மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: வீரவை - சின்னவை - 29

Human Gods Stories - Veeravai - Chinnavai
பிரீமியம் ஸ்டோரி
News
Human Gods Stories - Veeravai - Chinnavai

தேவதை மாதிரி ஊருக்குள்ள உலவித்திரிஞ்ச பிள்ளைக, மாமங்காரன் மேல இருந்த பாசத்துல உசுரவிட்டதை நினைச்சு ஊரே கண்ணீர் விட்டுச்சு.

வைரமிருக்கானே... கடுமையான உழைப்பாளி. கன்னட தேசத்து லேருந்து இந்தூருக்குப் பிழைக்க வந்தப்போ, வைரம்பய கைக் கொழந்தை. வந்த அஞ்சு வருஷத்துல அம்மைவாத்து உசுரை விட்டுட்டா வைரத் தோட ஆத்தாகாரி. அப்பங்காரன் உக்காந்தா, எழுந்தா ‘உஸ்... உஸ்’னு மூச்சை இழுத்து இழுத்து விடுவான். அப்படியொரு நோவு. ஒடம்பொறந்தா ஒருத்தி. அம்மாவுக்கு அம்மாவா, அக்காவுக்கு அக்காவா இருந்து வைரத்தை வளத்தெடுத்தது அவதான். அக்காவுக்கும் வைரத்துக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்.

வைரத்தோட குடும்பம் பிழைப்புதேடி வந்தப்போ அந்தூரு நாட்டாமைக்காரு, அவரோட தோட்டத்துல கொட்டகை போட்டு தங்கிக்கச் சொன்னாரு. அதுக்கு உபகாரமா, வயக்காட்டு வேலை, கொல்லைக் காட்டு வேலையையெல்லாம் செய்யணும். வைரம் தலையெடுத்தபிறவுதான், குடும்பத்தோட நிலைமை மாறுச்சு. ஒரு குண்டு, ரெண்டு குண்டுன்னு சிறுகச் சிறுக காணிகளை வாங்கிப்போட்டான். நெல்லு, கரும்பு, வாழைன்னு சொந்தமா வெள்ளாமை பண்ண ஆரம்பிச்சான். மண்ணு அவன் உழைப்பையெல்லாம் பொன்னா மாத்துச்சு. வீடு வாசல்னு சொந்தக்காலுக்கு வந்துச்சு குடும்பம்.

வைரத்துக்குப் பதினஞ்சு வயசானபோது அக்காவுக்குக் கல்யாணமாச்சு. அடுத்த வருஷமே தேவதையாட்டம் ரெட்டைப் பொம்பளைப் புள்ளைகளைப் பெத்துப்போட்டா மகராசி. வீரவை, சின்னவைன்னு ரெண்டு புள்ளைகளுக்கும் பேரு வெச்சாக.

Human Gods Stories - Veeravai - Chinnavai
Human Gods Stories - Veeravai - Chinnavai

ஒருக்கா, கடுமையான மழை. வயக்காட்டுல நெல்லு தலைதட்டி வெளைஞ்சு கெடக்கு. வானம் மின்னி மின்னி அடங்குது. கடாமுடான்னு இடி இறங்குது. வயக்காட்டுக்கு மேக்காப்புல   ஓர் ஒத்தைப்புளி. அதுக்குக்கீழே சின்னதா ஒரு கொட்டகை போட்டுருக்காக. அதுக்குள்ள அண்டிக்கிட்டு கிடந்தா கருதுக்காவலுக்குப் போயிருந்த வைரத்தோட அக்காகாரி. மழை விட்டபாடில்லை. வீட்டுக்குப்போகலாம்னா வெள்ளத்துல பாதையெது பள்ளமெதுன்னு தெரியலே. திடீர்னு கண்ணைப் பறிக்கிற மாதிரி வெட்டிட்டுப் போகுது ஒரு மின்னல். பின்னாடியே வந்து விழுது பெரிய இடி. புளியமரத்தோட உச்சியில இறங்கி செதில் செதிலா பேந்து, குடிசையில உறைஞ்சு நிக்குது. விழுந்த வேகத்துக்கு குடிசை இருந்த இடம் தெரியலே.

அறுவைக்கு ஆளு கூப்பிட அண்டை யூருக்குப் போயிருந்த வைரம், அக்காவை நினைச்சு பதற்றப்பட்டுக்கிட்டே ஓடியாறான்.  மழை படிப்படியா மட்டுப்பட்டு நிக்குது. வைரத்தோட சேந்து ஊராளுகள்லாம் ஓடியாறாக. இடி இறங்கி உடம்பெல்லாம் கருகிக்கெடந்த அக்காகாரியப் பாத்துக் கதறியழுதான் வைரம்பய. புள்ளைக ரெண்டுக்கும் பெரிசா வெவரம் தெரியலே. இருந்தாலும் கரிக்கட்டையா கெடக்குற அம்மாவைப் பாத்துக் கலங்குதுக.

பொண்டாட்டி போனதுல இருந்து வைரத்தோட மச்சாங்காரனுக்கு புத்தி பேதலிச்சுப்போச்சு. ஒருக்கா, வீட்டை விட்டுக் கௌம்பினவரு, கால் போன போக்குல போயிட்டாரு. அதுக்கப்புறம் வீட்டுப்பக்கம் திரும்பலே.

உறவுக்காரகள்லாம் ஒண்ணுகூடிப் பேசுனாக. ‘வீரவைக்கும் சின்னவைக்கும் உரிமைக்காரன் நீதான். புள்ளைக பெரிய மனுஷியானதும் நல்லது கெட்டதெல்லாம் நீதான் செய்யணும்’னு சொன்னாக.

‘எங்க அக்கா எனக்கு குலசாமி. அதோட புள்ளைகளுக்கு நான்தான் அம்மா, அப்பா, மாமன்... அதுகளைப் பத்திக் கவலைப் படாதீய’ன்னு சொல்லிட்டான் வைரம்.

காலம் ஓடுச்சு. மாமங்காரன், தாய்க்குத் தாயா இருந்து குழந்தைகளைப் பாத்துக்கிட்டான். காசு பணம்னு பாக்காம, வேண்டியது வேண்டாததையெல்லாம் அள்ளியாந்து வீட்டுல கொட்டுனான். புள்ளைக ரெண்டும் பெரியாளாச்சுக. தாமரைப்பூவாட்டம் ரெண்டும் வெளைஞ்சு நிக்குதுக.

புள்ளைகளுக்கு நல்லவிதமா கலியாணங் காச்சி செஞ்சு வச்சிடணும்னு சம்பந்தம் பாக்க ஆரம்பிச்சான் வைரம். கன்னட தேசத்துல இருந்தெல்லாம் வந்து எனக்குக் கொடு, உனக்குக் கொடுன்னு கேக்குறாக. ஆனா, அவ்வளவு தூரத்துல புள்ளைகளைக் கொடுக்க வைரத்துக்கு மனசில்லை. புள்ளைகளும் மாமங் காரனை விட்டு தூரம்போக மாட்டோம்னு அழுவுதுக. 

ஒருக்கா, குலசாமி கோயில் திருவிழா. ரெண்டு புள்ளைகளும் ஒண்ணுபோல உடை போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு திரியுதுக. வர்றவுக, போறவுக கண்ணெல்லாம் அந்தப் புள்ளைக மேலதான். அண்டையூர்ல இருக்கிற பெரிய வீட்டுக்காரவுக, வைரத்தைக் கூப்பிட்டு, ரெண்டு புள்ளைகளையும் எம் ரெண்டு பயலுகளுக்குத் தாரியளான்னு கேட்டாக. வைரத்துக்கு சந்தோஷம்... இவ்வளவு பெரிய ஆளுக, நம்ம புள்ளைகளைக் கேக்குறாகளேன்னு.

Human Gods Stories - Veeravai - Chinnavai
Human Gods Stories - Veeravai - Chinnavai

உறவுக்காரவுகளைக் கலந்து பேசுனான்.  எல்லாருக்கும் சந்தோஷம்... அந்தத் திருவிழா வுலேயே கலியாணத்துக்கு நாள் குறிச்சாக. அடுத்த அஞ்சாவது மாசம், அமாவாசைக்கு நாலாம் நாளு வளர்பிறையில இதே குலசாமி கோயில்ல கலியாணம். தன் நிலபுலத்துல முக்காப்பங்கை புள்ளைகளுக்கு எழுதி வெக்கிறதா சொன்னான் வைரம்.

அந்தப் பருவத்துல நல்ல மழை. ஒரு பக்கம் நெல்லு தளும்ப தளும்ப கதிர் தள்ளி தலைகுனிஞ்சு கெடக்கு. இன்னொரு பக்கம், வாழை குலைதள்ளி நிக்குது. கத்திரி, வெண்டைன்னு காய்கறிகள்லாம் சமைக்கிற பருவத்துல காய்ச்சுத் தொங்குது. வைரம் வயக்காடே கதின்னு கெடக்கான்.

அன்னிக்கு நல்ல வெயிலு... கோழியடிச்சு, இளங்குழம்பா வெச்சு சோறு ஒருத்தியும் குழம்பு ஒருத்தியுமா தலையில சுமந்துகிட்டு வயக்காட்டுக்குக் கிளம்பினாளுக. வயக்காட்டுக்கும் வீட்டுக்கும் அஞ்சு கல்லு தூரம். ஒத்தயடிப்பாதையில நடக்கணும். 

வீரவையும் சின்னவையும் தனியா இருந்தா கதைதான். இவ ஒரு கதை சொல்ல, பதிலுக்கு அவ ஒரு கதை சொல்வா... முதக் கதைய வீரவை போட்டா... ‘நிலத்துல முளைக்காத செடி... நிமுந்து நிக்காத செடி... அது என்ன செடி?’

முகத்தைக் கோணிக்கிட்டு யோசிச்சா சின்னவை... ‘இது தெரியாதா... தலைமுடி’ன்னு சொல்லிட்டு கலகலன்னு சிரிச்சா... ‘சரி... இப்ப எங்கதைக்கு விடைசொல்லு’ன்னு பதில்கதை போட்டா சின்னவை.

‘இளமையில பச்சை, முதுமையில சிவப்பு, குணத்துல எரிப்பு அவன் யாரு...’

‘மௌகாய்’ விடையைப் பிரிச்சா வீரவை.

ரெண்டு பக்கமும் முள்ளுபுதரு... பேஞ்ச மழையில தொட்டாச்சிணுக்கியும் கம்மாம் புல்லும் அடர்ந்து வெளைஞ்சு கெடக்கு பாதையில.

அதோ மாமங்காரன், வாழைத்தோப்புல தாங்குக்கொம்பு ஊண்டிக்கிட்டிருக்கான். ‘மாமோ’ன்னு இங்கிருந்தே கத்துனா வீரவை. ‘பாத்து வாங்க புள்ளைகளா’ன்னு அங்கேயிருந்து சத்தம் போட்டான் வைரம்.

துள்ளிக் குதிச்சு நடந்துகிட்டிருந்த சின்னவை, அப்படியே அசையாம நின்னா. முன்ன நடந்துகிட்டிருந்த வீரவை திரும்பிப் பாத்து, ‘என்னடி அப்படியே சிலையாட்டம் நிக்குறே’ன்னு கேட்டா. ‘எங்காலை ஒரு பாம்பு சுத்திக்கிச்சுடி’ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சா சின்னவை.

உடம்பிறந்தாளைக் காப்பாத்த ஓர் அடி எடுத்து வெச்சா வீரவை. அவ கால்லயும் ஏதோ சுத்துறமாதிரியிருந்துச்சு. அசையாம கீழே பாத்தா... ஒரு நாகம் அவ காலைப் பிணைச்சுக்கிட்டுக் கெடக்கு.

அக்கா மக்க ரெண்டுபேரும் அப்படியே அசையாம நிக்குறதைக் கண்டு, ‘புள்ளைகளா என்னாச்சு’ன்னு கேட்டான் வைரம். ‘மாமா... எங்க கால்ல நாகம் சுத்தியிருக்கு’ன்னு அழுதுகிட்டே கத்துனா சின்னவை.

பதறிப்போயி ஓடியாந்தான் வைரம். கையில நீளமான கத்தி. சத்தமில்லாம அடியெடுத்து வெச்சு வீரவைக்குப் பக்கத்துல போனான். அவ காலைச் சுத்தியிருக்கிற நாகத்தோட தலையைக் குறிவச்சு  கத்தியை வீசுனான். வீசுன வேகத்துல நாகம் தலை துண்டாகி தூரப்போயி விழுந்துச்சு. அடுத்து, சின்னவைகிட்ட வந்தான். சரியா குறிவச்சான், கத்தியை வீசுனான். வாலுல விழுந்துச்சு வெட்டு. திடீர் தாக்குதல்ல நிலைகுலைஞ்சு சின்னவை காலை விட்டு விலகின பாம்பு, அப்பிடியே வைரம் மேல பாஞ்சுச்சு. சரியா கெண்டைக்கால்ல போட்டுச்சு ஒரு போடு. பல்லு அப்படியே உள்ளே பதிஞ்சு நிக்குது. வலி உச்சஞ்தலையில இறங்குச்சு. அப்படியே வாலைப்பிடிச்சு இழுத்து சுத்தி தூர வீசுனான் வைரம்.

நாலஞ்சு நிமிஷம்தான். அவனுக்குக் கண்ணை இருட்டிக்கிட்டு வந்துருச்சு. வாயில நுரை தள்ளிருச்சு. புள்ளைகளையே பாத்துக்கிட்டு ‘பொத்து’னு கீழே விழுந்தான். ரெண்டு வெட்டு. அப்படியே அடங்கிட்டான். கண்ணு முன்னாடி தாய்க்குத்தாயா, தந்தைக்குத் தந்தையா இருந்த மாமங்காரன் விழுந்து அடங்குறதைப் பாத்து சின்னவையும் வீரவையும் கதறி அழுவுதுக. சின்னவை மாமன் தலையை மடியில தூக்கி வெச்சுக்கிட்டு ‘மாமா... எங்களைத் தவிக்கவிட்டுப் போயிட்டியளே மாமா’ன்னு அழுவுறா. வந்து ஆறுதல் சொல்லக்கூட அங்க ஆளுக இல்லை.

வீரவையைக் கூப்பிட்டா சின்னவை... “தாயும் தகப்பனும் நம்மை விட்டுட்டுப் போனபிறகு தந்தையா இருந்து நம்மை வளத்தெடுத்த மாமா நமக்காக உசுரை விட்டுட்டாரு. இனிமே எனக்கு வாழ விருப்பமில்லை. நீ ஊருக்குள்ள போய்த் தகவல் சொல்லு... நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோ... நான் இங்கேயே என்னை மாச்சுக்கப்போறேன்’னு சொல்லிட்டு மரங்களை ஒடிச்சு அடுக்கி சிதை மூட்டுனா. தீ திகுதிகுன்னு எரிய ஆரம்பிச்சுச்சு. 

`‘மாமனும்  நீயும் இல்லாத இந்த உலகத்துல நாமட்டும் வாழணுமா... வா... ரெண்டுபேரும் மாமாகூடவே போயிரலாம்”னு சொல்லிட்டு சின்னவையோட கையைக் கோத்துக்கிட்டு அப்படியே சிதையில பாஞ்சா வீரவை.  ரெண்டு புள்ளைகளையும் நெருப்பு வாரி அணைச்சுக்கிச்சு.

தேவதை மாதிரி ஊருக்குள்ள உலவித்திரிஞ்ச பிள்ளைக, மாமங்காரன் மேல இருந்த பாசத்துல உசுரவிட்டதை நினைச்சு ஊரே கண்ணீர் விட்டுச்சு. தெய்வம்தான் இப்படி அந்தப்புள்ளைக உருவத்துல வந்து வாழ்ந்துட்டுப் போயிருக்குன்னு பேசிக்கிட்டாக. அதுக தீக்குளிச்ச எடத்துல சின்னதா ஒரு கோயில் எழுப்பிக் கும்பிட ஆரம்பிச்சாக.

தூத்துக்குடி பக்கத்துல மேலக் கல்லூரணின்னு ஒரு ஊரு இருக்கு. அங்கேதான் இப்போ சின்னவையும் வீரவையும் இருக்காக. கலியாணம் கூடிவராத ஆளுகெல்லாம் போயி அந்தப்புள்ளைககிட்ட கையெடுத்து வேண்டிக்குறாக. அதுகளும் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைக்குதுக!

- வெ.நீலகண்டன்,  ஓவியம் : ஸ்யாம்