Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 3

கண்டுகொண்டேன் கந்தனை - 3
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 3

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 3

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை - 3
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை - 3
கண்டுகொண்டேன் கந்தனை - 3

`கொடும்பையைத் தேடியது’`கொடும்பைக்குட் பெருமாளே’ என்று ஒரு திருத்தலம் குறித்து திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார் அருணகிரி நாதர். இதுகுறித்து, தமது திருப்புகழ் உரைநூலில் சில விவரங் களைத் தருகிறார், தணிகைமணி.

`திரிசிராப்பள்ளிக்கடுத்த விராலிமலையிலிருந்து 3 மைலில்  ‘கோனாட்டுக் கொடும்பாளுர்’  (கொங்கு மண்டல சதகம் - பக்கம் 27). பரமக்குடிக்குத் தென்மேற்கு 10 மைலிலும் பார்த்திபனூருக்குத் தெற்கே 10 மைலிலும் ‘கொடுமளுர்க் குமரன் கோயில்’ எனும் ஒரு சுப்பிரமணியர் சந்நிதி - இரண்டு உடை மரங்களின் (குடைவேல் மரங்களின்) கீழ் இருக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர், முதலில் காட்டியுள்ள கொடும்பாளுரைத் தரிசிக்கப் புறப்பட்டேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொடும்பாளுரில் உள்ள மூவர் கோயில் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. இது ராஜகேசரி (இரண்டாம் பராந்தக) சுந்தரச் சோழன் (956-973) காலத்தில், பூதிவிக்ரம கேசரி என்பவரால் கட்டப்பட்டது என்று வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தமது `சோழர்கள்' எனும் நூலில் எழுதியுள்ளார்.

மிகப்பெரிய கோயிலாகத் திகழ்ந்த மூவர் கோயிலில், தற்போது இரண்டு மட்டுமே உள்ளன. விமானத் திரயமும் சுற்றியிருந்த உள்கோயில்களும் பெரிய மதிற் சுவருக்குள் அடங்கியிருந்ததாகவும் மேற்கே ஒரு வாயில் இருந்ததாகவும் புதை பொருள் ஆராய்ச்சியின் மூலம் தெரிகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 3

மூலச் சந்நிதிகள் மூன்று. அதனால்தான் அதற்கு மூவர் கோயில் என்று பெயர். இங்குள்ள நந்தி 11 அடி 3 அங்குல சதுரமுடையது. பாழடைந்த நிலையிலுள்ள இந்தக் கோயிலின் வட்டத்தில், எஞ்சியுள்ள பகுதிகள் யாவும் அற்புதமான வேலைப்பாட்டுக்கு அடையாளமாக உள்ளன. விமானத்தில் சிவபெருமானின் பல மூர்த்தங்களை விளக்கும் அரிய கற்சிற்பங்களும் பரிவார மூர்த்தங் களின் சிற்பங்களும் ஆங்காங்கே உள்ளன. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப் பாட்டில் இக்கோயில் உள்ளது.

இந்தக் கோயிலைப் பார்வையிட்டபோது, மனதில் பலவித சிந்தனைகள் ஓடின. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில், இன்று இருக்கும் பரிதாப நிலையைக் காணும்போது வேதனையாக இருந்தது. நமது அற்புதமான சிற்பக் கலாசாரம் இப்படிச் சீரழிக்கப்பட்டுப் பாழடைந்துள்ளதே என்று பெருமூச்செறிந்தேன்.

எனது ஆய்வின் தொடக்கக் காலம் என்பதால், அப்போது இத்தலம் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தேன். `இது அருணகிரிநாதர் பாடிய தலம்தானா... ஒன்றுமே விளங்க வில்லையே' என்று மனம் குழம்பிய நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விராலிமலையை அடைந்தேன். மாலை ஏழரை மணியாயிற்று. திருச்சிக்குத் திரும்புவதற்கு பஸ் எதுவும் வரவில்லை. `முருகா! இது என்ன சோதனை? அருணகிரியாருக்கு வயலூரிலிருந்து விராலிமலைக்கு வழிகாட்டினாயே. எனக்கு, திருச்சி திரும்ப வழியில்லையே' என்று கந்தனை வேண்டியவாறு நின்றிருந்தேன்.அப்போது, லாரி ஒன்று என் அருகில் வந்து நின்றது. அதிலிருந்தவர் “வண்டியில் ஏறுங்க” என்று உத்தரவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனாலும்,  அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டவனாக, உடனே லாரியில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

லாரியின் ஓட்டுநரோ, உடனிருந்தவரோ எதுவும் பேசவில்லை; நானும் மௌனமாக இருந்தேன். இதற்குள் வண்டி திருச்சியை அடைந்தது. கதவைத் திறந்துவிட்டு, “இறங்கு” என்றார்கள். நானும் கீழே குதித்தேன். சட்டைப்பையில் கை விட்டு, ஒட்டுநருக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என்று எண்ணி பணத்தை எடுப்பதற்குள், லாரி வெகுவேகமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டது. எனக்குப் பெரிய ஆச்சர்யம். அத்துடன், பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமலே சென்றுவிட்டனரே என்று வருத்தம் வேறு.

கண்டுகொண்டேன் கந்தனை - 3

யோசித்துப் பார்த்தேன். அவர்கள் யார்... நான் யார்... அவர்களாகவே லாரியை நிறுத்தி, என்னை எதற்கு அழைத்து வந்தார்கள்... நான் திருச்சிக்குத்தான் செல்லவேண்டும் என்று அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? பதில் கிடைக்கவில்லை. `எல்லாம் கந்தன் திருவருளே' என்று எண்ணி வியப்படைந்தேன்.

சென்னை திரும்பியபின், அருணகிரியார் பாடலில் குறிப்பிட்டுள்ள `கொடும்பை' என்பது, கொடும்பாளூரா அல்லது வேறு தலமா என்று தேடிக்கொண்டிருந்தேன். தபால் தந்தித் துறை வெளியிட்டுள்ள `கிளைத் தபால் நிலையங்கள்' பட்டியலில், `கொடும்பு' எனும் பெயரில் ஏதாவது உள்ளதா என்றும், இன்னும் பல்வேறு வகையிலும் தேடல் தொடர்ந்தது. இதனிடையே தெரிந்த தலங்களைப் பற்றிய செய்திகள் சேகரிக்கும் பணியும் தொடர்ந்து நடந்துவந்தது.

திருவல்லிக்கேணியில் நான் குடியிருந்த இல்லத்தில்  இரண்டாவது தளத்தில் வசித்தவர், டி.ஏ கிருஷ்ணமூர்த்தி. இலக்கிய ரசனை மிக்கவர். அடிக்கடி என்னைச் சந்தித்து பேசுவார். ரயில்வே துறையில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர். பகவான் சத்யசாயிபாபா மீது மிகுந்த பக்தி பூண்டவர். அவருடைய அனுபவங்களை என்னிடம் சொல்லி மகிழ்வார். ஒரு நாள், அவரின் ரயில்வே நண்பர் கருணாகரன் என்பவர் அவரது இல்லத்துக்கு வந்தார்.  அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அன்பர் கிருஷ்ணமூர்த்தி. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, `கொடும்பை' பற்றிய பேச்சும் வந்தது. அப்போது கருணாகரன் ‘`பாலக்காடு அருகில் கொடும்பு என்ற ஊரில் ஒரு சுப்ரமண்யர் கோயில் உள்ளதே. அதுதான் நீங்கள் தேடும் கொடும்பையோ'' என்றார். நான் ஒரு நிமிடம் துள்ளிக்குதித்தேன். முருகனின் கருணைதான் என்னே!

நான் அவரிடம் கேட்டுக்கொண்டபடி, அவர் தனது ஊருக்குத் திரும்பிய சில நாள்களிலேயே ‘கொடும்பு கல்யாண சுப்ரமண்ய சுவாமி கோயில்’ பற்றிய முழு விவரங்களை அனுப்பிவைத்தார். அத்துடன், பல ஆண்டுகளுக்குமுன் தேரோட்டத் தின்போது எடுக்கப்பட்ட, அவ்வூர் முருகனின் உற்சவர் (கறுப்பு வெள்ளை) படத்தையும் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

காஞ்சிபுரத்தில் முற்காலத்தில் வாழ்ந்த நெசவாளர்கள் பலர், ‘முதலிகள்’ எனும் செங்குந்த மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் முருகக்கடவுளைக் குலதெய்வமாக வழிபடுபவர்கள். பராசக்தியின் கால் சிலம்பிலிருந்து தோன்றிய நவமாதர்களுக்குப் பிறந்தவர்கள், வீரபாகுதேவர் முதலான நவ வீரர்கள். இவர்கள் முருகப்பெருமானின் சகோதரர் களாகக் கருதப்படுபவர்கள். சூரபத்மனுடனான போரின்போது, முருகனுக்கு உறுதுணையாக இருந்து வெற்றி தேடித் தந்தவர்கள். இந்த வீரபாகு தேவரின் வழிவந்தவர்களே செங்குந்த மரபினர் என்பது நம்பிக்கை. எனவே, முருக வழிபாடு இவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது எனலாம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் முருகக்கடவுளுக்கு ஆலயம் கட்டி, திருவிழாக்கள் நடத்தி வந்துள்ளனர். அப்படி இவர்களால் பல நூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்டதுதான் `கொடும்பு' எனும் சிற்றூரில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்.

`பழநியில் பாதி கொடும்பு' என்று சிறப்புப் பெற்ற இந்தத் தலம், சோழர் சரித்திரத்திலும் இடம் பெற்றிருக்கிறது!

- அனுபவிப்போம்...

  படங்கள்: தே.தீக்‌ஷித்

`விழுந்து வணங்காதீர்!'

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஒரு முறை காஞ்சி மகா பெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றிருந்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 3

காஞ்சி மடத்தில், மகா பெரியவரை தரிசிக்க வந்தவர்கள் அனைவரும் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். வாரியாரும் அவ்வாறே செய்ய எண்ணி மகா பெரியவரின் பாதங்களில் விழ முயன்றார். ஆனால் மகா பெரியவர் தடுத்து விட்டார். மற்றவர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று வாரியாருக்கு வருத்தம்.

இதைப் புரிந்து கொண்ட மகா பெரியவர், வாரியாரை அழைத்து, `நீங்கள் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கிறீர்கள். அவற்றில் சில, சிவலிங்கம் கோர்க்கப்பட்டவை. நீங்கள் பூமியில் விழுந்து என்னை வணங்கினால், அவையும் என்னை வணங்குவது போலாகி விடும். அது சரியாகுமா? எனவேதான் உங்களைத் தடுத்தேன். தவிர, எனது ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு!' என்று அருளினாராம்.

- ஆர். கண்ணன், சென்னை-61

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism