
கோட்டைக்கு வெளியில நின்ன சிங்கள நாச்சிக்கு உள்ளே என்ன நடந்துச்சுனு தெரியலே.
லங்காவுக்குக் கிழக்கால இருக்கு ரோகனைக் காடு. உள்ளே நுழைஞ்சா திரும்ப வழி தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியான காடு. அதுக்கு நடுவால குடிசை கட்டி ஒளிஞ்சிருந்தான் மகிந்தன். அவனுக்கு சேதி வந்திருச்சு. சோழராஜா பெரிய படையோட காடு நோக்கி வந்துகிட்டிருக்கார். உடனே தன்னோட ஆளுகளையெல்லாம் தெரட்ட ஆரம்பிச்சுட்டான். மகிந்தனோட பொண்டாட்டி சிங்களநாச்சிக்கு அந்தக் காடே அத்துபடி. விலங்குகளோட பாஷையெல்லாம் அறிஞ்சவ. வாள்வித்தை, வில்வித்தையெல்லாம் படிச்சவ. மகிந்தனோட படைக்கு அவதான் தளபதி.
சிங்களநாச்சி பட்டத்து ராணியா இருக்க வேண்டியவ. சோழராஜாவுக்குப் பயந்து புருஷனும் பொண்டாட்டியும் இந்தக் காட்டுக்குள்ள கெடக்குறாக.
`இதோ, மிருகசீரிசம் வந்திருச்சு. திருவாதிரை யும் தெரிய ஆரம்பிச்சாச்சு. அந்தா, ஒத்தை வெள்ளி முளைச்சாச்சு. கலங்களை இறக்குங்க... கிளம்பலாம்'னு உத்தரவு போட்டான் சோழநாட்டுத் தளபதி. விறுவிறுன்னு நூத்துக்கணக் கான கலங்கள் கடல்ல இறங்கிருச்சு. அக்ர மண்டம், நீலமண்டம், லதாரணி, லூலான்னு சோழராஜாவோட பெரிய பெரிய கலங்களால கடல் தண்ணியே கண்ணுல தண்டல. யானை, குதிரை, அம்பு, வில்லுன்னு கடலே கலகலக்குது.
ஒரு பெருங்கலத்துல ராஜா உக்காந்திருக்காரு. அவுரு கண்ணெல்லாம் செவந்து கெடக்கு. அவருக்கெதிர்ல மந்திரிமார்களெல்லாம் இருக்காக.

`இந்த முறை ஏமாறக் கூடாது. மகிந்தனை எப்படியும் புடிச்சுக் கொண்டாந்திடணும்' - சோழராஜா உருமுறாரு. அந்தக் கோவத்துக்குக் காரணம் இருக்கு.
இந்த சோழராஜா இருக்காரே... கடல்கடந்து பல தேசங்களை ஜெயிச்சவரு. லங்காவுக்கும் படையெடுத்துப் போனாரு. அப்போ லங்காவை ஆண்டுக்கிட்டிருந்தவன்தான் மகிந்தன். சோழராஜாவோட தாக்குதலை தாக்குப்பிடிக்காம, அரண்மனையை விட்டுட்டு காட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டான். லங்காவைப் புடிச்சு, அங்கே ஒரு பிரதிநிதியை நியமிச்சுட்டு தஞ்சாவூருக்கு வந்துட்டாரு சோழராஜா. காட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்ச மகிந்தன், அப்பப்போ நாட்டுக்குள்ள வந்து தொல்லை குடுத்துக்கிட்டிருந்தான். அங்கிருந்த பிரதிநிதியால நிம்மதியா ஆளமுடியல. அவரு தஞ்சாவூருக்கு சேதி சொல்லி அனுப்ப, சோழராஜா படையைத் திரட்டிக்கிட்டு இலங்கைக்குக் கிளம்பிட்டாரு.
லங்காவுல ரோகனை காட்டுக்குள்ள கழிமுகத்தை ஒட்டியிருந்துச்சு மகிந்தனோட குடிசை. பரம்பரையா நாடாண்ட குடும்பம். சோழராஜாவோட அடையாளத்தை அழிச்சுட்டு, தன்னோட மண்ணை மீட்கணும்னு துடியாத் துடிக்கிறான் மகிந்தன். அவனுக்குத் துணையா இருந்தா அவம்பொண்டாட்டி சிங்களநாச்சி. சிங்களநாச்சி சாதாரண ஆளில்லை. அந்தக் காட்டை நிர்வாகம் பண்ணின பண்டாரத்தான் மவ.
ஒருக்கா மகிந்தன் ரோகனைக் காட்டுக்கு வேட்டையாட வந்தான். ஒரு கடமானை விரட்டிக்கிட்டு வந்தவன், படை பரிவாரங்களை விட்டு ஒதுங்கிட்டான். ராப்பொழுதாகிப்போச்சு. தனிச்சு நின்னவனை ஒரு வேழம் சுத்திக்கிச்சு. வேழத்தோட பிளிறல்ல குதிரை மிரளுது. மிரட்சி தாங்காம கீழே விழுந்த மகிந்தனை விரட்டுச்சு வேழம். விழுந்த வேகத்துல ஆயுதங்களும் கைவிட்டுப் போயிருச்சு. உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு ஓடிக்கிட்டிருக்கான் மகிந்தன்.
அப்போ பாத்து, பானை நிறையத் தேனெடுத்துக்கிட்டு வந்துக்கிட்டிருந்தா சிங்களநாச்சி. ஓர்ஆளை வேழம் துரத்துறதைப் பாத்துட்டு தோள்ல கெடந்த வில்லெடுத்து யானையோட காலப்பாத்து விட்டா ஒரு அம்பு. இந்தப்பக்கம் பாஞ்சு அந்தப்பக்கம் வந்திருச்சு. திடீர் தாக்குதல்ல நிலைகுலைஞ்ச வேழம், வேற பக்கம் ஓடிப்போச்சு. வலியெடுத்த வேகத்துல திரும்பவும் வேகங்கொண்டு வரும்கிறதால விறுவிறுன்னு மகிந்தனைக் கூட்டிக்கிட்டு குடியிருப்புக்குப் போயிட்டா. அங்கிருந்த பெரியவுகள்லாம் மகிந்தனை அடையாளம் கண்டுக்கிட்டாக. தன் உசுரக் காப்பாத்துன சிங்களநாச்சி மேல ராஜாவுக்கு காதல் அரும்பிருச்சு. பண்டாரத்தான்கிட்ட, ‘உங்க மக இல்லேன்னா இன்னிக்கு நான் உசுரோடவே இருந்திருக்க மாட்டேன். இவளை மகாராணியாக்க விரும்புறேன். எனக்குக் கட்டித்தருவியளா’ன்னு கேட்டான். சிங்களநாச்சி முகம் வெக்கத்துல செவந்திருச்சு. அந்த வெக்கமே அவ சம்மதத்தைக் காட்டுச்சு.
நாடு, காடெல்லாம் கூடிநின்னு கல்யாணத்தை சிறப்பா செஞ்சாக. லங்கா தேசமே சிங்களநாச்சியைக் கொண்டாடுச்சு. எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருந்த நேரத்துலதான் சோழராஜா லங்காவுக்குப் படையெடுத்து வந்தாரு. பலமிருக்கிற வரைக்கும் போராடின மகிந்தன், அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பட்டத்து ராணியான சிங்களநாச்சியை அழைச்சுக்கிட்டு ரோகனைக் காட்டுக்குள்ள ஓடிட்டான். அப்பப்போ நாட்டுக்குள்ள வந்து சண்டை போட்டான். புருஷனோட போராட்டத்துக்குத் துணையா இருந்தா சிங்களநாச்சி.

சோழராஜா, மகிந்தனை ஒழிச்சே ஆகணும்னு வந்துக்கிட்டிருக்காரு. ஆயிரத்தெட்டு யானை, பத்தாயிரம் குதிரைன்னு பெரும் படையை கலமேத்திக் கொண்டாராரு சோழராஜா. மகிந்தனுக்கு சேதி வந்திருச்சு. தன் அங்காளி, பங்காளி, சொந்தபந்தம்னு எல்லாப்பேரையும் வெச்சு ஆயுதம் செஞ்சான். சோழராஜா லங்காவுல கரையேறிட்டாரு. எல்லாப்பேரும் ரோகனைக் காட்டுக்கு வந்துக்கிட்டிருக்காக. அவுகளை மறிச்சு, மகிந்தன் சண்டை போட்டான். சிங்களநாச்சியும் ஆயுதம் தரிச்சு நின்னா. சண்டைனா சண்டை, பெருஞ்சண்டை. எல்லாரையும் துவம்சம் பண்றாரு சோழராஜா. மகிந்தனால தாக்குப்பிடிக்க முடியலே. சிங்களநாச்சியைக் கூட்டிக்கிட்டு அங்கிருந்து தப்பி, அடர்ந்த காட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டான். காட்டுக் குள்ள இருந்த மொத்தக் கூடாரத்தையும் அழிச்சுட்டு, ஒரு பெரிய படையை அனுப்பி மகிந்தனைத் தேடச்சொன்னாரு சோழராஜா. நாளாச்சு... வாரமாச்சு... மாதமாச்சு... மகிந் தனைப் பிடிக்க முடியலே. மகிந்தனைத் தேடிப் பிடிச்சுக் கொண்டுவரும் பொறுப்பை தன் தளபதிகிட்ட குடுத்துட்டு தஞ்சாவூருக்குக் கிளம்பிட்டாரு சோழராஜா.
காட்டுக்குள்ள போன படை வெறுங் கையோட திரும்புச்சு. பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர நினைச்சான் தளபதி. `ஓர் ஒப்பந்தம் போட்டுக்கலாம், சில நிபந்தனைகளை ஏத்துக் கிட்டா நாட்டை திரும்பவும் குடுத்திருவோம். அதுக்காக பேச்சு வார்த்தைக்கு வரணும்’னு கூப்பிட்டான். மகிந்தனுக்கு சேதி போச்சு. ஒருநாள், தளபதியைச் சந்திக்க மகிந்தன் வந்தான். கூட, சிங்களநாச்சியும் ஆலோசகர்களும் வந்தாக.
‘தஞ்சாவூரு ராஜாவுக்கு அடிமை சாசனம் எழுதித்தரணும். இனிமே எந்தக்காலத்திலயும் தொந்தரவு செய்யக் கூடாது. இதுக்கு ஒப்புக்கிட்டா நாட்டைத் தாரோம்’னு சொன்னான் தளபதி. மகிந்தன் ஒப்புக்கல. ‘இது எங்க நாடு... சாசனமெல்லாம் எழுதித்தர முடியாது’ன்னான். உடன்பாட் டுக்கு வரலேன்னு தெரிஞ்ச வுடனே, மகிந்தனையும் சிங்களநாச்சியையும், கூடவந்த மகிந்தனோட ஆலோசகர்களையும் கைது செஞ்சான் தளபதி.
தஞ்சாவூர் ராஜாவுக்கு சேதி போச்சு. மகிந்தனை ராஜமரியாதையோட தஞ்சா வூருக்குக் கொண்டுவர உத்தரவிட்டாரு. பெரிய கலமெடுத்து, மகிந்தன் - சிங்களநாச்சியை தஞ்சாவூருக்குக் கொண்டு வந்தாக.
காவிரியாத்துப் பக்கமா, கோயிலையொட்டி பெரிய அரண்மனை. அதுக்குள்ள பெரிசா இருந்துச்சு விசாரணை தர்பார். அங்கே ராஜா உக்காந்திருக்க, அவரைச் சுத்தி மந்திரிமாருக இருந்தாக. மகிந்தனைக் கொண்டாந்து அவரு முன்னாடி நிறுத்துனாக. கூடவே சிங்கள நாச்சியும் வந்தாக. ராஜா, மகிந்தனை தர்பார்ல நிறுத்திட்டு, சிங்களநாச்சியை வெளியில அனுப்பச் சொன்னாரு. அவளை அரண்மனைக் கோட்டைக்கு வெளியில காட்டுப்பக்கமா கொண்டுபோய் விட்டுட்டாக காவலாளிக.
அரச முறைப்படி விசாரணை நடந்துச்சு. “தப்பை ஒப்புக்கிட்டு அடிமை சாசனம் எழுதித் தந்திரு... மன்னிச்சு விட்டுறே”ன்னாரு ராஜா. மகிந்தன் ஒப்புக்கல. சோழராஜாவுக்குக் கோவம் வந்திருச்சு. “இனிமே பேசிப் பிரயோசனமில்லே. இவனை சுரங்கப்பாதை வழியா சோழபுரத்துக்குக் கொண்டுபோயி பாதாளச் சிறையில அடைங்க”ன்னு உத்தரவு போட்டாரு.
கோட்டைக்கு வெளியில நின்ன சிங்கள நாச்சிக்கு உள்ளே என்ன நடந்துச்சுனு தெரியலே.
நாளாச்சு... வாரமாச்சு... லங்காவுல இருந்து பண்டாரத் தான் வந்துட்டான். ‘சிங்கள நாச்சியை திரும்பவும் லங்கா வுக்கு அனுப்ப உத்தரவாகி யிருக்கு’ன்னு ஓலை கொடுத்தாக. ‘வாம்மா கிளம்பலாம்’னு சிங்களநாச்சி யைக் கூப்பிட்டான் பண்டாரத்தான். ‘எம்புருஷன் இல்லாம நான் லங்காவுக்குத் திரும்பமாட்டேன்’னு பிடிவாதமா இருந்தா. பண்டாரத்தான் கிளம்பிட் டான். சிங்களநாச்சி ஒத்தை மனுஷியா மகிந்தன் வருவான்னு அரண்மனை வாசலைப் பாத்துக் கிட்டு அந்த இடத்துலயே காத்துக்கிடந்தா.
அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் ரொம்பப் பரிதாபமாப்போச்சு. என்ன இருந்தாலும் அந்நியநாட்டுப் பொம்பள... விருந்தினர் மாதிரி... சோறு, தண்ணியெல்லாம் கொண்டாந்து கொடுத்தாக. யாரு எதைக் கொடுத்தாலும் சிங்களநாச்சி சீண்டலை. கண்ணுல தண்ணி வழிய கோட்டை வாசலையே பாத்துக்கிட்டு படுத்துக் கிடந்தவ, ஒருநாள் விழிக்கவேயில்லை. ஏக்கமும் பசியும் அவளோட உசுரைப் பறிச்சிருச்சு. அந்தப் பகுதியில வாழ்ந்த மக்கள், அவ உடலை எடுத்து நல்லடக்கம் செஞ்சாக. அவளோட தைரியத்தையும் தியாகத்தையும் பாத்து அவளைப் புதைச்ச இடத்துல ஒரு கல்லை நட்டுக் கும்புட ஆரம்பிச்சாக. அப்படியே அந்த வழிபாடு வழி வழியா வளர்ந்துச்சு.
தஞ்சாவூர்ல குந்தவை நாச்சியார் கல்லூரிக்குப் பக்கத்துல மகிந்தனுக்காக இப்பவும் காத்துக்கிட்டு உக்காந்திருக்கா சிங்களநாச்சி. மகிந்தனோட ஆன்மாவும், காதல் தளும்பத் தளும்ப அந்தப் பகுதி காத்துல சுத்திக்கிட்டுக் கெடக்கு. நிறைய பெண்கள் வந்து பொங்கல் வெச்சு சிங்களநாச்சியோட பசியாத்துறாக. அவளும், எல்லாருக்கும் அன்பும் அனுசரணையுமா அந்தப் பகுதியை ஆண்டுக்கிட்டிருக்கா... செங்கமலநாச்சி, கமலநாச்சின்னு பலவிதமா அவ பேரு விளங்கியிருக்கு!
- வெ.நீலகண்டன், படம் : ர.கண்ணன், ஓவியம் : ஸ்யாம்