ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

‘சிற்பியரைக் கூட்டி வந்து சிற்பங்களைச் செய்யச்சொல்லி கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவ ராஜா...’ என்று மெள்ள முணுமுணுத்த படியே வந்த நாரதருக்கு முதலில் மோர் கொடுத்து உபசரித்தோம். அவர் பருகி முடித்ததும், ``என்ன நாரதரே, மாமல்லபுரம் போய் சிற்பங்களைப் பார்த்து வந்தீர்களா'’ என்று கேட்டோம்.

“ஏன், சிற்பங்கள் மாமல்லபுரத்தில் மட்டும்தானா இருக்கின்றன’’ என்று எதிர்க்கேள்வி கேட்ட நாரதர், தொடர்ந்து,  ‘`நண்பர் ஒருவர் அழைத்ததால், திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயிலுக்குப் போய் வந்தேன். அழகழகான சிற்பங்கள் நிறைந்திருக்கும் கலைக்கோயில் அது’’ என்றார் நாரதர்.

‘`உண்மைதான். நாமும் அந்தக் கோயிலுக்குப் போய் வந்திருக்கிறோம். உலகப் பிரசித்திபெற்ற பல சிற்பங்களை நாமும் கண்டிருக்கிறோம். அது சரி, இப்போது அந்தச் சிற்பங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளனவா, என்ன?’’

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

‘`அது பற்றி விரிவாகச் சொல்கிறேன். அதற்கு முன், கிருஷ்ணாபுரம் சிற்பங்களின் பெருமைகளைப் பற்றி நண்பர் கூறிய சில விஷயங்களைக் கூறுகிறேன் கேளும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உட்பட பல தலைவர்களால் பாராட்டப்பட்ட சிற்பச் சிறப்புக்குரியவை கிருஷ்ணாபுரம் சிற்பங்கள். இத்தாலியப் பேராசிரியர் `ஃபாதர் ஹிராஸ்' இந்தச் சிற்பங்களைக் கண்டு வியந்ததோடு, வணங்கிப் போற்றியுமிருக்கிறார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 16-ம் நூற்றாண் டில் படைக்கப்பட்ட  இந்தச் சிற்பங்களைக் கண்ட மேலைநாட்டு அறிஞர் பெர்சி பிரௌன் என்பவர், ‘விஜயநகர மன்னர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பங்கள் எல்லையற்ற அழகுடனும், நேர்த்தியான வேலைப்பாடு களுடனும் அமைந்திருப்பது, என்னை மிகவும் வியப்புறச் செய்கிறது’ என்று போற்றியிருக்கிறாராம்.’’

‘`நீர் அங்குள்ள சிற்பங்களைப் பார்த்தீர்களா?’’

‘`இது என்ன கேள்வி. அவ்வளவு தூரம் போய் விட்டு சிற்பங்களைப் பார்க்காமல் வருவேனா’’ என்று எதிர்க்கேள்வி கேட்ட நாரதர் தொடர்ந்து, ‘`உள் மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, புருஷாமிருகம், பீமன், தர்மர், இலங்கை இளவரசி என்று பல சிற்பங்கள். மன்மதன் கையிலுள்ள கரும்பு வில்லின் மேல் நுனியில் ஒரு துளை இருக்கிறது. அதில் குண்டூசி ஒன்றைப் போட்டால், அது உள்வழியாக வந்து அடிப்பக்கத்தில் விழுவது மிக அற்புதம்! ஆனால், அந்தச் சிலை இப்போது உடைந்து காணப்படுகிறது'' என்று ஆதங்கப்பட்ட நாரதர், அங்கு தான் கண்ட குறைகளையும் அவை குறித்த பக்தர்களின் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார்.

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

‘`அற்புதமான அந்தச் சிற்பப் பொக்கிஷங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்று வருத்தப் படுகிறார்கள் பக்தர்கள். உடைந்து காணப்படும் சிலைகளை முறைப்படி புனரமைப்பு செய்வதிலும் சுணக்கம் காட்டுகிறார்களாம்''

``சிற்பங்களை எவரும் சிதைத்துவிடாதபடி கம்பி வலை போட்டு பாதுகாப்பாகத்தானே வைத்திருக்கிறார்கள்?''

``உண்மைதான். அதேநேரம், உரிய பராமரிப்பும் அவசியம் அல்லவா? அதுமட்டுமல்ல, சிற்பங் களைக் காண வரும் மக்களுக்குச் செய்து தர வேண்டிய சில விஷயங்களை குறித்தும், பக்தர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் அங்குள்ள நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

`உலகம் முழுவதுமிருந்து கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்களைப் பார்க்க பலபேர் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் அந்தச் சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றி விளக்குவதற்குத் தமிழ், ஆங்கிலம் தெரிந்த கைடுகளை அவசியம் நியமிக்கவேண்டும். அதேபோல் சிற்பங்களைப் பார்வையிடும் நேரத்தையும் காலை 6 முதல் 8 மணி வரை என்ற அளவுக்கு அதிகப்படுத்தி, வழிபாட்டுக்கு இடையூறு இல்லாமல் மக்களும் மாணவர்களும் சிற்பங்களைக் கண்டு ரசிக்க வழி செய்யவேண்டும். சிற்பங்களின் சிறப்புகள் குறித்த விளக்கப் பலகைகளும் வைக்கப்படவேண்டும்' என்று நீள்கிறது அவர்களது பட்டியல்'' என்றார்.

“உமது அனுபவத்தைச் சொல்லும்''

 ``நான் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றிருந்த நேரத்தில்,சென்னையிலிருந்து சிலர் வந்திருந்தார் கள். அவர்களில் சிலர், நுண்கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.

நாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா?

அவர்களில் ஒருவர், ‘உலகத் தரம் வாய்ந்த இந்தச் சிற்பங்களை முறைப்படி பராமரிப்பதுடன், தூய்மையாக வைத்திருக்கவும் போதுமான பணியாளர்களை நியமிக்கவேண்டும். இதற்காகத் தனி அலுவலகம்கூட ஏற்படுத்தலாம். இதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,  திருப்புடைமருதூர், திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களிலும் சிற்பங்கள் மற்றும் கோபுரங்களின் உள்ளே உள்ள மியூரல் வகை ஓவியங்கள், மரச் சிற்பங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்' என்றார்.''

பேசி முடித்த நாரதரிடம் அவரது சதுரகிரி பயணத் திட்டம் குறித்து கேட்டோம்.

‘`பயண ஏற்பாடுகள் தயார். விரைவில் சதுரகிரிக் குச் செல்லப்போகிறேன். நேரில் சென்று வந்த பிறகு, சகல விவரங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

முன்னதாக ஒரு தகவல். சதுரகிரி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தடையை நீக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தோம் அல்லவா. தற்போது, காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்துக்கு மட்டும் அன்னதானம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாம்.மற்ற விஷயங்களை நேரில் சென்று விசாரித்து வந்து சொல்கிறேன்’’ என்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் ஒலித்தது.

எடுத்துப் பேசிய நாரதர், ``சதுரகிரி மட்டுமல்ல, நெல்லைச் சீமைக்கும் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது'' என்றபடியே விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...