Published:Updated:

லட்சம் தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவன்... கீளப்பட்டு கிராமத்தில் பரவசம்!

"பக்தர்களின் காணிக்கையால்தான் மகா சிவராத்திரியை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட முடிகிறது. இந்த ஆண்டு கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தேங்காய்களால் 80 அடி உயரத்திற்குச் சிவரூபம் அமைத்திருக்கிறோம்."

லட்சம் தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவன்... கீளப்பட்டு கிராமத்தில் பரவசம்!
லட்சம் தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவன்... கீளப்பட்டு கிராமத்தில் பரவசம்!

நாளை மகா சிவராத்திரி. இந்த நாள் ஈசன் வழிபாட்டிற்கு உகந்த நாள். சிவன் பக்தர்கள் விரதமிருந்து இறைவனை வழிபடுவர். எல்லா சிவதலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இது நாமெல்லோரும் அறிந்ததுதான். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மெய்சிலிர்க்கும் வகையில்  மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதை ஒரு கிராமம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், நகரில் உள்ள கீளப்பட்டு என்ற கிராமத்தில்தான் இந்த அதிசயம். இந்த ஆண்டு ஒரு லட்சம் தேங்காய்களால் ஆன 80 அடி உயரம் கொண்ட சிவரூபம் அமைத்து சிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் அந்தக் கிராம மக்கள். கீளப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில், 2012 மார்ச் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. குருபகவான் இரு சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பதே இந்த ஆலயத்தின் சிறப்பு. கோயிலில் நுழைந்ததும், அன்னை லோபமுத்ராதேவியுடன் அகஸ்தீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். 

ராஜகணபதி, ஐயப்பன், சண்டீஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, ஆஞ்சநேயர், சப்த கன்னிகள், கால பைரவர், பரிகார லிங்கம், நவகிரகங்கள் எனப் பரிவார தெய்வங்களும் சுற்றிப் பிராகாரத்துள் அமைந்து அருள்பாலிக்கின்றனர். சைவக் குருமார்கள். சீரடி சாய்பாபா, காஞ்சிப் பெரியவர் உள்ளிட்ட மகான்களின் சந்நிதிகளும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன. இங்கிருக்கும் தீர்த்தக் குளத்தில் நீராடி சந்திரமௌலீஸ்வரரை வணங்கினால் பிரமஹத்தி தோஷம், சர்ப்பதோஷம் உள்படச் சகல தோஷங்களும் விலகி,  ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இங்குப் பிரதோஷ வழிபாடு, மாத சிவராத்திரி, பௌர்ணமி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி விரதம், அஷ்டமி பைரவர் பூஜைகள் ஆகிய தினங்களில் வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சிவனுக்கு உகந்த பழங்கள், காய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு பிரமாண்டமான சிவரூபம் அமைத்து, மகா சிவராத்திரியை கொண்டாடுவார்கள். 2015-ம் ஆண்டு, மகா சிவராத்திரியின்போது, 3 டன் கரும்புகளால் 16 அடி உயரத்திற்கும், 2016 -ம் ஆண்டு வில்வ காய்களால் 25 அடி உயரத்திற்கும் சிவரூபம் அமைத்திருந்தார்கள். 2017-ல் விபூதி லிங்கமும், 2018-ல் மார்க்கண்டேய ரூபத்தில் எமனை சம்ஹாரம் செய்வதைப் போன்றும் தத்ரூபமான முறையில் ரூபம் வார்த்திருந்தார்கள்.

இந்த ஆண்டு, வித்தியாசமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்களால் 80 அடி உயரத்துக்கு மிகப் பிரமாண்டமாக சிவரூபம் அமைத்திருக்கிறார்கள். தேங்காய்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல், கோயிலுக்கு அருகில் வற்றிப்போயிருக்கும் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தத்தில் மீண்டும் நீரூற்று பெருகிக் குளம் நிரம்ப வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக, குளத்தின் மையப்பகுதியில் தேங்காய்களால் ஈசனை வடிவமைத்திருக்கிறார்கள். கீளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களான சனத்குமார், கேசவன், நித்தீஸ்குமார், லக்கி ரோகித், சச்சின், சஞ்சய், சுராஜ், ரோஷன் உள்ளிட்டோர் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கலைநயத்தோடு சிவனின் ரூபத்தைத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். 

இதுபற்றி சந்திரமௌலீஸ்வரர் கோயிலை பராமரிக்கும், சிவபக்தரான சுப்பிரமணியிடம் பேசினோம். 

‘‘இந்த கோயில் புதர்மண்டி கிடந்தது. ஜனகல்யாண் அமைப்புடன் இணைந்து கோயிலை புனரமைத்து தற்போது பூஜைகள் செய்துவருகிறோம். பக்தர்களின் காணிக்கையால்தான் மகா சிவராத்திரியை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட முடிகிறது. இந்த ஆண்டு கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தேங்காய்களால் 80 அடி உயரத்திற்குச் சிவரூபம் அமைத்திருக்கிறோம்.

மகா சிவராத்திரி விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலயத்தில் வழிபட்டால் சனிதோசம், சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சர்வ கிரக தோஷ நிவர்த்திக்காகப் பிரமாண்ட சிவன் அருகில் ஹோம குண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பிரார்த்தனைகளை நினைத்து, அக்னிக் குண்டத்தில் நவதானியத்தைச் சமர்ப்பிக்கலாம். வில்வ அர்ச்சனையும் செய்யலாம். 1,108 தேங்காய்கள் கொண்டு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. 

முன்னொரு காலத்தில் தீர்த்தக் குளத்திலிருந்து ஒரு பாம்பு தன் வாயில் தண்ணீர் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் கிராம மக்களுடைய முக்கியமான கோரிக்கை, இத்தனை சிறப்புகளை உடைய இந்தக் கோயிலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

எப்படிச் செல்வது: திருத்தணியிலிருந்து, திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிட பயணத்தில் கீளப்பட்டு கிராமத்தைச் சென்றடையலாம். 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரின் பேருந்து நிலையம் அருகிலேயே கீளப்பட்டு கிராமம் உள்ளது.