மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 4

கண்டுகொண்டேன் கந்தனை - 4
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை - 4

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கொடும்பு தரிசனம்

கேரள மாநிலம் பாலக்காடு - சித்தூர் சாலையில், பாலக்காட்டிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது கொடும்பு.

இங்குள்ள முருகன் கோயில் அழகானது. தமிழகக் கட்டடக் கலைப்பாணியில், அழகான சிற்பங்களுடன் அமைந்த ராஜ கோபுரம் நம்மை வரவேற்கும். மயில்மண்டபம் தாண்டி உள்ளே சென்றால், மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஒரு முகம், நான்கு கரங்களுடன் நின்ற திருக் கோலத்தில் கிழக்குநோக்கு அருள்பாலிக்கிறார்.

உற்சவர், பாலசுப்ரமணியர். இங்குள்ள சிவபிரான், `கோஷ்டேஸ்வரர்' என்றும் அம்பிகை `மரகதாம்பாள்' என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகின்றனர்.

வரலாற்று ரீதியாக `மகோதயபுரம்' என்ற கொடுங்கோளூர் மீது முதல் பராந்தகன் மற்றும் அவன் பெயரன் முதலாம் ராஜராஜன் ஆகியோர் படையெடுத்துள்ளனர். போர் முடிந்து திரும்பும்போது, படை வீரர்கள் சிலர் இங்கு நிலையாகத் தங்கினர் என்றும்  ஒருவேளை இவர்கள் சோழநாட்டில் (கொங்கு மண்டலம்) உள்ள கொடும்பாளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இங்கு வாழ்கின்ற தமிழர் `முதலிகள் கைக்கோளர்' என்று அறியப்படுகின்றனர்.

கண்டுகொண்டேன் கந்தனை - 4

கல்யாண சுப்ரமண்ய சுவாமியின் கர்ப்பக் கிரக விமானம் 13-ஆம் நூற்றாண்டின் விஜயநகர கால அமைப்பில் உள்ளது என்று வரலாற்று அறிஞர் கே.வி. சௌந்தராஜன் குறிப்பிடுகிறார் (ஆதாரம்: கேரளம் - ஊரும் பேரும்; பாலக்காடு மாவட்டம் முனைவர் கோ.சித்ரா).

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெறும் நாள், மாத, வழிபாடுகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகின்றன. தைப்பூசத்தன்று இங்கு நடைபெறும் தேர்த் திருவிழாவும், காவடி ஊர்வலமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இக்கோயிலில் பல அற்புதங்கள் நடைபெற்றுள்ளன என்கிறார்கள். கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் போன்று இங்கும் மகாமகப் பெருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அருணகிரி நாதர் தரிசித்த  `கொடும்பு' முருகன் திருக்கோயில் இதுவே என்பதற்கு, மேற்கண்ட பல ஆதாரங்கள் நமக்கு உறுதுணையாக உள்ளன. அரசியல், மொழி ரீதியாக மாநிலங்கள் பிரிந்தாலும் அக்காலத்தே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இவ்வூர், திகழ்ந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

பழநிக்கு நிகரான சாந்நித்தியம் உள்ள தலம் என்பதால் `பழநியில் பாதி கொடும்பு' என்ற பழமொழி உள்ளது. திருப்புகழ்ப்பாடல் பெற்ற கொடும்பு தலத்தை நமக்கு அடையாளம் காட்டிய கந்தப்பெருமானின் கருணையை வியந்து போற்றி நமது யாத்திரையைத் தொடர்வோம்.

பெருங்குடி மருங்குறை பெருமாள்

ராமாயணத்தில் சுந்தர காண்டம் மிகவும் சிறப்பான பகுதியாகும். சொல்லின் செல்வன் - நவவியாகரணப் பண்டிதனான அனுமனின் பேராற்றலும், போராற்றலும், பேருரைகளும் வியப்பை அளிப்பனவாகும்.

‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்று சீதாப்பிராட்டியாரைக் கண்டு துதித்து மகிழ்ந்தார் மாருதி. ராவணன் ஆணைப்படி, அனுமனின் வாலில் கயிறு சுற்றித் தீ வைத்தனர். தன் வாலில் வைக்கப்பட்ட நெருப்பைக் கண்டு, `இலங்கை நகரில் விளக்கமுற்றிருந்த வீடுகளுள் அருள் (தயை - அன்பு) இல்லாத எல்லா இடத்தும் ஏ அக்னியே நீ பற்றி எரிவாயாக’ என்று கட்டளையிட்டார் அனுமன்.

`இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள்
இலெங்கணும் இலங்கென முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் மருகோனே'

இந்த வரிகளில் இலங்கை என்ற வார்த்தையில் உள்ள ‘இலங்’ என்பது ஆறுமுறை வருமாறு அமைந்த சந்தத் தமிழ் அருணகிரியாரின் வாக்கைப் படிக்கும்போதே நமக்குள் ஓர் எழுச்சி ஏற்படுகிறதல்லவா!

இந்த அழகான வரிகள் வரும் திருப்புகழ்ப் பாடல்,  ‘பெருங் குடி மருங்குறை பெருமாளே’ என்று நிறைவுபெறுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 4

பெருங்குடி என்ற வார்த்தைக்குரிய சந்தம் ‘தனந்தன’ என்பதாகும். ‘தலங்களில் வருங்கன...’ என்று தொடங்கும் இந்தத் திருப்புகழ் முழுவதுமே ‘தனந்தன, தனந்தன, தனந்தன, தனந்தன' என்ற சந்தக் குழிப்பிலேயே அமைந்துள்ளது. தலப்பெயருக்கு ஏற்றவாறு சந்தம் அமைப்பதில் ‘வாக்குக்கு அருணகிரி’யின் வண்ணத் திருப்புகழ் அற்புத எடுத்துக்காட்டு.

இந்தப் பெருங்குடி எங்குள்ளது என்று நாம் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை!

தணிகைமணி அவர்கள், `சரியான இடம் விளங்கவில்லை. சைதாப்பேட்டை, மதுரை, திருவாரூர், வலங்கைமான், (திருநெல்வேலி ஜில்லாவில்) ராதாபுரம் ஆகிய சப்டிஸ்ட்ரிக்ட் களில் பெருங்குடி என்னும் பெயருடைய கிராமங்கள் இருக்கின்றன' என்று குறிப்பிடுகிறார். மேலும் திருமயம், நாகை, பாபநாசம், புதுக்கோட்டை, நான்குநேரி ஆகிய தாலுகாக்களிலும் இந்தப் பெயருடைய ஊர்கள் உள்ளன.

ஆனாலும்...

`பெரும்பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை பெருமாளே'


- எனும் பாடல் வரிகளில் ‘கரும்பும் வாழையும் நிரம்பி விளங்கும் பொழில்கள் நிறைந்த பெருங்குடி என்னும் தலத்துக்கு அருகே வீற்றிருக்கின்ற பெருமாளே’ என்று ஒரு சூட்சுமத்தை வைத்திருக்கிறாரே அருணகிரிநாதர்!

இந்த முடிச்சை எப்படி அவிழ்ப்பது?

பெருங்குடியைத் தேடிய படலத்தில்... குறிப்பிடத்தக்க அன்பர்கள் சிலரில், செம்பங்குடி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ச. குருமூர்த்தி, தஞ்சை மாவட்டத்திலுள்ள இரண்டு பெருங்குடிகளைத் தேடி சைக்கிளிலும், நடந்தும் சென்று நமக்காக முயன்றார். இருப்பினும் பலன் இல்லை. சில பகுதிகளுக்குத் தபால் மூலம் தொடர்புகொண்டும் உறுதி செய்ய இயலவில்லை. இப்படியாக இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.

1979-ம் வருடம், மே மாதம். ஒரு நாள் நடு இரவு. யாரோ என்னை எழுப்பியது போல் இருந்தது. உடனே எழுந்து அமர்ந்தேன். மக்கள்தொகைக் கணக்கீடு தொடர்பாக 1960-ம் வருடம் வெளியிடப்பட்ட தொகுதிகளில் ‘திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் புத்தகத்தை எடு’ என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. ‘அதில் வயலூர் செல்லும் வழியில் உள்ள சோமரசம் பேட்டையைப் பார்’ என்று யாரோ விரட்டுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

உடனே அந்தத் தொகுதியில் அவ்வூரைத் தேடி எடுத்துப் பார்த்த போது, `சோமரசம்பேட்டைக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் பெருங்குடி என்ற கிராமத்தில் ஸ்ரீஅகஸ்தீச்வரர் ஆலயம் - சுமார் 1500 ஆண்டுகள்' என்ற குறிப்பு காணப்பட்டது.

இந்த நடு இரவில் நம்மை எழுப்பி இரண்டு ஆண்டுகளாகத் தேடிய பெருங்குடிக்கு வழிகாட்டிய கந்தவேளின் கருணையை எண்ணி எண்ணி இன்புற்றேன். உடனே ஒரு ரிப்ளை கார்டு (அக்காலத்தில் 15+15 = 30 பைசா) எடுத்து அந்தக் கோயில் சிவாசார்யர்க்குக் கடிதம் எழுதினேன்.

பெருங்குடி அகஸ்தீச்வரர் கோயில் ஸ்ரீ ஏ. பாலசுப்ரமண்ய குருக்களிடமிருந்து உடனே பதில் வந்தது. அவர் புத்தூரில் வசிக்கிறார். பெருங்குடி கிராமம், மல்லியம்பத்து என்ற கிராமத்தைச் சேர்ந்தது. சோமரசம்பேட்டையிலிருந்து பெருங்குடி, சுமார் 2 கி.மீ.; பெருங் குடியிலிருந்து வயலூர் கோயில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது என்று அவர் எழுதியிருந்தார்.

‘பெருங்குடி மருங்குறை பெரு மாளே’ என்ற அந்தத் திருப்புகழில் முந்தைய வரியில், ‘வயலூரா’ என்று தொங்கல் சீர் உள்ளது. பெருங்குடி மருங்குறை (வயலூர்) பெருமாளே என்று அன்வயப்படுத்தினால் வயலூர் அருகிலுள்ள பெருங்குடி என்று புரிந்துகொள்ளலாமே! 

இந்தத் திருப்புகழில் வயலூர் குறிப்புள்ளதைக் கொண்டு முன்னமேயே முயன்றிருக்கலாமே! இரண்டு ஆண்டுகள் என் மரமண்டை யில் ஏறவில்லையே.

நடு இரவில் நம்மிடம் காட்டி ஆட்கொண்ட ஆறுமுக தெய்வத்தின் அருள்தான் என்னே!

- அனுபவிப்போம்...

படங்கள்: தே.தீட்ஷித்

காப்பியப் பெருமை

கண்டுகொண்டேன் கந்தனை - 4

கந்தபுராணம்    - சிவ நூல்
மகாபாரதம்     - அற நூல்
பெரியபுராணம்     - அருள் நூல்
சிலப்பதிகாரம்     - விதி நூல்
சீவகசிந்தாமணி     - இன்ப நூல்
ராமாயணம்     - அன்பு நூல்

-திருமுருக கிருபானந்த வாரியார்