Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 29

ரங்க ராஜ்ஜியம் - 29
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 29

ஓவியம்: அரஸ்

ரங்க ராஜ்ஜியம் - 29

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம் - 29
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் - 29
ரங்க ராஜ்ஜியம் - 29

``நியதியை உருவாக்கிய பகவானே அதை உடைத்து, உனக்கு அவனே கூட மந்த்ரோபதேசம் செய்ய வரலாம்? உன் போன்றோர்க்காக, தானோ அல்லது தன் வடிவாய் என் போன்ற ஒரு ஆசார்யனையோ உலகுக்கு அனுப்பித் தரலாம்” என்ற ஆசார்ய நம்பியின் பதிலால் நீலனின் கண்கள் பனித்தன.

அதனைத் தொடர்ந்து புனித நீராடி, வெண்பட்டு உடுத்திக் கொண்டான்.  பிறகு பன்னிரு திருமண் காப்பும் தரித்துப் பணிவினும் பணிவானவனாய் நம்பியிடம் பஞ்ச சமஸ்காரங்களையும் பெற்றவன், இருதோள்களிலும் சங்கு சக்கரப் பிரதிஷ்டையுடன் புதியதொரு வடிவோடு, அந்த ஆச்சார்ய நம்பியின் மடாலயத்தை விட்டு வெளியே வந்தபோது, மந்திரிகள் மட்டுமல்ல, அவனது `ஆடல்மா’ எனும் புரவியும் மிக ஆச்சர்யமாகப் பார்த்தது!

ரங்க ராஜ்ஜியம் - 29

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போதும் அந்தப் புரவியின் மீது ஒரே தாவில் தாவி ஏறுபவன், அன்று முதலில் தயங்கி நின்றான்; பின்னரே ஏற முற்பட்டான். ஆனால் அக்குதிரையும் அவனை வேறு யாரோ என்று எண்ணி, அவனை ஏறவிடாமல் செய்யப் பார்த்தது. ராஜபுரவிகள் புரவிக் காப்பாளனைக்கூட தன் முதுகின் மேல் ஏற்காது. அவை, தன் அரசனின் உடல் வாசத்துக்கும், மொழிக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக எதிரிகள் அதன் மேல் ஏறி அவற்றை இயக்கவே முடியாது.

 இதெல்லாம் நீலனுக்கும் தெரியும். ஆகவே, அந்தப் புரவியின் கழுத்தை வருடி ‘நான் உன் நீலன்தான்’ என்பதை அதற்கு உணர்த்தினான். பிறகு என்ன நினைத்தானோ, அருகில் நின்றிருந்த ரதத்தில் ஏறிக்கொண்டான். ஆடல்மா அந்த ரதத்தைப் பின்தொடர்ந்தது.

அதன் பிறகு அந்த ரதம் வெள்ளக்குளத்து வைத்தியர் வீட்டு முன்தான் நின்றது. அவனைத் திருமண் காப்போடு பார்த்த குமுதவல்லி அப்படியே கன்னத்தில் கை வைத்து வியப்பில் மூழ்கினாள். அவள் தந்தையோ `காதல் இப்படியெல்லாம்கூட ரசவாதம் புரியுமா’ எனும் கேள்விக்குள் மூழ்கினார்.

“என்ன குமுதவல்லி அப்படிப் பார்க்கிறாய்?”

“தாங்கள்தானா என்று பார்க்கிறேன்.”

“நானேதான். வீரதீரசூர பராக்கிரம திருவாலி நீலனேதான்!”

“எங்கே உங்கள் வெண் புரவி?”

“அதுவா... இனி எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறேன்.”

“ஏன் அப்படி?”

“மாறனாய் இருந்தவரை எனக்குப் புரவிதான் அழகு. மாலனாகி விட்டேனே... இனி பக்தியே எனக்கழகு.”

“நீங்களா பேசுகிறீர்கள்?”

“ஒரு புரிதலுக்காக `நான்’தான் எனலாம். ஆனால் நடப்பவை எதுவும் நம் வசமில்லை; எல்லாம் அவன் செயல். அதன்படிப் பார்த்தால், என்னுள் இருந்து பேசுவதுகூட அவன்தான்!”

ரங்க ராஜ்ஜியம் - 29

நீலன் வார்த்தைக்கு வார்த்தை வியப்பளித்தான்.

“குமுதா! நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாகக் கழித்துவிட்டேன். கேளிக்கை யும் வேடிக்கையுமாகவே பொழுதுகள் சென்று விட்டன. எம்பெருமானை தரிசித்த பின்னரோ, எனக்குள் பெரும் மாற்றம். தவறு தவறு... உன்னை எப்போது சந்தித்தேனோ, அப்போதிருந்துதான் நான் அர்த்தத்தோடு வாழத் தலைப்பட்டேன்.அந்த வகையில் பார்த்தால், நீதான் என் வரையில் தலையானவள்..!”

“ஐயோ என்ன இது... இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். நானெங்கே - அவனெங்கே?”

“என் வரையில் அவன் வேறு நீ வேறு அல்ல. நீ என் கண்களைத் திறந்தவள்; காமத்தைத் தடுத்தவள்; அஞ்சாமை கொண்டவள். ஆசார்ய நம்பி என் குரு என்றால், நீ குருவுக்கும் குரு...”

“போதும்... என்னைப் புகழ்வதாகக் கருதி, உங்களையுமறியாமல்  நீங்கள் உங்களைத் தாழ்த்திக்கொள்வதோடு, பிறரையும் தாழ்த்தி ஓர் உயரத்தை எனக்கு அளிக்காதீர்கள்.”

“என் நன்றிக்குரியவள் நீ. இப்போதுகூட நீ என்னைச் சீர்ப்படுத்தவே செய்கிறாய். சொல்... நான் இனி அடுத்து என்ன செய்யவேண்டும்?”

“என்ன செய்வதா? அதை நான் சொல்வதா?”

“வேறு யார் சொல்வார்கள்... நீதான் கூறவேண்டும்.”

“அப்படியானால், ஆசார்ய நம்பி கூறியதுபோல் நல்லதொரு ஸ்ரீவைஷ்ணவனாய் எல்லா உயிர்களுக்கும் நன்மைபயக்கும் ஒரு வாழ்க்கை வாழுங்கள்!”

“அதுதான் இனி என் வாழ்வு. அதில் உனக்குச் சந்தேகமே வேண்டாம். மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும். அதைச் சொல்.”

நீலன் அப்படி கேட்கவும் அவன் மறைமுகமாய்த் தன்னை மணப்பது குறித்துதான் அப்படிக் கேட்கிறானோ என்று கருதியவள், “ஒரு காரியம் மட்டும் பாக்கி உள்ளது. அதை நீங்கள் செய்து விட்டால், நாம் இணைந்து விடலாம்” என்றாள் தழைந்த குரலில்.

“குமுதா! அந்தப் பாக்கி என்ன? அதை மட்டும் கூறு! இணைவது என்பது என் வரையில் எப்போதோ நடந்துவிட்டது. முதலில் உன்னை நான் காமத்தோடு பார்த்தேன். இப்போதோ அது பக்தியாகிவிட்டது. எனவே இந்த இணைப்பு - பிணைப்பு என்று மலிவானச் சொற்கள் எதற்கு? நீ விஷயத்துக்கு வா!”

நீலன் அவளை அதிரச் செய்தான். நெடுநேரம் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

`‘பார்த்தது போதும்... அடுத்து என்ன செய்ய வேண்டும். சொல்...”

“அடுத்து... அடுத்து...”

“உம்... சொல்!”

“தினந்தோறும் ஆயிரம்பேருக்கு அன்னம் அளிக்கவேண்டும்.”

“அன்னதானத்தைச் சொல்கிறாயா?”

“ஆம். மனிதனோடு ஒட்டிப்பிறந்த ஒரு தேவை. உயிர்கள் வாழ்வதே பல தருணங்களில் அதனால் மட்டும்தான்...”

“உண்மை... பெரும் உண்மை. பசியைப் பிணி என்றே கூறுவர் மேன் மக்கள். அது ஓர் அகலாப்பிணி. பிணிபோக்குதல் ஒரு மேலான பணிதான்...”

“அப்பணியை மட்டும் தாங்கள் செய்தால் போதும். இந்த நாட்டில் களவிருக்காது; நோயிருக்காது; எவரிடமும் சோர்வும் இருக்காது...”

“உண்மைதான்! யாருக்கும் எதிரி வெளியே இல்லவே இல்லை. நம் வயிறுதான் முதல் எதிரி. ஒரு வேளை சோறிடாவிட்டாலும் உருட்டி மிரட்டத் தொடங்கிவிடுகிறதே?”

“அதனால்தான் சொன்னேன்... மட்டுமல்ல, தானங்களில் பூரண நிறைவைத் தரும் ஒரே தானம், அன்னதானம் மட்டும்தான்.”

“இதுவும் பேருண்மை. பொன் பொருள் என்றும் மாடு மனை என்றும் எதைத் தந்தாலும், `போதும்’ என்று மனதார ஒருவர்கூட சொல்ல மாட்டார். ஆனால், அன்னம் உண்டவர் வயிறு நிரம்பிவிட்டால், நம் கையைப் பிடித்துத் தடுப்பார்!”

“ஆஹா... நீங்கள் அழகாய்ப் புரிந்துவைத்திருக் கிறீர்கள். உலகின் பல பெரும் பாவங்களுக்குப் பின்னால், பசிதான் பெரும் காரணமாக இருந்திருக்கிறது. அதனால்தான் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றனர். அப்படியான பசிக்கு இனி திருவாலி நாட்டில் இடமில்லை என்று செய்யுங்கள்.”

“அற்புதம் அவ்வாறே செய்கிறேன்.”

“ஒரு முக்கியமான விஷயம்”

“என்ன?”

“இது ஏதோ ஒரு நாள் கூத்தாக முடிந்து விடக்கூடாது. அன்னம் பொருட்டு மூட்டப் படும் அடுப்பு, உங்கள் தலைமுறையைக் கடந்தும் அணையாது எரியவேண்டும்.”

“நல்ல எச்சரிக்கை. இந்த நீலன் எந்த ஒரு காரியத்திலும் அவ்வளவு சுலபத்தில் இறங்க மாட்டான். இறங்கிவிட்டாலோ, உயிரே போனாலும் சரி... மாறமாட்டான். வருகிறேன்.”

நீலன் கம்பீரமாகப் பேசிவிட்டு செல்லவும், குமுதவல்லி அடுத்துப் போய் நின்றது, எம்பெருமானின் திருவுருவச் சிற்பம் முன்தான்!

“எம்பெருமானே! உன் கருணையை என்னென்பேன். பரந்த இந்த உலகில் ஒரு தூசினும் சிறிய தூசு நான். ஆனால், என்னைத் தேர்வு செய்து என்னுள் புகுந்து ஒரு மன்னவனையே உன் திருவடிச் சேவகனாய் மாற்றிவிட்டாயே!

உலகைப் படைத்து, அதில் உயிர்களைப் படைத்து, அந்த உயிர்களுக்கென ஒரு கால கதியை விதித்து, அலகிலா விளையாட்டை அற்புதமாய் ஆடும் உன் முன், இந்த நீலன் ஒரு சாதாரண மானவனே. அவனுள் நீ புகப்போய், அவன் இனி அசாதாரணமானவன் ஆகப்போகிறான். இதை நான் என்னென்பேன்... எப்படிச் சொல்வேன். உப்புக் கல்லையும் வைரமாக்கி விடும் உன் பார்வை என்பது எத்தனைப் பெரிய உண்மை...”

குமுதவல்லி கசிந்தாள். அப்பா அருகில் வந்தார். ‘அம்மா’ என்றார்.

“அப்பா...”

“அப்பாவேதான்... நான் ஒன்று சொன்னால் தப்பாகக் கருதமாட்டாயே?”

“எதற்கப்பா இந்தப் பீடிகை. தப்பாகவெல்லாம் உங்களுக்குப் பேசவே வராதப்பா...”

“நானொரு சாமான்யனம்மா...”

“அப்படியானால், நான்கூட சாமான்யை தானே?”

“தவறு... நீ இப்போது நான் வணங்கும் அந்த லட்சுமிதேவியாகவே காட்சி தருகிறாய். உன்னால் தான் எனக்கும் பெயர்.”

“நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.”

“ஆயிரம்பேருக்கு அன்னமளிக்கவேண்டும் என்று கூறிவிட்டாயே... அதுவும் நாள்தோறும்..”

“அதனால் என்னப்பா... தினமும்தானே பசிக்கிறது?”

“அதுசரி... ஆனால் தினமுமா நெல்மணி விளைகிறது?”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“ஒரு தேசத்தில் எல்லோருக்கும் சோறிடுதல் அரசனின் கடமைதான். ஆனால் அதை இலவசமாகத் தருவது, மக்களைச் சோம்பேறி களாக்கி விடாதா? அதோடு வருடம் மூன்று போகம் மட்டும்தான் விளைச்சல்.  அதில் ஒரு போகம் புன்செய்! அப்படியிருக்க ஆயிரம் பேருக்கு அன்னம் என்றால், திருவாலி முழுக்க விளைந்தாலும் போதாதே...”

“அப்பா! எப்போதும் உங்களுக்குள் மனித எத்தனத்துக்கு உட்பட்ட நம்பிக்கைகளே உள்ளன. அந்த மாலவன் படியளப்பான் என்பதை மறந்துவிடுகிறீர்கள்...”

“இப்படி நீ சொல்லிவிட்ட பிறகு, நான் இனி பேச ஏதுமில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அறிவை அவன் அளித்திருப்பது எச்சரிக்கையுடன் செயல்படத்தான். முள்ளுக்குச் செருப்பும், வெயிலுக்குப் பாகையும், மழைக்குக் குடையும் போன்றது வருமுன் காத்திடும் செயல்திட்டம். அது அறிவோடு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், எது வேண்டுமானால் நடக்கலாம்...”

வைத்தியர் எச்சரித்தது போலவேதான் நடந்தது. அன்னக் கொட்டாரம் நிரம்பி வழிந்தது. நெற்களஞ்சியங்கள் காலியாகத் தொடங்கின. உழைத்தால்தான் உணவு என்று வாழ்ந்த பலர், உறங்கி வாழத் தலைப்பட்டனர். பக்தியின் மிகுதி மறுபக்கத்தை மறைத்துவிட்டது. வருடம் ஒரு முறை சோழப் பேரரசனுக்கு ஆயிரம் கலம் நெல்லுடன் பத்தாயிரம் பொன்னைக் கப்பமாகக் கட்டவேண்டும். அதற்கு நெல்லும் இல்லை - பொன்னும் இல்லை! முதல் வருடம் பொறுத்தான் சோழன். இரண்டாம் வருடமும் மூன்றாம் வருடமும் முத்ராதிகாரிகளை அனுப்பி ஓலை போக்கினான்.

நீலனோ “எங்களுக்கே போதவில்லை என்று சொல்” என்றான்.

‘`நீலா நீயா பேசுகிறாய்..” என்றார் முத்ராதிகாரி.

“என்னுள் இருந்து மாலன் பேசுகிறான்”

“உளறாதே... நீலா! பரகாலன், பராந்தகன், வீரகேசரி என்றெல்லாம் புகழப்பட்டவன் நீ. இப்போதோ பரமபண்டிதனாய் நாமம், துளசி மாலை என்று பொலிவிழந்து காட்சி தருகிறாய். ஒரு பெண் உன்னை முட்டாளாக்கிக் கட்டிப் போட்டுவிட்டாள். வெட்கமாயில்லை உனக்கு?”

“முத்ராதிகாரியே! நாவை அடக்கிப் பேசு. குமுதவல்லி இந்தத் திருவாலியின் அரசி. அவளால்தான் நான் முழு மனிதனாகி, அதற்கும் மேலான மாலின் தொண்டனாகியுள்ளேன்.”

“தொண்டன் அரசாண்டால் நாடே அழியும். நீ அதை காணப் போகிறாய். விரைவில் போர் முரசு ஒலிக்கப் போகிறது. நீயும் கொல்லப்படுவாய்’’ என்று கூறிவிட்டு சென்ற முத்ராதிகாரி, நடந்ததை அப்படியே சோழனிடம் கூறவும் சோழன் ஸ்தம்பித்தான். இறுதியாக நீலனைக் கைது செய்ய உத்தரவிட்டான்.

- தொடரும்...

-இந்திரா செளந்தர்ராஜன்