நினை அவனை! - 3

நாரீஸ்தனபர  நாபீதேசம்
த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
ஏதத் மாம்ஸவஸாதிவிகாசம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்


கருத்து: `பெண்களின் அழகைக் கண்டு மதிமயங்கி மோக ஆவேசம்கொள்ளாதே. அவை மாமிசம், கொழுப்பு ஆகியவற்றின் மாறுபட்ட உருவங்கள்தானே'.

முத்து என்ற பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் அருணகிரி. அவனுக்கு `ஆதி'  என்ற பெயரில் மூத்த சகோதரி ஒருத்தி உண்டு. அருணகிரிக்கு ஏழு வயதானபோது, அவன் தாய் இறந்துவிட்டாள். மிகவும்  கஷ்டப்பட்டு தம்பியை வளர்த்தாள் ஆதி. சிறுவன் இளைஞன் ஆனான். பெண் வேட்கைக் கொண்டான்; விலைமாதரிடம் தொடர்புகொண்டான். இதற்குப் பணம் தேவைப்படவே, வீட்டிலிருந்த பொருள்களைத் திருடிச்சென்று விற்கத் தொடங்கினான்.

நினை அவனை! - 3

விலைமாதர்களை அதிகம் நாடியதன் விளைவாக, அவனை நோய் தாக்கியது. ஆனாலும் அவனது வேட்கை தீரவில்லை.  வீட்டிலோ விற்பதற்கு ஒரு பொருளும் இல்லை. சகோதரியிடம் போனான்.  ‘`எனக்கு எப்படியாவது பணம் வேண்டும்.  பெண் சுகம் இல்லாமல் இருக்க முடியாது’’ என்றான்.

துடித்தாள் சகோதரி. ஆவேசமாகக் கத்தினாள். ‘`நீ என்னிடமே வேண்டும் சுகத்தைப் பெற்றுக்கொள்’’ என்று கண்ணீர் வழியக் கதறினாள். நெருப்பு வீசப்பட்டது போல் துடித்த அருணகிரி, தன்னுடைய கேவல வாழ்க்கைமுறையை உணர்ந்தான். உயிர் துறக்கத் தீர்மானித்தான். அங்கிருந்த ஆலயத்தின் உயரமான கோபுரத்தின்மீது ஏறிக் கீழே விழுந்தான்.  அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார் முருகப்பெருமான்.  அவன் நாக்கில் தனது வேலால் `ஓம்' என்று அவர் எழுத, திருப்புகழ் பிறந்தது. 

ஆம்! தன் வாழ்வின் முற்பகுதியில் மதிகெட்டு அலைந்த அந்த இளைஞர், திருப்புகழ் படைத்த அருணகிரிநாதர்தான்.

சிற்றின்பம் என்பது தீராதது, தணியாதது.

‘`மீன் போன்ற கண்களைக் கொண்ட விலைமாதர்களிடம் விருப்பம் வைக்கிறேன். கற்பனைப் பேச்சுக்கு உட்பட்டவனாகி, அழிந்து இறந்து உயிர் போனால், இந்த உடம்பை எடுத்து, சுடுகாட்டில் கட்டைகளையடுக்கி அதன் மீது வைத்து எரிப்பதற்கு முன்பாவது, மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சிமலர் தரித்த உமது திருவடியைப் பற்றி உய்யும்படி, தமிழ்ச் சொற்களைக் கொண்டு உமது வீரப் புகழைப் பாடி அடியேன் திரியமாட்டேனோ’’ என பின்னர் ஏங்கிப்பாடுகிறார் அவர்.

நினை அவனை! - 3

புற அழகுகள் அழியக்கூடியவையே. அவை நிரந்தரமானவை அல்ல. இதை நன்கறிந்தவன் தீவிர பிரம்மசார்யனான அனுமன். ராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘மண்ணாசை கூடாது. பொன்னாசை கூடாது. பெண்ணாசை கூடாது’ என்று அனுமன் உபதேசம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு எது நிரந்தரமானது என்பது மிக நன்றாகத்  தெரிந்திருந்தது. 

இதுவல்லவா ஞானம்!

பெண்களின் அழகைக் கண்டு மதிமயங்காதே என்பது ஆண்களுக்கான உபதேசம். இதில் பெண்களின் அழகு என்பது குறைப்படுத்தப்பட வில்லை. அதிலேயே மயங்கி நிற்கும் போக்குதான் இடித்துரைக்கப்படுகிறது.

ஆதிசங்கரரின் சீடர்கள் ஆண்கள்.  அவர்களுக் கான அறிவுரை என்பது ‘பெண் மோகத்தில் மயங்காதே’ என்பதாக இருக்கிறது. எனவேதான் பெண்ணாசையை விடும்படி ஆதிசங்கரர் வலியுறுத்துகிறார்.  மற்றபடி அவர் கூறுவதன் அடிப்படை ‘சிற்றின்பத்தை ஒதுக்குங்கள்’ என்பதுதான். இது பெண்களுக்கும் பொருந்தக் கூடியதுதானே.

ஒருமுறை கண்ணனிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது: ‘`தங்களை உருகி உருகி பக்தி செலுத்திய வர்களுக்குக் தங்களின் அருள் கிடைப்பது நியாயம். ஆனால் கோபிகைகளுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கவேண்டுமா? அவர்கள் எண்ணியபோதெல்லாம் அவர்கள் முன் தோன்றி அருள்வதும் அவர்களோடு ஆடிப்பாடுவதும் சரியா? பகவானை அவர்கள் அலட்சியமாக எடைபோட மாட்டார்களா?''

கண்ணன் புன்னகைத்தான்.  அடுத்தநொடியே தன் நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.

நினை அவனை! - 3

‘`ஐயோ எனக்குக் கடுமையான தலைவலி’’ என்று துடித்தான். அருகிலிருந்தவர்கள் திகைத்தனர்.  சகலரின் வலிகளையும் ​தீர்க்கவல்ல பரம்பொருள் கண்ணன். அவனே, வலியால் துடித்தால் என்ன செய்வது?!

``தங்களின் வலி தீர என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே கூறியருளவேண்டும்’’ என்றனர்.

‘`என்மீது மிகவும் பரிவும் பக்தியும் கொண்ட யாராவது தன் காலடி பட்ட மண்ணை எடுத்து என் நெற்றியில் தேய்த்துவிட்டால் என் தலைவலி தீர்ந்துவிடும்’’ என்றான் கண்ணன்.

தேவகி மறுத்தாள். ``கண்ணன் தெய்வம்.  என் பாதத்துளியை அவன் நெற்றியில் பூச மாட்டேன்’’ என்றாள். 

யசோதையும்  தயங்கினாள்.  ‘`பரம்பொருளின் நெற்றியில் என் கால் பட்ட மண்ணையா பூசுவது’’ எனக்கூறி மறுத்துவிட்டாள்.

ருக்மிணி கதறினாள்.  ‘`கண்ணனின் தலைவலி நிச்சயம் தீரவேண்டும்தான். ஆனால், அதற்காக் என் காலடி மண்ணைப் போய்...’’ நினைத்துப் பார்க்கவே அவளுக்குச் சிரமமாக இருந்தது. 

சத்யபாமாவுக்கு வேறோர் எண்ணம் தலைதூக் கியது, `ஏற்கெனவே பாரிஜாத விஷயத்தில் நாம் கர்வபங்கப்பட்டிருக்கிறோம்.  இந்த நிலையில், தன் பாதம்பட்ட மண்ணைக்  கண்ணனுக்கு அளிப்பது கர்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்படலாமே’ என்று.

ஆகவே, யாருமே தன் பாதம்பட்ட மண்ணைக்  கண்ணனின் நெற்றியில் பூச முன்வரவில்லை.

‘`கோபியரிடம் சென்று கேட்டுப் பாருங்கள்’’ என்றார் கண்ணன்.

கோபியர்களை விமர்சித்தவர்கள் கிளம்பிச் சென்றனர். கோபியர்களை அணுகி ‘`கண்ணனுக் குத் தலைவலி’’ என்றனர். அதைக் கேட்டதும்  கோபியர்கள் பதறித் துடித்தனர்; ``வலி தீர வழி என்ன'' என பரிதவிப்போடு கேட்டனர்.

கண்ணன் சொன்னதை விளக்கினார்கள் வந்தவர்கள். அடுத்த நொடியே கோபியர் அத்தனைபேரும் தங்கள் பாதம்பட்ட மண்ணைச் சேகரித்துக் கொடுத்தனர். ‘`நொடிப்பொழுதும் தாமதிக்கவேண்டாம். உடனே புறப்படுங்கள்... இதைக் கண்ணனின் நெற்றியில் பூசிவிடுங்கள்’’ என்று கண்ணீர் மல்கக் கூறி விடைகொடுத்தனர்.

அதாவது எந்தத் தர்க்கத்தையும் அவர்களின் மனம் எழுப்பவில்லை. `கண்ணனுக்கு வலி தீர வேண்டும்' எனும் ஒரே சிந்தனைதான் வெளிப் பட்டது. எது சரி, எது தவறு எனும் ஆராய்ச்சி எல்லாம் அங்கு நடக்கவில்லை. சரணாகதி தத்துவமும் பேரின்பப் பற்றுமே அங்கு அற்புதமாக வெளிப்பட்டன.

இதுதான் ஞானம் என்பதை ஆழ்ந்து யோசிப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

- நினைப்போம்...

-ஜி.எஸ்.எஸ்.,ஓவியம்: ஸ்யாம்