Published:Updated:

16 தெய்வத் திருமணங்கள்... ஆரோக்கியம் அருளும் தன்வந்திரி பீட திருவிழா!

பாற்கடலில் இருந்து அமுதகலசத்தைக் கொண்டுவரப் பகவான் எடுத்த அவதாரம் 'தன்வந்திரி' அவதாரம். தன்வந்திரியை அடிப்படையாகக் கொண்டே எழுந்த மருத்துவ சாஸ்திரம் ஆயுர்வேதம். தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்

16 தெய்வத் திருமணங்கள்... ஆரோக்கியம் அருளும் தன்வந்திரி பீட திருவிழா!
16 தெய்வத் திருமணங்கள்... ஆரோக்கியம் அருளும் தன்வந்திரி பீட திருவிழா!

பாற்கடலில் இருந்து அமுதகலசத்தைக் கொண்டுவரப் பகவான் எடுத்த அவதாரம் 'தன்வந்திரி' அவதாரம். தன்வந்திரியை அடிப்படையாகக் கொண்டே எழுந்த மருத்துவ சாஸ்திரம் ஆயுர்வேதம். தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம். சில பெருமாள் கோயில்களில் தன்வந்திரியின் சந்நிதி காணப்படும். ஆனால் தன்வந்திரிக்கு எனப் பெரும் பீடம் எழுப்பி , அங்கு 75 பரிவார தேவதைகளின் சந்நிதிகளையும் 468 சித்த புருஷர்களின் லிங்க மூர்த்தங்களையும் கொண்டு திகழும் தலம் வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி பீடம். ஒரே இடத்தில் இத்தனை அனுக்கிரக மூர்த்திகளைத் தரிசிக்க முடிவது இங்கு மட்டுமே. 

பொதுவாக ஒரு கோயிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் நடத்திப் பின் கும்பாபிஷேக சம்ப்ரோஷணங்கள் செய்வர். ஆனால் தன்வந்திரிபீடத்தில் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு, 7 அடி உயரமுள்ள தன்வந்திரி மூலவரை (கற் சிலை) ஊர்வலமாக சுமார் 2 லட்சம் கி.மீ. தூரம் இந்தியாவின் பல இடங்களில் கொண்டு சென்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவக் கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்கள், சமூக கூடங்களில் மக்கள் பங்கு பெற்று பயன் பெறும் வகையில் 147 தன்வந்திரி ஹோமங்கள் நடத்தி, ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 67 திவ்ய தேசங்களுக்குச் சென்று சிறப்பு ஆராதனை செய்து பின் இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்தனர்.  தன்வந்திரி பகவான் எம்பெருமானின் அபிமானத்தை பெற்று இங்கு வந்ததால் இந்த தன்வந்திரி பீடத்திற்கு 'திவ்ய தேச அபிமான க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.    

2004 - ல் இந்த பீடத்திற்குக் மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. நாடுமுழுவதிலிருந்தும் 46 லட்சம் பக்தர்கள் தங்கள் கைப்படப் பல்வேறு மொழிகளில் எழுதிய 54 கோடி லிகித ஜப மந்திரங்களைப்  பெற்று, கர்ப்ப கிரகத்தின் கீழ் யந்திரமாக வைத்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் நல்ல உடல் நலத்துடனும்,  சிறந்த மனநலத்துடன், காக்க இப்பெருமான் அமிருதகலசம் மற்றும் சீந்தல் கொடியுடன்  7 அடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

இந்தத் தலத்தில் வரும் 13.3.19 தொடங்கி 17.3.19 வரை முப்பெரும்விழா நடைபெற உள்ளது. தன்வந்திரி பீடத்தின் 15 ஆண்டுவிழா; 16 தெய்வத்திருமணங்கள்; மற்றும் பீடத்தின் ஸ்தாபகர் ஶ்ரீ முரளிதரஸ்வாமிகளின் 58-வது ஜயந்தி விழா ஆகியன கொண்டாடப்படுகிறது. 

இந்த விழாவைப் பற்றி பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகளிடம் பேசினோம்.  

ஶ்ரீதன்வந்திரி பீடத்தில் ஐந்து நாள்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் முதல் நாள் 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் மற்றும் கோமாதா திருக்கல்யாணம் நடைபெறும். இரண்டாவது நாள் துளசி - நெல்லிச் செடி திருமணமும், 108 கன்யா பூஜையும் நடைபெறும்.

மூன்றாவது நாள் அரசு - வேம்பு திருக்கல்யாணமும் 108 தம்பதி பூஜையும் நடைபெறும்.

நான்காவது நாள் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் இசை நிகழ்ச்சியுடன், ஶ்ரீஆரோக்கிய லட்சுமி சமேத ஶ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு மகா தன்வந்திரி யாகத்துடன், சஹஸ்ர கலச திருமஞ்சனமும் நடைபெறும். அன்று மாலை ஶ்ரீதேவி பூதேவி சமேத  ஶ்ரீநிவாசர் திருக்கல்யாணம் சதுர்வேத பாராயணத்துடன் நடைபெறும். விழாவின் நிறைவு நாளில் பதினாறு தெய்வத் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெறும். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அன்று என்னுடைய ஜயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது'' என்றார்.

தெய்வத் திருமணங்களை தரிசிப்பதும், கோயில்களில் செய்து வைப்பதும் புண்ணிய பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், கணாபத்யம், சௌரம் எனப் பலவகைப்பட்ட சமயங்களைச் சார்ந்த தெய்வத் திருமணங்களை ஒரே இடத்தில் காண்பது அரிது. எல்லோரும் அவரவர் வழிபடும் இஷ்ட தெய்வ, குலதெய்வத் திருமணங்களை தரிசித்துப் பலன்பெறலாம். அதேபோன்று தம் குலதெய்வம் எதுவெனத் தெரியாதவர்கள் இந்தத் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டு வழிபாடு செய்ய அனைத்து ஐஸ்வர்யங்களும் பெறுவர்.

இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற முரளிதர ஸ்வாமிகள், பல்வேறு புண்ணியத் தலங்களுக்குச் சென்று இந்த வைபவத்தின் பத்திரிகையை வைத்து வழிபாடு செய்து அந்தத் தல இறைவனின் ஆசியையும்,  அந்தத் தலங்களில் இருந்து புனித தீர்த்தங்கள், கற்கள், மூலிகை சமித்துக்கள், மூலிகை வேர்கள், ஸ்தல விருட்சங்களின் புஷ்பங்கள், காய்கள், இலைகள் ஆகிய திரவியங்களையும் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார். எனவே இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் தன்வந்திரி பகவானின் ஆசிபெற்று பரிபூர்ண உடல் ஆரோக்கியத்தையும்,  சகல புண்ணியத் தலங்களிலும் தரிசித்த பலன்களையும் ஒருங்கே பெற்று மகிழலாம். 

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை - சோளிங்கர் சாலையில் வாலாஜாபேட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கீழ்ப்புதுப்பேட்டை என்ற இடத்தில் ஶ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் அமைந்திருக்கிறது. வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு.