Published:Updated:

ஆதியும் அந்தமும் - 4

ஆதியும் அந்தமும் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும் - 4

மறை சொல்லும் மகிமைகள்ஓவியம்: மாருதி

ஆதியும் அந்தமும் - 4

மறை சொல்லும் மகிமைகள்ஓவியம்: மாருதி

Published:Updated:
ஆதியும் அந்தமும் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும் - 4

ஞானமும் செயலும்

ஆதியும் அந்தமும் - 4

றுபது வயதுக்குள் அனைத்துவிதமான சுக சௌக்கியங்களையும் தானும் அனுபவித்து, மற்றவர்களும் அனுபவிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.

அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் அறுபது வயது ஆகிவிட்டால் ரிட்டையர்மென்ட் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். காரணம், அறுபது வயதை எட்டிவிட்டால், உடல் சுறுசுறுப்பாக இயங்காது; சிந்திக்கும் திறனும் குறைந்துவிடும். ஆகவே, அறுபது வயதைக் கடந்தவர்களிடம், ‘நீ இதுவரை உழைத்தது போதும். இனி நீ ஓய்வெடுத்துக்கொள். உன் லட்சியத்தை அடையத் தேவையான முயற்சிகளைச் செய்’ என்று சொல்லி ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், நாம் என்ன நினைக்கிறோம்?

நமக்குத்தான் நல்ல அனுபவம் இருக்கிறதே. இன்னும் பத்து வருடம் சர்வீஸில் இருக்கலாமே என்று நினைப்போம். ஆனால், அவன் அப்படிச் செய்யவிடவில்லை. ஒருபோதும் பரிணாம வளர்ச்சியை மாற்றியமைக்கக் கூடாது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? மனிதனுக்கு ஆதி தெரியும். ஒரு பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அடுத்து ஞானம் பெறும் பொருட்டு கல்வி கற்றான். அந்தக் கல்வி, அவனுக்கு அடிப்படை புத்தி விகாசத்தைக் கொடுத்துவிட்டது. அதன் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் தான் நினைத்த காரியங்களைச் செய்யும் ஆற்றல் அவனுக்கு வந்துவிட்டது. உலகத்திலுள்ளவர்கள் அனைவரையும் நன்றாகப் புரிந்துகொள்கிறான். இவனுக்கு யாரும் எதிரிகள் இருக்கமாட்டார்கள்; யாரும் பிரியமாகவும் இருக்கமாட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதியும் அந்தமும் - 4

மனிதனுக்கு அறிவுப் புலன்கள் ஐந்தும் செயல் புலன்கள் ஐந்தும் உள்ளன. கண், காது, மூக்கு போன்ற புலன்கள் ஒரு பொருளை இதுதான் என்று புரிந்துகொள்ளும். ஆனால், செயல்படாது. அதற்குச் செயல் புலன்கள் தேவை. தினசரி பேப்பரில் ஒரு நாடகத்தின் விளம்பரத்தைப் பார்க்கிறோம்.  அந்த நாடகம் நன்றாக இருக்கும் என்பது நம் அறிவுப் புலனுக்குத் தெரிகிறது. நாம் அந்த நாடகத்தைப் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் இடத்திலிருந்தே நாம் அந்த நாடகத்தைப் பார்க்க முடியாது. எனவே, செயல் புலன்களில் ஒன்றான கால்களைப் பயன்படுத்தி, நாடக அரங்குக்குச் சென்று நாடகத்தைப் பார்க்கிறோம்.

ஆக, செயல்புலன்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அறிவுப்புலன்களால் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. அப்படித்தான் நம் சிருஷ்டியில் அமைந்திருக்கிறது. எதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் எதை நாம் செயல்படுத்தவேண்டும் என்பதையும் முடிவு செய்வது நம்முடைய மூளை. அது நல்ல முறையில் விகாசமாக இருந்தால், தனக்கும் லோகத்துக்கும் இதமாகவும் இருக்கிற காரியங்களை மட்டும் செய்யத் தூண்டும்.

ஆக, கல்வி என்பது நாம் எப்படிப் போகவேண்டும், எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டி யாக உள்ளது. கல்வியின் மூலம் ஞானம் பெற்றதும் மடை திறந்த மாதிரி எண்ணங்கள் குவியும். என்னென்னவோ செய்யவேண்டும் என்று தோன்றும்.

சிருஷ்டிக்கு என்ன தேவை? இல்லறத்தில் ஈடுபட வேண்டும். இது சந்தோஷத்துக்காக அல்ல. வம்ச விருத்திக்காக என்ற தெளிவு இருக்கவேண்டும். தன்னுடைய ஆரோக்கியத்தையும் தன் வாழ்க்கைத் துணையுடைய ஆரோக்கியத்தையும் கெடுக்காததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த வாரிசையும் கொடுத்து, தன் ஜீவிதத்தைக் கெடுக்காமலும் தன்  புத்தி வளத்தைக் குறைக்காமலும், தான் முன்பிருந்தபடியே இருக்கும்படியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவேண்டும். இதைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஞானம் அவனுக்குச் சிந்தனை வளத்தின் மூலமே கிடைக்கிறது. அதற்குக் கல்வி இருந்தால்தான் முடியும்.  வாழ்வின் ஆறாவது நிலையை அடையும் வரை கௌரவமாக வாழவேண்டும்.

ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறார்கள்?

ஒருவனுக்குக் குடிக்கவேண்டும் என்று  ஆசை ஏற்படுகிறது. சதா காலமும் குடித்துக்கொண்டே இருக்கிறான். கடைசியில் அவன் போய்ச் சேர்ந்து விட்டான். ஆசைகளின் காரணமாகப்  புலன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன் காரணமாக டயாபடீஸ் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. கடவுள், மனிதர்கள் எல்லோருக்கும் நூறு வருடம் ஆயுள் கொடுத்திருக்கிறார். அதுவரை ஆரோக்கியமாக இருந்து மூளையும், மனமும், உடலும் நல்ல நிலையில் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆசைகளை அனுபவிப்பதில்  ஓர் அளவு  இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்கிறேன்.  ஒரு வண்டு இருக்கிறது. அது எல்லா புஷ்பங்களிலிருந்தும் தேன் எடுக்கிறது. கன்னாபின்னாவென்று தேன் எடுத்தால் புஷ்பம் கெட்டுப்போய்விடும். அடுத்து காயாகும் நிலைக்கு வராது.

வண்டு தன் ஆறு கால்களைப் புஷ்பத்தின் இதழில் அழுத்தாமல் மெள்ள வைக்கும். பிறகு தேனை மெள்ள உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடும். புஷ்பமும் வாடாமல் வதங்காமல் இருக்கும். அடுத்து அந்தப் புஷ்பத்திலிருந்து காய் வரும்; காய் கனியாகும். இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கையும் அமையவேண்டும். இப்படித்தான் இல்லற சுகத்தை அனுபவிப்பதிலும் ஒரு முறை வேண்டும். அதைக் கல்வி ஞானத்தின் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கல்வி ஞானம்தான் மனிதனின் வாழ்க்கையை உயரச் செய்கிறது. அவனைப் பிறத்தியாருக்கு ஆதர்ச வழிகாட்டியாகச் செய்கிறது. பலருக்கும் அவனை ஆசார்யனாக வைத்து, பலரும் அவனைக் கொண்டாடும்படியாகச் செய்வதுடன், அவன் புகழுடன் வாழவும் செய்கிறது. எனவே, ஆசைகள் மடை திறந்தாற்போல் பெருகி வரும்போது, அவற்றை அடக்கப் பழகிக்கொள்ளவேண்டும். இதுவும் கூட கல்வியினால் நாம் பெற்ற சிந்தனை வளத்தின் மூலம்தான் முடியும்.

‘பரோபகாரம் இதம் சரீரம்’ என்று சொல்லும் படி மற்றவர்களுக்குப் பயன்படும்படி வாழச் செய்வதற்கான சிந்தனை வளத்தை மனிதனுக்குக் கிடைக்கச் செய்து, அவனுடைய ஜீவிதத்தை உயர்ந்ததாகச் செய்வது, அவன் கல்வியின் மூலம் பெற்ற ஞானம்தான்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

மக்குப் பல விஷயங்களில் ஆதியும் தெரியாது; அந்தமும் தெரியாது. மாமரம் மாங்கொட்டை யிலிருந்து உற்பத்தியாகிறது. மாமரத்திலிருந்து கிடைக்கும் மாம்பழங்களின் விதைகளின் மூலம் மேலும் பல மாமரங்கள் உற்பத்தியாகின்றன. மாமரம் எப்போது வந்ததென்று நமக்குத் தெரியாது. அது எப்போது இல்லாமல் போகும் என்பதும் நமக்குத் தெரியாது.

இதேபோல்தான் இயற்கையில் உள்ள அத்தனை தாவரங்களும் எப்போது வந்ததென்று நம்மால் சொல்ல முடியாது. நாம், நம் கண்களால் பார்த்துத் தெரிந்துகொள்கிறோமே தவிர, எப்போது உற்பத்தியானது என்று நம்மால் சொல்ல முடியாது. அதேபோல் இவை அத்தனையும் எப்போது மறையும் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், உண்மையில் அவை மறைவதேயில்லை. ஒரு மரத்தில் கிடைக்கும் கனிகளின் விதை களிலிருந்து பல மரங்கள் உற்பத்தியாகின்றன. இப்படி உற்பத்தி - அழிவு - மறுபடி அழிவிலிருந்து உற்பத்தி என்று தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நாம் நம் கண்களால் இந்தப் பிரபஞ்சத்தை, உலகத்தை, உலகத்திலுள்ளவற்றைப் பார்க்கிறோம். ஆனால், அவை எப்போது உற்பத்தியானது என்று நமக்குத் தெரியாது. சிலர் ஏதேதோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்து, ஒரு காலத்தை நிர்ணயித்துச் சொல்வார்கள். ஆனால், அவை எல்லாமே வெறும் யூகமாகத்தான் இருக்கும். யாரும் பார்த்துச் சொல்லவில்லை.

ஆக, நமக்கு ஆதி எதுவென்று தெரியவில்லை. நமக்குத் தெரியாத ஒன்றை, நம் அறிவுக்குத் தெளிவாக புலப்படாத ஒன்றை நாம் எப்படி கணக்கிட்டுச் சொல்ல முடியும்? அதேபோல் முடிவும் நமக்குத் தெரிவதில்லை.

நான் இப்போது பிறந்திருக்கிறேன். எனக்கு இதற்கு முன்பும் ஒரு பிறவி இருந்திருக்கிறது. இனியும் பல பிறவிகள் எடுக்க நேரிடும். எனவே என்னுடைய பிறப்பு எப்போது தொடங்கியது என்பதும், எப்போது முடியும் என்பதும் எனக்குத் தெரியாது. அதேபோல் காலமும் எப்போது ஆரம்பித்தது என்று தெரியாது; எப்போது முடியும் என்பதும் தெரியாது.

இதைத்தான் ஆதிசங்கரர், ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்’ என்று கூறுகிறார். அதாவது பிறவிச் சுழல் என்பது எப்போது ஆரம்பித்தது, எப்போது முடியும் என்பதெல்லாம் ஒருவருக்கும் தெரியாது என்று சொல்கிறார்.

வேதங்களையே எடுத்துக்கொள்வோம். வேதங்கள் எப்போது தோன்றின என்பதோ, அதிலுள்ள தகவல்கள் எப்போது தோன்றின என்பதோ நமக்குத் தெரியாது. யாரால் சொல்லப் பட்டன என்பதும் நமக்குத் தெரியாது.  வேதங் களைப் பற்றிச் சொல்லும்போது  ‘எழுதாக்கிளவி’ என்று சொல்வார்கள். வேதங்களுக்கு ‘மறை’ என்றும் ஒரு பெயருண்டு.

அதற்குக் காரணம் என்ன தெரியுமா?

- இன்னும் வரும்...

-மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபத்தின் மூலம் எது?

ஜென் துறவியான பங்கியிடம்  ஒரு மாணவன் வந்து, “ஐயா!  எனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  நான்  இதை  எப்படிக்  குணப்படுத்துவது'' என்று  கேட்டான்.

“நீ புதுமையான ஒன்றைத்தான்  கொண்டுள்ளாய். அந்தக்  கோபம்  எப்படியிருக்கும் என்று என்னிடம்  காட்டு'' என்றார் பங்கி.

ஆதியும் அந்தமும் - 4

“இப்போதே  நான்  அதை  உங்களுக் குக் காட்ட முடியாதே'' என்றான் மாணவன்.

“சரி, அதை நீ எப்போதுதான்  காண்பிப்பாய்'' எனக் கேட்டார் பங்கி.

“அது எதிர்பாராதபோதுதான்  வருகிறது!” என்றான் மாணவன்.

“எனில், அது உனது உண்மையான இயற்கைத் தன்மையிலிருந்து வந்ததல்ல. அதுவே உனது உண்மைத் தன்மையாக இருந்திருந்தால், அதை நீ  எந்த  நேரத்திலும்  காண்பிக்க முடியும். நீ பிறக்கும்போதே இந்தத் தன்மையோடு பிறக்கவில்லை. உனது  தாய், தந்தையும் அதை உனக்கு வழங்கவில்லை.

இதுபற்றி நீ  சிந்தித்ததுண்டா ?'' என்று  கேட்டார் பங்கி.

கோபம் தனக்குச் சொந்தமானதல்ல என்பதைப் புரிந்துகொண்டான் மாணவன்.