
ஆலயம் தேடுவோம்: ஓலைக் கொட்டகையில் உலகாளும் பரமன்!
திண்டிவனத்துக்கு அருகிலிருக்கிறது அந்த ஊர். அதன் பெயர் ஆத்திப்பாக்கம். சித்திரை மாத அக்னி நட்சத்திர காலம். ஊர் எல்லையில், அந்தப் பெரியவர் நின்றுகொண்டிருந்தார். முதுமையால் லேசாகத் தள்ளாடும் தேகம். நெற்றியில் துலங்கிய வைஷ்ணவத் திருநாமம், அவர் ஸ்ரீமந் நாராயணனின் பரம பக்தர் என்பதை உணர்த்தியது.
அவரை நெருங்கிச் சென்ற நமக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் உதடுகள் ஜபித்துக்கொண்டிருந்தது `ஓம் நமசிவாய’ என்கிற சிவ நாமம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். முகம் மலர சிரித்து வரவேற்றார். அவர் பெயர் பூபாலகிருஷ்ணன். நம்மை அவர் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார். வீட்டை நெருங்கியதும் அந்தப் பெரியவர் எழுப்பிக்கொண்டிருந்த ஒரு சிவாலயம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.

`சிவன் வேறல்ல; சித்தன் வேறல்ல’ என்கின்றன யோக சாஸ்திரங்கள். `சித்தர்களில் ஆதி சித்தன் ஈசனே...’ என்று சித்த புராணங்கள் கூறுகின்றன. சித்த புருஷர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் எல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை காணப்படுவது வழக்கம். அது, சித்த புருஷர்கள், தங்கள் மூல குருவுக்குச் செய்த வழிபாடு என்றே கருதப்படுகிறது. சிவபெருமான், இந்த உலகில் சித்தர்களின் வடிவில்தான் அநேக முறை தோன்றியிருக்கிறார் என்பதைப் புராணங்களும் கூறுகின்றன.
காடுவெட்டி சோழனுக்கு மதுரையம்பதியை தரிசிக்க அருளிய சித்தன், பொன்னணையாளுக்குப் பொன் செய்து கொடுத்த சித்தன், அபிஷேக பாண்டியன் ஆட்சியில் கல் யானைக்குக் கரும்பு கொடுத்த சித்தன், நைமிசாரண்ய முனிவர்களுக்கு வேத ரகசியங்கள் உரைத்த சித்தன்... இப்படி ஈசன் சித்தனாக அருளிய லீலைகள் அநேகம்... அநேகம்.

இன்றும்கூட, ஈசன் சித்தர் வடிவில்தான் தங்களைக் காக்க வருகிறார் என்று நம்புகிறார்கள் அடியார்கள். சரி, ஏன் இந்த சித்தர் புராணம் என்கிறீர்களா... இங்கு நாம் காணவிருக்கும் ஆலயமும் ஒரு சித்த புருஷரின் ஜீவ சமாதி ஆலயம் என்பதால்தான்.
`அருள்மிகு அமிர்த சுந்தரி சமேத அமிர்த ஈஸ்வரர் திருக்கோயில்’ என்பது ஆலயத்தின் பெயர். பிரமாண்டமான திருக்கோயில். இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி, கணபதி, முருகருக்கான தனி பீடங்கள், வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரர், துர்கை போன்ற கோஷ்ட தெய்வங்களின் சந்நிதி... எனப் பார்த்துப் பார்த்து ஆலயத்தை வடிவமைத்திருக்கிறார் பூபாலகிருஷ்ணன்.
சுற்றுச் சுவர் எழுப்புதல், தரை வேலை, சுவர் களுக்கு வண்ணம் பூசுவது... எனச் சில வேலைகளே மீதமிருக்கின்றன. பணப் பற்றாக்குறையால் ஆலயப் பணி அப்படியே தடைப்பட்டு நின்றுபோயிருக்கிறது. ஆங்காங்கே செங்கற்களும் மணலும் குவிந்து, கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பக்கம் அழகான ஆலயக் கதவுகள் சுவற்றில் சாத்திவைக்கப்பட்டிருந்தன. எல்லாம் இருந்தும், கூலி கொடுக்க மற்ற சில தளவாடங்கள் வாங்கப் பணமில்லாமல், ஆலய வேலைகள் அப்படியே ஸ்தம்பித்து நிற்கின்றன. ``பாருங்கள்... உலகாளும் உமையாள் தலைவன், ஓலைக் குடிசையில் அமர்ந்திருக்கிறார்’ குரலில் துயரம் தொனிக்கச் சொன்னார் அந்தப் பெரியவர்.
காலத்தைக் கணிக்க முடியாத சுயம்பு லிங்கத்திருமேனி, பாலாலயம் செய்யப்பட்டு, ஆலயத்தின் வெளியே ஒரு கூரையின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறது. அருகில், நம்மை வசீகரிக்கும் கணபதி.

``எங்களுடையது தீவிர வைஷ்ணவக் குடும்பம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவரைக் (சிவனை) கண்டெடுத்தேன். அன்றிலிருந்து எங்களை ‘சிக்கெனப்’ பிடித்துக்கொண்டார். எப்படியோ சில நல்ல உள்ளம்கொண்ட அன்பர்களின் உதவியால் இந்த ஆலயத்தை எழுப்பிவிட்டேன். மீதமிருக்கும் பணியையும் முடித்து, கும்பாபிஷேகம் நடத்தி, சிவனாரைக் கருவறையில் சேர்த்துவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும்’’ சொல்லும்போதே கண்களில் கனவு விரிகிறது அந்தப் பெரியவருக்கு.
“அந்த ஈஸ்வரனின் கிருபையால், யார் யாரையோ பார்த்து, உதவிகள் பெற்று இந்த ஆலயத்தைக் கட்டிவிட்டார். மீதமிருக்கும் பணிக்கும் அந்த ஈஸ்வரன்தான் வழிகாட்ட வேண்டும்” என்கிறார் அவரின் துணைவியார் சுமதி.
விசாரித்ததில், `அகத்தியர் நடுநாட்டில் பிரதிஷ்டை செய்து உருவாக்கிய 108 சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அகத்தியரால் உருவாக்கப் பட்ட ஆலயம் சிதிலமாகிவிட, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் மீண்டும் இந்த ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது’ என்கிறார்கள் ஊர் மக்கள். ஆனால், தற்போது பழைய ஆலயத்தின் எந்தச் சுவடும் இங்கு இல்லை. ஆலயத்தின் அருகே பாழடைந்த பெரிய கிணறு ஒன்று இருக்கிறது. `பின்புறம் நிற்கும் கல் அத்தி மரத்தின் கீழேதான் பழைய ஆலயம் மண்மூடிப் போயிருக்கிறது என்றும், மரத்தின் அழுத்தத்தால் ஆலயம் சிதைந்துபோக, லிங்கத்திருமேனி மட்டும் கிடைத்திருக்கிறது’ என்றும் கூறுகிறார்கள் ஊர் மக்கள்.

இங்குள்ள கல்வெட்டு ஒன்று, திண்டிவனம் ஆத்திப்பாக்கம் கிராமத்தில் நில தானம் செய்த தகவலைக் கூறுகிறது. ஆத்திப்பாக்கம் கோயில் மண்டபத்தின் மேற்குச் சுவரிலிருந்த இந்தக் கல்வெட்டு, குலசேகர சம்புவரையரின் 25-வது ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்டது. கல்வெட்டுச் செய்தி, 'செய்யாற்று வென்றான் திருநாள்’ என்னும் திருவிழாவை இந்தக் கோயிலில் நடத்துவதற்காகவும் மற்ற திருப்பணிகளுக்காகவும் ஆத்திப்பாக்கம் கிராமத்திலுள்ள நிலங்கள் தானமாக அளிக்கப் பட்டன’ என்னும் தகவலைக் கூறுகிறது.
`அகத்தியர் உருவாக்கி வழிபட்ட இந்த ஆலயத்தில், பிற்காலத்தில் ஒரு சித்த புருஷரின் ஜீவ சமாதி அமைந்திருக்கலாம்’ என்று கூறப்படுகிறது. `திருவண்ணாமலையில் ஜீவசமாதி கொண்ட இடைக்காட்டு சித்தரின் மாணாக்கர் ஒருவர்தான், இங்கு ஜீவன் முக்தி பெற்றார்’ என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், `இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகள் தீர்கின்றன’ என்றும், `மாளாத மனத் துயரங்கள் மறைகின்றன’ என்றும் ஊர் மக்கள் கூறுகிறார்கள்.
18 சித்தர்களில் திருமாலின் அடியாராக, நவகிரகங்களின் போக்கை மாற்றியமைத்து, மழையை வரவழைத்த மகாசித்தர் இடைக்காடர். வைத்தியம், ஜோதிடம், யோகம், வான சாஸ்திரம் போன்றவற்றில் தேர்ச்சிபெற்றவர் இடைக்காடர். 12 ஆண்டு காலத்துக்குத் தாங்க முடியாத பெரும் பஞ்சம் வரப்போகிறது என்பதைத் தன் ஜோதிட அறிவால் அறிந்துகொண்டார். இதனால், அவர் வளர்த்துவந்த ஆடுகளை ஆவாரம், எருக்கன் போன்றவற்றைத் தின்னப் பழக்கினார். எப்போதும் கெட்டுப் போகாத குறுவரகு தானியத்தைச் சேற்றோடு கலந்து, தன் குடில் சுவரில் பூசினார். உயிர்களை வாட்டிய அந்தப் பெரும் பஞ்சமும் வந்தது. கொத்துக் கொத்தாக ஜீவராசிகள் மடிந்தன. ஆனால், இடைக்காடர் வாழ்ந்த ஊரில் மட்டும், ஆடுகள் செழிப்பாகவும், மக்கள் ஏதோ பிழைத்துக்கொண்டும் இருந்தனர். எல்லாம் இடைக்காடர் செய்த ஏற்பாடுதான்.

`எருக்கிலையைத் தின்ற ஆடுகள், தினவைப் போக்க சுவரில் முதுகைத் தேய்க்க, உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி மக்களுக்குக் கொடுத்தார் இடைக்காடர். இதனால் கால்நடைகளும் மனிதர்களும் அந்த ஊரில் பிழைத்தார்கள். இவர்கள் மட்டும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவகிரகங்கள் இடைக்காடரைக் காண அந்த ஊருக்கு வந்தனர். அவர்களை மகிழ்ந்து வரவேற்ற இடைக்காடர், அவர்களுக்கு ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் வழங்கி உபசரித்தார். உண்ட மயக்கத்தில் நவகிரகங்களும் உறங்கிவிட்டார்கள். இதுதான் நேரமென்று உணர்ந்த இடைக்காடர், ஜாதக அமைப்பின்படி மழை பெய்வதற்கு ஏற்றவாறு நவகிரகங்களை மாற்றிப் படுக்கவைத்தார். அவ்வளவுதான் மேகம் திரண்டு, பெரும் இடி முழக்கத்தோடு தென்னாடு எங்கும் மழை கொட்டித் தீர்த்தது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. இப்படி மூன்று நாள்கள் மழை பெய்தது. பிறகு கண் விழித்த கிரகங்கள் இடைக்காடரின் தன்னலமில்லா செயலையும் அறிவையும் வியந்து, பல வரங்களைத் தந்தார்கள்’ என சித்த புராணம் கூறுகிறது.
இத்தகைய கருணைகொண்ட சித்தரின் மாணாக்கர்தான் இங்கு ஜீவசமாதி அடைந்திருக்கிறார் என்கிற நம்பிக்கை இந்த ஊர்மக்களுக்கு. எனவே, `இந்த ஆலயம் தியானம் செய்ய, இயற்கை இடர்ப்பாடுகளில் இருந்து மீள்வதற்காக வழிபட உகந்தது’ என்கிறார்கள்.
கல் அத்தி மரங்களை ஜீவ சமாதி அருகே வைப்பது பழைமையான வழக்கம். சித்தரின் சமாதி ஆலயத்தை மன்னர்கள் பெரும் கோயிலாக எழுப்ப, அதைக் கல் அத்தி மரமும் காலமும் சேர்ந்து சிதைத்துவிட்டன. யார் செய்த தவமோ, சிவலிங்கத் திருமேனி அந்தப் பெரியவர் கையில் கிடைக்க, இப்போது ஆலயமாக எழுந்து நிற்கிறது.

`‘இன்றும் இந்த ஆலயத்தில் ஒரு சித்தரின் நடமாட்டத்தை நாங்கள் உணர்கிறோம். இங்கு, திருடும் நோக்கத்துடனோ, வேறு எந்தத் தீய நோக்கத்துடனோ யாராவது வந்தால், அவர்களை தண்டித்திருக்கிறார் அந்தச் சித்தர். பாம்புகளின் வடிவில் சித்தர்கள் இங்கு வளைய வருவதைப் பலமுறை பார்த்தவர்கள் உண்டு. இந்த ஈசனின் அருகே அமர்ந்து பதிகம் பாடும்போதெல்லாம், நாக வடிவில் வந்து கேட்டபடி இருந்த சித்தர் பெருமக்களைப் பலமுறை தரிசித்திருக்கிறோம். அவர்கள் எங்களை எதுவுமே செய்ததில்லை’’ என்கிறார்கள் அந்த வயதான தம்பதி.
`ஆடு மேய்த்த இடைக்காடர் பரந்தாமனின் அடியார்’ என்பார்கள். அதனால்தானோ என்னமோ, ஒரு வைணவ அடியார் இந்த ஆலயத்தைக் கட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
தற்போது, மழையின்றி தமிழகமே வாடிப் போயிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆலயத்துக் குப் பொருள் உதவி செய்தால் மழை பெய்வதோடு, நம் வாழ்வும் சிறக்கும். ஆகவே, இயன்ற உதவியை இந்த ஆலயத்துக்குச் செய்து, இந்த வயதான தம்பதியின் லட்சியம் நிறைவேறத் தோள் கொடுப்போம். செல்வத்தைச் செலவு செய்யப் பல உபாயங்களுண்டு. அபாயமின்றி உங்கள் செல்வம் நிலைக்க ஆலயத் திருப்பணிக்கு வாரி வழங்குங்கள். அதுதான் ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் செல்வத்தைக் கொண்டு சேர்க்கும்!
-மு. ஹரி காமராஜ்
படங்கள்: பெ.ராகேஷ்
உங்களுக்காக...
ஸ்வாமி: ஸ்ரீஅமிர்த ஈஸ்வரர்
அம்பாள்: ஸ்ரீஅமிர்த சுந்தரி
பிரார்த்தனைச் சிறப்பு: எல்லா வகைப் பிணிகளும் நீங்கும். மனத் துயரங்கள் விலகும்.
எப்படிச் செல்வது..?: திண்டிவனம்- வந்தவாசி சாலையில் வெள்ளிமேடு பேட்டை தாண்டி, 3 கி.மீ தொலைவில் ஆத்திப்பாக்கம் அமைந்துள்ளது
வங்கிக் கணக்கு விவரம்:
B. சுமதி - T.V. பூபாலகிருஷ்ணன்
A/c.No: 553422944
Bank Name: Indian Bank
Branch: Vellimedu pettai
IFSC No: IDIB000V039
தொடர்புக்கு: சுமதி - பூபாலகிருஷ்ணன் 99526 03036