மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 6

புண்ணிய புருஷர்கள் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள் - 6

புண்ணிய புருஷர்கள் - 6

`உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் ஈசனே, சகல ஜீவராசிகளிலும் உறைந்திருக்கிறான்' என்பதை உணர்வதுதான் ஆத்மார்த்த தரிசனம். அதிலும் வறுமையும் அறியாமையும் இணைந்து, வாட்டி வதைக்கும் எளிய மக்களுக்காக வாழ்ந்து, அவர்களைக் கரைசேர்த்துவிடும் அடியார்கள் ஈசனுக்கு நிகரானவர்கள். அந்த மாமனிதர்கள் வரிசையில் இந்த இதழில் சுந்தரமய்யா!

புண்ணிய புருஷர்கள் - 6

சென்னை, கண்ணகி நகர்... எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கேதான் பாவங்களை முற்றிலுமாக அகற்ற அருள்புரியும் மத்திய காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயம் குறித்தும், அந்தப் பகுதியில் வசிக்கும் `சுந்தரமய்யா' என்ற மகா புருஷரைப் பற்றியும் கேள்விப்பட்டு, ஒருநாள் கண்ணகி நகருக்குள் நுழைந்தோம்.

புண்ணிய புருஷர்கள் - 6வட இந்திய பாணியில் உருவாக்கப்பட்டிருந்த ஈசன் கோயில் நம்மை மலைக்கவைத்தது. கைகூப்பி கோபுரத்தை வணங்கிவிட்டு, சுந்தரமய்யாவைச் சந்தித்தோம். `ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் பிரமாண்ட ஆலயம்... எப்படி?' நம் ஆச்சர்யத்தை அவரிடமே வெளிப்படையாக முன்வைத்தோம்.

“இவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். இவர்கள், அன்புக்குக் கட்டுப்பட்ட வர்கள்; நெஞ்சில் வஞ்சமில்லாதவர்கள்'' என்கிறார், புன்னகையோடு.

சுந்தரமய்யா சாதாரண மனிதரல்ல... அந்தப் பகுதி மக்களின் ஆன்மிக குரு. தொடர்ந்து நம்முடன் உரையாடினார்...

புண்ணிய புருஷர்கள் - 6

“அடியேன் சுந்தரம், காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே பிறந்தேன். பிழைப்புக்காக லேத் பட்டறை ஒன்றை நடத்தினேன். பிறகு சிவனருளால் ஆட்கொள்ளப்பட்டு 35 ஆண்டுகளாக அடியார்களுக்குத் தொண்டு செய்யும் பணியை மேற்கொண்டுவருகிறேன். முன்னர் கண்ணகி நகர் ஆழிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் ஒன்பது ஆண்டுகளாகப்  பணி செய்தேன். இந்தப் பகுதி சாலை விரிவாக்கத்தின்போது ஒரு சிவலிங்கத் திருமேனி கிடைத்தது. அதை எங்கேவைத்து வழிபடுவது என்று தவித்தபோது, சங்கரா பள்ளிகளின் தாளாளர் ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி இங்கே ஆலயம் அமைக்கத் தொடங்கினோம்.

படித்தவர்களும் பெரியவர்களும் இருக்கும் பகுதிகளைவிட ஏழ்மையும் எளிமையும் நிலவும் இங்கேதான் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஈசனும் விரும்பினார்போலும்... பிரமாண்டமாக எழுந்துவிட்டார். 

ஆலயத்தை உருவாக்கியது, பூசைகள் செய்வதெல்லாம்கூட எனக்கு இரண்டாம் பட்சம்தான். இங்கிருக்கும் ஆண்களில் பலர் மது, போதைப் பழக்கங்களில் விழுந்துகிடந்தார்கள். அவர்களை, மெள்ள மெள்ள அவற்றிலிருந்து மீட்டு வந்ததுதான் நாங்கள் ஆற்றிய முக்கியமான சேவை என்று தோன்றுகிறது.

புண்ணிய புருஷர்கள் - 6

இந்த ஆலயத்தில் தினமும் பகல் ஒரு மணிக்கு அன்னதானம் அளிப்போம். எந்த வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து சாப்பிடுவார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர் பதினைந்து பேர் இங்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் போதையின் தள்ளாட்டத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டாலும், நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்காக ஈசனிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தோம்.

நாளாக ஆக, மெள்ள அவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம்; அவர்களின் குடும்பநிலையை விசாரித்தோம். இந்தச் சமூகத்தில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தினோம்.  அவர்களும் தங்கள் நிலையை உணர ஆரம்பித்தார்கள். இப்போது அவர்களில் ஐந்து பேர் முற்றிலுமாகத் திருந்திவிட்டார்கள். வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.

இதுதான் சிவப்பணி. சக மனிதர்களை நேசிப்பதும், வழிகாட்டுவதும்கூட சிவபூஜைக்கு சமமே. இப்படி இந்த ஆலயத்துக்கு வந்து, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் எத்தனையோ பேர்.

இங்கிருக்கும் மக்களின் உதவியால்தான் இந்த ஆலயம் எழுந்து நிற்கிறது. இன்றுவரை ஆலயப் பணிகள் இந்த எளிய மக்களின் உதவியால்தான் நடக்கின்றன. பெண் அடியார்கள்தாம் இந்த ஆலயத்தை நிர்வகிக்கிறார்கள். பல குழந்தைகள் இங்கு வந்து திருப்பதிகங்கள் பயில்கிறார்கள். பாமர மக்கள் என்கிற காரணத்துக்காக இவர்களை ஒதுக்கிவிடாமல், எப்படியாவது நம் தர்மத்துக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அது நடந்துவருகிறது.

இந்த ஆலயத்தையும் இங்கிருக்கும் மக்களின் மாற்றத்தையும் அறிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சென்ற மாதம் (21-5-19) இங்கு வந்திருந்து, திருஞானசம்பந்தரின் குருபூஜையை நடத்திவைத்தார்.

வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே இங்கிருக்க வேண்டுமென்று வந்தவர், இந்த மக்களின் அன்பையும் அமைதிகாத்த மாண்பையும் பார்த்து முக்கால் மணி நேரம் இருந்தார். அது, காஞ்சி ஸ்வாமிகளின் பெருங்கருணை.'' நெகிழ்ந்துபோய்ச் சொல்கிறார் சுந்தரமய்யா.

புண்ணிய புருஷர்கள் - 6

வடகாசியைப்போலவே இங்கும் ஈசனைத் தொட்டு வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம். இங்கிருக்கும் அனைத்து தெய்வங்களின் சந்நிதிகளும் பிரமாண்டமாக அமைந்திருக்கின்றன.  பக்தர்கள்,  தங்கள் முன்னோர்களுக்காக இங்கே வந்து பிரார்த்தனை செய்து பலன் பெறலாம்.

இங்கிருக்கும் நவகிரக சந்நிதி வேறெங்குமே காண முடியாத அதிசயம். நவகிரகங்கள் தங்கள் துணையோடும், தங்களின் தலைவனான ஈசனோடும் (குறிப்பிட்ட நவகிரக தலத்தின் மூலவர்) காட்சி தருகிறார்கள். உமையம்மைக்கு ரகசியம் பகிரும் ஈசனைச் சுற்றி, 63 நாயன்மார்களும் சித்தர்களும் நிற்கிறார்கள். நேரில் கண்டு களிக்கவேண்டிய பிரமாண்டம் அது. மூன்று மாட ஆலயமாக, 12 ஜோதிர்லிங்க தரிசனத்தோடு பரவசம் தரும் வகையில் அமைந்திருக்கிறது, இந்த  மத்திய காசி விஸ்வநாதர் ஆலயம்.

“உற்சவமூர்த்திகள் செய்ய, இந்தப் பகுதி மக்களிடையே பித்தளை, செம்புப் பாத்திரங்களை யாசகமாகக் கேட்டோம்... நாங்களே எதிர்பாராத அளவுக்குப் பெரும் வரவேற்பு...

தீபாவளிச் சீட்டு போட்டு வாங்கிய, தங்களிடமிருந்த ஒரே ஒரு பித்தளைப் பாத்திரத்தைக்கூட தூக்கிக் கொடுத்தவர்கள்  இவர்கள். பணம் இருப்பவர்களே பதுக்கி வைத்துக்கொள்ளும் இந்தக் காலத்தில், காலில் கிடந்த கொலுசைக் கழற்றிக் கொடுத்த நல்ல உள்ளம்கொண்டவர்கள் இவர்கள். எளிய மக்களின் அன்பில் இங்கு ஈசன் செழித்து நிற்கிறான். அவனை தரிசித்து அருள் பெறுங்கள். நினைத்தது யாவும் நிறைவேறும்.

மனிதகுலத்துக்காக உழைப்பதுதான் பக்தி. அது, நல்ல வழிபாடும்கூட. ஆண்டவனுக்காக உழையுங்கள். அப்படிச் செய்தால், அந்த ஆண்டவனே அகமகிழ்ந்து உங்களை நாடி வருவான். எளியவர்களை நல்வழிப்படுத்தி, கைதூக்கிவிடுங்கள். அதைவிட எந்த வேள்வியும் தானமும் பெரிதல்ல” என்கிறார் சுந்தரமய்யா.

சந்நிதியில் அருள்பாலித்துக்கொண்டிருந்த திருமூலர் அதை, `உண்மைதான்' என்று ஆமோதிப்பதுபோல நமக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் திருமூலரின் சில வரிகள் நம் நினைவுக்கு வர நெக்குருகிப் போனோம்...

`நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!”


- அடியார்கள் வருவார்கள் ...

மு.ஹரி காமராஜ் - படங்கள்: பெ.ராகேஷ்

இறை காட்டிய வழி...

`பு
ண்ணிய புருஷர்கள்' தொடரை சக்தி விகடனில் படிக்க திருவருள் கூடியது. `அடியார்' எனும் உயர்ந்த நிலையின் உன்னதத்தை அடியேன் உணர வழிவகுத்தவற்றுள் இத்தொடரும் ஒன்று. 

புண்ணிய புருஷர்கள் - 6

இத்தொடரில் வரும் அடியார்கள் இறையோடு இயைந்து ஆரா இன்பம் அனுபவிப்பது கண்டு, அடியேனும் அந்நிலைக்கு எப்போது செல்வேன் என்ற ஏக்கம் உண்டாகிறது.

இவர்கள் போன்ற அடியார்கள் தங்கள் தொண்டினை பொதுவெளியில் காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்களே... சிலருக்கு இது விளம்பரம் போன்று தோன்றுமே!

இதில் அணுவளவிலும் விளம்பர நோக்கில்லை. இது ஈசனின் திருவருளே. இதற்குச் சான்று `அல்லல் நல்குர வான போதினும் வல்லர் என்றறி விக்கவே' என்ற திருத்தொண்டர் புராண வரிகளே (இளையான் குடிமாற நாயனார்).

இவர்களுடைய தொண்டு களை வெளியில் ஏன் அறிவிக்க வேண்டும்?

தேவையற்றதை வலிய தேடிச் சென்று, இன்பம் என்று நினைந்து துன்பத்தை அனுபவிக்கும் ஆன்மாவுக்கு, இன்பம் என்றாலே அது ஈசனை நினைந்து இருத்தலே.

ஆன்மா இதை அறிய மறுக்கும். ஆன்மாவுக்கு மற்றொரு குணமும் உண்டு. அது `அறிவித்தால் அறியும்'. அவ்வகையில் தொண்டுகளின் சிறப்பை தொண்டர்களின் மகத்துவத்தை அறிவித்து அறியச் செய்கிறோம்.

`சிவத் தொண்டு என்பது குடும்பமாகச் செய்ய வேண்டிய ஒன்று' என்பதைப் பலரும் அறிந்து உய்ய, இத்தொடரின் வாயிலாக வகைசெய்துள்ளான் எம்பெருமான் என்றே சொல்லவேண்டும்.

இத்திருப்பணி (தொடர்) தொடர்ந்து நடைபெற ஈசனின் திருவருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

சிவாயநம

ராகவன் இறையடியார்.

ல்ல உள்ளம் கொண்ட அடியார்களால் இந்த ஆலயம் அற்புதமாக நிர்வகிக்கப்படுகிறது. இங்கு எந்தவிதமான கட்டணமும் காணிக்கையும் வசூலிப்பதே இல்லை. காஞ்சி மகான் ஸ்ரீஜெயேந்திரர் நினைவுநாளையொட்டி ஆரம்பிக்கப்பட்ட திருக்குளத் திருப்பணி தேவையான பொருளின்றி பாதியில் நிற்கிறது. மனமுள்ளவர்கள் உதவி செய்தால் அழகிய திருக்குளம் உருவாகிவிடும். இதைமட்டுமே இங்குள்ள மக்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள். ஓர் அற்புதமான நீராதாரத்தை உருவாக்கி உயர்வுகொள்ள நாமும் உதவிசெய்வோமே!

வங்கிக் கணக்கு விவரம் :


A/c.Name: VAKEESAR UZHAVARA SEVAI

A/c.No: 3344730412

Bank Name: Central Bank of India

Branch: Perungudi

IFSC No: CBIN0283865

தொடர்புக்கு: சுந்தரமய்யா 9003295462