ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சோழம் கண்ட பைரவர்!

சோழம் கண்ட பைரவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சோழம் கண்ட பைரவர்!

பூசை. ச. ஆட்சிலிங்கம்

பைரவர் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றியவர். அவர் தீயவர்களுக்கு அசுரக் குணம் கொண்டவர்களுக்கு அச்சத்தைத் தருபவர் ஆதலால், பைரவர் என அழைக்கப்படுகிறார். `பீரு' என்பதற்கு அச்சப்படுத்துதல் என்பது பொருள். அந்தச் சொல்லிலிருந்தே பைரவன் என்ற பெயர் தோன்றியது என்பர்.

சோழம் கண்ட பைரவர்!

சோழர்கள், தமது நாட்டை விரிவுபடுத்தப் பல போர்களை மேற்கொண்டனர். அந்தப் போர்களில் அதிக சேதமின்றி வெற்றிகளைப் பெறவும் பெருஞ்செல்வத்தைப் பெறவும் பைரவேச்சர லிங்கங்களை அமைத்துச் சிறப்புடன் வழிபட்டனர்.

இவர்கள் வணங்கிய பைரவர் வடிவமானது சிவபெருமானின் மாற்று வடிவமாகும். இது க்ஷேத்திரபாலர், பூமி பாலர், தீர்த்த பாலர் போன்ற உபய பைரவர்கள் அல்ல.

சிவபெருமான் வீரட்டகாசம் புரியும் வேளையில் உக்கிர வடிவம் தாங்கி வருகின்றார். அக்கோலமே மூல பைரவர் அல்லது ஆதி பைரவர் எனப்படும். அவர், தம்மை எதிர்த்து வந்து விழுங்கிய யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு பைரவனாக வெளிப்பட்டார். இதை, அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.

‘விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள்செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’


இந்தப் பாடலில் சிவபெருமானை, `கோலகால பைரவனாகி வருபவர்' என்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சோழர்கள் இந்தப் பைரவரை உக்ர வடிவாக அமைக்காமல், சிவலிங்க வடிவிலேயே வழிபட்டனர். இந்தச் சிவலிங்கங்கள் பைரவர் என்றும், இவற்றுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்கள் பைரவேச்சரங்கள் என்றும் அழைக்கப்பட்டன. சோழர்களால் அமைக்கப்பட்டதால் இவை சோழீச்சரங்கள் என்றும் அழைக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில், அஷ்டபைரவர்களாக - எட்டு லிங்கங்களாகச் சிவனார் எழுந்தருளியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதை அஷ்ட பைரவர் கோயில் என்றும் சோழீச்சுரர் கோயில்கள் என்றும் அழைக்கிறார்கள்.

கும்பகோணத்தை அடுத்து சோழபுரம் என்னும் ஊர் உள்ளது. இங்கே, தென்வடலாக அடுத்தடுத்து ஒரே வரிசையில் அமைந்த மூன்று சிவாலயங்கள் உள்ளன. அவை: கயிலாசநாதர் கோயில், பைரவேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில்.

இவற்றில் நடுவில் உள்ள பைரவேச்சரர் கோயிலின் சிறப்பு,  பீடம் முதல் ஸ்தூபி வரை கருங்கல்லால் அமைந்திருப்பதாகும்.

பைரவருக்குப் பெரும் படையல்!

சிவபெருமானின் திருவுருவங்களில் பெருங்காவல் தெய்வமாக விளங்குவது பைரவ கோலமாகும். அவர் நாய் வாகனத்தில் பயணிக்கும்போது ஆகாச பைரவராகவும், தண்ணீர் (கடல்,  ஆறுகள்) மீது பயணிக்கும்போது ஜல பைரவராகவும், அக்னி தொடர்பான ஆலைகளில் பணிபுரியும்போது அக்னி பைரவராகவும், பயிர்த் தொழில் புரியும் போது பூமி பைரவராகவும், காற்றின் நடுவில் பவன பைரவராகவும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

பைரவ மூர்த்தி உலகத்தைக் கட்டிக் காக்கும் காவல் தெய்வமாக இருப்பதால் மகா உக்கிர மூர்த்தியாக விளங்குகிறார். அவருடைய படைகளாக வேதாளங்கள் உள்ளனர்.

பைரவர் அநேக தருணங்களில் வெளிப்பட்டு அன்பர்களிடம் சென்று படையல் ஏற்கிறார். என்றாலும், சிறுத்தொண்டரிடம் சென்று அவர் ஏற்ற படையலே புராணங்களில் தனிச் சிறப்புடன் போற்றப்படுகிறது.

அப்படி அவர் சென்ற நாள், சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளாகும். அதையொட்டியும், பரணியில் உக்கிர தெய்வங்களுக்குப் பெரும் படையலிட்டு வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பதாலும் பரணி நட்சத்திரம் பைரவர் வழிபாட்டுக்கு உரியதாக விளங்குகிறது. 

சோழம் கண்ட பைரவர்!

சித்திரை பரணி, ஐப்பசி பரணி ஆகிய நாள்களில் பைரவரைச் சிறப்புடன் வழிபடு கின்றனர். இதனால் பகை, தீவினைகள் அழியும்; சத்ரு பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சென்னையில் பைரவர் வழிபாடு

சென்னை மாநகர் சிவாலயங்கள் அனைத் திலும் பைரவர் சிறப்புடன் எழுந்தருளியுள்ளார். பொதுவாக பைரவர் மேற்கரங்களில் உடுக்கை (டமருகம்) பாசம். கீழ்க் கரங்களில் சூலம், கபாலம் ஏந்துவார். பின்னணியில் நாய் நிற்கும். 

சிறப்பு கருதி அவரது வேறுபட்ட திருவுருவங் களையும் ஆலயங்களில் எழுந்தருள வைத்து வழிபடுகின்றனர்.

திருவான்மியூர் உற்பத்தி பைரவர்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்சுற்றில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கியவாறு இந்த பைரவர் காட்சியளிக்கிறார்.

பைரவர் வழிபாட்டு நூல்களின் கூற்றுப்படி உலகைப் புதியதாகப் படைக்கும் உற்பத்தி பைரவராக விளங்குகிறார். இவரது வலது முன்கை உடுக்கையை ஒலித்துக் கொண்டிருக்கும் கோலத்தில் உள்ளது. சூலம் பின் கையில் உள்ளது. சைவ சித்தாந்தம் `தோற்றம் துடியதனில்' எனக் கூறும். அதற்கேற்ப, இவரின் கரத்திலுள்ள உடுக்கை ஒலிப்பது, உலகத்தைப் பெருமான் படைத்துக்கொண்டிருப்பதைக் குறிக்கும்.

 இடது மேற்கரத்தில் நீண்ட பாம்பை ஏந்தியுள்ளார். மற்றொன்றில் கபாலம் உள்ளது. இவரை வணங்கிப் புதிய காரியங்களைத் தொடங்கினால் அது செம்மையாக நடைபெறும்.

மயிலையில் உத்தண்ட பைரவர்

சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள பொற்கொடி உடனாய காரணீசுவரர் ஆலயத்தின் மகா மண்டபத்தில், வடகிழக்கு மூலையில் உத்தண்ட பைரவர் எழுந்தருளியுள்ளார்  பெயருக்கேற்ப நீண்ட தண்டத்தை ஏந்தியுள்ளார். இடக்கையில் பான (நீர் அருந்தும்) பாத்திரம் உள்ளது. பின்னணியில் நாய் நிற்கின்றது.

திருவொற்றியூரில் பிரளய கால சிகண்டி பைரவர்

ழிக் காலத்தில் எல்லாம் அழிந்தபோதும் அழியாது நிலைபெற்றிருக்கும் தலமான திருவொற்றியூரில் பிரளய கால பைரவர் எழுந் தருளியுள்ளார்; வடக்குப் பிரகாரத்தில் தனிச் சிற்றாலயத்தில் அருள்கிறார். நீண்ட சடையுடன் காணப்படுகிறார்.

இவருடைய ஆலயம் கருவறை,  அர்த்தமண்டபம், மகா மண்டபத்துடன் கூடியதாக உள்ளது. இவருடைய தேவியே `வளர் காளி' என்ற பெயரில் இருப்பதாகக் கூறுகின்றனர். இவர் லகுளீச பாசுபதர்கள் வழிபட்ட பைரவ மூர்த்தியாவார். இவர் ஆலயத்துக்கு அருகில் சூலதீர்த்தம் எனப்படும் வைரவ தீர்த்தம் உள்ளது. 

ஒரு பிடி உப்பு!

மு
ற்காலத்தில், நௌஷேர்வான் என்ற பாதுஷா, ஈரானை ஆட்சி செய்தார்.

வேட்டையாடுவதில் விருப்பம் உள்ள பாதுஷா, உணவுக்காக சமையற் காரனையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

சோழம் கண்ட பைரவர்!

ஒரு முறை, காட்டுக்குச் சென்ற பிறகு `உப்பு இல்லை' என்பதைக் கவனித்தான் சமையற்காரன். ``என்ன செய்வது'' என பாதுஷாவிடம் கேட்டான். ``ஊருக்குள் சென்று, காசு கொடுத்து உப்பு வாங்கி வா. இல்லாவிட்டால், ஊர் முழுவதும் பாழாகிவிடும்'' என்றார் பாதுஷா.

சமையற்காரனுக்குக் குழப்பம்!

``ஒரு பிடி உப்பைக் காசு கொடுக்காமல் வாங்கினால் ஊர் எப்படிப் பாழாகும்'' என்று பாதுஷாவிடம் கேட்டான்.

அதற்கு அவர், ``மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டிய அரசனே, குடிமக்களிடம் உப்பை இனாமாக வாங்கினால்... மறுநாள் அவனுடைய அதிகாரிகள் ஊரையே விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்களே'' என்றார்.

- மு. ஜெகந்நாதன், சென்னை-73