ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 30

ரங்க ராஜ்ஜியம் - 30
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 30

ஓவியம்: அரஸ்

‘தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்த நின்ற
பேராளன், ஆயிரம் பேருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படை மன்னருடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன், கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’

- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்...

நீலனை வீரர்களால் கைது செய்ய முடியாது. எனவே, தந்திரமாகத்தான் செயல்பட வேண்டும். அதன் பொருட்டு, ஒரு பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டுக்காக நீலன் வந்த தருணத்தில், ஒளிந்திருந்த வீரர்கள் வேல் கம்புகளோடு அவனைச் சுற்றி வளைத்தார்கள். ஒரு மத யானையைப் போல், சங்கிலிகளால் பூட்டப்பட்டான் நீலன்.

எதிரில் முத்ராதிகாரியோடு சோழ மந்திரியும் வந்து நின்றார்.

‘‘நீலா... நீ இனி சிறைக்கைதி’’ என்றார்.

‘‘உன் திருவாலிக்குச் சோழப் பேரரசர் வேறு ஒருவரை அரசனாக்கப்போகிறார்” என்றார்.

அதிர்ந்த நீலன் கண்ணீரோடு, அந்தச் சந்நிதியில் அருளும் பெருமாளைப் பார்த்தான்.

“எம்பெருமானே! இதென்ன கொடுமை. உன் பக்தன் அழலாமா, எனக்கு இப்படியொரு சோதனை வரலாமா” என்று பிரார்த்தித்துக் கொண்டபோது மந்திரி சிரித்தார்.

“பைத்தியக்காரா! எந்தக் காலத்தில் சிலை பேசியுள்ளது. முட்டாளே...” என்றார். அடுத்த நொடி சந்நிதியிலிருந்து ஓர் அசரீரிக் குரல்!

ரங்க ராஜ்ஜியம் - 30

“நீலா! கவலை வேண்டாம். சோழனோடு நீ காஞ்சியில் உள்ள என் திருச்சந்நிதிக்கு வா. மற்றவை தானாக நடக்கும்...” என்ற அந்தக் குரல், நீலனுக்கு மட்டும்தான் கேட்டது; மந்திரிக்கல்ல!

“எம்பெருமான் காஞ்சிக்கு வரச்சொல்கிறான். வாருங்கள்...’’ என்றான் நீலன்.

“வருகிறோம். எங்களுக்குத் தேவை கப்பம். அங்கு வந்தும் கப்பம் செலுத்தாமல் நீ எங்களை அலைக்கழிக்க முயன்றால், உன் சிரத்தையே நீ இழந்துவிடுவாய். எச்சரிக்கை...”

“என்னைப் படைத்தவன் அவன்.ஆளாக்கிய வனும் அவனே. நீங்கள் பேசாமல் வாருங்கள். உங்களுக்கு இனி நான் பதில் சொல்லமாட்டேன். அவன் சொல்வான்” என்றான் நீலன்.

காஞ்சி ஸ்ரீவரதராஜர் திருச்சந்நிதி!

அங்கு வந்து நின்ற மந்திரி மற்றும் நீலன் முன், ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது. அந்தக் குரல் நீலனுக்கு முகமன் கூறியது.

“திருவாலி மன்னா வருக... திருவருள் செல்வா வருக... திருமாலின் தொண்டரே வருக... திருமங்கை நேசா வருக!”

- முகமன் போல் ஒலித்த கட்டியக்குரல், சோழநாட்டு மந்திரி முதல் உடன் வந்திருந்த சகலரையும் ஆச்சர்யப்படுத்தியது. நீலனே, அதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டதோடு `என்னை இங்கே வரவேற்பது யார்’ என்கிற கேள்வியோடு நாலாபுறமும் பார்த்தான்.

உள்ளிருந்து சந்நிதி அந்தணர் சிலர், குரலோடு மட்டுமன்றி, பூரணக் கும்பத்துடனும் வெளிப்பட்டனர்.

“தங்கள் வருகையை எம்பெருமான் எங்கள் கனவில் உணர்த்தினான். தங்களால் அவன் கட்டளைக் குரலைக் கேட்கும் பேறு பெற்றோம்” என்றனர் அவர்கள்.

“அப்படியா! எம்பெருமானே, உன் கருணையை என்னென்பேன்...” என்று கைகூப்பி கண்கள் பனிக்க நின்றான் நீலன். எதிரில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் ராஜனாய் அந்த வரதராஜன்!

சோழ மந்திரியோ அடுத்து நடக்கப்போவதில் ஆவலாய் இருக்க, நீலன் கண்கள் பனிக்க வரதராஜன் முன் இறைஞ்சத் தொடங்கினான்.

“எம்பெருமானே! அன்னமிடும் கடமை யால் கன்னமிட்டவன் போல் கைது செய்யப் பட்டுள்ளேன். பழைய நீலனாய் இருந்திருந்தால் சங்கிலிகளை அறுத்து எறிந்து, என்னைக் கட்ட நினைத்தவர்களையும் வெட்டிக் கொன்றிருப்பேன். நான் இப்போது உன்னைச் சரண் புகுந்துவிட்டவன். நான் எதைச் செய்தாலும் அது நீ செய்ததாகவும் ஆகிவிடும். இப்போது இங்கே என்னை வரச் செய்த நீ, எவ்வாறு என் குறை தீர்க்கப் போகிறாய்?”

மனதுக்குள் நீலன் மன்றாடிய நொடி, “கவலை வேண்டாம் நீலா. வேகவதி ஆற்றின் வடக்குக் கரைக்கு வா. பொன்னும் நெல்லும் பொருதக் கொள்ளலாம்...” என்றோர் அசரீரி ஒலித்தது. அது எல்லோர்க்கும் கேட்டது.

அது மட்டுமா, அருள்மிகு வரதராஜனின் திருச்சந்நிதிக்குள்ளிருந்து வெளிப்பட்ட கருடப் பட்சி ஒன்று வெளிப்பட்டு, அவர்கள் நடுவே பறந்துசென்று வழிகாட்டலாயிற்று!

சோழ மந்திரிக்கு அப்போதே நீலன் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதம், வேகவதி ஆற்றின் கரைக்கு வரவும் தெரிந்தது.

கருடன், ஒரு மண் மேட்டின் மேல் அமர்ந் திருந்தது. நெருங்கிச் சென்றதும்தான், அது மண்மேடல்ல பொன் மேடு எனத் தெரிந்தது! அதைத் தொடர்ந்து கண்ணில் பட்ட ஆற்று மணல் அவ்வளவும் நெல்மணிகளாகிக் காட்சி தந்தது.

“சோழனின் கடனைத் தீர்த்து ஆவன செய்” என்று அங்கோர் அசரீரி ஒலித்து அடங்கியது. நீலன் மந்திரியை அருகில் அழைத்தான்.

“எந்தக் காலத்தில் சிலை பேசியுள்ளது என்று கேட்டீரே... இங்கே சிலை மட்டுமல்ல காற்றும் பேசுகிறது. காதில் விழுந்ததா? அள்ளிக் கொள்ளுங்கள்...” என்றான்.

மந்திரியோ நீலனின் காலில் சரேலென்று விழுந்தார்.

“நீலா... இல்லையில்லை திருவாலி மன்னா...

இனி நீ எங்கள் நாட்டுக் குறுநில மன்னனில்லை. உன் பொருட்டு, இறைவனே எங்களுக்குக் கப்பம் கட்ட விழைந்திருப்பது, உலகம் இதுவரை கண்டிராத அதிசயம். இங்கே நடந்ததை நான் மன்னரிடம் கூறி, இனி நீ எக்காலமும் கப்பம் கட்டத் தேவையில்லை எனும் நிலையை உருவாக் குவேன். உன்னால் உன்னதமான இறையனுபவம் எனக்கும் ஏற்பட்டது. இதற்கு நான் எப்படிக் கைம்மாறு செய்வேனோ தெரியவில்லை” என்று கண்கள் கசிந்தான்.

நீலனும் வேகவதி ஆற்றின் அந்தப் பொன் மணல் மேலேயே விழுந்து வணங்கி, மீண்டும் வரதராஜன் சந்நிதிக்கு வந்து, பெருமாளின்  திவ்யத் திருமேனியைக் கண்கள் பனிக்கப் பனிக்க தரிசித்தான்.

வரதராஜன் படியளந்த நிகழ்வு, அரண் மனையிலிருந்த குமுதவல்லிக்குக் கூறப்படவும், அப்படியே மெய்சிலிர்த்துப் போனாள். திருவாழி இனித் தனிநாடாக வரி செலுத்த தேவையின்றி திகழப்போவதையும் அறிந்தாள்.

நீலனும் வரப்பிரசாதத்துடன் குமுதவல்லியைச் சந்தித்தான். அவள், அவன் காலில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள்.

“இனி திருவாழியில் பசிப் பட்டினிக்கே இடமில்லாதபடி செய்துவிட்டீர்கள். பொன்மணியையும் நெல்மணியையும் உங்களுக்கு அவனே அளித்துவிட்டதை நான் என்னென்பேன்” என்றாள்.

அதிர்ந்தான் நீலன்!

“குமுதா நீ என்ன சொல்கிறாய்?”

“பொன்னுக்கும் பொருளுக்கும் இனி பஞ்சமில்லை என்றேன்.”

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?”

“வரதன்தான் அருளிவிட்டானே?”

“வரதன் கடனுக்கு அருளினான். காலத்துக்கும் அருளி விட்டதாய்க் கருதிவிட்டாயா?”

“அப்படியானால்...?”

“என் ராஜ நிர்வாகமே எப்போதும் போல் பசிப்பிணி போக்கும்.”

“என்றால், அங்கிருந்து நீங்கள் ஒரு கைப்பிடி பொன்னைக் கூட கொண்டுவரவில்லையா?”

“அவனிடம் பெற்று அவனுக்கே தருவதா உற்றச் செயல்?”

“அதானே... அதில் நம் பிரயாசைக்கே துளியும் இடமில்லாமல் அல்லவா போய்விடுகிறது?”

“சரியாகச் சொன்னாய். மாறாத பக்தியும், சீரான உடல் நலமும், தாழாத கொடையும் அவனருளால் நீங்காதிருந்தாலே போதும்.  உழைப்போம் பிழைப்போம் என்ன சொல்கிறாய்?”

“சொல்ல என்ன இருக்கிறது -  ஆயிரத்தில் ஒரு வார்த்தை!”

- பதிலோடு கண்கள் பனித்தாள் குமுதவல்லி.

ஆயிரம் ஆயிரம் மூட்டைகளில் அந்த ஆற்றுப் பொன்னை அள்ளி வந்திருக்கலாம். ஆனால் அது பெரிதேயில்லை. அதைக் கண்ணில் காட்டிய மாலவன் கருணையே பெரிது என்று எண்ணி அதன்படி நடந்த நீலன், அவள் கண்முன்னே இந்த உலக மாயையை வென்றுவிட்ட பெரும் சூரனாகத்தான் தெரிந்தான்.

நாட்கள் கடந்தன! நீலனைச் சோழன் உணர்ந்ததுபோல், உலகம் உணரவேண்டும் என்று அந்த மாலவன்  எண்ணினான். சுடச்சுடத்தானே  பொன்னே ஒளிர்கிறது. சுட ஆரம்பித்தான்.

முதலில் வானம் பொய்த்தது. வயல்கள் வெடித்தன. பஞ்சம் தஞ்சம்கொண்டது.

- தொடரும்...

 -இந்திரா சௌந்தர்ராஜன்

கனவில் ஞானிகள் !

க்கு என்ற ஜென் ஆசிரியரிடம் பயின்ற  ஒரு மாணவர், கீழ்க்காணும் ஒரு நிகழ்ச்சியைக்  கூறுகிறார்:  

“எங்களின் ஆசிரியர் எப்போதும் மதிய  வேளையில் தூங்குவதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். அப்போது  நாங்கள்  சிறுவர்கள். நாங்கள் ஆசிரியரிடம், `நீங்கள்  ஏன்  இவ்வேளையில் தூங்குகிறீர்கள்' என்று கேட்டோம். அதற்கு அவர், தாம் கனவு உலகுக்குச் சென்று கன்பூஷியஸ் போன்ற சிறந்த ஞானிகளைச்  சந்திப்பதற்காகவே தூங்குவதாகச் சொன்னார்.

ரங்க ராஜ்ஜியம் - 30

இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் ஒன்று  உண்டு.  அதாவது, கன்பூஷியஸ் உறங்கும்போது பல  பழங்காலத் துறவிகளைக் கனவில் காண்பார்  என்றும் அவர்கள் கூறும் உபதேசங்களையே  அவர் தம் சீடர்களுக்குச் சொல்வார் என்றும்  சொல்லப்படுவது உண்டு.

ஒரு கோடைக்கால மதியப் பொழுது. கடும்  வெப்பம் காரணமாக எல்லோரும் நன்றாகத்  தூங்கிவிட்டோம். வந்து  பார்த்த  எங்கள்  ஆசிரியர்  எங்களைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே  நாங்கள் அவரிடம், `கன்பூஷியஸ்  போல்  நாங்கள்  கனவு  உலகத்துக்குச்  சென்று  பல  ஞானிகளைப்  பார்த்தோம்' என்றோம். 

உடனே ஆசிரியர் `நீங்கள் அவர்களிடமிருந்து  என்ன உபதேசம் பெற்றீர்கள்' என்று  கேட்டார். எங்களில் ஒரு மாணவன் எழுந்து, “கனவு உலகத்துக்குச் சென்று பல ஞானிகளை தரிசித்தோம். எங்கள் ஆசிரியர் தினமும் மதிய  வேளையில் இங்கு வருகிறாரா என்று  கேட்டோம். அவர்களோ, அதுபோன்ற மனிதரைப்  பார்த்ததே இல்லை என்று  சொன்னார்கள்' என்றான்! ''

ஒரு துளி நீர் !

கேன்கான் என்ற ஜென்  அறிஞர் இருந்தார். ஒரு நாள், தன் மாணவன் ஒருவனை அழைத்து, தண்ணீர்ப்  பைகளில் நீர் கொண்டு வந்து, தான் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார்.மாண வனும் அவ்வாறே  செய்தான்.

குருநாதர் குளித்து முடித்ததும் மீதமுள்ள நீரைக் கீழே கொட்டிவிட்டான். நீர்  தரையில்  வழிந்தோடியது.

ரங்க ராஜ்ஜியம் - 30

இதைக் கண்டு கோபம் கொண்ட ஜென் குரு, “முட்டாளே! மீதம் உள்ள நீரைத்  தோட்டத்துச் செடிகளுக்கு ஊற்றக்கூடாதா? இந்தக் கோயிலில் உள்ள ஒரு துளி நீரையும் வீணடிக்க யாருக்கும் உரிமை இல்லை'' என்று கடிந்து கொண்டார்.

அந்தக் கணத்தில் அந்த  மாணவன் தெளிவடைந்தான். அவன் தன் பெயரை  `தெக்குசி' என்று  மாற்றி வைத்துக் கொண்டான். `தெக்குசி'   என்றால் ‘ ஒரு  துளி  நீர்'  என்று  பொருள்.