Published:Updated:

ஒரு பக்கம் அழுகுரல்... மறுபக்கம் கொண்டாட்டம்... கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் களைகட்டிய மயானச் சூறை விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் மயானச் சூறை விழா!
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் மயானச் சூறை விழா!

மயானச் சூறை திருவிழா அங்காளம்மனை மட்டும் போற்றாமல், இறந்தவர்களை நினைவு கூரும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. மயானத்தை அலங்கரித்து, இறந்த தமது உறவினர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படைத்துச் செல்கிறார்கள்.

கையில் சூலம், கழுத்தில் தொங்கும் எலுமிச்சம்பழ மாலை, நீண்ட தலைமுடி, கை நிறைய வளையல், மஞ்சள் பூசிய உடலுடன் நாக்கை நீட்டி ஆவேசத்துடன் கத்தியபடி மயானத்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள் அங்காள பரமேஸ்வரியாய் ஆடிவரும் பக்தர்கள்.  விழிகளை மேலும், கீழும் உருட்டி, கையிலிருக்கும் சூலம் சுழற்றி, சூடத்தை நெருப்போடு விழுங்கி, பெருங்குரலெடுத்துக் கத்தும் அங்காளம்மனின் கோர தாண்டவத்தைப் பார்க்கையில் பயம் தொற்றிக்கொள்கிறது. பாதத்தில் தண்ணீர் ஊற்றி அவளது ஆவேசத்தைத் தணித்து, பணக்கட்டுகளை காற்றில் வீசிச் சூறைவிட்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.  

`உலகம் பிறக்கும் முன் ஒருநாழி முன் பிறந்தாள்
கலியுகம் பிறக்குமுன் கால்நாழி முன் பிறந்தாள்
சூரியன், சந்திரன் தோன்றுமுன்னே முந்திப் பிறந்தாள்
மூவரையும் ஈன்றெடுத்தாள், மாண்டு பிழைத்தாள்
மறுரூபமெடுத்த மாயசக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி'

என்று பாடும் பக்தர்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு அங்காள பரமேஸ்வரி ஆடிபாடிக்கொண்டு மயானத்துக்குள் நுழைந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மண் சுதை உருவத்தை மூன்று முறை சுற்றி வருகிறாள். பிறகு, நாட்டியமாடியபடி கையிலிருக்கும் சூலத்தை அந்த மண் சுதையின் வயிற்றில் செலுத்தி, அங்குப் புதைத்து வைத்திருக்கும் இறைச்சியைத் தின்று குடலை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொள்கிறாள். அதைப் பார்க்கும் பக்தர்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். 

குவித்து வைக்கப்பட்டிருக்கும் முருங்கை, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை கூட்டத்தை நோக்கி ஆவேசத்துடன் வீசி எறிகிறாள் அங்காளம்மன். அந்தக் காய்கறிகளை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து, எடுத்துச் செல்கிறார்கள். மீண்டும் ஆவேசத்துடன் நடனமாடி அந்தச் சுதை உருவத்தைக் கலைக்கிறாள். அந்தச் சுடுகாட்டு மண்ணைப் பக்தர்கள் மடியேந்தி பெற்றுச் செல்கிறார்கள். இந்தச் சுதைமண் வீட்டிலிருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் விலகி ஓடச் செய்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று,  சின்ன மலையனூர் என்று போற்றப்படும் திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைபெற்ற மயானச் சூறை திருவிழாவில் கண்ட காட்சிகள் இவை. 

மதிய நேரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட தேர் மாலைப் பொழுதில் மயானத்துக்குள் நுழைந்தது. தேரில் பவனி வந்த அங்காளம்மனை நோக்கி சங்கு, முருங்கை, பணம், நாணயங்கள் ஆகியவற்றை எறிந்து சூறை விட்டனர். 

மயானச் சூறை நிகழ்வுகள்

முருங்கைக்காயைச் சூறை விட்ட முருகேசன் என்பவர் கூறும்போது, ``எனக்குச் சொந்த ஊரு விழுப்புரம். என் காட்டுல முருங்கைக்காய் விவசாயம் செய்யுறேன். விளைச்சல் நல்லாருந்தா விலை இருக்காது. விலை இருக்கறப்போ விளைச்சல் இருக்காது. போன வருசம் அங்காளம்மன்கிட்ட வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதல அம்மன் நிறைவேத்திட்டா. எனக்கு நல்ல லாபம் கிடைச்சுது. அதனால, இந்த வருசம் முருங்கைக்காய எறிஞ்சி என் வேண்டுதல நிறைவேத்திருக்கேன்” என்று பரவசமாகப் பேசுகிறார் அவர். 

இவரைப் போன்றே சங்குகளை எறிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பார்வதியம்மா, ``பத்து வருசமா எனக்குக் குழந்தை இல்ல. என் குறைய போக்குனவ அங்காளிதான். அதனால இந்த வருசம் சங்க சூறை விட்டிருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன். குழந்தை வரம் கிடைக்க, தீராப் பிணி விலக, விவசாயம் பெருக, வறுமை விலக, தீய சக்திகள் அழிய என்று அனைத்துக்கும் மக்கள் அங்காள பரமேஸ்வரியிடமே வேண்டிக்கொள்கிறார்கள். அங்காளம்மனிடம் குறி கேட்டுச் செல்கிறார்கள். பக்தர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் காணிக்கை பெற்று ஆசீர்வாதம் செய்த சாமியாடிகளையும் மயானத்துக்குள் பார்க்க முடிந்தது.

அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மாசி மாதம் அமாவாசையன்று மயானச் சூறைவிடுதல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் பிரசித்தி பெற்றது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில்தான். அங்காளம்மன் கோயில்கள் அனைத்துக்கும் முதன்மையானது மேல்மலையனூர்தான்.  

இந்த மயானச் சூறை விழாவின் பின்னணியில் ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது...

ஆதி காலத்தில், சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகள் இருந்ததால் ஆணவம் கொண்டார் பிரம்மதேவன். அதனால், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார் சிவபெருமான். கொய்யப்பட்ட பிரம்மனின் கபாலம் சிவபெருமானின் கரத்தைக் கவ்விக்கொள்ள சிவபெருமானை `பிரமஹத்தி தோஷம்’ தொற்றிக்கொண்டது. தனது கரத்தைக் கவ்விய கபாலத்தையே பிட்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சிவபெருமான். சிவபெருமானின் கரத்தில் இருந்த கபாலப் பாத்திரத்தில் விழுந்த உணவுகள் அனைத்தையும் கபாலமே விழுங்கித் தின்று தீர்த்தது. இதனால், உலகுக்குப் படியளக்கும் ஈசனுக்கே உணவு கிடைக்காமல் பசியில் வாடினார். பிரம்மனின் சிரம் கொய்யப்பட்டதால் சினம் கொண்ட சரஸ்வதி தேவி, சக்தி தேவியை பிச்சியாக பேயுரு கொண்டு சுடுகாட்டுக்குச் செல்லும்படி சபித்து விடுகிறாள்.

அதன்படி பேயுரு கொண்ட சக்தி தேவி பூமியில் பல இடங்களில் சுற்றத் தொடங்கினாள். கடைசியில் அவள் புற்றுக்குள் அமர்ந்த பூமி மேல்மலையனூர். அதே நேரம் பிட்சாடனராகத் திரிந்த சிவன், மேல்மலையனூருக்கு வந்தார். அங்கே சக்தி தேவி அன்னபூரணியாக வந்து சிவனாரின் பிட்சை பாத்திரத்தில் உணவு இட்டாள். அந்த உணவை சிவனார் உண்பதற்கு முன்பே கபாலம் உணவை விழுங்கிவிட்டது. அடுத்த கவளத்தையும் கபாலமே விழுங்கிவிட்டது. அதைக் கண்ட அன்னபூரணி மூன்றாவது கவள உணவை வேண்டுமென்றே கீழே போட்டாள். உடனே சிவபெருமானின் கையில் இருந்த கபாலம் அவர் கையை விட்டு விலகி, கீழே விழுந்த உணவை எடுக்கச் சென்றது. உடனே விஸ்வரூபம் எடுத்த அங்காள பரமேஸ்வரி, தன் திருவடிகளால் அந்தப் பிரம்ம கபாலத்தை அழுத்தி விட்டாள். அப்போதே சிவபெருமானைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் விலகியது.

அங்காள பரமேஸ்வரி பிரம்மனின் கபாலத்தை அழித்த இடம் மயான பூமி. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில்தான் அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் மயானக் கொள்ளை நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி அருள்புரிகிறாளோ, அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா மாசி அமாவாசை தினத்தில் கோலாகலமாக நடைபெறும். 

மயானச் சூறை திருவிழா அங்காளம்மனை மட்டும் போற்றாமல், இறந்தவர்களை நினைவு கூரும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. மயானத்தை அலங்கரித்து, இறந்த தமது உறவினர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படைத்துச் செல்கிறார்கள். இறந்த தனது கணவனுக்காக ஒரு பெண் அங்காளியாய் வந்திருந்தாள். மதியப்பொழுதிலிருந்து, இரவு வரை அவர் எழுப்பிய ஒப்பாரிக்குரல் வந்திருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது. 

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காகவே அவதரித்த அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு அனைத்துக் குறைகளும் நீங்கப்பெற்ற மகிழ்ச்சியில் சென்றார்கள் பக்தர்கள்! வருடம் முழுவதும் அழுகுரலும், துயரமும் நிறைந்திருக்கும் மயானத்தில் ஒருநாள் நடைபெறும் கொண்டாட்டம்தான் மாசி மயானச் சூறைத் திருவிழா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு