Published:Updated:

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

Published:Updated:
வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்
வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, அழகில் சிறந்த மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த மலைப் பகுதி, தற்போது சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்துபரந்துள்ள தேயிலை எஸ்டேட்டுகளின் பசுமைச் செழிப்பு கண்கொள்ளாக் காட்சி!

மேகமலை, சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு மட்டுமல்ல, ஆன்மிக அன்பர்களுக்கும் மிகவும் பிரியமான தலமாகத் திகழ்கிறது. காரணம், அங்கே அமைந்திருக்கும் வழிவிடும் முருகன் கோயிலும் கௌமாரியம்மன் கோயிலும்தான்.

நாமும், ஒருநாள் அதிகாலை மேகமலைக்குப் புறப்பட்டுச் சென்றோம். நான்கைந்து மலைச் சிகரங்களின் நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்குப் பகுதி அது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சதாசர்வ காலமும் மேகங்கள் சூழ்ந்து ஆட்சி செய்யும் மலை என்பதால், ‘மேகமலை’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

வழிவிடும் முருகன் கோயில்

மேகமலைப் பயணத்தின்போது நாம் முதலில் தரிசித்தது, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயில்.  மலையடிவாரத்தில் முருகக்கடவுள் கோயில் கொண்டதன் பின்னணியில், ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்த பூசாரி மணி, நம்மிடம் சொன்ன அந்தச் சம்பவம்...

‘`யார் மேகமலைக்கு வந்தாலும், மலையடிவாரத் திலுள்ள வழிவிடும் முருகனை தரிசித்துவிட்டே செல்வார்கள். அதனால், மலைப்பாதையில் வரும் ஆபத்துகளை முருகக்கடவுள் போக்கிவிடுவார் என்பது அவர்களின் உறுதியான நம்பிக்கை’’ என்றவர், தொடர்ந்து அங்கே கோயில் ஏற்பட்டது எப்படி என்பது பற்றியும் கூறினார்.

வெள்ளை அடித்துக்  காவி பூசப்பட்ட பெரிய பாறையை நம்மிடம் காட்டியபடி பேசத் தொடங்கிய மணி, ‘`மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களி லிருந்து மக்கள் சென்று வருவார்கள். சிலர் அங்கேயே தங்கி வேலை பார்ப்பார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், டீ எஸ்டேட் களுக்குச் செல்லவேண்டி, மலையில் பாதை அமைத்தார்கள். சுதந்திரம் பெற்ற பிறகு இந்த எஸ்டேட்கள் எல்லாம் தனியார் கைகளுக்குச் சென்றுவிட்டன. ஆள்களும் அதிக அளவில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். எனவே, பாதையை அகலப்படுத்தலாம் என்று முயற்சி செய்தபோது இந்தப் பாறை குறுக்கிட்டது.

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

இந்தப் பாறையை உடைக்க நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சக்தி பாறையை உடைக்க விடாமல் தடுத்ததாம். அருகிலிருந்த தென்பழநி மக்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, இந்தப் பாறை தெய்விகச் சக்தி கொண்டது என்று நினைத்து வழிபடத் தொடங்கிவிட்டார்கள். எஸ்டேட் வேலைக்குச் செல்பவர்கள், இந்தப் பாறையின் அடியில் காசு போட்டு வணங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.

பின்னர் 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்க சிலை மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். தைப்பூச நாளில் சின்னமனூரிலிருந்து கோயிலுக்குச் சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன. இங்கே, தினமும் அன்னதானம் வழங்குகிறோம்.

கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன்’’ என்று சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமாகக் கூறினார். முருகனுக்கு வலப்பக்கம் சிவலிங்கமும் இடப்பக்கம் நாகர் சிலையும் அமைந்திருக்கின்றன. அவற்றின் அருகே ஒரு பக்தர் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கண்களை மூடிப் பிரார்த்திப்பதைப் பார்த்து, பூசாரி மணியிடம் விவரம் கேட்டோம்.

‘`ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதீகம்’’ என்றார்.

வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். நாமும் நம்முடைய மேகமலைப் பயணம் இனிமையாகத் தொடரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வழிவிடும் முருகனை வழிபட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் மேகமலையை அடைய மலைப்பாதை வழியாகப் பயணம் செய்யவேண்டும். பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை, போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது. பேருந்துகள் மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும்  நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், வேறு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்!

மிக அழகான சற்றே சாய்வான நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர்த் தோட்டங் களின் பசுமைச் செழிப்பை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்கவே செய்யாது. உயர்ந்த மலை, ஆழமான பள்ளத்தாக்கு, அழகிய ஏரி என்று பல இயற்கையழகுகள் கொட்டிக்கிடக்கும் அழகு பூமிதான் மேகமலை. அங்கங்கே யானைகள், காட்டு மாடுகள், மான்கள் ஆகிய விலங்குகளையும் பார்க்கலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளைப் பக்குவப்படுத்த ஒரு தொழிற் சாலை அமைக்கப்பட்டிருந்ததாம்.

சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத் துக்குப் பிறகு நாம் மேகமலையை அடைந்தோம். மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில்.

ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்தத் திருக்கோயில்..

கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள். இவளுக்குச் சஷ்டி, தேவசேனா என்ற பெயர்களும் உண்டு. எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான இவள், மயில் வாகனத்தில் வருபவள். திதிகளில் சஷ்டி திதிக்கு உரிய தேவியும் இவளே. கெளமாரி எனவும் போற்றுவர். கடலின் வயிறு கிழியுமாறு வேல் படையை செலுத்தியவள் கௌமாரி. இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்; எப்போதும் இளமையுடன் காட்சி தரலாம். வீரத்துக்கும் இவளே தெய்வமாகத் திகழ்கிறாள். முருகக் கடவுள் அசுரனை சம்ஹாரம் செய்யச் சென்றபோது, முருகனின் சக்தியாக சென்றவள் கௌமாரி என்கின்றன புராணங்கள்.

கௌமாரியம்மன் கோயில் கொண்ட வரலாறு பற்றி மேகமலை கிராம மக்களிடம் கேட்டோம்.

“வெள்ளைக்காரன் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்கவேண்டி, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற வெள்ளைக்கார உயர் அதிகாரியான டைமண்ட் என்பவர்தான், எங்கள் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வோம்.

சித்திரை மாதத்தில் திருவிழா எடுப்போம். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். பத்து வருடங்களுக்கு முன்புதான் மேகமலையின் கிராமங் களைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்தோம். எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாத்துக்கும் துணையா இருக்கறவ இந்த கெளமாரியம்மன்தான்” என்று நெகிழ்ச் சியோடு பேசினர் மேகமலைக் கிராம மக்கள்.

கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் கண்டு திரும்பினோம். சுற்றுலாப் பயணமாக மேகமலைப் பயணத்தைத் தொடங்கிய நமக்கு, அந்தப் பயணம் அற்புதமான, ஆனந்தச் செறிவான ஆன்மிகப் பயணமாகவும் அமைந்து, மனதை நிறைத்தது!

- எம்.கணேஷ் 
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

எப்படிச் செல்வது?

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்

தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து  மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். ஜீப் போன்ற வாகனங் களைப் பயன்படுத்தினால், அதிகக் கஷ்டம் இல்லாமல் மலைப்பாதையில் பயணிக்கலாம்.

வனத்துறை அனுமதி: சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6  மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

மேகமலை திருக்கோயில்களை தரிசிக்க...   இங்குள்ள QR Code-ஐ பயன்படுத்தவும்.

வாழ்வுக்கு வழிகாட்டும் மேகமலை முருகன்