திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

சேகல் மடப்புரம் பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில்படங்கள்: ஜி.சதீஷ்குமார்

“மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட்கு எல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க “

  - திருவிளையாடல் புராணம்

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

சனின் முக்கண்ணுக்கு நிகராகப் போற்றப்படும் நூல்கள் மூன்று. அடியார்களின் பெருமை கூறும் பெரியபுராணத்தை ஈசனின் வலக்கண் என்றும் திருவிளையாடல் புராணத்தைப் பெருமானின் இடக்கண் என்றும் கூறுவர். அதேபோல், கச்சியப்பரின் கந்தபுராணத்தைச் சிவனின் நெற்றிக்கண்ணுடன் இணைத்துப் போற்றுவர் சைவப் பெருமக்கள்.

சைவ சமயத்தின் ஒப்பில்லாத புனித நூலான திருவிளையாடல் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி மாமுனிவர். சனத்குமாரரின் திருஅவதாரம் என்று போற்றப்படும் பரஞ்சோதி முனிவர் மகாசமாதி அடைந்த ஆலயம், திருத்துறைப்பூண்டிக்கு அருகே சிதிலமடைந் துள்ளது என்று கேள்விப்பட்டதும் துடித்துப் போனோம். உடனே கிளம்பினோம். வழியெங்கும் பரஞ்சோதி மாமுனியின் பெருமைகளை அசைபோட்டுக்கொண்டே வந்தது மனம்.

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

14-ம் நூற்றாண்டில் மாலிக்காபூரின் படையெடுப்பால் நிலைகுலைந்தது மதுரையம்பதி. பொன், பொருள்களைச் சூறையாடியது போதாதென்று, ஈவிரக்கமின்றிப் பெண்களையும் சூறையாடியது பகைவர்கள் கூட்டம்.  அதனால் பயந்துபோன மதுரை வாழ் அந்தணர்கள், தேசிகர்கள், சைவ வேளாளர்கள் என்று ஒரு கூட்டம் அங்கிருந்துத் தப்பிச்சென்று சோழநாட்டின் திருத்துறைப்பூண்டிக்கு அருகே கொருக்கை, மகாராஜபுரம், சேகல் மடப்புரம் போன்ற ஊர்களில் தஞ்சம் புகுந்தது.

இந்தக் கூட்டத்தில் வாழ்ந்த மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்குத் திருமகனாக அவதரித்தவர் பரஞ்சோதி மாமுனிவர். இவர், 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கூறப்படுகிறது. வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்யம் மிக்க பரஞ்சோதி முனிவரின் அறிவைக் கண்டு வியந்த மன்னர்கள், அவரைப் போற்றி வணங்கினர். சிறு வயதிலேயே சந்நியாசம் பூண்ட பரஞ்சோதியார், தல யாத்திரை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை மதுரையம்பதிக்குச் சென்ற பரஞ்சோதியார், அவரின் குலதெய்வமான மீனாட்சியம்மையை தரிசித்து கண்ணீர் விட்டுக் கலங்கினார். ‘தென்னாட்டில் மீண்டும் சைவம் எப்போது தழைக்குமோ' என்று வாய்விட்டு அரற்றினார்.

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

அன்றிரவு அவர் மீனாட்சியம்மையின் ஆலயச் சத்திரத்தில் தங்கினார். அப்போது அவர் கனவில் வந்த அன்னை, மதுரையம்பதியில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் பாடுமாறு ஆணையிட்டாள். அதைச் சிரமேற்கொண்டு ‘சத்தியாய்ச் சிவமாகி...’ என்று தொடங்கி,  64 திருவிளையாடல்களையும் அற்புதமாக எழுதினார் பரஞ்சோதி முனிவர்.

மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்று மூன்று காண்டங்களாக - 3,362 பாடல்களில் பெருங்காப்பியமாகத் திருவிளையாடற் புராணத்தைப் பாடி, சொக்கநாதர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். அதன்பிறகு விஜயநகர சாம்ராஜ்ஜியத் தின் எழுச்சியால், தென்னகத்தில் மீண்டும் இந்து தர்மம் தழைக்கத் தொடங்கியது என்பார்கள்.

சைவ சமய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவிய இந்த மாமுனிவர், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மகாராஜபுரத்தில் உறவினர் களோடு தங்கியிருந்தார். அப்போது சேகல் மடப்புரத்தில் ஒரு சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார். மாமுனியின் பெருமையை உணர்ந்த தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னன் வீரசேகரன் அங்கு ஒரு சிவாலயத்தையும், திருமடத்தையும் கட்டித் தந்தான். நிலங்களையும் பசுக்களையும் தானமாக வழங்கினான். அந்த ஆலயமே ஸ்ரீபரஞ்சோதீஸ்வரர் ஆலயம்.

அந்த ஆலயத்திலேயே பரஞ்சோதி மாமுனியும் தன் 75-ம் வயதில் ஜீவசமாதி அடைந்தார். ஆலயத் தின் தென்மேற்குப் பகுதியில் அவர் சமாதியின் மீது விநாயகர் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மாமுனியின் சிலை ஒன்றையும் ஆலயத்தில் வைத்து வழிபட்டார்கள். அவர் ஜீவன் முக்தியடைந்தது, வியாழக்கிழமை. வாரம்தோறும் இந்தத் தினத்தில், பாலும் சர்க்கரையும் நைவேத்தியம் செய்து வழிபட்டார்கள். அங்கு வந்து வழிபட்ட அத்தனை பேரின் வேண்டுதலும் அப்படியே நிறைவேறியது.

ஆலயம் தேடுவோம்: பக்தர்களால் எழும்பட்டும் திருக்கோயில்!

மகாசித்தரின் சமாதி அல்லவா... இன்றும் ஜீவனோடு விளங்கும் அந்தப் புண்ணிய மூர்த்தியின் தவத்தாலும், இறைவன் பரஞ்சோதீஸ்வரரின் அருளாலும் அங்கு வந்தவர்கள் எல்லோரும் வாழ்வு பெற்றார்கள். முக்கியமாகக் கவலைகள் நீங்கி மன நிம்மதி அடைந்தார்கள்.  கடன் நிவர்த்தி பெற்று, தன தான்ய பிராப்தி பெற்று சிறப்படைந்தார்கள். இதனால் பரஞ்சோதீஸ்வரரின் பெருமை ஒரு காலத்தில் சோழம் தாண்டி இலங்கை வரைக்கும் பரவியிருந்ததாம். காலத்தின் கோலம், சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதலே கோயில் கவனிப்பாரின்றி சிதைந்துபோனது. 500 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம், தற்போது அடியார்களின் உழைப்பால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் பரஞ்சோதீஸ்வரர், பாலினும்நல்மொழியாள் ஆகியோரின் சந்நிதி களுடன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும் உருவாகி வருகின்றன.

சைவ சமயத் திருவிளக்காய், மீனாட்சியம்மை யின் திருமகனாய்த் திகழ்ந்த பரஞ்சோதியார் ஸித்தியடைந்த இந்த ஆலயம் கட்டாயம் சீரமைக்கப்பட வேண்டும்.  கேட்டதையெல்லாம் கொடுக்கும் பரஞ்சோதீஸ்வரர் குடிலை விட்டுக் கருவறைக்குச் செல்ல வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும்.

செல்வம் எதையுமே தராது. அழிவில்லா தேகம், பகையற்ற உறவு, முடிவில்லா ஆயுள், நீடித்த புகழ், எந்நாளும் நிம்மதி என்று எதையுமே செல்வம் பெற்றுத் தராது. ஈசனின் திருக்கோயிலுக்கு அளிக்கும் செல்வம் ஒன்றே நீங்கள் விரும்பியதைக் கொடுக்கும். அதனால் நிம்மதி பிறக்கும். எந்நாளும் நிம்மதி என்ற நிலையை அடைந்தால், அது பெரும்பேறு அல்லவா! அள்ளிக்கொடுங்கள்; ஆலயம் எழும்பட்டும்!

- மு. ஹரி காமராஜ்

உங்களுக்காக ...

ஸ்வாமி :  ஸ்ரீபரஞ்சோதீஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீபாலினும்நல்மொழியாள்

பிரார்த்தனைச் சிறப்பு: கடன் நிவர்த்தியாகும், செல்வ வளம் பெருகும், கவலைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

எப்படிச் செல்வது ..?: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், பாமணி என்ற ஊரிலிருந்து உம்பளச்சேரி செல்லும் சாலையில், சேகல் மடப்புரம் பரஞ்சோதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

வங்கிக் கணக்கு விவரம் :
A/c.Name:     C.Vairamurthy – S.Kalidoss
A/c.No:     500101010961656
Bank Name:     City Union Bank Ltd
Branch:      Thiruthuraipoondi
IFSC No:      CIUB00257
தொடர்புக்கு:     பரமசிவன் 79044 13441