சகலமும் அருளும் சத்யநாராயண விரதம்! (தொடர்ச்சி...)

திக்கெட்டும் புகழ்கொண்டு திகழ்ந்தவர் மன்னன் உல்காமுகன். எனினும், திருமணமாகி நெடுநாள்களாக அவருக்குக் குழந்தைப்பேறு வாய்க்காமல் போகவே, பிள்ளை வரம் வேண்டி பெளர்ணமிதோறும் சத்தியநாராயண விரதத்தைக் கடைப்பிடித்து வந்தார்.

சக்தி கொடு! - 5

ஒரு நாள்... நதிக்கரையோரத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் மன்னர். அப்போது, அந்தப் பக்கமாக வந்த `சாது' என்ற வணிகன், அவரை அணுகி வணங்கி, அவர் செய்துகொண்டிருக்கும் விரத வழிபாடு குறித்து விவரிக்க வேண்டினான். மன்னரும் விவரம் சொன்னார். அதைக் கேட்டு மகிழ்ந்தான் வணிகன். அவனுக்கும்  குழந்தைப் பேறு இல்லை. ஆகவே, தானும் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கப்போவதாகக் கூறிவிட்டு, வீடு வந்து சேர்ந்தான். மனைவியிடம் அதுபற்றி பகிர்ந்து கொண்டான். ஆனால் அவனும் அவன் மனைவியும் விரத பூஜையை உடனடியாகச் செய்யவில்லை. ``ஒரு குழந்தை பிறக்கட்டும அதன் பிறகு வழிபடுவோம்'' என்று தீர்மானித்தார்கள். விரைவில் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. கலாவதி என்று பெயரிட்டு வளர்த்தார்கள்.

மகள் கலாவதி வளர்ந்து, அவளுக்குத் திருமணம் முடிந்தபிறகும் விரதபூஜையைச் செய்யவில்லை வணிகன். தெய்வத்தை மறந்தான். ஆனால், பகவான் அவர்களை மறக்கவில்லை; அந்தத் தம்பதியைத் திருத்தி அருள்பாலிக்க நினைத்தார். லீலை தொடங்கியது!

ஒருமுறை... வணிகணும் அவன் மருமகன் சுந்தரமும் இணைந்து வியாபாரத்தின் பொருட்டு ரத்னசாரம் எனும் நகரத்தை அடைந்தனர். வணிகம் சிறப்பாக நடந்தது. இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த நாட்டின் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து, திருடர்கள் சிலர் பொருள்களைத் திருடிச் சென்றனர். அவர்களைக் காவலர்கள் விரட்டினர். திருடர்கள் ஓடும் வழியில், அவர்களுக்கு எதிரே வியாபாரியும் அவன் மாப்பிள்ளையும் நடந்து வந்தனர். உடனே திருடர்கள், தங்களிடம் இருந்த பொருள்களை எல்லாம் அவர்களின் காலடியில் போட்டுவிட்டு ஓடினர். வந்தது வினை!

பின்னாலேயே வந்த காவலர்கள், வியாபாரியும் மாப்பிள்ளையும் விழித்தபடி நிற்பதையும் திருடப்பட்ட பொருள்கள் அவர்கள் காலடியில் கிடப்பதையும் கண்டார்கள். அவர்களைப் பிடித்து இழுத்து வந்து அரசனின் முன் நிறுத்தினார்கள். அந்தத் தேசத்தின் அரசனான சந்திரகேது, அவர்களைச் சிறையில் அடைத்தான்.

அதேநேரம் வியாபாரியின் வீட்டிலிருந்த செல்வங் களும் வேறு எவராலோ களவாடப்பட்டன. லீலாவதியும் மகள் கலாவதியும் அநாதை ஆனார்கள். உணவுக்கும் உடைக்கும் தரித்திரமான நிலை. உறவினர்களும் உதவ முன்வரவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி கொடு! - 5

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பது உண்மையானது. பசி தாங்க முடியாத கலாவதி, ஒரு நாள் பிச்சை எடுக்கப் போனாள். வேதியர் ஒருவரது வீட்டில் சத்யநாராயண பூஜை நடப்பதைக் கவனித்தாள். உள்ளே போனாள். அவளுக்கு மெய்சிலிர்த்தது. அங்கு சொல்லப்பட்ட விஷ்ணுவின் கதைகளையும் சத்யநாராயண விரத மகிமைகளையும் கேட்டாள். அப்போதே அவளுடைய தரித்திரத்தில் பாதி விலகியது என்று சொல்லலாம். பூஜை முடிந்ததும் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

அம்மாவிடம் நடந்ததை விவரித்தாள். ‘‘நாமும் சத்திய நாராயண விரதம் கடைப்பிடிப்போம்’’ என்றாள். அப்போதுதான் லீலாவதிக்கு தானும் தன் கணவனும் செய்த தவறு உறைத்தது. இனியும் தாமதிக்காமல் சத்தியநாரயண விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

‘‘சத்ய நாராயணா! எங்களைக் காப்பாற்று. என் கணவரும் மாப்பிள்ளையும் சீக்கிரமாக வீடு திரும்பவேண்டும். அதற்கு அருள் செய். நான் சத்யநாராயண விரதத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கிறேன்’’ என்று தியானித்தாள்.

உடனடியாகச் செயல்பட்டாள். விரத பூஜைக்காக உறவினர்கள் மற்றும் பழக்கப்பட்டவர் களிடம் உதவி கேட்கப் புறப்பட்டாள். அதுவரை பாராமுகமாக இருந்தவர்கள்கூட, விரதத்துக்காக என்றதும்  உதவி செய்தார்கள். அன்று மாலையே பயபக்தியுடன் சத்ய நாராயண பூஜையைச் செய்தாள் லீலாவதி. நாராயணர் மகிழ்ந்து அருள் செய்தார்.

அரசன் சந்திரகேதுவின் கனவில் பகவான் தரிசனம் தந்தார். ‘‘மன்னா! நீ சிறை வைத்திருக்கும் இருவரும் தவறு செய்யாதவர்கள். உடனடியாக விடுதலை செய்’’ என்று அறிவுறுத்தினார். மன்னன் பதறிப்போய் கண் விழித்தான். விடிந்ததுமே இருவரையும் விடுதலை செய்தான். அத்துடன், அவர்களுக்குத் தேவையான பொன் - பொருளை அள்ளிக்கொடுத்து அனுப்பிவைத்தான்.

வியாபாரியும் மாப்பிள்ளையும் நிறைந்த மனதோடு பயணம் தொடர்ந்தார்கள். அவர் களைச் சோதனை செய்ய நினைத்தார் ஸ்வாமி. பயணத்தின் நடுவே கப்பலை ஒரு கரையில் நிறுத்தினான் வியாபாரி. இருவரும் கரை இறங்கினார்கள். அப்போது, பகவான் ஓர் அந்தணர் வடிவத்தில் வியாபாரியிடம் வந்து, ‘‘உங்களைப் பார்த்தால் பெரிய வியாபாரிகள் போல் தெரிகிறது. உங்கள் கப்பலில் என்ன இருக்கிறது’’ என்று விசாரித்தார்.

அவரை மேலும் கீழும் பார்த்தான் வியாபாரி. ‘இவன் யாரோ ஏழை அந்தணன். ஏதாவது யாசகம் கேட்பான். இவனுக்குக் கொடுப்பதற்காகவா இவ்வளவு செல்வத்தையும் கப்பலில் வைத்திருக் கிறேன். எப்படியாவது இவனை விரட்டவேண்டும்’ என்று தீர்மானித்தான்.

‘‘உங்களுக்குக் கொடுக்கும்படி கப்பலில் ஒன்றும் இல்லை. சாதாரண இலைகள்தான் இருக்கின்றன. நீங்கள் கிளம்பலாம்’’ என்றான்.

அந்தணரின் உடம்பு கோபத்தால் சிவந்தது. ‘‘கப்பலில் இருப்பது இலைகளா... சரி... சரி... அவை இலைகளாகவே இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டு வியாபாரியின் பதிலை எதிர்பார்க் காமல் அங்கிருந்து நகர்ந்தார்.

சற்று நேரத்தில், மாப்பிள்ளையுடன் கப்பலுக்குள் நுழைந்த வியாபாரி அதிர்ச்சியடைந்தான்.  கப்பலில் இருந்த அத்தனை செல்வங்களும் இலைகளாகவே மாறியிருந்தன. அதற்குக் காரணம் என்ன என்பதை சடுதியில் உணர்ந்துகொண்ட மாப்பிள்ளை, மாமனாரை அழைத்துக்கொண்டு அந்தணரைத் தேடி ஓடினான்.

கடற்கரையில் அந்தணரைக் கண்டு, அவரின் திருவடிகளில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி வேண்டினான். அவர்களுக்குப் பகவான் திருக்காட்சி அருளினார். நடந்தவை அனைத்தும் சத்தியநாரயாண விரத பூஜையை வணிகன்  தட்டிக்கழித்ததால் உண்டான விளைவுகளே என்று உணர்த்தினார். இறையருளால், கப்பலில் இருந்த இலைகள் மீண்டும் செல்வங்களாக மாறின!

விரைவில் ஊரை அடைந்தான் வியாபாரி. அந்த விஷயம் அவன் மனைவியை எட்டியது. தகவல் சொல்ல வந்தவரிடம், ‘‘ இது ஸ்வாமியின் அருள். இதோ... சத்யநாராயணர் பூஜையை முடித்துவிட்டு, பிரசாதங்களுடன் வருகிறோம்’’ எனச் சொல்லி அனுப்பினார்கள்.

பூஜை முடிந்ததும் தாயும் மகளும் கிளம்பினர். அந்த அவசரத்திலும் லீலாவதி மறவாமல் பிரசாதத் தைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினாள். ஆனால், கலாவதியோ கணவனைப் பார்க்கும் ஆர்வத்தில் பிரசாதத்தைச் சாப்பிடாமல் கிளம்பினாள். சத்யநாராயண பூஜை முடிந்ததும் கண்டிப் பாகப் பிரசாதம் சாப்பிடவேண்டும். இதைச் சுட்டிக் காட்ட எண்ணினார் பகவான். விளைவு?

கடற்கரையை அடைந்த லீலாவதி, கணவனிடம் பிரசாதம் கொடுத்தாள். அதை வாங்கியதும் வியாபாரிக்கு உடல் சிலிர்த்தது. பக்தியோடு சாப்பிட்டான்.

‘‘மாப்பிள்ளை எங்கே’’ எனக் கேட்டாள் லீலாவதி.

‘‘கப்பலில் இருக்கிறார். வாருங்கள், போகலாம்’’ என்ற வியாபாரி, அவர்களுடன் கப்பல் இருந்த இடத்துக்குப் போனான். அங்கே... கப்பலும் இல்லை; மாப்பிள்ளையும் இல்லை!

கணவனைக் காணாத கலாவதி அழுது புலம்பி மயக்கம் அடைந்தாள். அனைவரும் வருந்தினார்கள். அவர்களுடைய வருத்தத்தைப் போக்கும்விதமாக ஓர் அசரீரி ஒலித்தது.

‘‘வியாபாரியே! தங்கப் பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறிய ஓட்டை இருந்தால், அமிர்தத்தையே ஊற்றினாலும் நிற்காது போய்விடும். அதுபோலத்தான் சத்யநாராயண பூஜையை முடித்த உன் மகள், கணவனைப் பார்க்கும் அவசரத்தில் பிரசாதம் சாப்பிடாமல் வந்துவிட்டாள். அதன் விளைவுதான் இது. அவளிடம் முதலில் பிரசாதம் சாப்பிடச் சொல். உன் மாப்பிள்ளை மறுபடியும் கிடைப்பான்’’ என்று அறிவுறுத்தியது அசரீரி.

கலாவதி உடனே வீட்டுக்குப் போய் பிரசாதம் உண்டு, ஸ்வாமியை வலம் வந்து மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு திரும்பினாள். அப்போது அங்கே, கப்பலும் இருந்தது; கணவனும் இருந்தான். உள்ளம் உருகிய வியாபாரி, குடும்பத்தோடு சத்யநாராயணனைத் துதித்து விட்டு வீடு திரும்பினான். குடும்பத்தோடு சேர்ந்து முறைப்படி விரதம் கடைப்பிடித்து வழிபட்டான். அவன் குடும்பம் செழித்தது. நிறைவில் வணிகனுக்கு முக்தியும் கிடைத்தது.

இதேபோல் இன்னொரு கதையும் உண்டு. சத்திய நாராயண விரத பூஜையையும் பிரசாதத்தையும் அலட்சியம் செய்து அவமதித்த துங்கத்வஜன் என்ற மன்னன், தன் நாட்டையும் செல்வத்தையும் இழந்து தவித்தான். அதன் பிறகு, தன் தவற்றை உணர்ந்து பெருமாளை வேண்டிக்கொண்டு, பயபக்தியோடு சத்தியநாராயண பூஜை செய்து வழிபட்டு, இழந்த தேசத்தையும் செல்வங்களையும் மீண்டும் பெற்றான் என்கிறது அந்தத் திருக்கதை.

சத்திய நாராயண விரத பூஜையைச் செய்யும் நாளில் இந்தக் கதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

பௌர்ணமித் திருநாளன்று மாலையில் சந்திர உதய காலத்தில், சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளிலோ, அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலோ இந்த விரதத்தைக் கடைப் பிடித்து வழிபடலாம்.

விரத நாளில் காலையிலேயே எழுந்து நீராடி, பூஜை அறையை அலங்கரித்து, சத்யநாராயணருக்கு மலர்கள், நைவேத்தியங்கள் சமர்ப்பித்து, முறைப்படி விரதக் கதைகளையும் துதிப் பாடல்களையும் படித்து வழிபட வேண்டும். உன்னத வாழ்வு தரும் அற்புத வழிபாடு இது!

- சந்திப்போம்...

கல்யாண வரம் தரும் நிர்மால்ய தரிசனம்!

திருவனந்தபுரத்தில் ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம் அருகிலேயே ஸ்ரீகண்டேஸ்வரம் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள் சிலவற்றில் இந்தக் கோயில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சக்தி கொடு! - 5

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து வணங்கிச் செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலில், அதிகாலையில் நடைபெறும் நிர்மால்ய தரிசனம் விசேஷம். அதிகாலையில் நடை திறந்ததும், முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும், பூக்களை யும் எடுத்து மாற்றிச் சுத்தப்படுத்தும் இருபது நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதை தரிசிப்பதற்கு அதிகாலையிலிருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.

தொடர்ந்து 41 நாள்கள் இந்தக் கோயிலுக்கு வந்து நிர்மால்ய தரிசனம் கண்டால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல், மணம் ஆகாத பெண்கள் தொடர்ந்து 21 நாள்கள் இங்கு வந்து நிர்மால்ய தரிசனம் கண்டால் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்று சொல்லப்படுகிறது. 

- எஸ்.எஸ். மணி, திருவனந்தபுரம்-36

புண்ணியத்தால் முளைத்த இறக்கைகள்! 

சீதாதேவியைத் தேடி தென்திசைக்கு வந்த அனுமன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர், ஜடாயுவின் உயிர்த் தியாகம் குறித்து வருத்தத்துடன் பேசிக்கொண்டனர். அதைக் கேட்டு, இறக்கைகள் இல்லாத பெரிய கழுகு ஒன்று அழுதது. அனுமனும் மற்றவர்களும் கழுகின் அழுகைக்கான காரணம் கேட்டனர்.

சக்தி கொடு! - 5

‘‘என் பெயர் சம்பாதி. ஜடாயுவின் அண்ணன். சிறு வயதில் எங்களுக்குள் ஒரு போட்டி, யார் அதிக உயரம் பறப்பது என்று. ஜடாயு மிக உயரத்தில் பறந்து சூரியனின் வெப்பம் தாங்காமல் தவித்தான்.

நான் ஜடாயுவுக்கும் மேலாகப் பறந்து என் இறக்கைகளை விரித்து அவனுக்கு நிழல் உருவாக்கினேன். அப்போது, சூரிய வெப்பத்தால் என் இறக்கைகள் எரிந்து விட்டன. அதனால் இங்கு விழுந்து நகர முடியாமல் தங்கிவிட்டேன். ராவணனால் தாக்கப்பட்டு என் தம்பி இறந்தான் என்ற செய்தியை உங்கள் மூலமாகக் கேட்டு அழுதேன்’’ என்றது சம்பாதி. அத்துடன், ‘‘ராவணன், சீதையைக் கடத்திச் சென்றதைப் பார்த்தேன்’’ என்று கூறிவிட்டு, மலை உச்சிக்குச் சென்று இலங்காபுரியைத் தன் கூரிய கண்களால் ஊன்றிப் பார்த்தது.

பின்பு, ‘‘இலங்கைத் தீவில் ஒரு வனத்தில் சீதை இருக்கிறாள். அவளுக்குக் காவலாக நான்கு அரக்கிகள் இருக்கிறார்கள்’’ என்றும் கூறியது சம்பாதி. உடனே, அதன் உடலில் புதிய இறக்கைகள் முளைத்தன. ராமனுக்கான பணியில் சிறிதளவு உதவிய புண்ணியத்தால் சம்பாதி புதிய இறக்கைகள் பெற்றது!

-  பரிமளம், திருச்சி-21

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism