மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

ற்றும் எதிர்பாராத நேரத்தில் நம் அறைக்குள் பிரவேசித்து, நமக்கு ஆச்சர்யத்தை அளித்தார், நாரதர். கூடுதலாக அல்வா கொடுத்தும் நம்மை அசத்தினார். நாமும் நம் பங்குக்குக் கரும்புச்சாறு கொடுத்து உபசரித்துவிட்டு, ‘`என்ன நாரதரே, திருநெல்வேலி பக்கம் போய் வந்தீரோ’’ என்று கேட்டோம்.

‘`போனமுறை சொன்னபடி நான் முதலில் திருநெல்வேலிக்குப் போய்விட்டு, அதன் பிறகே சதுரகிரிக்குச் சென்றேன்’’

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

‘`கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் தொடர்பாக வேறு ஏதேனும் தகவல் கிடைத்ததா?’’

‘`கடந்த முறை வந்திருந்தபோது, நான் உங்களிடம் தெரிவித்த பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வு காணப்பட்டதா என்று விசாரிக்க முதலில் கிருஷ்ணாபுரம்தான் சென்றேன். ஆனால், நான் அங்கு எவ்வித மாற்றமும் தென்படவில்லை. மேலும் நிர்வாகத் தரப்பில் பதில் சொல்வதற்கும் யாரும் இல்லை. நான் அங்கு இருந்தபோதே நண்பர் ஒருவரிடமிருந்து வள்ளியூருக்கு வரும்படி அழைப்பு வந்தது...’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டிருந்தபோதே இடைமறித்த நாம், ‘`அங்கேதானே முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயில் தொடர்பான அழைப்புதானா அது’’ என்று கேட்டோம்.

‘`சரியாக யூகித்துவிட்டீர்! வள்ளியூர் சுப்பிரமண்ய சுவாமி கோயிலுக்குத்தான் சென்றேன். முருகப்பெருமானின் குடைவரைக்  கோயில் அமைந்திருக்கும் மலை வள்ளிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள முருகக்கடவுளை அகத்திய முனிவர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். மேலும், முருகப்பெருமானின் வேல் பட்டு ஒளிர்ந்த மலை என்பதால், இந்த மலையைப் பூரண கிரி என்றும் அழைக்கிறார்கள்’’ என்று வள்ளியூர் மகிமைகளைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார் நாரதர்.

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

அவரிடம் கேட்டோம்: ‘`கடந்த வருடம் இந்தக் கோயிலின் தென்பகுதியில்  ‘ஓம்’ வடிவில் அமைந்திருக்கும் சரவணப்பொய்கை, கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் இரண்டும் பக்தர்களால் சீரமைக்கப்பட்டதாகவும், அப்போது சரவணப்பொய்கையில் ஒரு விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம்.  அந்தச் சிலை காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்களே... உண்மைதானா?''

‘`சிலை என்னவோ கோயிலில் பத்திரமாகத்தான் உள்ளது. நான் சொல்ல வந்த விஷயம்... கோயிலின் திருப்பணிகள் பற்றியது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தக் கோயிலுக் குக் கும்பாபிஷேகம் செய்வதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் செய்யப்பட்டதாம். தொடர்ந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிலான திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டனவாம். ஆனால் அதன்பிறகு, ஏனோ திருப்பணிகள் தொய்வடைந்துவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள். மட்டுமன்றி, கும்பாபிஷேகம் நடத்தப் படாததால், தேரோட்டமும் தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.''

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

‘`திருப்பணிகள் மந்தகதியில் நடப்பதற்கு என்ன காரணமாம்?’’

‘`கோயில் நிர்வாகத் தரப்பில் பேசினோம்.  `திருக்கோயிலின் சுற்றுச்சுவர், படிக்கட்டுகள் போன்றவை பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. கோயிலின் பழைமையும் பாரம்பர்யமும் மாறாதபடி, மிகுந்த கவனத்துடன் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும், எவ்வளவு சீக்கிரம் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பணிகளைப் பூர்த்திசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார்கள். ஆனால், பக்தர்கள் தரப்பில், இந்த விஷயத்தில் இந்துசமய அறநிலையத்துறை இன்னும் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்'' என்றார் நாரதர்.

‘`வேறு ஏதேனும் தகவல் உண்டா?’’

``உண்டு'' என்றவர், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

‘`தமிழகமெங்கும் பல திருக்கோயில்களுக்குச் சொந்தமான எண்ணற்ற சொத்துகள் ஆக்கிரமிப் பாளர்களின் பிடியில் இருக்கின்றன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. 

நாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது?

அந்தப் பட்டியலில் நெல்லையப்பர் கோயிலுக் குச் சொந்தமான சொத்துகளும் உண்டு. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோயிலின் செயல் அலுவலராக இருந்தவர், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் எங்கெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றாராம்.

ஆனால், அவருக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவில்லை என்று குறைபட்டுக்கொள் கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.

எந்தெந்த இடங்களில் எல்லாம் நெல்லையப்பர் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்களைச் சேகரித்து, தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த விஷயத்தில், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது மிக அவசியம்'' என்ற நாரதரிடம், சதுரகிரி விஷயத்தை நினைவூட்டினோம்.

‘`சதுரகிரிக்குச் சென்றதாகவும் கூறினீரே...?’’

‘`தரிசனம் செய்து வந்தேன். இன்னும் கூடுதல் தகவல்கள் சேகரிக்கவேண்டியுள்ளதால், மீண்டும் நண்பர்களோடு சதுரகிரிக்குச் செல்கிறேன். அங்கிருந்து திரும்பியதும் விரிவாகச் சொல்கிறேன்'' என்றவாறு விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

படங்கள் : எல்.ராஜேந்திரன்