திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

`யாவத் வித்தோ பார்ஜன ஸக்த:
தாவந் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாஜ் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே'


நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

கருத்து: மேலும் மேலும் ஒருவன் பொருளை ஈட்டிக் கொண்டிருக்கும் வரைதான் உற்றார் உறவினர் அவனிடம் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். நாளடைவில் அவன் மூப்படைந்து, செயலிழந்து, அவனது பொருள் ஈட்டும் திறமையும் மறையும்போது, யாரும் அவனை அண்டமாட்டார்கள்’

விமானத்திலிருந்து இறங்கும்போதே குமரனின் முகத்தில் புன்னகை. ஒரே வெளிநாட்டு விஜயத்தில் இரண்டு கோடி ரூபாய் லாபம் வரக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட வெற்றிப் புன்னகை அது.

விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்குள்  அவனைச் சுற்றிப் பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் ஆளாளுக்குக் கைகுலுக் கினார்கள்.

காலம் கடந்தது...

ரயிலிலிருந்து இறங்கும்போதே குமரனின் முகத்தில் ஓர் இறுக்கம். தொலைவில் இரண்டு நண்பர்கள் தென்பட்டார்கள். அவர்களை நோக்கிக் குமரன் நடக்கத் தொடங்கினான். குமரனைக் கண்டதும் அவர்கள் கண்களில் ஒரு மாற்றம். வேகமாக வேறு திசையில் நகரத் தொடங்கினார்கள். வேறு யாரையோ வரவேற்க அவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

குமரனின் தொழிலில் இறங்குமுகம். அவன் வாங்கி வைத்திருந்த பங்குகளின் மதிப்பு அதலபாதாளத்தில் சரிந்துவிட்டிருந்தன. நிதி நிறுவனங்கள் அவன் வாங்கிய கடனை அடைக்கச் சொல்லி நெருக்கடி அளித்துக்கொண்டிருந்தன. மும்பையிலுள்ள ஓர் உறவினரிடம் உதவி கேட்கத்தான் சென்றிருந்தான் அவன். ஒரு காலத்தில் நிறைய உதவிகளைக் குமரன் அவருக்குச் செய்திருந்தான். ஆனால் அந்த நன்றி உணர்வெல்லாம் அவரிடம் சிறிதும் தெரியவில்லை. கைவிரித்துவிட்டார். 

நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

குமரனின் உடல் தள்ளாடியது. யாராவது தன்னைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது. முன்னொரு காலத்தில் செல்வச் செழிப்பில் திளைத்திருந்தபோது, கேட்காமலேயே பலரின் கைகள் அவனைப் பற்றிக்கொண்டிருந்த விமான நிலையக் காட்சி அவன் மனதில் தோன்றியது.

இதுதான் உலகம். இதை உணர்ந்து கொண்டால் குமரனுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏமாற்றங்கள் தோன்றாது. இதைத்தான் ஆதிசங்கரர் மேற்படி ஸ்லோகத் தில் வலியுறுத்துகிறார்.

முனிவர் துர்வாசரை ருத்ரனின் அம்சம் என்பார்கள். சட்டெனக் கோபம் கொண்டு விடும் இயல்புகொண்டவர். 

ஒரு முறை கானகத்தின் வழியே அவர் சென்றுகொண்டிருந்தபோது, தேவலோகப் பெண்மணி ஒருத்தி, மணம் மிகுந்த மலர்மாலை ஒன்றை முனிவரிடம் அளித்தாள். அப்போது தேவேந்திரன் ஐராவதம் எனப்படும் தனது வெண்மையான யானைமீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான். அவனைக் கௌரவிக்கும் வகையில், துர்வாசர் அந்த மாலையைத் தேவேந்திரனின் கழுத்தை நோக்கி வீசினார். ஆனால் தேவேந்திரனோ, அந்த மாலையைக் கையில் பிடித்துத் தான் அமர்ந்திருந்த யானையின் மீது வைத்தான். அந்த யானை தன் துதிக்கையால் அதைக் கீழே எறிந்து மிதித்தது. இதைக் கண்ட துர்வாசர் கோபம் கொண்டார். தேவேந்திரனின் செல்வச் செருக்கு அல்லவா அவனை இப்படிச் செய்ய வைத்தது?

‘`தேவேந்திரா! உன் செல்வங்களை நீ இழப்பாய்.  இழிநிலையை அடைவாய்’’ என்று சபித்தார்.

நிறைந்த செல்வம் இருந்தும் அது தேவேந்திரனிடமே கூட நிலைக்கவில்லை என்றால், நம்மிடம் மட்டும் அது எப்படித் தங்கும். இதை உணர்ந்து செல்வத்தால் செருக்கடையாமல் இருப்பதுதான் அறிவுடைமை.

கால்களற்ற ஒருவரும், பார்வையற்ற ஒருவரும் எல்லா இடங்களுக்கும் இணை யாகச் செல்வது பழக்கம். பார்வையற்றவர், கால்களற்றவரைச் சுமந்து செல்வார். கால்களற்றவரோ தன் கண்ணில் தென்படும் காட்சிகளை யெல்லாம் விளக்குவார். அப்படி இருவருமாக ஓரிடத்துக்குச் சென்றபோது, அவர்களுக்கு மிகவும் பசித்தது. 

 “அருகில் ஏதாவது பழங்கள் தென்படுகின்றனவா” என்று கேட்டார் பார்வையிழந்தவர். 

சற்றுத்தள்ளி இருந்த வயல் ஒன்றில் வெள்ளரிக்காய்கள் காய்த்திருந்ததைக் கண்டு சொன்னார் கால்களற்றவர். 

“அருகில் யாராவது காவலாளி தென்படுகிறாரா” என்று  மற்றொரு கேள்வியைக் கேட்டார் பார்வையற்றவர். 

இந்தக் கேள்வி கால்களற்றவருக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் இருவருமே நேர்மையானவர்கள். உரியவர்களின் அனுமதியில்லாமல் எதையுமே அவர்கள் எடுத்துக்கொண்டதில்லை. அப்படியிருக்க, காவலர்கள் இல்லையென்றால் வெள்ளரிக்காயைப் பறித்துக்கொள்ளலாம் என்பது போல் தன் நண்பர் கேட்ட கேள்வி, கால்களற்ற நண்பருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

அதை மறைத்துக் கொண்டு “காவலாளிகள் யாரும் தென்படவில்லை” என்றார்.
 
“அப்படியானால், நாம் அந்த வெள்ளரிக்காய்களை உண்ணவேண்டாம்.”  

“நியாயம்தான். நாம் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.  பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது’’ என்றார் மற்றவர்.

“அதுமட்டுமல்ல நண்பா, அந்த வெள்ளரிக் காய்கள் மிகவும் கசப்பானவையாக இருக்க வேண்டும். அதனால்தான் அதற்குக் காவலாளி என்று யாரையும் நியமிக்கவில்லை’’ என்றார் பார்வையற்ற நண்பர்.

உலக நியதியும் இப்படித்தான். பணம் இருந்தால் சுற்றிப் பலரும் இருப்பார்கள். நிதி இல்லை என்றால், யாரும் அருகில் நெருங்கமாட்டார்கள். 

ரசன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். இனி அவனுக்கு என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. எதிரி நாட்டு மன்னன் அவனைச் சிறைபிடிப்பான். தோற்றுப் போன நாட்டிலுள்ள வீடுகளை எல்லாம் சூறையாடுவான். அந்த வீடுகளுக்கு எல்லாம் நெருப்பு வைப்பான். தோல்வி கண்ட மன்னனின் தரப்பு வீரர்களை எல்லாம் சித்ரவதை செய்வான். 

இந்த விஷயங்களை எதிர்பார்த்த தோல்வி கண்ட ராணுவ வீரர்கள், முடிந்த அளவுக்கு நகைகளையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு அண்டை நாட்டுக்குச் செல்ல முயன்றனர். அரசனின் குடும்பத்தினரோ சுரங்கப்பாதை வழியாக வெளியேறி விட்டனர். யாருமே, தங்கள் மன்னனைப் பற்றிக் கவலைப்படவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் பலவித வசதிகளை அந்த மன்னனின் ஆட்சியில் அனுபவித்தவர்கள். 

ஆனால், அந்த மன்னனுக்கு எதிர்பாராத அனுபவம் கிடைத்தது. வெற்றி பெற்ற மன்னன் அவனைப் பார்த்து “நீ ஒரு மாபெரும் வீரன். நீ தோல்வி கண்டாலும் உன்னை நான் மதிக்கிறேன். உன் ராஜ்ஜியத்தை உனக்கே திருப்பியளிக்கிறேன்’’ என்று கூறினான். ராஜ்யத்தைத் திரும்பப் பெற மறுத்த அந்த மன்னன் துறவியானான். காரணம், அவனுக்குச் செல்வத்தின் நிலையாமை குறித்து இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. 

செல்வம் நிலையாதது என்பது பலருக்கும் தெரியும். ஆனாலும் அந்த வட்டத்திலிருந்து அவர் களால் வெளிவர முடியவில்லை. போதிசத்துவர் குறித்து ‘ஜாதகக் கதைகள்’ தொகுப்பில் ஒரு கதை உண்டு.  

ரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும் ஒரு கட்டத்தில் போதிசத்துவருக்கு ஞானம் பிறந்தது. அவர் துறவியானார். காட்டுக்குச் சென்று அங்கு வாழ்க்கையை நடத்தினார். 

ஒரு நாள் பக்கத்துக் குடிலுக்குள் சிறிய நாகப் பாம்பு ஒன்று நுழைந்தது. அந்தக் குடிலில் வசித்த மற்றொரு துறவி அதை ஒரு ​மூங்கில் பெட்டிக்குள் வைத்தார். அந்தப் பாம்பின்மீது அவருக்கு அன்பு சுரந்தது. அதைத் தானே வளர்க்கலானார். மூங்கில் பெட்டிக்குள் பாம்பை வைத்து வளர்த்ததனால் அந்தத் துறவி ‘​மூங்கில் தந்தை’ என்றே அழைக்கப் பட்டார்.

இதைப் பார்த்த போதிசத்துவர், அந்தத் துறவியை எச்சரித்தார். பாம்பை வளர்க்க வேண் டாம் என்றும் அதைக் காட்டிலேயே விட்டுவிடும் படியும் கூறினார். ஆனால், அந்தத் துறவி கேட்கவில்லை.
 
ஒருநாள் கனிகள் சேகரிப்பதற்காக, போதிசத்து வரும் அந்தத் துறவியும் காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர். வெகுநேரம் கழித்தே கனிகள் நிறைந்த மரங்கள் கண்களில் தென்பட்டன. இருவருமாகச் சில கனிகளைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது மூங்கில் தந்தைக்கு பதற்றம் ஏற்பட்டது.

‘அடடா, குடிலில் இருக்கும் பாம்புக்கு பசிக்குமே. உடனே சென்று அதற்கு உணவு கொடுக்கவேண்டும்’ என்றபடி வெகுவேகமாகத் தன் குடிலை அடைந்தார். மூங்கில் பெட்டியைத் திறந்தார். ‘வெகுநேரம் ஆகியும், தனக்கு உணவு கொடுக்கக் காணோமே’ என்ற கோபத்திலிருந்த அந்தப் பாம்பு துறவியைக் கொத்தியது. துறவி இறந்தார். அந்தப் பாம்பு, பெட்டியிலிருந்து வெளியேறிக் காட்டுக்குள் சென்றது. 

பாம்பை வளர்த்த துறவிக்கும் நமக்கும் அதிக வேறுபாடு இல்லை. நாமும் செல்வத்தை நேசிக் கிறோம். அதை மேலும் மேலும் வளர்க்கப் பாடுபடுகிறோம். ஆனால் இறுதியில், அது நமக்குத் ​தீங்கைத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

நீங்களே கவனித்திருப்பீர்கள். சில வீடுகளில் குடும்பத் தலைவர் எந்தச் சொத்தையும் சேர்த்து வைத்திருக்கமாட்டார். அவர் இறந்தவுடன் அவரின் குழந்தைகள் ஒற்றுமையாகவும், பாசத்துட னும் இருப்பார்கள்.

வேறு சில வீடுகளில் ஒரு வீடு, கொஞ்சம் நிலம் என்பதுபோல் சொத்து வைத்திருப்பார்கள். குடும்பத்தலைவன் இறந்ததும் சொத்தில் பங்கு பிரிப்பது தொடர்பாகக் குடும்பத்தினரிடையே பெரும் கலவரம் நிகழும். ஆக, செல்வம் என்பது பலவிதங்களிலும் மனக்கசப்பையே அளிக்கிறது.  

- நினைப்போம்...

 -ஜி.எஸ்.எஸ்., ஓவியம்: ஸ்யாம்

மழை பொழியும் இடத்தில் தேடுங்கள்! 

ஞ்சபாண்டவர்கள் பன்னிரு வருடங்கள் வனவாசம் முடித்தபின், அஞ்ஞாத வாசம் செய்து வந்தனர். எப்படியாவது அவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று கௌரவர்கள் தேடினார்கள். முடியவில்லை. பீஷ்மர் ஓர் யோசனை சொன்னார்: ‘‘பஞ்சபாண்டவர்கள் மிக நல்ல ஆத்மாக்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் இடத்தில் நல்ல மழை பொழிந்து, பயிர்கள் நன்றாக விளையும். நாடு செழிப்புடன் விளங்கும். ஐம்பத்தாறு தேசங்களில் எது செழிப்புடன் திகழ்கிறதோ, அங்குதான் பஞ்சபாண்டவர்கள் இருப்பார்கள். கண்டுபிடித்துவிடலாம்.’’

நினை அவனை! - 5 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

அப்படியே நடந்தது. துரியோதனன் மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து  எல்லா தேசங்களையும் துழாவினான். விராட தேசம் வளமுடன் இருப்பதைக் கண்டறிந்தான். அங்கு வீரர்களை அனுப்பி, பாண்டவர்களின் விவரம் அறிந்தான்.

பாண்டவர்கள் தர்மசீலர்கள் என்பதற்கு இதுவே சாட்சி!

-ஆர். ராஜலட்சுமி, கரூர்-4