மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?

கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?

கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?

? பஞ்சபூதத் தலங்களும் சிவத் தலங்களாகவே அமைந்திருப்பது ஏன்?

-அ.யாழினி பர்வதம், சென்னை - 76

அருவமான பரம்பொருளை நாம் உணர்ந்தறிய வேண்டும். அதற்கேற்ப, `பஞ்ச ப்ரம்மம்' எனும் போற்றுதலுக்குரிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம் மற்றும் ஸத்யோஜாத முகம்  உடையவராக - சதாசிவமூர்த்தியாக லிங்கத் திருமேனியைக் கூறியுள்ளன ஆகமங்கள்.

அவருக்கு வழிபாடு செய்வதால், ஐந்து முகங்களும் திருப்தியடைந்து அதன் மூலம் அவரின் ஆற்றலானது சிருஷ்டி முதலான ஐந்து காரியங்களை நிகழ்த்தி,  ஜீவாத்மாக்கள் தங்கள் வினைகளைப் போக்கிக்கொள்வதற்குக் காரணமாக உள்ளது. பூஜைகள் என்பவை சாதாரணமானவை அல்ல; அணுசக்தியைப் போன்று பெரும் ஆற்றல் உள்ளவை. சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால், பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை நல்ல ஆற்றல் பெற்று பிரபஞ்சம் முழுவதும் காக்கப்படும். அதனால்தான் ஆலயங்களில் அனுதினமும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஒன்றாக இருக்கக்கூடிய இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலையும் நாம் தனியாக உணர்ந்து வழிபடுவதன் பொருட்டே, எம்பெருமான் சிவனார் தனித்தனித் தலங்களில் அருள்புரிகிறார்.

கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?

? வெம்மை நீங்கி, பெருமழை பெய்து பூமி செழிக்க பிரத்யேக வழிபாடுகள் உள்ளனவா?

 -கே.குமார், திருநெல்வேலி

‘நீரின்றி அமையாது உலகு’ என்றபடி உலகம் நிலைத்திருக்க நீர் அவசியம். ஒவ்வொரு பூஜையின் ஆரம்பத்திலும் ஸ்ரீவிநாயகரை விக்னங்கள் விலக வேண்டிக்கொள்வார்கள். ஜலத்துக்கு அதிபதியான வருண பகவானையும் ஆராதிப்பர். தொடர்ந்து அந்த இடமும், கிரியை செய்விக்கும் ஆசார்யரும், அங்கு குழுமியிருக்கும் அன்பர்களும் தூய்மைபெறும் விதம் தீர்த்தம் தெளிப்பதும் உண்டு.

பொருளாதாரத்துக்கு வருணன் அதிபதியாக விளங்குகிறார். அதனாலேயே தண்ணீரை வீணாக்கக்கூடாது என்று நம் முன்னோர் கூறி வந்தனர்.

தர்ம காரியங்களுக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அத்தியாவசியமானது நீர். நாம் அன்றாடம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றால், தண்ணீர் இல்லாமல் முடியாது. நம் உடலுக்குத் தண்ணீர் அவசியம்.

இந்தத் தண்ணீரை நமக்கு அளிக்கும் மழையை வரவழைக்கவேண்டும் எனில், தேவர்களை வழிபட வேண்டும். தேவர்கள், சிவபெருமான் இடும் கட்டளையை நிறைவேற்றுவதையே கடமையாகக் கொண்டவர்கள். அவர்கள், இங்கு நாம் செய்யும் யாக, வேள்விகளில் அளிக்கப்படும் அன்ன வகைகளாலும் மந்திரங்களாலும் திருப்தி அடைவார்கள்; மகிழ்ச்சியோடு நமக்கு வேண்டியதை அளித்து நம்மையும் திருப்தியோடு வாழச் செய்வார்கள்.

இந்த விவரத்தை பகவத் கீதையில் தெளிவாகக் கூறுகிறார், கிருஷ்ணபரமாத்மா. சாஸ்திரங்களும் சிறப்பாக வழிகாட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தர்மத்தை வழுவாமல் கடைப்பிடிக்கவேண்டும். நாம் இயற்கையின் குழந்தைகள். நம்மில் ஏற்படும் மாறுதல்கள், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, கண்டிப்பாக அவரவருக்கு விதிக்கப்பட்ட பூஜை முறை களையும் தர்மங்களையும் தவிர்க்காமல் செய்துவந்தால் போதும்; இயற்கைத் தாய் நம்மை ஆசீர்வதிப்பாள்.

எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. அவை சரியாக இல்லாமல், எவ்வளவு ஆராதனைகள் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் முன்னோர்கள் எவ்வளவோ கஷ்டங்களை தங்களின் ஒழுக்கத்தினாலும் இறைவழிபாட்டின் மூலமும் வென்றார்கள். நாமும் அவர்களின் வழியில் நடப்போம்.

மழை வேண்டி `பர்ஜன்ய சாந்தி' நிகழ்த்துவது உண்டு. நதிக்கரை, குளக்கரைகளில் வேதியர் களைக் கழுத்தளவு நீரில் நிற்கச்செய்து, வருண பகவானுக்கு உரிய வேத மந்திரத்தை ஜபிக்கச் செய்வார்கள். வருணன் மற்றும் திக்பாலகர்களுக்காக வருண ஹோமம், இந்திராதி திக்பால ஹோமம், சாந்தி ஹோமம் போன்றவற்றைச் செய்வர். நீர்நொச்சி நாணல் சமித்துகளால் குறைந்தது 10 ஆயிரம் முறை (இரண்டு அல்லது மூன்று நாள்கள்) வருண காயத்ரி மந்திரம் ஜபித்து ஹோமம் செய்தால், உடனே மழை பெய்யும் என்று ‘சாந்தி குசுமாகரம்’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

ஆலயங்களில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவுக்கு, `மஹா ஸ்நபனம்' என்ற முறையில் நிறைய கலசங்களை வைத்து, பெரும் படையலுடன் வழிபாடுகள் செய்யலாம் என்கின்றன ஆகமங்கள்.

மேலும், ஆலயங்களில் சிவபெருமானுக்கு இடைவிடாத தாராபிஷேகம், சீதகும்ப தாராபிஷேகம் செய்யவேண்டும்.

1,008 கலசம் 1,008 திரவியங்களுடன் பூஜை, ஹோமம், அபிஷேகம் போன்றவற்றால் சிவபெருமானைக் குளிர்விப்பது விசேஷம். அவருக்கு மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம், மஹாருத்ர பாராயணம், சைவ பஞ்சாட்சர ஹோமம், வருண ஜப பர்ஜன்ய மஹா சாந்தி ஹோமம், கிரஹ நக்ஷத்திர பூஜனம், கயிலாசகிரி பூஜனம், தேவேந்திர பூஜை, கிரஹ சாந்தி, கிராம சாந்தி திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் போன்ற கிரியைகளைத் தகுந்த ஆசார்யரை வைத்து பக்தியுடனும் முழுமையான நம்பிக்கையுடனும் செய்தால் கண்டிப்பாக மழை பெய்யும்.

மழைக்கென்று வேதங்களில் சில இஸ்ட்டிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை ‘அக்னி ஹோத்ரிகள்’ என்று போற்றப்படும் வேதியர்களைக் கொண்டு செய்விக்கவேண்டும்.

ராமாயணத்தில் ரிஷ்யசிருங்க மஹரிஷியின் வருகையைக் குறிக்கும் பகுதியையும், மகாபாரதத் தில் ‘விராட பர்வம்’ பகுதியையும், திருமுறைகள் மற்றும் திவ்ய பிரபந்தங்களில் மழை வேண்டும் பாடல்களையும் படித்து, மனமுருகி வேண்டிக் கொண்டால் மழை பெய்யும்.

`ஆயாது வருண:
சீக்ரம் ப்ராணினாம் ப்ராணரக்ஷக;
அதுல்ய  பலவான்
அத்ரா ஸர்வஸஸ்ய அபிவ்ருத்தயே
'
- என்று கூறி வருணனை நாம் பிரார்த்திக்கலாம்.

குறைந்தது 11 முறை அல்லது எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு முறை பிரார்த்திக்கலாம்.  குழந்தைகளும் இந்த மந்திரத்தைச் சொல்லிப் பிரார்த்தனை செய்யலாம். வருணபகவான் நிச்சயம் அருள்புரிவார்.

இன்னொரு ஸ்லோகம் உண்டு.

`ருஷ்யச்ருங்காய முனயே விபண்டக சுதாய ச
நம: சாந்தாதிபதயே ஸத்ய:
ஸத்வ்ருஷ்டி ஹேதவே'


அதாவது, `விபண்டகரின் புதல்வரும் அமைதியை நல்குபவருமான ருஷ்யச்ருங்க முனிவரை மழையை வேண்டி வணங்குகிறேன்' என்று பொருள். இந்த ஸ்லோகத்தைக் கூறி வேண்டிக்கொண்டால், அந்த முனிவர் நல்ல மழையை அருள்வார்.

நாம் நம்மால் முடிந்த அளவு மரங்களை, செடி கொடிகளை நன்கு பாதுகாக்கவேண்டும். பசு, பட்சிகளுக்கு நம்மால் இயன்ற அளவு உணவும் தண்ணீரும் அளித்தல்வேண்டும்.

நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். பெரியோர்களை மதித்து, பாதுகாத்து நம்முடைய வாழ்க்கையை நேர்மையான முறையில் நடத்திக் கொண்டு வந்தோமானால் இயற்கைத் தாய் நம்மை எப்பொழுதும் வருந்தவிடமாட்டாள்.

?  மாலைப் பொழுதில் நம் வீட்டு வாசலில் துணிகளைத்  துவைத்துக் காயப்போடக் கூடாது என்கிறார்களே, ஏன்?

-வேணுகோபால், சென்னை - 82

மாலை 4:30-க்குள் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு,  குடும்பத் தினருடன் கடவுள் வழிபாடுகளிலும் தியானம், பாராயணம் போன்றவற்றிலும் ஈடுபடவேண்டும். காலையில் குளிக்கும்போதே துணிகளை நனைத்து உடனே துவைத்து உலர்த்துவதே சிறந்தது.

தற்காலத்தில் துணி துவைப்பதற்கு உபகரணங்களைப் பயன்படுத்துவதால், வாரம் ஒருமுறை துவைப்பது, நேரம் கிடைக்கும் போது உலர்த்துவது என்ற வழக்கங்கள் ஏற்பட்டிருக் கின்றன. ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி’ என்ற பாரம்பர்யத்தில் வந்தவர்கள் நாம். எனவே, துணிகளைத் துவைக்கும் பணியை காலையில் மேற்கொள்வதே நல்லது.

- பதில்கள் தொடரும்...

- காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முகசிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002