மக்குத் தெரிந்ததைவிடவும் தெரியாதவையே அதிகம். அதிலும் நம்மைச்சுற்றி இருப்பவற்றில், மிகக்குறைந்த அளவே தெரிந்துகொண்டிருக் கிறோம். தெரிந்த ஒருசிலவற்றிலும்  ‘இது பிற்பாடு வந்தது. நம் பகுதியைச் சார்ந்தது இல்லை’ என்றெல்லாம் யாராவது சொல்லக்கேட்டு, அல்லது நாமாக ஒரு முடிவெடுத்து ஒதுக்கி விடுவோம்.

சக்தி கொடு! - 3

இப்படிப் பேசும் யாரும், ‘இது சமீபத்தில்தான் வந்தது. அதுவும் வடக்கிலிருந்து வந்தது’ என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஒதுக்குவதில்லை! சரி... இவ்வளவு பீடிகைகளும் - முன்னுரையும் எதற்காக?

விநாயகரின் மகளுக்காகத்தான்; அதுவும் விநாயகரின் பிள்ளைகள் வேண்டுகோளுக்காக அவதரித்த அம்பாளைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்காகத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி கொடு! - 3

ஆகையால், விநாயகருக்குக் கல்யாணம் உண்டா, பிள்ளைகள் உண்டா எனும் தேவையற்ற வாதங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சந்தோஷி மாதாவை தரிசிக்கலாம் வாருங்கள்!

விநாயகரைப் பிரம்மசாரி என்று  கொண்டாடி னாலும், விநாயகருக்கு ‘ஸித்தி - புத்தி’ என்ற தேவியரும் ‘வல்லபை’ என்ற தேவியும் உண்டு. விநாயகருக்குத் திருமணம் நடந்த வைபவங்களை, ‘பார்கவ புராணம்’ எனப்படும்  ‘விநாயக புராணம்’ விரிவாகவே சொல்கிறது.

இங்கே நாம், மங்கலங்கள் தரும் சந்தோஷி மாதாவின் கதையை, மங்கலகரமாக விநாயகர் திருமணத்திலிருந்து தொடங்கலாம்.

பிரம்மதேவரின் பெண்களும் நாரதரின் சகோதரிகளுமான ஸித்தி-புத்தி இருவரும், தவமிருந்து விநாயகரை மணந்தார்கள். அவர்களில் ஸித்திதேவிக்கு லட்சன் எனும் மகனும் புத்திதேவிக்கு லாபன் எனும் மகனும் அவதரித்தனர். இந்த விநாயக புத்திரர்களுக்குச் சகோதரியாகத்தான்  ‘சந்தோஷி மாதா’ அவதரிக்கப்  போகிறாள். அதற்கான ஏற்பாடுகள், வழக்கப்படி நாரதர் மூலமே தொடங்குகின்றன.

ஆவணி! இந்த மாதத்தில் பாரத நாட்டின்  பல பகுதிகளிலும் பலவிதமான வைபவங்கள் நடைபெறும். அவற்றில் விசேஷமான ஒன்று ‘ரட்சாபந்தனத் திருவிழா’. ஆவணி மாதப் பௌர்ணமியில், வடக்கே விசேஷமாகக் கொண்டாடப்படும். தங்கள் சகோதரர்களும் அவர்கள் குடும்பங்களும், எல்லாவிதமான வளங்களும் பெற்று நன்றாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் கொண்டாடும் விழா இது.

அந்தத் திருநாளன்று, திருவிழா வைபவத்தையும் அதனால் ஏற்படும் சந்தோஷக் கொண்டாட்டங்களையும் கண்ட நாரதர், தம் சகோதரிகளும் விநாயக பத்தினிகளு மான ஸித்தி - புத்தி ஆகியோரைப் பார்க்க விரும்பினார்; கிளம்பிப் போய்விட்டார்.

சக்தி கொடு! - 3

நாரதரை வரவேற்ற சகோதரிகளை, நாரதரும் நலம் விசாரித்து வாழ்த்தினார்; அவர்களின் பிள்ளைகளையும் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்தினார். மகிழ்ச்சிக்கான காரணத்தைக் கேட்டபோது, “ரட்சாபந்தனத் திருவிழா வைக் கண்ட ஆனந்தத்தை வர்ணித்து, சகோதர - சகோதரியர் மேன்மையையும் விவரித்தார்.

தாய்மாமனின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த விநாயக புத்திரர் இருவரும், தாங்களும் அதேபோல ஆனந்தத்தை அடையவேண்டும்; தங்களுக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று விநாயகரை வேண்டினார்கள்.

அப்போது, விநாயகப்பெருமான் ஒருசில விநாடிகள் யோக நிலையில் அமர, கோடி சூரியப் பிரகாசத்துடன் ஓர் ஓளி வெள்ளம், விநாயகரைச் சுற்றிப் பரவியது. அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஒரு ஜோதி வெளிப் பட்டது. ஸித்தி-புத்தி தேவியரின் அருள் நோக்கு, அந்த ஜோதியில் கலந்தது. அதே விநாடியில், அழகு - தூய்மை - மங்கலம் என அனைத்தும் ஒரு வடிவம் கொண்டு வந்ததைப்போல், ஒரு கன்னிப் பெண் தோன்றினாள்.

அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று, தன் சகோதரர் களின் திருக்கரங்களில் ‘காப்பு’ ரட்சாபந்தன் கயிறு கட்டி, அவர்களை வாழ்த்தினாள். தங்கள் எண்ணம் உடனே நிறைவேறியது கண்டு, விநாயக புத்திரர்கள் சந்தோஷித்தார்கள்; அதைக் கண்டு அனைவரும் சந்தோஷித்தார்கள்.

அதேநேரம், மலைமகள் - அலைமகள் - கலைமகள் ஆகிய மூவரும், சிவன் - மகாவிஷ்ணு -பிரம்மா ஆகியோருடன் அங்கு வந்தார்கள். விநாயகரின் திருமகளைக் கட்டித் தழுவினார்கள்; தங்கள் சக்திகளை அந்தப் பெண்ணுக்குத் தந்து, மனதார வாழ்த்தினார்கள்.

அதன்பின் பார்வதிதேவி, “விநாயகா! உன் மகள், உன் புத்திரர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவள். ஆகவே இவளை ‘சந்தோஷி மாதா’ என்றே அழைப்போம்” என்றார். அனைவரும் “சந்தோஷி மாதா” எனப் பெருங்குரலில் அழைத்து மகிழ்ந்தார்கள்.

அந்த நேரத்தில் நாரதர் தம் வேண்டுகோளை முன் வைத்தார். “விநாயகப்பெருமானே! தங்கள் திருமகளாக இத்தேவி அவதரித்த இந்த வெள்ளிக்கிழமையன்று, விரதமிருந்து இவளை வழிபடுபவர்களுக்கு, எல்லா விதமான நன்மைகளையும் தாங்கள் அருள வேண்டும்'' என வேண்டினார்.

“நாரதா! நன்மைகள் அனைத்தையும் தந்து, தன் அடியார்களைச் சந்தோஷமாக வாழ வைக்கும் சக்தியை இவளுக்கு அளிக்கிறேன்.முப்பெருந்தேவியரின் சக்தியையும் பெற்றவள் என்பதால், இவளை வழிபடும் அடியார்கள், முப்பெருந்தேவியரின் அருளையும் எம் அருளையும் ஒருங்கே அடைவார்கள்” என்று கூறி ஆசியளித்தார் விநாயகர்.

மும்மூர்த்திகளையும் முப்பெருந்தேவியரையும்  பெற்றோர்களையும் தாய்மாமனான நாரதரையும் வணங்கி எழுந்தாள் சந்தோஷிமாதா. மங்கல வாழ்த்து கோஷங்களால் நிரம்பியது அந்த இடம்.

இனி, சந்தோஷி மாதா விரத நியதிகள் குறித்துத் தெரிந்துகொள்வோமா?

ந்தோஷி மாதா பூஜையை ஒரு வெள்ளிக் கிழமையில் தொடங்கவேண்டும். (இந்த மாதம்தான் என்ற நியதி இல்லை). வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையில் எழுந்து நீராடி, தூய ஆடை களை அணிந்து, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பூஜை நடக்கும் இடத்தைத் தூய்மை செய்து, பச்சரிசி மாவால் கோலமிட வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் தூய்மையான ஒரு மரப் பலகையில் சந்தோஷி மாதா படத்தை வைக்க வேண்டும். அந்தப் படத்துக்கு முன், வாழை (நுனி) இலையை விரித்து வைத்து, அதில் பச்சரிசியைப் பரப்பி, அதன்மேல் தூய்மையான நீர் நிறைந்த ஒரு கலசத்தை வைக்கவேண்டும். (கலசத்துக்குள் ஏதேனும் நாணயங்களை இடுவதும் உண்டு).கலசத்தில் மாவிலைக்கொத்து வைத்து, அதன்மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்; அதேபோல் நெய்விளக்கும் ஏற்றிவைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையைத்  தொடங்கலாமா?

“தேவி... சந்தோஷி மாதாவே! உன் அருள் வேண்டிப் பூஜையைத் தொடங்குகிறேன்” என்று  சொல்லி, எந்த தேவைக்காகப் பூஜை செய்கிறோம் என்று கூறி, “தேவி! அடியாள் செய்யும் இந்தப் பூஜையை ஏற்று, மனமுவந்து அருள் புரிய வேண்டும்” என்று அழுத்தமாகப் பிரார்த்தித்துப் பூஜையைத் தொடங்கவேண்டும்.

முன்னதாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். கலசம், சந்தோஷிமாதா படம், மஞ்சள்பிள்ளையார் ஆகியவற்றுக்குச் சந்தனம், குங்குமமிட்டு அலங்கரித்து, மலர்களை யும் மாலையையும் சாற்றி, நறுமணம் கமழும் ஊதுவத்தி ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து, சந்தோஷி மாதாவின் முன்னால், ஒரு பாத்திரத்தில் வறுத்த வேர்க்கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ளுங்கள் (சக்திக்குத் தக்கபடி; அளவு கிடையாது).

முதலில் விநாயகர் பூஜை முடித்து, சந்தோஷி மாதாவின் பூஜையைச் செய்யவேண்டும். பூஜை முடிந்ததும், சந்தோஷி மாதா விரத பூஜையின் மகிமையை விளக்கும் கதையைப் படிக்க வேண்டும். பின்னர் கைகளைக் கூப்பி, மனதில் சந்தோஷிமாதாவை நிலைநிறுத்தி, கீழ்க்காணும் பாடலைப் பாடுங்கள்.

அன்னையே ஐங்கரன் புதல்வியே
எங்களின் இன்னல்கள் தீர்த்திடுவாய்.
இல்லத்தில் இருந்திடுவாய்
மன்னு புகழ் பெற்றவளே சந்தோஷிமாதாவே
உன்னுடைய அருளை யான் உளம் உருகி வேண்டுகிறேன்.

துதிப்பாடலைப் பாடி, தூப தீப வழிபாடுகள் முடிந்ததும், சந்தோஷி மாதாவின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் வேர்க்கடலை - வெல்லம் ஆகியவற்றை, அங்கிருப்பவர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும்; குறிப்பாகக் குழந்தைகளுக்கு.

பூஜையின்போது, வேறு வேலைகளுக்காக நடுவில் எழுந்து போவது கூடாது; எதையும் உண்ணவும் கூடாது. பூஜை முடிந்த பிறகே, உண்ணவேண்டும்; புளி நீக்கிய - புளிப்பு இல்லாத உணவைத்தான் உண்ணவேண்டும்.

இப்படி 16 வாரங்கள்... வெள்ளிக்கிழமையன்று ‘சந்தோஷி மாதா’ வழிபாடுசெய்து,17-வது வாரம் பூஜை முடித்து, எட்டு குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும். (சகோதரரின் குழந்தைகளுக்கு என்ற குறிப்பும் உண்டு). அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவிலும் புளிப்பு கூடாது; புளிப்புள்ள பழங்களும் கூடாது. குழந்தைகளுக்கு ஆடைகள் - பொருள்கள் முதலானவற்றைக் கொடுக்கலாமே தவிர, பணம் எதுவும் அளிக்கக்கூடாது.

பதினாறு வாரங்களின் நடுவில், பூஜைசெய்ய முடியாத நாட்கள் ஏற்பட்டால், வருந்த வேண்டாம். அடுத்த வாரம் தொடர்ந்து செய்யலாம்.

சந்தோஷிமாதா சந்தோஷம் அருள வேண்டிக் கொள்வோம்!

- சந்திப்போம்...

கைகளே மூலவர்!

சக்தி கொடு! - 3

பாலக்காட்டிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் ஏமூர். இங்குள்ள கைப்பத்திக் காவு (உள்ளங்கை கோயில்) கோயிலில்  கை வடிவத்தில் காட்சி தருகிறாள், அன்னை ஹேமாம்பிகை.

பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்தத் தேவியின் ஆலயத்தில், பெரியதும், சிறியதுமான இரண்டு கைகளுக்குத்தான் தினசரி அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றன. அபயமளிக்கும் அற்புதக் கரங்களே மூலவராக இருப்பதால் இங்கு வேண்டிக்கொள்ளும் எல்லா பிரார்த்தனைகளும் நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள்.

குரூர் மனையைச் சேர்ந்த வயதான நம்பூதிரி ஒருவருக்கு, நீண்ட தூரம் சென்று அவரது குலதேவியை தரிசிக்க முடியாமல் போனதாம். அவரது வேண்டுதலுக்கு மனமிரங்கிய தேவி, ஒரு திருக்குளத்தின் மையத்தில் கரங்களை மட்டும் காட்டி அருள்புரிந்தாளாம். அந்த இடமே காலபோக்கில் ஆலயமானதாம்.

உற்சவ விழாக்களில் எழுந்தருளும் பொருட்டு, சங்கு சக்கரம் ஏந்திய துர்கையாகவும் அருள்கிறாள் ஒரு தேவி. இன்னொரு சிறப்பம்சம்... இங்கு காலையில் சரஸ்வதி தேவியாகவும் உச்சி வேளையில் லட்சுமி தேவியாகவும் மாலையில் ஆதிபராசக்தியாகவும் அம்பிகை அருள்பாலிக்கிறாள்!

- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism