ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 28

சிவமகுடம் - பாகம் 2 - 28
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 28

சிவமகுடம் - பாகம் 2 - 28

சிவமகுடம் - பாகம் 2 - 28

உயிர் பெற்ற சிற்பங்கள்!

லவாய்க் கோயிலின் மணி எழுப்பிய விநோதப் பெருநாதம், பொற்றாமரைக் குளத்தின் தெள்ளிய நீர்ப்பரப்பில் மட்டுமல்ல, மலையத்துவஜனின் மருமகனாம் சோமசுந்தரரின் சந்நிதானத்தில்... மேருமலையெனத் திகழும் ஆகிருதியான தன் தேகத்தைக் குறுக்கிச் சிரம் தாழ்த்திக் கண்மூடி நின்றிருந்த பேரமைச்சரிடத்திலும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது.

எதன்பொருட்டு அந்தச்  சந்நிதானத்தில் குலச்சிறை பெருந்தகையார் காத்திருந்தாரோ, அந்தக் கட்டளை மணியோசையாய்க் கிடைத்து விட்டது என்பதை அவரது அறிவுப்புலன் உணர்ந்த அந்தக் கணத்தில், அவரின் இடக்கரம் அனிச்சையாய் நகர்ந்து, இடைக்கச்சையில் தொங்கும் வீரவாளின் கைப்பிடியை இறுகப் பற்றியது.

அந்த இறுக்கமும் வேகமும் தேகமெங்கும் விரவி நிலைகொள்ள, மெள்ள சிரம் உயர்த்தினார் குலச்சிறையார். அவரின் சிவந்த விழிகளில் திரையிட்டிருந்தது நீர். எப்போதும் மார்கழி நிலவென தண்ணொளி திகழும் அவரின் திருமுகத்தில் கடுமை குடியேறியிருந்தது.

மேலும் ஏதோவொரு கட்டளையை எதிர்நோக்கியவராக, தன் மனதுக்குகந்த  மலைமகள் பதியை - உமையவள் உள்ளத்து சோதியனை மீண்டும் ஒருமுறை தரிசித்தார், குலச்சிறையார். மிகச்சரியாக அந்தக் கணத்தில், மதுரை மகாதேவனுக்கு மகா ஆராதனையும் நிகழ்ந்தது.

சடைமறைத்துக் கதிர்மகுடம் தரித்து நறுங்
    கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
    மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு
   மகனாகி மீன நோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை...

கண்கொட்டாமல் சில கணப்பொழுது தரிசித்து மீண்டவரிடம் சீற்றம் சற்றே தணிந்திருந்தது. அந்தப் பரமனிடத்தில் எதிர்பார்த்த பதில் கிடைத்துவிட்ட திருப்தி அவரின் திருமுகத்தில்.

பகை விரட்டப் புறப்படும் தருணத்தில், அதன்பொருட்டு  பரமனின் திருவுளத்தை அறிய விரும்பினார் பேரமைச்சர். அந்தப் பரமனோ விசேஷத் திருக்கோலம் காட்டி பதில் தந்துவிட்டார்... `வெற்றி பாண்டியர்க்கே’ என்று.

சிவமகுடம் - பாகம் 2 - 28

ஆம்! சடாமகுடத்தை மறைத்து மணிமகுடம் சூடியவனாய்க் காட்சி தந்தார். கொன்றையைச் சூடிக்கொண்டிருந்தவர், அமைச்சரின் கண்களுக்கு வேப்பம்பூ மாலையைக் காட்டினார். அதுமட்டுமா, இடபக் கொடிக்குப் பதிலாக கயற்கொடியைக் காட்டியருளினார்!

இதுபோதாதா, வெற்றி நிச்சயம் என்பதற்கு. பெரும் திருப்தியோடு மீண்டுமொருமுறை பரமனைத் தொழுது, அவரின் சந்நிதானத்திலிருந்து விலகி நடக்கத் தொடங்கினார் பேரமைச்சர்.

திருக்கோயிலின் முக மண்டபம், மகாமண்டபம் தாண்டியும் வேகம் தொடர்ந்தது அவரது நடையில். பிராகார மண்டபங்களின் வழியே  பொற்றாமரைக் குளத்தை நோக்கி அவர் நடக்க நடக்க, அடிக்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது என்றே சொல்லவேண்டும்.

ஆம்! மண்டபத் தூண் ஒவ்வொன்றையும் அவர் கடக்கும்போது, அதுவரையிலும் அந்தத் தூண்களில் ஆயுதபாணிச் சிற்பங்களாய்ச் சமைந்திருந்த சிவகணங்கள் திடுமென உயிர் பெற்று,  தூண்களிலிருந்து விலகி அவரைப் பின்தொடர்வதைக் காணப்பெற்றால், காண்பவர் களுக்கு அது அற்புதமாகத்தானே தோன்றும்?!

ஆனால், நடந்தது வேறு!

வான்பரப்பில் அடர்ந்திருந்த மேகப்பொதி களை அவ்வப்போது விலக்கித் தலை காட்டிய நிலவு, மிக ஆர்வத்துடன் வெண்கிரணங்களைத் தெளித்து, அவற்றின் ஒளிவெள்ளத்தின் உபயத்தால்... தூண்களைவிட்டு விலகிக் குலச்சிறையாரைப் பின்தொடர்வது, சிற்பச் சிவகணங்கள் அல்ல உயிருள்ள மாவீரர்கள் என்பதைக் காட்டிக்கொடுக்கவே செய்தது.

இங்கே இப்படியென்றால், பொற்றாமரைக் குளத்திலோ வேறோர் அற்புதம் நிகழ்ந்தது. மீன்களே வசிக்காத அந்தக் குளத்தில், திடுமென தோன்றிய மீன்கள் துள்ளவும் செய்தன!

மீன்களே வசிக்காத திருக்குளமா?

ஆம், அதுவொரு புண்ணியக் கதை.

மாமதுரைக்கு அருகிலுள்ள கிராமத்தின் குளத்தில் நாரை ஒன்று வசித்தது. விதிவசத்தால் அந்தக் குளத்தில் நீர் வற்றிப்போகவே, இரை தேடி பறந்த நாரை ஒரு வனத்தை அடைந்தது. அங்கிருந்த தாமரைக் குளத்தில் முனிவர் ஒருவர் மூழ்கி எழுந்தார். அவரின் சடாமகுடத்தில் மீன்கள் துள்ளி விளையாடின.

ஒரு கணம் அவற்றை இரையாக்கிக்கொள்ள நினைத்த நாரை, மறுகணம் தன் மனதை மாற்றிக்கொண்டது. முனிவரின் மேனியில் படுவதற்கு அந்த மீன்கள் தவம் செய்திருக்கவேண்டும். அவற்றைக் கொல்லுதல் கூடாது என்று முடிவெடுத்தது. அந்த முனிவரும் அவரைச் சார்ந்தாரும் அனுதினமும் மதுரையின் மேன்மைகளைக் குறித்து கலந்துரையாடுவதைச் செவிமடுத்த நாரைக்கும் மதுரைக்குச் செல்ல ஆசை பிறந்தது. விரைவில் மதுரையை வந்தடைந்தது.

மாமதுரையின் பொற்றாமரைக் குளத்தில் நித்தமும் நீராடி, சோமசுந்தரனை வலம் வந்து வழிபட்டு மகிழ்ந்தது. ஒருநாள், பொற்றாமரைக் குளத்தின் கரையில் ஒரு மீனைக் கண்டது. முதலில் அதை உண்ண விரும்பிய நாரை, பிறகு அறம் நிலைத்திருக்கும் திருக்குளத்தில் வசிக்கும் மீன்களை உண்ணுதல் பாவம் எனக் கருதி, தன் ஆசையை அறுத்தது. எனினும் பசியால் வருந்தித் தவித்தது.

பரமன் மனம் கனிந்தார். நாரைக்குக் காட்சி தந்து ``வேண்டும் வரத்தைக் கேள்’’ என்றார். சிவபதத்தைக் கோரியது நாரை. அப்படியே அருளியது சிவப்பரம்பொருள். அத்துடன், நாரை இனம் முதலான வேறு பறவைகளும் புண்ணியம் மிகுந்த பொற்றாமரைக் குளத்தில் வாழும் உயிர்களைத் தின்று அபவாதத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்று திருவுளம்கொண்டு, இந்தக் குளத்தில் மீன்கள் முதலான நீர்வாழ் உயிர்கள் எதுவும் இனி இருக்காது - வசிக்காது என்று திருவருள் புரிந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 28

எனில், இப்போது மட்டும் சிவனாரின் அருள்வாக்கு பொய்த்துப் போனதா என்ன... அங்கே மீன்கள் வந்தது எப்படி?

இல்லை! பொற்றாமரைக் குளத்தில் நிகழும் சம்பவத்தை தரிசித்தால் உங்களுக்கு உண்மை புரியும்.

பொற்றாமாரைக் குளத்தின் தெள்ளிய நீர்ப்பரப்பில் முதலில் தோன்றியவை சலனத்துடன்கூடிய சிற்றலைகள்; தொடர்ந்து சில நீர்க் குமிழிகள். அடுத்து அந்தக் கயல் உருவங்கள்.

ஆம்! ஆலய மணியோசை எழும்பியதும், சட்டென்று நீர்ப்பரப்பில் சிறு சலனத்தை உண்டாக்கியபடி எழுந்தது கரியநிறப் பேருருவம் ஒன்று. நீர்ப்பரப்பில் தலைகாட்டியதும், அதுவரையிலும் மூச்சடக்கிக் கிடந்ததால் ஏற்பட்ட சுவாசச் சிரமத்தைக் களையும் விதம், காற்றைப் பெரிதாய் உள்ளிழுத்து வெளியேற்றியது அந்த உருவம்.

அதன் விளைவாகவும், குளத்து நீர் அளித்திருந்த குளிர்ச்சியாலும் அந்தக் கரிய உருவத்துக்குரியவனின் கனத்த தேகம் ஒருமுறை குலுங்க, அவரின் புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருந்த கயல் உருவங்களும் மேலும் கீழுமாய் அசைந்தன. அந்தக் காட்சியே, நீர்ப்பரப்பில் உயிருள்ள மீன்கள் துள்ளிக்குதிப்பது போல் இருந்தது!

அந்தக் கரிய உருவத்தினன் நீர்ப்பரப்பிலிருந்து வெளியேறவும் பேரமைச்சர் குலச்சிறையார் குளத்தின் படிக்கட்டுகளை அணுகவும்   சரியாக இருந்தது. பெருங்குளிரிலிருந்து விடுபட தணலை நாடுபவன் போன்று, குளிர் பொருந்திய குளத்திலிருந்து விடுபட்டு, மறக்கருணை துலங்க தகிப்புடன் நின்றிருந்த குலச்சிறையாரை நாடி, அவரின் பாதங்களில் தன் சிரத்தைப் பொருத்தி வணங்கினான் அந்த வீரன்.

அவன் சிரம் பற்றிய குலச்சிறையாரின் கரம், ஈரம் தோய்ந்த அவன் கேசத்தில் விரல்களை நுழைத்து வெகுஆதூரத்துடன் கோதிவிட்டது. மதில் தாண்டி வந்த வைகை தீரத்துக் காற்றும் தன் பங்குக்கு அவன் முகம் தீண்டிச் சென்றது.

அடுத்தடுத்து அங்கே நிகழப்போகும் சம்பவங் களைக் காணும் பேராவலுடன், மாமதுரையின் வான்பரப்பில் தன் விழிகளை விண்மீன்களாக்கிக்  கண்கொட்டாமல் விழித்துக் காத்திருந்தது காலம்!

கோயிலுக்கு  வெளியே தலைநகரத்தில் ஆங்காங்கே அல்லங்காடிகள் துடிப்புப்பெறத் தொடங்கியிருந்தன. அவற்றிலும் முத்துக்கூடங்களில் அரவம் அதிகமாயிருந்தது.

கொற்கை வணிகத்தை முடித்துவிட்டு, தலைநகரைச் சுற்றிப்பார்க்கப் புறப்படும் வணிகர்களும் பயணிகளும் இங்கே வந்து சேரும் நேரமும் ஏறக்குறைய இந்த முன்னிரவுப் பொழுதாகவே இருக்கும். அதன்பொருட்டு அனுதினமும் அந்த நேரத்தில் தலைவாயில் பரபரப்புடன்  காணப்படும். இப்போதும் அதே பரபரப்பு தலைவாயிலில்.

பயணிகளின் வண்டிகள் மட்டுமின்றி, வணிகர் களின் பார வண்டிகளும் கோட்டை வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் மேற்கொண்டு கவனம் செலுத்தாதவனாக, அடுத்து செய்யவேண்டியது குறித்த சிந்தனையோடு நடந்துகொண்டிருந்தான் இளங்குமரன்.

`பாண்டிமாதேவியார் கொடுத்தனுப்பிய தகவலை, விரைவில்  மாமன்னரிடம் சேர்த்தாக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து.  அவரோ அரண்மனையில் இல்லை. வேறு எங்கு உறைகிறார் என்பதும் தெரியவில்லை. என்ன செய்வது...’ ஆழ்ந்த சிந்தனையோடு ஓட்டமும் நடையுமாக நகர்ந்துகொண்டிருந்தவனை, சட்டென்று மறித்தது இரும்புக்கரம் ஒன்று. இளங்குமரன் சுதாரிப்பதற்குள் அந்தக் கரம், கழுத்தோடு சேர்த்து வளைத்து அவனை இறுகிப் பிடித்துக் கொண்டது. இரும்புப் பிடியிலிருந்து விடுபட யத்தனித்துத் திமிறினான் இளங்குமரன்; அந்த முயற்சி தோல்வியில் முடிய, மூச்சு விடவும் திணறினான் பிறகு.

வலுவான அந்தக் கரத்தின் சொந்தக்காரனோ, தனது மற்றொரு கரத்தால் இளங்குமரனின் இடைக்கச்சையைத் துழாவினான். அவன் தேடிய - மகாராணியாரின் ரகசியத்தைத் தாங்கிய அந்த ஓலை நறுக்குக் கிடைத்ததும், பிடியைத் தளர்த்தி இளங்குமரனைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளினான்.

நிலைகுலைந்து தரையில் விழுந்த இளங்குமரன், ஒருவாறு சமாளித்து எழுந்தபோது, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனின் முகத்தைக் கண்டான்; அதிர்ந்தான்!

- மகுடம் சூடுவோம்...

-ஆலவாய் ஆதிரையான்

ஓவியங்கள்: ஸ்யாம்