திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

சீதை பிறந்த ஊருக்கு ஒரு பயணம்!

ரு குடும்பத்தலைவியாக, அம்மாவாக தன் கடமைகளை நிறைவுசெய்த ஒரு பெண்ணுக்கு, நல்ல ஆரோக்கியமும் விரும்பிய ஆலயங்களுக்கெல்லாம் சென்று வருகிற கொடுப்பினையும் கிடைப்பதுதான் பேரின்பம். அப்படியொரு பேரின்ப மனுஷிதான் பத்மாவதி. ஏவி.எம் குமரனின் மனைவி. இவரைச் சந்திக்க சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கிற அவருடைய இல்லத்துக்குச் சென்றிருந்தோம்.

அவருக்கு முன்னால், அவர் வீட்டுத் தோட்டத்து மரங்களும் பூக்களும் நம்மை வரவேற்றன. சேட்டைக்கார பிள்ளைகள்போல  மதில் சுவரைத் தாண்டி எட்டிப்பார்க்கின்றன சரக்கொன்றையும் மரமல்லியும்.  தோட்டத்து அழகில் லயித்துப்போய் நின்ற நம்மை, ‘வாங்க வாங்க’ என்று வாசலுக்கே வந்து வரவேற்றார் பத்மாவதி குமரன். வெளியூர் முதல், வெளிநாடுவரை... தன் இஷ்ட தெய்வங்கள்  உறைகின்ற இடங்கள்தோறும் ஆன்மிகப் பயணம் செய்து வருபவருடன் பேசினோம்.

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

“நான் ஒரு கோயிலுக்குப் போகணும்னு மனசுக்குள்ள நினைச்சா, அந்தக் கோயிலுக்குப் போகிற மாதிரியான வாய்ப்பு தானாவே அமைஞ் சுடும். அதுக்குக் காரணம் ரமண மகரிஷிதான்.

நான் மூணு மாசக் குழந்தையா இருக்கிறப்ப, ரமண மகரிஷியோட ஆசீர்வாதம் வாங்கிறதுக்காக எங்க அம்மா என்னைத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க, என்னைத் தூக்கி மகரிஷி கையில கொடுத்துட்டு, அம்மா மகரிஷியைத் துதிச்சு பாட்டுப்பாட ஆரம்பிச்சுட்டாங்களாம். அம்மா பாடி முடிக்கிற வரைக்கும், ரமணரோட கைகளில் அழாம அமைதியா இருந்தேனாம். அவருடைய திருக்கரங்கள் என் மேலே பட்டதாலதான், இந்த 75 வயசுலேயும் என்னால ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ன்னு  வாழ்ந்துக்கிட்டிருக்க முடியுது’’ என்றவர், தன் ஆன்மிகப் பயணத்தின் ஆரம்பத்தைச் சொன்னார்.

‘`அறுபது வயசுலதாம்மா ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு முன்னாடியும் நிறைய கோயில்களுக்குப் போயிட்டுதான் இருந்தேன். சில முக்கியமான கோயில்களுக்கும் நான் மனசுக்கு நெருக்கமா உணர்ற கோயில்களுக்கும் திரும்பத் திரும்பக்கூட போயிருக்கேன். ஆனா, பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணமாகி செட்டிலானதும்தான் முழு உத்வேகமா கோயில்களுக்குப் போக ஆரம்பிச் சேன். அப்படிப் போனாலும்கூட அதிகபட்சமா நாலு நாள்தான் போவேன். என் கணவரைப் பார்த்துக்கிறதுக்கு வீட்டுக்கு ஓடி வந்திடுவேன். கைலாஷ், பத்ரிநாத்துக்கு போயிருந்தப்ப மட்டும்தான் 10 நாள் வீட்டை விட்டுட்டு  இருந்தேன்’’ என்றவர், ‘`குடும்பத்துக்கான கடமைகளை செஞ்சு முடிச்சிட்டு ஆன்மிகப் பயணத்தை ஆரம்பிக்கிறதுதான் சரி’’ என்கிறார் அழுத்தம்திருத்தமாக.

“மெய்சிலிர்க்க வைத்த ஆன்மிக அனுபவங்கள் பற்றி...”

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

‘`ஒன்றா, இரண்டாங்க... கற்பக விருட்சம் மரம்னு சின்ன வயசுல கேள்விப் பட்டிருப்போம். அந்த மரத்தை பவிஷ்ய கேதார் கோயில்ல நேர்ல பார்த்தப்போ, உடலெல்லாம் சிலிர்த்துப்போச்சு.

இந்தூரில் ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மஹா காளேஸ்வரோட கோயிலுக்குப் போயிருந்தேன். ஒரு காலத்துல, அந்தக் கோயில்ல இருக்கிற லிங்கத்துக்கு நடுராத்திரியில சுடுகாட்டுச் சாம்பலால அபிஷேகம் பண்ணுவாங்களாம். இப்ப விபூதியால அபிஷேகம் பண்றாங்க.

வியன்னாவில் சால்ஸ்பர்க்கில், அரிக்கன் விளக்கு வெளிச்சத்துல திரும்பின பக்கமெல்லாம் பனி லிங்கங்கள்... ஒவ்வொரு கோயிலின் கருவறைகளுக்குள் நிற்கும் போதும் மெய்சிலிர்த்துதான் போகுது.சில நாள்களுக்கு முன்னால் சீதை பிறந்த ஜனக்பூருக்கு ஆன்மிகப் பயணம் போயிட்டு வந்தேன். அதுவும்கூட மெய்சிலிர்க்க வைத்த அனுபவமாகத்தான் இருந்துச்சு’’ என்றவர், அந்த அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

‘`ஜனக்பூர், காட்மாண்டுவில் இருக்கு. இது சீதை பிறந்த இடம். அதை நினைவுகூர 1911-ல் ஒரு பெரிய அரண்மனை கட்டியிருக் காங்க. அரண்மனைக்குள்ளே சின்னக் கோயிலும், அதுக்குள்ள ராமர், சீதை திருவுருவச் சிலைகளும் இருக்கு. அவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அரண்மனைக்குப் பின்னாலே சிறிய கோயில் இருக்கு. அங்கே விக்கிரஹம் எதுவுமில்லை. அரூபமாக ராமனையும் சீதையும் ஸ்தாபிச்சு வழிப்படறாங்க. பிரசாதமாக மஞ்சள் நிற வஸ்திரமும், தீர்த்தமும், கூடவே துலுக்கச் சாமந்தி மாலையும், சந்தனமும் தர்றாங்க. சீதை பிறந்த இடம் என்பதாலோ என்னவோ, கோயிலில் எங்கேயும் லட்சுமணன் சிலை என் கண்களில் படவேயில்லை.

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

அரண்மனை இருக்குன்னு சொன்னேன் இல்லையா... அங்கே, குழந்தை சீதையை வயலிலிருந்து கண்டெடுத்தது, ராமரும் சீதையும் ஒருவரையொருவர் கண்டது, ராமர் வில்லை வளைத்தது, திருமணம் முடித்தது என்று ஸ்ரீராம தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை அசைவுள்ள பொம்மை களாக உருவாக்கி, கண்ணாடிப் பேழைகளுக்குள்ளே பக்தர்களின் பார்வைக்கு வெச்சிருக்காங்க. அரண்மனைதான், கண்ணாடிப் பேழைகளுக்குள்ளே இருக்கிற பொம்மைகள்தான் என்றாலும், சீதாபிராட்டி பிறந்த மண்ணுல நானும் நின்னுக்கிட்டிருக்கேன் என்கிற உணர்வே மெய்சிலிர்க்க வெச்சதுங்க. சாயங்கால வேளைகளில் ஸ்ரீராம மூர்த்தியின் கதைகளை இந்தியில் சொல்றாங்க. நாங்க ஜனக்பூர் போன அன்னிக்கு ஆயிரக்கணக்கானவங்க  ராமர் கதையை மெய்ம்மறந்து கேட்டுக்கிட்டிருந்தாங்க.

சீதை பிறந்த இடத்தை தரிசிச்சுட்டு, அங்கிருந்து ‘மான கமனா’ அப்படிங்கிற சக்தி பீடத்துக்குப் போனோம். ‘மானா’ அப்படின்னா மனசு; ‘கமனா' என்றால் விருப்பம். அதாவது, இங்கே  அரூபமா இருக்கிற அம்மனை வழிபட்டால், நம்முடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்கிறது ஐதீகம். தரையிலிருந்து 1,300 மீட்டர் உயரத்துல இருக்கா இந்த அம்மன்.

நாகபஞ்சமி இந்த அம்மனுக்கு ரொம்ப விசேஷம். ரொம்ப உயரத்துல இருக்கிறதால, கேபிள் காரில்தான் போகணும். அம்மனுக்குப் பலி கொடுக்க சேவல், ஆடு, புறா ஆகியவற்றைக் கேபிள் காரில்தான் எடுத்துட்டுப் போறாங்க. இங்கே பிரசாதமா குங்குமம், சீப்பு, வளையல், அட்சதை அரிசின்னு சுமங்கலிக்குப் பொருள்களை ஒரு வஸ்திரத்தில் வெச்சு தர்றாங்க’’ என்றவரிடம், ‘ஆன்மிகப் பயணங்கள் செல்ல ஏதுவாக உடம்பை எப்படி ஃபிட்டாக வெச்சுக்கிறீங்க’ என்றோம்.

‘`தினமும் வாக்கிங் போயிடுவேன். எதை மறந்தாலும் மூச்சுப் பயிற்சி செய்ய மறக்கமாட்டேன். இந்த வயசிலேயும், மலை மேலே குடியிருக்கிற தெய்வங்களை தரிசிக்க, எத்தனை படிகள் ஏறினாலும் நான் சோர்ந்து போகாம இருக்கிறதுக்கு மூச்சுப் பயிற்சிதான் காரணம்’’ பத்மாவதி அம்மாவின் முகத்தில் ஒரு நிறைவு தெரிகிறது.

- ஆ. சாந்தி கணேஷ், படம்: ப.சரவணகுமார்

முகஸ்துதி!

தெய்கு ,  குடோ  என்று  ஜென்  துறவிகள்  இருவர் இருந்தனர். இவர்கள் ஒருமுறை ஜமீன்தார் ஒருவரைச் சந்தித்தனர்.

ஜமீன்தாரிடம்  குடோ, “தாங்கள்  இயற்கை யிலேயே உண்மை உணர்வு மிக்கவர். ஜென்  கற்க தகுதிபெற்றவர்'' என்றார்.

‘கற்பக விருட்சத்தைக் கண்டேன்!’ - பத்மாவதி குமரன்

இந்த முகஸ்துதியைக் கண்டு கோபம் கொண்ட தெய்கு, “மூடனே! ஏன், இதுபோன்ற மரமண்டைகளை முகஸ்துதி செய்து  கொண்டிருக்கிறாய். இவர் ஜமீன்தார்  மட்டுமே. இவராவது, ஜென் கற்பதாவது'' என்றார். 

அந்த ஜமீன்தார், குடோவுக்குக் கோயில்  கட்டித் தருவதை விடுத்து, தெய்குவுக்கே  கோயில் கட்டிக்கொடுத்தார். தெய்குவிடமே  ஜென் கற்றார்.

- ஆர்.சி.எஸ்.