Published:Updated:

மாலையில் தொடங்கிய சிவாலய ஓட்டம் நள்ளிரவில் முடிகிறது! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாலையில் தொடங்கிய சிவாலய ஓட்டம் நள்ளிரவில் முடிகிறது! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மாலையில் தொடங்கிய சிவாலய ஓட்டம் நள்ளிரவில் முடிகிறது! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் பிரசித்திபெற்ற 12 சிவாலங்களில், சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெற்றுவருகிறது.

சிவராத்திரி தினத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் ஓடிச்சென்று வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு நடந்துவருகிறது. கையில் விசிறியுடன், 'கோவிந்தா', 'கோபாலா' என விளித்தபடி, ஒவ்வொரு கோயிலிலும் சிவபெருமானை வழிபடுகிறார்கள். இதில் தமிழகம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார்கள். ஓடிச்செல்ல முடியாதவர்கள் சைக்கிள், பைக் மற்றும் கார்களில் பன்னிரு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர். 

மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ள முன்சிறை திருமலை சிவன்கோயிலில், சிவாலய ஓட்டத்தைத் தொடங்குகின்றனர். அதன்பிறகு திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களுக்கும் ஓடிச்சென்று, சிவபெருமானை தரிசிக்கின்றனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓடுகின்றனர். நேற்று மாலை தொடங்கிய சிவாலய ஓட்டம், இன்று நள்ளிரவு வரை நடக்கிறது. 

பாதி மனித உருவமும் பாதி புலி உருவமும் கொண்டது புருஷாமிருகம். மிகச் சிறந்த சிவபக்தர். சிவனைத் தவிர வேறு தெய்வத்தை ஏற்க மாட்டார். விஷ்ணுவின் நாமத்தைக் கூறினாலே இவருக்குப் பிடிக்காது. புருஷாமிருகத்துக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உணர்த்த விரும்பிய கிருஷ்ணர், பீமனை அழைத்தார். குருக்ஷேத்திரப் போரில் வெற்றிபெற புருஷாமிருகத்தின் உதவி தேவை என்று கூறியவர், பீமனிடம் 12 ருத்திராட்சங்களைக் கொடுத்து, புருஷாமிருகத்திடம் செல்லுமாறும், அப்படிச் செல்லும்போது, தன் கோவிந்தா நாமத்தை உச்சரிக்கும்படியும் கூறினார். தன்னுடைய பெயரை உச்சரிப்பதை விரும்பாத புருஷாமிருகம், பீமனைத் துரத்த வரும்போது, ஒரு ருத்திராட்சத்தைப் போடும்படியும் கூறினார். பீமனும் கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி புருஷாமிருகத்திடம் நெருங்கினார். அது, பீமனைத் துரத்த, பீமன் ஒரு ருத்திராட்சத்தை கீழே போட, அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சிவபூஜையில் ஈடுபட்டது. பிறகு, கோவிந்த நாமம் சொன்ன பீமனைத் துரத்தியது. 

12 ருத்திராட்சங்களும் தீர்ந்தன. பீமன் ஓடிச்சென்று புருஷாமிருகத்தின் எல்லைக்கோட்டின் வெளிப்பகுதியில் ஒருகாலை வைத்தார். மற்றொரு காலை புருஷா மிருகம் பிடித்துவிட்டது. தான் வெளியே வந்துவிட்டதாகப் பீமன் கூறினார். அதை புருஷா மிருகம் மறுத்தது. பிரச்னை, தருமரின் சபைக்குச் சென்றது. தருமர் வழக்கை விசாரித்துவிட்டு, பீமன் உடலின் பாதி, புருஷாமிருகத்திற்குச் சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கினார். தருமரின் நேர்மையைக் கண்டு வியந்த புருஷாமிருகம், யாகத்திற்குப் பால் வழங்க ஒப்புக்கொண்டது. பீமன் 12-வது ருத்திராட்சம் வைத்த இடத்தில் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக சங்கர நாராயணராகக் காட்சியளித்திருக்கிறார். 12-வது சிவாலயமான நட்டாலத்தில், சங்கர நாராயணர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது. பன்னிரு சிவாலயங்களையும் தரிசிக்கும் பக்தர்கள், கடைசியாக விஷ்ணு கோயிலிலும் வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர்.

சிவராத்திரி விழாவை முன்னிட்டு, வழக்கம்போல இந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.