விளங்குவீர்கள்’ என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், எப்போதும் மாறுபட்ட மனநிலையைப் பெற்றிருப்பீர்கள். தாய், தந்தையை ரட்சிக்க வல்லவர்கள். தீராத தெய்வ பக்தியுடன் சமய நூலில் சொல்லப்பட்ட நெறிமுறைகளை வழுவாமல் பின்பற்றுவீர்கள்.

அனுஷம் லட்சுமிகடாட்சம்!

எறும்புக்கும் தீங்கு நினைக்காதவர்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றத்தைச் சுட்டிக்காட்டத் தவறமாட்டீர்கள். பலருக்கும் சுமைதாங்கியாக விளங்கும் நீங்கள், உங்களுடைய சுக, துக்கங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களுக்கு இளகிய மனமும் தாராள குணமும் இருக்கும்.

சந்திரனைச் சுப கிரகங்கள் பார்க்கப் பிறந்தவர்கள், மிகவும் யோகசாலிகளாக இருப்பார்கள். ஆனால் சந்திரன் பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், சில காலம் இளமையில் வறுமையால் துன்புற்று, பிறகு படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள். கவர்ச்சியான தோற்றத்தால் பெண்கள் உங்களை விரும்புவார்கள். பணக்காரர்களாகவும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவுபவர்களாகவும் இருப்பீர்கள். கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். கதை, காவியம், இசை, ஓவியம் போன்றவற்றில் விருப்பமுடையவர்கள்.

அகன்ற மார்பையும், திரண்ட தோள்களையும், பருத்தக் கால்களையும் பெற்றிருப்பீர்கள். வாய்ப் பேச்சில் வித்தகர்கள். சிக்கனமாக இருப்பீர்கள். உங்களில் பலர் மருத்துவம், வங்கி, காவல், வாகனம், தீயணைப்பு, உளவு ஆகிய துறைகளில் பணியாற்றுவீர்கள். ஒரு சிலர் கட்டடக் கலை, கான்ட்ராக்ட் போன்றவற்றிலும் ஈடுபடுவீர்கள். உணவு விஷயத்தில் ஒதுங்கி நிற்காமல் ஒரு கை பார்த்துவிடும் நீங்கள், தாம்பூலப் பிரியரும்கூட!

எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டு. குறிப்பாக, 40 முதல் 60 வயது வரையிலான காலம் உங்களுக்குப் பொற்காலம். பெரிய பதவிகள் தேடிவரும்.

குடும்பத்தில் அன்பும், பாசமும் அதிகம் வைத்திருப்பதுடன், மனைவிக்கு மரியாதை கொடுப்பவராகவும் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்வதில் அதிக நாட்டம் உடையவர். ஆழ்ந்த சிந்தனை ஆற்றலுடையவர். செல்வம், புகழ், செல்வாக்கு, பெருமை யாவும் உங்களைத் தேடி வரும். அரசு விருதுகள் பல பெறுவீர் கள். பெரியவர்களிடத்தில் விசுவாசம் உள்ளவராகவும் ஜாதி, மதம், இனம் ஆகியவற்றையெல்லாம் கடந்து எல்லோரிடத்திலும் நட்புறவாகவும் இருப்பீர்கள்.

முதல் பாதம்
(சனி + செவ்வாய் + சூரியன்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சூரியன். இதில் பிறந்தவர்களுக்கு முக்காலத்தையும் அறியும் ஆற்றல் உண்டு. ஒருவருடைய உள் மனதை ஊகித்து அறிவார்கள். அசாத்திய செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பார்கள். தராதரம் அறிந்து பழகுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மையே பேசுவார்கள். யாகம் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாவும் மந்திரம் கற்றறிந்தவர்களாகவும் இருப்பார்கள். மூதாதையரின் ஆசீர்வாதம் என்றும் உண்டு.

குழந்தைப் பருவத்தில் சுட்டித்தனம் தாங்க முடியாது. சிறுவயதில் சளித் தொந்தரவு, காது வலி வந்து நீங்கும். காலில் அடிபட்டு பிறகு முற்றிலும் ஆறிவிடும். பெற்றோருக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்கள். நாடாள்பவர், ஆன்மிகவாதி ஆகியோருக்கு நெருக்கமாக இருப்பார்கள்.

ஏழைகளுக்காக வருந்துவதுடன் முடிந்ததைச் செய்வார்கள். யாரிடமும் நெருக்கமாக இருக்கமாட்டார் கள். பலர், மருத்துவராகவோ விஞ்ஞானியாகவோ தொழிலதிபராகவோ விளங்குவார்கள். 27 வயதிலிருந்தே இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். 42 வயது முதல் மிகப் பெரிய அந்தஸ்தை அடைவார்கள்.

பரிகாரம்: விருத்தாசலம் அருகிலுள்ள ராஜேந்திரப் பட்டினத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீவீறாமுலை அம்மன் உடனுறை திருக்குமரேசரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்
(சனி + செவ்வாய் + புதன்)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் அறிவாற்றலும் தீர்க்கமான சிந்தனையும் கொண்டவர்கள். வாய்ப்பாட்டு, நடனம் ஆகியவற்றில் அதிக நாட்டம் உடையவர்கள். புல்லாங்குழல், வீணை, கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றிருப்பார்கள். பேச்சாற்றலால் எந்தச் செயலையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். பலராலும் பாராட்டப்படும் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். தங்களுடைய அறிவாற்றலைப் பலவகையிலும்  பெருக்கிக் கொள்வதில் வல்லவர்கள்.

சிறு வயதில் வலிப்பு, இளம்பிள்ளை வாதம், நுரையீரல் பாதிப்புகள் வந்து நீங்கும். கல்வியில் முதலிடம் பிடிப்பார்கள். தபால் தந்தி, நூலகம், சட்டம், கல்வி, சோதிடம் ஆகிய துறைகளில் மிளிர்வார்கள். சிலர், தலைமைச் செயலகத்தில் பணிபுரிவார்கள். பெண்களிடம் அதிகப் பிரியத்துடன் பழகுவார்கள். மனைவி, குழந்தைகளை அதிகம் நேசிப்பார்கள். எதிரிகளின் சதித் திட்டங்களை நாசூக்காக முறியடிப்பார்கள். வியாபாரத்தில் தலைசிறந்து விளங்கும் இவர்கள் கூட்டுத்தொழிலை விரும்பமாட்டார்கள். வேலையாட்களை நண்பராக மதிப்பார்கள்.

சொந்த ஊர், பசுமை மாறாத இடம், நந்தவனம், மலைத் தொடர், அருவி போன்ற இயற்கையான இடங்களுக்குச் செல்வதானால் எல்லா வேலைகளையும் உதறிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு இயற்கைமீது பிரியம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் பாரபட்ச மின்றிப் பழகுவார்கள். பகைமையை விரும்பாதவர்கள். 33 வயது முதல் வசதிகள் பெருகும்; பெரிய பதவிகள் தேடி வரும்.  

பரிகாரம்: வரகுணமங்கை (நத்தம்) எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரகுண வல்லித் தாயார் உடனுறை ஸ்ரீவிஜயாசனப் பெருமாளை வழிபட்டு வருவது சிறப்பு.

மூன்றாம் பாதம்
(சனி + செவ்வாய் + சுக்கிரன்)


மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் சிவந்த கண்களும்  திரண்ட தோள்களும் வசீகரத் தோற்றமும் உள்ளவர்கள். வாஞ்சை கொண்டவர்கள். லட்சியவாதிகள். வித்தைகள் கற்றவர்கள். மற்றவர்கள் சத்தமாகப் பேசுவதையே விரும்பாதவர்கள், ஆதலால் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். குழந்தைப் பருவத்தில் ரொம்ப சாதுவானவர்கள்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது, கட்டடம் அதிரும்படி ஆட்டம் பாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தீபாவளி, பொங்கல் நன்னாள்களைக் காரணம் காட்டி ஆடை, ஆபரணங்களை வாங்கிக் குவிப்பார்கள்.

குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுபவர்கள். சகோதர, சகோதரிகளை நண்பர்களாக பாவிப்பவர்கள். அரசுத் துறையானாலும் தனியார்த் துறையானாலும் உயர் பதவி இவர்களுக்குக் கிட்டும். பத்திரிகையாளர், செய்தி சேகரிப்போர், பதிப்பகத்தார், தொலைக்காட்சி நடத்துவோர் என்று இவர்களின் பணி அமையும். 29 வயதைக் கடந்தால், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: திருச்சிறுப்புலியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீதிருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீசலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம்
(சனி + செவ்வாய் + செவ்வாய்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள், ஒவ்வொன்றுக்கும் உடனே ஆதாயத்தை எதிர்பார்ப்பார்கள். இரக்கம் உள்ளவர்களாக இருந்து ஆரம்பத்தில் ஏமாறுவதால் பிற்காலத்தில் யாரையும் அதிகம் நம்பமாட்டார்கள். இயல்பாக இனிமையாகப் பேசும் இவர்கள் கோபப்பட்டால், கடுமையான வார்த்தைகளைப் பேசுவார்கள். துரோகிகளை வஞ்சிக்கும் குணம் கொண்டிருப்பார்கள்.

தன் குடும்பம், தன் சகோதரன் என்று அன்பு காட்டுவார்கள். நாட்டுப் புறப் பாடல், கொள்கைப் பாடல் ஆகியவற்றை வார்த்தைக்கு வார்த்தை ரசிப்பார்கள். கூச்ச சுபாவம் உடையவர்கள். பொது இடங்களில் அதிகம் பேசமாட்டார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க புது யுக்திகளைக் கையாள் வதும் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பதும், இவர்களுக்குக் கைவந்த கலையாகும். பெற்றோரின் சம்மதத்துடன் காதலில் வெல்வார்கள். மனைவியின் நியாயமான ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

நல்லது, கெட்டது நான்கையும் தெரிந்து வைத்திருப்பார்கள். காவல், கேட்டரிங், மூலிகை ஆய்வு, புவியியல், சுரங்கம் ஆகிய துறைகளில் மிளிர்வார்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுக்குத் தேடிப் போய் உதவுவார்கள். 25 வயதிலிருந்து இவர்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். புயலாக இருந்த வாழ்கை, 34 வயதிலிருந்து பூஞ்சோலையாக மாறும்.

பரிகாரம்: காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வருவதால் சகல வினைகளும் நீங்கும்; வாழ்க்கை சிறக்கும்.

அனுஷ நட்சத்திரம்

நட்சத்திர தேவதை: துவாதச ஆதித்தர்களில் ஒருவரும் சூரியனின் அம்சமுமான மித்ரன். 

வடிவம்: கவிழ்ந்த தாமரை மலரைப் போன்ற   வடிவமுடைய மூன்று நட்சத்திரத் தொகுப்பு.

எழுத்துகள் : ந, நி, நு, நே.

ஆளும் உறுப்புகள் : சிறுநீர்ப் பை, பிறப்பு உறுப்பு, குதம், இடுப்புப் பகுதி எலும்புகள்.

பார்வை    : சமநோக்கு.

பாகை    : 213.20 - 226.40

நிறம்    : வெண்மை

இருப்பிடம்    : பட்டினம்

கணம்    : தேவ கணம்

குணம்    : சுபம்

பறவை    : வானம்பாடி

மிருகம்    : பெண் மான்

மரம்    : பாலில்லாத மகிழ மரம்

மலர்    : செந்தாமரை

நாடி    : மத்திம நாடி

ஆகுதி    : சேனை, கருணை

பஞ்சபூதம்    : வாயு

நைவேத்யம் : நெய்ப் பாயசம்

தெய்வம்    : ஸ்ரீலட்சுமிநாராயணன்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தன்னோ: விஷ்ணு ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள்    : 1, 6, 9.

அதிர்ஷ்ட நிறங்கள்    : மெரூன், ரோஸ்.

அதிர்ஷ்ட திசை    : தெற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வியாழன், சனி.

அதிர்ஷ்ட ரத்தினம்    : ஸ்பினல் (Spinel)

அதிர்ஷ்ட உலோகம்    : பிளாட்டினம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

பூசலார் நாயனார், ஸ்ரீமந் நாதமுனிகள், நந்தனார், காஞ்சி மகாபெரியவர், தாதாபாய் நௌரோஜி, நீல்ஆர்ம்ஸ்ட்ராங், லியோ டால்ஸ்டாய், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ரொனால்ட் ரீகன்.

அனுஷ நட்சத்திரத்தில்...

திருமணம், சீமந்தம், உபநயனம், வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்குதல், புது வேலையில் சேர்தல். மஞ்சள் நீராட்டு, ஆபரணம் பூணுதல், புத்தாடை உடுத்துதல், கல்வி கற்கத் தொடங்குதல், சமுத்திர யாத்திரை, மாங்கல்யம் செய்தல், ஆயுதம் பயிலுதல், புது மனை புகுதல், மருந்து உண்ணுதல், விதை விதைத்தல், கதிரறுத்தல், தெய்வப் பிரதிஷ்டை, வாசற்கால் வைத்தல் ஆகியவற்றை அனுஷ நட்சத்திர நாளில் செய்தால் நன்மையும் வெற்றியும் கிடைக்கும்.

பரிகார ஹோம மந்திரம்

ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய
மித்ரந் தேவம் மித்ர தேயந் நோ அஸ்து
அனூராதான் ஹவிஷா வர்த்தயந்த:
சதஞ் ஜீவேம சரத: ஸவீரா:
சித்ரந் நக்ஷத்ர முதகாத் புரஸ்தாத்
அனூராதா ஸ இதி யத்வதந்தி
தன்மித்ர ஏதி பதிபிர் தேவயானை:
ஹிரண்யயைர் விததை ரந்தரிக்ஷே

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்