மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 5

கண்டுகொண்டேன் கந்தனை - 5
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை - 5

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பெருங்குடி மருங்குறை பெருமாள் (தொடர்ச்சி...)

டு இரவில் நம்மை எழுப்பி, இரண்டு ஆண்டுகளாகத் தேடிய பெருங் குடிக்கு வழிகாட்டிய கந்தவேளின் கருணையை எண்ணி எண்ணி வியந்தபடியே நமது பணி தொடர்ந்தது.

கண்டுகொண்டேன் கந்தனை - 5

பெருங்குடி வழியாகத்தான் அருணகிரிநாதர் வயலூருக்குச் சென்றிருக்க வேண்டும். எனவேதான் `பெருங்குடி மருங்குறை (வயலூர்) பெருமாளே’ என்று நமக்கு வழிகாட்டுகிறார். இந்தப் பெருங்குடியில் அமைந்திருக்கும் அருள்மிகு அகஸ்தீச்வரர் ஆலயம், பல அற்புதமான சுவையான வரலாற்றைக் கொண்டுள்ளதைப் படிக்கும்போதே நமக்குச் சிலிர்ப்பு ஏற்படும்.

பெருங்குடி சிவாலயத்தைக் கட்டியவன் சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலன் (956-969) என்று இந்தக் கோயிலின் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் பல்லவர் ஆட்சியில் இருந்தபோது, ‘நந்திவர்ம மங்கலப் பெருங்குடி’ என்று பெயர் பெற்றிருந்தது. ஹொய்சாள மன்னன் வீரராம தேவர் ஆட்சியில், 275-ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்த  ஓர் அபூர்வமான செய்தி இந்தக் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

கண்டுகொண்டேன் கந்தனை - 5

கூத்தன் எனும் பெயருடைய கல்தச்சன் ஒருவன், தன் மகன் நல்ல மங்கனுக்குக் கண் பார்வை இல்லையே என்று பெருங்குடி உடையவர் அகஸ்தீச்வரமுடையார் சந்நிதி முன்பு நின்று இறைஞ்சுகின்றான். இப்படிப் பல நாள்கள் - பல ஆண்டுகள் அவன் வேண்டி, அச்சிறுவனது பத்தாவது வயதில் அவனுக்குக் கண் ஒளி கிடைக்கிறது. கூத்தன் மகிழ்ச்சிக்கடலில் கூத்தாடினான். நல்ல மங்கனுக்குக் கண் பார்வை கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட, 52 கழஞ்சு (எடை) தங்கத்தினால் செய்த நெற்றிப்பட்டை ஒன்றை, அந்தப் பெருங்குடிப் பெருமானுக்குக் காணிக்கையாக அளித்தான். மேலும், இந்தத் திருக்கோயிலின் தாழ்வாரத் திருப்பணிக்கு மூன்று கழஞ்சு பொன் கொடுத்து அதனைப் பூர்த்தி செய்தான்.

இந்தத் திருக்கோயிலில் மூன்றடி உயரத்தில் அமைந்த நந்தி, நல்ல வேலைப்பாட்டுடன் கூடியது. முன்புறம் கோபுரம் இல்லை. வெளி மதிற் சுவர்கள் இடிந்து காணப்படுகின்றன. மூலவர் அகஸ்தீச்வரமுடையார், இரண்டடி உயரத்தில் லிங்கத் திருமேனியாகக் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பிகை சிவகாமசுந்தரி தனிச்சந்நிதியில் நின்ற கோலம். கோஷ்ட  மூர்த்தங்கள் சோழர்காலக் கலைப்படைப்பு. கோயிலின் ஒரு புறத்தில் பூமி தேவியுடன் அருளும் நாராயணன் சந்நிதி உள்ளது. பாலசுப்பிரமணியர் தேவசேனையுடன் மட்டும் காட்சியளிக்கிறார். கோயிலின் சில பகுதிகளில் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது.

அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலப்பயண நூலுக்கு, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் அணிந்துரை பெற, 1981-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புவனகிரிக்குச் சென்றேன். அவரிடம் பெருங்குடி தலத்தைப் பற்றிய வரலாற்றை எடுத்துக்காட்டினேன். “ஆயிரம் முறை வயலூர் சென்றிருக்கிறேன். இப்படி ஒரு திருக்கோயில் அதன் அருகில் உள்ளது என்று தெரியவில்லையே தம்பி” என்றார்.

“தாங்கள்தான் இந்தத் திருக்கோயில் திருப்பணியையும் செய்யவேண்டும் என்று முருகப்பெருமான் எதிர்பார்க்கிறார்” என்று சொன்னபோது, வழக்கமான அவரது குலுங்கல் சிரிப்பு வெளிப்பட்டது. அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் திருப்புகழ்த் தலப்பயணத்தில், பெருங்குடி கண்ணொளி கொடுத்த பெருமான் கோயில், நெஞ்சைவிட்டு நீங்காத நினைவாகும்!

மயிலுடன் நாடி வரவேணும்

திருவல்லிக்கேணி முருகன் திருவருட் சங்கத்தின் ஸ்தாபகர்களில், திருவெண்காடு வீ.சீதாராம பாகவதர் எனும் அருளாளரும் ஒருவர். அவர் அச்சங்கத்தின் தலைவராக இருந்தவர். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளோடு நெருங்கிப் பழகியவர்.  சுவாமிகளோடு திருத்தணிகைப் படி விழாவில் கலந்துகொண்டு திருப்புகழ் பாடுவார். சுவாமிகள் வகுத்த ‘திருப்புகழ் பாராயணத் தவநெறித் திருமுறை’ எனும் இசை வழிபாட்டு முறையில், திருப்புகழைப் பாடிப் பரப்புவதை மேற்கொண்டு, திருப்புகழ் பஜனைகளைச் செய்துவந்தார் பாகவதர். 1959 - ம் ஆண்டு சென்னை மாகாண பாகவத சம்மேளனத்தில் மாநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டு ‘பாகவத சிரோமணி’ பட்டம் பெற்றார்.

வள்ளிமலை சுவாமிகள் தொடங்கிய பன்னிரண்டு திருப்புகழ் சபைகளில் ஒன்றான ‘குமார தநுமவர் திருக்கைத் திருப்புகழ் சங்கத்’தின் தலைவரான திருப்புகழரசு ஈ.வே.வேங்கடராவ், திருப்புகழ் மணி (ஜட்ஜ்) டி.எம். கிருஷ்ண சுவாமி ஐயர்,  ஸ்ரீகாமாக்ஷி தாசர் சோமசுந்தரம் ஐயர், வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் போன்ற முருகன் அடியார்களுடன் பாகவதர் நெருங்கிய தொடர்புடையவர்.

கண்டுகொண்டேன் கந்தனை - 5

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் அவருடைய இல்லத்தில் திருப்புகழ் பஜனை நடைபெறும். அன்னாரது 86-வது வயதில் (1965) ஒரு செவ்வாய்க்கிழமையன்று திருப்புகழைப் பாடிக்கொண்டே முருகன் திருவடியில் கலந்தார். அப்போது அவர் பாடிய திருப்புகழ், `சிறுவை’ எனும் சிறுவாபுரிக்குரிய திருப்புகழ். ‘அண்டர்பதி குடியேற...’ என்று தொடங்கும் அத்திருப்புகழில்...

`மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடனாடி வரவேணும்’ என்ற வேண்டுகோள் வருகிறது.

`மைந்து’ என்றால் `வலிமை’ என்று பொருள். மயிலுடன் ஆடி வரவேணும்; மயிலுடன் (என்னை) நாடி வர வேணும் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு இந்தத் திருப்புகழ் அடியாரை நாடி வந்து திருமுருகன் ஆட்கொண்டான் என்ற செய்தியை அச்சங்கத்தினர் சொல்லக் கேட்டிருக் கிறேன். தணிகைமணி அவர்கள், திருப்புகழ் உரை நூலில் இத்திருப்புகழுக்கு ‘தரிசனம்பெற’ என்று தலைப்பு வைத்துள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.

சொந்த வீடு பெற சிறுவாபுரி
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையில் உளபேரும்
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை அறிவாள உயர்தோளா
பொங்குகட லுடன்நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொன் எழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.

அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களில், மற்ற எந்தப் பாடலிலும் காண முடியாத வகையில், இந்தப் பாடலில் மட்டுமே ‘மகிழ் மீற, மகிழ் கூர, மகிழ்வாக, இன்பமுற மகிழ்கூற’ என்று மகிழ்ச்சியைப் பலவகையில் வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பார்க்கும் போது, அத்திருப்புகழைத் தவறாமல் பாராயணம் செய்வோர், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! அதுமட்டுமா, இப்பாடலின் பிற்பகுதியில் ‘தண்தரள மணிமார்ப, தண்தமிழின் மிகுநேய, தண்சிறுவை தனில் மேவும் பெருமாளே’ என்று (தண் - குளிர்ச்சி) மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்கும் ஒரே திருப்புகழ், இந்தச் சிறுவாபுரி திருப்புகழ் மட்டுமே!

கண்டுகொண்டேன் கந்தனை - 5

எனவே வாழ்வில் சொந்த வீட்டில் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் வேண்டுவோர், இப்பாடலை இடைவிடாது பாராயணம் செய்யவேண்டும் என்பதை வள்ளிமலை சுவாமிகள் உணர்த்தியுள்ளார். இத்திருப்புகழை இடைவிடாது பாராயணம் செய்து பயன்பெற்றோர் பலர், தங்களின் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

திருப்புகழ் தல ஆராய்ச்சி தொடங்கியபோது, 1977-ம் ஆண்டு ஒரு நாள், மிக்க ஆவலுடன் சிறுவாபுரி தலத்தை தரிசிக்கப் புறப்பட்டேன். சென்னை, வால்டாக்ஸ் ரோடு - பேசின்பாலம் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பொன்னேரி பஸ்ஸில் ஏறி, முதலில் ஆண்டார்குப்பம் சென்றேன். ஆண்டார்குப்பம் திருத்தலத்தை அருணகிரிநாதர் ‘தச்சூர் வடக்காகு மார்கத்தமர்ந்த பெருமாள்’ என்று வழிகாட்டுகிறார். அதாவது தச்சூர் என்ற ஊரின் வடக்குப் புறத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது என்று பொருள். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஊரின் வடக்குப்புறத்தில் தான் முருகனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்று அக்னி புராணம் குறிப்பிடுகிறது!

சென்னையிலிருந்து பொன்னேரி செல்லும் வழியில், பஞ்செட்டி என்ற ஊரைத் தாண்டி தச்சூர் கூட்ரோடு என்ற இடம் வருகிறது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் ஆண்டவர் குப்பம் எனும் ஆண்டார்குப்பம் உள்ளது. இங்கே, மூலவர் பாலசுப்பிரமணியர் இரண்டு கரங்களையும் தமது தொடையில் வைத்துள்ள அபூர்வ அமைப்போடு திகழ்கிறார். இதுபோன்ற திருவடிவை வேறு எங்கும் காண இயலவில்லை. இதனை, `பிரம்மனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்ட கோலம்’ என்பர் (நம் இல்லங்களில் சில நேரம் குழந்தைகள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, பெரிய மனிதத் தோரணையில் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா. அதைப்போலவே இந்த அமைப்பு).

‘அச்சாயிறுக்காணி’ என்று தொடங்கும் இந்தத் தலத்தின் திருப்புகழில்  ஓர் அழகான சுவாரசியமான செய்தியைக் குறிப்பிடுகிறார் அருணகிரி நாதர்.

- தரிசிப்போம்...

படங்கள்: வி.நாகமணி