மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 4

புண்ணிய புருஷர்கள் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள் - 4

புண்ணிய புருஷர்கள் - 4

திருமறைக்காடு எனும் திருத்தலம். அங்கே கோயில் கொண்டிருக்கும் திருமறைக்காடரின் திருச்சந்நிதியிலிருந்த விளக்கொன்று சுடர்மங்கித் திகழ்ந்தது. இந்த நிலையில் எலியொன்று வந்து சேர்ந்தது. இறையைத் தேடி வந்ததோ, இரையைத் தேடி வந்ததோ தெரியவில்லை... அந்த எலி, தன்னையுமறியாமல் விளக்கின் திரியைத் தூண்டிவிட, தீபம் பிரகாசம் பெற்றது. தன்னையுமறியாமல் எலி செய்த அந்தத் திருத்தொண்டுக்குக் கிடைத்த பேறு என்ன தெரியுமா?

புண்ணிய புருஷர்கள் - 4

அடுத்த ஜன்மத்தில் மகாபலி எனும் மாமன்னனாகப் பிறப்பெடுத்தது என்கின்றன புராணங்கள்.

அறியாமல் செய்த சிறுத்தொண்டுக்கே இப்படியான பேறு வாய்த்தது எனில், சகலமும் சிவார்ப்பணமாகச் செய்யப்படும் அடியார்களின் திருத்தொண்டுகளுக்கு எவ்வளவு பெரும் புண்ணியம் கிடைக்கும்?! ஆனால், அப்படியான புண்ணிய பலன்களையும் எதிர்பார்க்காமல் திருத்தொண்டாற்றி வரும் அடியார்களின் சிவப்பணியை என்னவென்பது?

வேலூர் மாவட்டம் சங்கரன்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் மட்டுமன்றி, இவரின் தாய், தமையன்கள், மனைவி, குழந்தைகள் இருவர் என ஒட்டுமொத்தக் குடும்பமும் எவ்வித பிரதிபலனும் கருதாமல், சிவப்பணிக்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்கிறார்கள், உழவாரப் பணியையே தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறார்கள் எனும் தகவலை அறிந்து வியந்து அவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.

எங்களைக் கண்டு வணங்கியவர், நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை அறிந்ததும், "இந்த நாயேனை விசாரித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எல்லாம் நாதன் செயல்,. அவனே போற்றுதலுக்குரியவன்'' என்றவர், கம்பீரமாகக் குரலெடுத்துப் பாடினார்.

 `நான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள் ஆர், என்னை ஆர் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்...''

- மாணிக்கவாசகர் அருளிய திருக்கோத்தும்பிப் பாடல், நம் உள்ளத்தைக் கசிந்துருகச் செய்தது.

மலைக்கவைக்கும் பெரும்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் அந்த அடியார், அனைத்துக்கும் காரணம் அந்த மகேசனே என்று சொன்னபோது, அவருள் நிறைந்திருக்கும் இறைபக்தியை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது. கங்கையின் மகிமையை கங்கையே சொல்லவேண்டுமா என்ன... அனுபவித்தவர்களின் அனுபவம் சொல்லுமே அதன் புனிதத்தை! அவ்விதமாகவே, அந்த அடியாரின் அருள் பணிகளை, அவர் குடும்பத்தாரின் திருத்தொண்டுகளைப் பற்றி அவரின் அணுக்கர்கள் சிலரும், உடன் பணியாற்றும் அடியார்கள் பலரும் பரவசத்தோடு பகிர்ந்துகொண்டார்கள்.

``இவருக்குச் சொந்தமாக சம்பங்கிப் பூந்தோட்டம் இருக்கிறது. அதில் விளையும் மலர்கள் எல்லாம் ஈசனின் பூசைக்குப் போக  எஞ்சியவையே விற்பனைக்குப் போகின்றன. அதுமட்டுமா, அடியவர் தாமோதரனிடம் உள்ள டூரிஸ்டர் வேன், இரண்டு லோடு வண்டிகள், டிராக்டர்  ஆகிய வாகனங்கள் அனைத்தும் சிவப்பணிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவை. வசதியில்லாத தொண்டர்களுக்கு, இவரே வண்டியோட்டி, டீசலும் போட்டு, உழவாரப் பணி நடைபெறும் இடங்களுக்கும், சிவாலய யாத்திரைக்கும் அழைத்துச் செல்கிறார்'' என்கிறார்கள் அன்பர்கள். அவர்களே தொடர்ந்து,

`'பல திருத்தலங்களுக்கும் சிவாலயப் பணிக்காகச் சென்று வருகிறோம். ஆனால், தாங்கள் வசிக்கும் சங்கரன்பாடியில் ஒரு கோயில் இல்லையே என்று ஏங்கி, தற்போது அடியார் குழுவோடு இணைந்து, அவ்வூரில் ஓர் ஆலயம் எழுப்பவும் தொடங்கியுள்ளார். அதற்காகத் தனது குடும்ப நிலத்தையும் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல, எந்த அடியார் எப்போது வந்து, என்ன உதவி கேட்டாலும் முடிந்ததைச் செய்து தருகிறார், தாமோதரன் ஐயா'' என்கிறார்கள் இந்த அடியவரைப் பற்றி நன்கறிந்த சக அடியார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 4

இப்படியான இவரின் அரும்பணிகள் 15 ஆண்டுகளாகத் தொடர்கின்றன. இந்த பக்திக்கும் பணிகளுக்குமான உந்துதல் என்ன என்பது குறித்து அவரிடமே கேட்டோம்.

" எட்டாவது வரை படித்துவிட்டு, பட்டு நெசவு வேலை செய்துகொண்டிருந்தேன். சிறுவயது முதலே எனக்கு ஈசனிடம் மிகுந்த பிரியமுண்டு.  15 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியவர் ஒருவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் சொன்னபடி, நெசவுத் தொழிலை விட்டுவிட்டு, கட்டுமானப் பணிக்கு வந்தேன்.  அந்தத் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. அந்தத் தொழில் தொடர, எனது சிவ வழிபாடும் தொடர்ந்தது.

ஒருநாள் இரவு, காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் வந்துகொண்டிருந்தேன். ஏதேதோ யோசித்தபடி நடந்து வந்த நிலையில், எனக்குள் ஒரு  கேள்வி. 'மனிதர்கள் நன்றாக இருக்கும்போது இறைவனை நாடுவதில்லை. ஏதேனும் பிரச்னை  வந்தால் மட்டும், அவனைத் தேடி ஓடுகிறார்கள். இதென்ன நியாயம்' என்று என்னுள் எழுந்த கேள்வியால் மனம் வெதும்பினேன். சட்டென்று என்னையுமறியாமல் எனக்குள் ஒரு வேகம்...

 உடனே எனக்கு வழிகாட்டியாக இருந்த பெரியவரைத் தொலைபேசியில் அழைத்து ஏதோ ஒரு வேகத்தில், 'ஐயா, நீங்கள் கட்டிக்கொண்டு வரும் சிவாலயத்தில் பணி செய்ய விரும்புகிறேன், வரலாமா' என்று கேட்டேன். அவரும் உடனே வரச் சொல்ல, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் நல்லூரில் கறுப்பணீஸ்வரர் ஆலயத்தில் என் முதல் பணியைத் தொடங்கினேன்.  அங்கேயே கும்பாபிஷேகம்வரை திருப்பணியைத் தொ டர்ந்தேன். அதன் பிறகு தமிழகமெங்கும் பல ஆலயங்களில் திருப்பணிகள் செய்தோம்.

எங்கள் அடியார்கள் குழு பெருகிக்கொண்டே வந்தது. ஆலயங்களைப் புனரமைப்பது மட்டுமல்ல, மலர் அலங்காரம் செய்வதும் எங்கள் விருப்பமான செயலாக இருந்தது. என்னுடைய சிவப்பணிக்கு எந்தத் தடையும் சொல்லாமல், என் குடும்பமே உதவி செய்தது. பொருளாதார ரீதியாகக்கூட கஷ்டப்படாமல் என் சிவம் என்னைப் பார்த்துக்கொண்டது.  காற்று அடித்துக்கொண்டு போகும் காகிதம்போல என் வாழ்க்கை ஈசனை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஐயா எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகும் எங்கள் திருப்பணிகள் தொடர்ந்தன. அதேநேரம், எங்களுடைய தொண்டுகளையும் வழிபாடுகளையும் முறைப்படிச் செய்கிறோமா என்கிற நெருடல் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த இறைவன்தான் இதற்குத் தீர்வு சொல்லவேண்டும் எனத் தீர்மானித்தேன். அவனையே மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டு, `என்னைத் தேடி எந்த உருவிலாவது நடராஜப் பெருமான் வரவேண்டும். அப்படி வந்து சேர்ந்துவிட்டால், நாங்கள் செய்யும் பணிகளில் எவ்வித குறைகளும் இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன்' எனச் சங்கல்பித்துக்கொண்டேன்.

 அன்று மாலையில், அன்பர் ஒருவர் திருவாரூருக்குத் தாமரை மலர்களைக் கொண்டு செல்கிறார் என்று கேள்விப்பட்டேன்.  அவரிடம் வேண்டி விண்ணப்பித்து, எங்கள் தோட்டத்து சம்பங்கி மலர்களையும் மாலைகளாகத் தொடுத்து வண்டி நிறைய கொடுத்து அனுப்பினேன். மறுநாள் திருவாரூரிலிருந்து வந்தவர், ஒரு சிறு பார்சலைக் கொடுத்தார். அதில் ஒரு சிறிய நடராஜரின் திருமேனி இருந்தது. உள்ளம் சிலிர்த்தேன் நான். எங்கள் பணிகளில் எவ்விதக் குறைகளும் இல்லை என்று அந்த ஈசனே ஏற்றுக்கொண்டுவிட்டார் எனும் பெரும் திருப்தி எனக்கு'' என்றவரிடம், அடியார்களுக்கு வாகனங்கள் தந்து உதவும் பணியைக் குறித்து கேட்டோம்.

புண்ணிய புருஷர்கள் - 4

``உழவாரப் பணியில் ஒவ்வோர் அடியாரும் ஒரு கைங்கர்யம் செய்ய, என்னை இந்த வாகனங்களைத் தந்துதவும்படிச் செய்து விட்டான் ஈசன். இவை எல்லாமே சிவன் சொத்து. இவற்றைப் பாதுகாப்பது மட்டுமே என் வேலை. சிவப்பணியைத் தவிர வேறு எந்தப் பணிக்கும் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை'' என்கிறார் புன்னகையோடு. அவரே தொடர்ந்து சங்கரன்பாடி கிராமத்தின் ஆலயப்பணியைப் பகிர்ந்துகொண்டார்.

''சங்கரனை, சகலரும் வந்து பாடித் தொழுத ஊர் என் ஊர். ஆனால், காலத்தின் கொடுமையே போல் இப்போது இங்கு ஆலயமே இல்லை.  ஈசனடியாராகிய எங்களுக்கு இது பெரும் இழுக்கு என்று ஓர் உறுத்தல் இருந்து வந்தது. இப்போது எங்கள் ஊருக்கும் ஈசன் வந்துவிட்டார். 'சக்தி விகடன்' நடத்திய சிவராத்திரி வைபோகத்தில் கொண்டாடப்பட்ட லிங்கத்திருமேனியே இங்கு வந்துள்ளது, கூடுதல் சிறப்பு. இதோ ஈசனுக்கு ஓர் ஆலயம் எழுப்பத் தீர்மானித்துவிட்டோம். வேகமாகத் திருப்பணிகள் நடைபெறுகின்றன" என்றார் நெகிழ்ச்சியோடு.

அப்போது காற்றும் மழைத்தூறலும் வலுக்கத் தொடங்கியது. அங்கும் இங்கும் ஓடித் தடுப்பு களைக் கொண்டு வந்து லிங்கத்திருமேனியை பாதுகாத்தவர், "பெம்மானே, பேருலகின் பெருமானே, எங்கோ பிரமாண்ட கருவறையில் இருக்க வேண்டிய நீ, இந்த எளியோர்களுக்காகக் காற்றிலும் மழையிலும் அவதிப்படுகிறாயே..." என்று உணர்ச்சிப்பெருக்கில், தன்னையே மறந்து புலம்பினார். அவர் இந்த உலகில் இல்லை, சிவப்பரம்பொருளோடு பேசிக்கொண்டிருக் கிறார் என்று உணர்ந்து நாங்களும் தொந்தரவு செய்யாமல் கிளம்பினோம். மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது தாமோதரனுக்காக...

-  அடியார்கள் வருவார்கள்...

-மு.ஹரிகாமராஜ் , படங்கள்: பெ.ராகேஷ்

வாழ்க்கையின் பொருள்

சக்தி விகடன் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முருகப்பெருமான் திருவருள் முன்நிற்க.

புண்ணிய புருஷர்கள் - 4

'புண்ணிய புருஷர்கள்' தொடர்கட்டுரை வாழ்வின் பயனை உணர்த்தும் சிந்தனைக்குரிய தொடர். 'மண்ணில் பிறந்தார் பெரும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்' என்று சேக்கிழார் பெருமான் திருமயிலையில் பூம்பாவை உயிர் பெற்றெழுந்த வரலாற்றில் பாடுவார். திருஞானசம்பந்தரின் மயிலைப் பதிகத்திலும் 'ஒட்டுஇட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாது போதியோ பூம்பாவாய்' என்று பாடும்போது, 'அட்டு இட்டல்' என்பது தமது இல்லத்தில் சமைத்து அளிப்பது என்பதாகும். வெளியே வாங்கி உணவளித்தல் என்பதல்ல. சிவனருட் தொண்டர் சீனிவாசன் அவர்களின் அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் அற்புதமான அறப்பணியை (படத்திலும் பார்த்து) படிக்கும்போது நெகிழ வைத்துவிட்டது.

'வாழ்க்கைக்குப் பொருள் தேவைதான். ஆனால், வாழ்வதிலும் பொருள் வேண்டாமா!' என்ற பொன்மொழிக்கேற்ப எத்தனையோ அன்பர்கள் அர்த்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரியான புண்ணிய புருஷர்களைத் தேடி, சந்தித்து, நமக்கு அவர்களுடைய  ஆத்மானுபவங்களை வழங்கும் கட்டுரை ஆசிரியரின் முயற்சியும் ஆர்வமும் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் இல்லத்தில் ஆதிரை நாளில் சிவபெருமான் களி உண்ட செய்தியை வரலாற்றில் படித்து இன்புறுகிறோம். அதைப்போல எந்த எதிர்பார்ப்பும் பிரதிபலனும் தேடாமல் அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் அருட்தொண்டர் சீனிவாசனின் இல்லத்திற்கும் இறைவன் ஒருநாள் வருவான்; புசிப்பான்; வரலாற்றில் பதிவாகும்.

பாராட்டுகளுடன், திருப்புகழ் அமுதன்
வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்